தற்போதைய தமிழ்நாட்டின் நிலையை நினைத்தால்... இந்த மாநிலத்தை, இந்திய நாட்டை ஆள்பவர்களை, நாங்கள்தான் ஆட்சியாளர்கள், இந்த நாட்டை ஆண்டுக் கொண்டிருப்பவர்கள் என்று சொல்பவர்களை! ஆடைகளை அவிழ்த்துவிட்டு! ‘’நடுரோட்டில்’’ மக்கள் அனைவரும் ஆளுக்கொரு தடியை எடுத்து துரத்தித்துரத்தி அடிக்க வேண்டும். காரணம், அவ்வளவு கொடுமைகள் நாள்தோறும் புதிது புதிதாக நடந்து கொண்டிருக்கிறது, மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இங்குள்ள மாநில அரசோ அவைகளை எதிர்க்காமல், எதிர்த்து நிற்காமல் அவர்களுக்கு முட்டுக்கொடுக்கின்ற, சொம்பு தூக்குகின்ற வேலையைச் செய்கின்ற அரசாக உள்ளது. காரணம்! இந்த அரசுக்கு, ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பு இல்லாதது. அதிகாரத்தை, ஆபத்தை எதிர்த்து! மக்களும், மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறையுள்ள அமைப்புகள், இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி எதிர்க்கவில்லை என்றால்! இந்த நாட்டையும், மக்களையும் எப்போதோ துடைத்து எடுத்து, தூர தூக்கி வீசியிருப்பார்கள்.
பொதுவாகவே அதிகாரம் என்ற ஒன்று கைக்கு வந்தவுடன், காமம் கண்ணை மறைக்கும் என்பார்களே! அதுபோல் இவர்களுக்கு, அதிகாரம் கைக்கு வந்தவுடன் அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள். இந்த அதிகாரம் தானாக வந்ததா? மக்கள் அனைவரும் சேர்ந்து தங்களிடமுள்ள ஒட்டு எனும் அதிகாரத்தை, ஆயுதத்தைப் பயன்படுத்தி, அதன் மூலமாக தங்களுக்குத் தேவையான, அடிப்படையான விசயங்களை நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபர்களும் தங்களுக்குத் தேவையானதை தேடிக்கொள்ளவோ, பெற்றுக்கொள்ளவோ முடியாது என்கின்ற காரணத்தால், அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்திக்கொடுத்துள்ள வழிமுறைகளின்படி, அதனை நம்பி, அதை ஏற்றுக்கொண்டு அதன்படியே தங்களுக்கான காரியங்களைச் செய்யும் ஆளை வேலைக்கார(னை)ர்களை தேர்ந்தெடுத்து ஆட்சிக்கட்டிலில் அமரவைத்தால், கட்டில் என்றதும் பள்ளியறை, (படுக்கையறை) ‘‘இது நமக்கான உல்லாசத்திற்கான’’ இடமென்று அம்மணமாக ஆடத் துவங்கிவிடுகிறார்கள். இந்த அயோக்கியர்கள், நன்றிகெட்ட வேலைக்காரர்கள். ஆட்சியில் இருப்பவர்கள், நாம் இந்த மக்களுக்கானவர்கள், இவர்களால், இவர்களுக்காக வேலை செய்ய வந்தவர்கள், மக்களின் அடிமைகள் நாம்! என்பதை எல்லாம் மறந்தோ, அல்லது பதவி அதிகாரம் நம் கையில் உள்ளது. மக்கள்தான் நமக்கு அடிமை. இனிமேல் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது நாம் எண்ணுவதுபோல் எல்லாம் இந்த மக்கள் மீது பரிசோதித்துப் பார்ப்போம் மக்களையெல்லாம் வெறும் சோதனைக்கூட எலிகளென நினைத்து இவ்வாறு செயல்படுகிறார்களா? என எண்ணத்தோன்றுகிறது.
இன்றைய நிலை தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாதிப்புக்குள்ளாகாத மாவட்டமென எதுவுமில்லை. வளர்ச்சித்திட்டங்கள் என்கின்ற பெயரில், இயற்கை வளங்களை அழித்ததும், கொள்ளையடித்ததும்தான் நம்முடைய ஆட்சியாளர்கள் செய்த மிகப்பெரிய சாதனை. இதுமட்டுமல்லாமல் இந்த தமிழ்நாட்டுக்கு தேவையான, மக்கள் விரும்புகிற, அல்லது மக்களுக்கு அத்தியாவசியமான திட்டங்களான நீட் தேர்வில் விலக்கு, கீழடி ஆய்வு தொடர்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் போன்றவைகளை மத்திய அரசு மறுக்கிறது. ஆனால், மக்களுக்கு பேராபத்தினை ஏற்படுத்தும் திட்டங்களான கூடன்குளம் அணுமின் நிலையம், ஸ்டெர்லைட், நியுட்ரினோ ஆய்வு மையம், ஹைட்ரோகார்பன், ஷெல் காஸ், கெயில் எரிவாயு குழாய் அமைப்பது, மீத்தேன் எடுத்தல், மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க, மலைகளை அழித்து, மழையில்லாமல் முல்லைப்பெரியார், பாலாறு, காவிரி என எந்த ஆறுகளிலிருந்தும் தண்ணீர் கிடைக்காமல், ‘‘தமிழ்நாடு’’ பாலைவனமாகி மக்கள் அனைவரும் பஞ்சத்தில் அடிபட்டுச் சாகவேண்டும் இதுவே இன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க அரசின்! அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சின் மிகப்பெரும் ஆசை. தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தும் திட்டமிட்டே மறுக்கப்படுகிறது, தடுக்கப்படுகின்றன. இவைகள் அனைத்தையும் புரிந்துக்கொள்ள, இந்தியாவின் பிரதமர் என்கின்ற மோடியின் விருப்பம் மற்றும் ஆணைக்கேற்றவாறு செயல்படும், தமிழ்நாட்டின் இரு முதல்வர்களான ஆளுநர் மற்றும் தலைமைச்செயலாளர் இவர்களின் செயல்பாடுகளைப் பாருங்கள்.
‘தமிழ்நாட்டின் முதல்வர்கள்’ இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தானே என சொல்லாதீர்கள். அவர்கள் பெயரளவில் மற்றும் பதவிக்காக உள்ளவர்கள். நாம் செயல்படுகிறவர்களின் பெயரைத்தான் சொல்ல வேண்டும். அதுவும் எவ்வாறு யாருக்காக வேலைசெய்கிறார்கள் மக்களுக்காகவா? இல்லையே! இங்கே உரிமைகளுக்காக போராடும் மக்களை அடித்துத் துன்புறுத்துவது, கைது செய்வது, குண்டர் தடுப்புச்சட்டம், தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்டத்திற்காக அனுப்பிய கோப்பு என்ன ஆனது? எங்கே இருக்கிறது? இருக்கிறதா? என்ற நிலை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தலைமைச்செயலகத்தில் அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, நேரில் சென்று பிரதமரை சந்தித்து அளிக்க, கோரிக்கை வைக்க நேரம் ஒதுக்க மறுத்தது, தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் தரையிலேயே கால் வைக்காமல் ஓடியது, வந்தவர் இவ்வாறு ஒடும்படியான சூழல் ஏன் உள்ளது, உருவானது, இங்கே மக்கள் ஏன் போராடுகிறார்கள், அதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டேன், உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் உங்களுக்கு நியாயம் கிடைக்கும். ‘’போராட்டத்தைக் கைவிடுங்கள்’’ என்று போராடும் மக்களுக்கு அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சென்றது. பிரதமரை நேரில் சந்திக்க சென்ற தமிழ்நாட்டின் முதல்வரை சந்திக்காதது, இவைகளையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாடு இந்தியாவின் அண்டைநாடு அல்ல. எதிரிகள் வாழும் நாடு, எதிரிகளுடைய நாடு என்கின்ற எண்ணத்தில் இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் போல் உள்ளது.
நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டி அமைதியான முறையில் போராடினால் அதிகாரத்திலிருக்கின்ற திமிரில் அடக்குமுறையை ஏவிவிடும் அரசுக்கான அதிகாரத்தை அளிப்பது நாங்கள்தான்! என்பதை அமைதியாக, பெரும் புரட்சியாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒன்றுசேர்ந்து வருகின்ற 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தால்! என்ன?
நடக்குமா? இதை அனைத்துக் கட்சிகளும் ஏற்குமா? பின்பற்றுமா? இது சரியா? நடைமுறைக்கு ஒத்துவருமா? தமிழ்நாட்டைத் தனி நாடக்கப் போகின்றோமா? என பல்வேறு கேள்விகள் எழலாம். விடை ஒன்றுதான். யாருக்கும் (அந்நியரிடம் மட்டும் அல்ல, நமது ஆட்சியாளர்களிடமும்) அடிமையாகாமல், தங்கள் பகுதியிலுள்ள மக்கள், மண்ணோடும், இயற்கை வளங்களோடும், சுத்தமான தண்ணீரையும், காற்றையும் பெற்று சுதந்திரமாய் வாழ்வது. அதை அழிக்க, ஒழிக்க வருபவர்களை எதிர்ப்பது! அது நம்மை ஆள்பவர்களாக இருந்தாலும்.
இதற்கு என்ன செய்வது? ‘’தேர்தலைப் புறக்கணிக்க முடியாது’’ ஏன்? ‘’தேர்தல் என்பது சனநாயகமுறை’’ சரி! ‘’வாக்களிப்பது என்பது ஒவ்வொரு வாக்காளரின் கடமை’’ சரி! ‘’அந்தக்கடமையைச் சரியாக செய்யவேண்டும்’’ யார்? ‘’வாக்காளர்’’ சரி வேட்பாளர்கள், அந்த ஓட்டை வாங்கியவர்கள் தங்களுடைய கடமையைச் சரியாக செய்கிறார்களா? அதன் மூலம் பதவிக்கு, அதிகாரத்திற்கு வந்தவர்கள், இந்த நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு மூன்று வேலையும் கிைடக்கிறதா? கல்வி அருகில் வேண்டாம் சற்று தூரத்திலாவது இலவசமாகக் கிடைக்கிறதா? இனி கிடைக்குமா? அதுவும் தன்னுடைய தாய் மொழியில், விரும்பிய மொ(வ)ழியில் படிக்க முடியுமா? பிறகு வேலை கிடைக்குமா? படிப்புக்கேற்ற ஊதியம் வேண்டாம், (அந்தத் தகுதியை யார் எவ்வாறு தீர்மானிப்பது அதை விட்டுவிடுவோம்) குறைந்தபட்ச வாழ்க்கைக்கு உத்திரவாதமான சம்பளம். பிறகு மருத்துவம் இலவசமாகக் கிடைக்குமா? அரசு மருத்துவமனையின் நிலை எவ்வாறு உள்ளது? நம்மை ஆள்பவர்கள் யாராவது அரசு மருத்துவமனையில் இப்போது வைத்தியம் பார்ப்பார்களா? மக்கள் தான் கொண்ட கருத்தை சுதந்திரமாகப் பேசவும், எழுதவும் முடிகிறதா? விரும்பிய உணவை சாப்பிட முடிகிறதா? இப்படி பட்டியல் நீள்கிறது இவையெல்லாம் நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய அந்த உத்தமர்கள், மக்களுக்கு செய்யும் நல்ல காரியங்கள்.
இந்த நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம். இது தேர்தல் (சனநாயகத்தில்) நம்பிக்கையில்லாத மக்கள் மட்டும் புறக்கணிப்பது அல்ல! ஒட்டு மொத்த தமிழ்நாடே அரசியல்வாதிகள் உள்பட புறக்கணிக்க வேண்டும். இவர்கள் அங்கே சென்றுதான் ஒன்றும் ஆகப்போவதில்லையே! பிறகு எதற்கு வெட்டியாக! அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த உலகம் பார்க்கிறதோ? இல்லை இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் கவனிப்பார்களா? இல்லையோ? நமது இந்த முடிவு! அதிகாரத்தில் இருப்பவர்களை அமைதியாக இருக்கவிடாது. தேர்தலை நடத்தத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்வார்கள். ஆனால் நமது இந்த செயல் ஒத்துழையாமைதான். அமைதியாக யார்? என்ன கூப்பாடு போட்டாலும், கெஞ்சினாலும், கதறினாலும், ஒட்டு மொத்த மாநில மக்களும் நமக்கு காது இல்லாதவர்கள் போல் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது இந்த நாட்டை ஆள்பவர்களே! மக்களின் போராட்டங்களுக்கு, குரலுக்கு செவிகொடுத்து கேட்பதிலையே! அதே நிலையை நாமும் பின்பற்றுவோம். இதுபோன்று செய்தால், மற்ற மாநில மக்களும் யோசிப்பார்கள்.
தமிழ்நாட்டு மக்களை! இந்த போராட்ட நிலைக்கு யார் தள்ளியது? நமது மாநிலத்தின் நிலை என்னவாக உள்ளது? நமக்கு அதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லையா? பிறகு நாமும் ஏன் இதுபோன்ற நிலையை பின்பற்றக்கூடாது? எனப் பேச ஆரம்பிப்பார்கள். எந்த மாநில மக்களையும் மதிக்காமல், அவர்களது உரிமைகளை, கொள்ளையர்களைப்போல பறித்து அவர்களிடமுள்ள நிலம், இயற்கை வளம் என அனைத்தையும் பிடுங்கி அடிமைகளைப்போல் நடத்தும் நிலைமாறி, அந்தந்த மாநில மக்கள் விருப்பத்திற்கு மாறாக எந்தத்திட்டதையும் மத்திய அரசு திணிக்கக்கூடாது,
மாநிலத்திற்கென என்னென்ன உரிமைகள் உள்ளதோ அவைகள் அனைத்தும் மைய அரசின் எந்தவிதமான தடையும் இன்றி முழு சுதந்திரத்தோடு செயல்படும் உரிமை. மத்திய அரசுக்கு என்று, தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் கூட்டு இசைவுதான். மத்திய அரசு என்பது மாநில அரசுகளின், மக்களின் நலத்தின்மேல் அக்கறை கொண்ட, அதனைக் காப்பாற்றுகிற நிறைவேற்றுகிற அரசுதான். எல்லைப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்பு, உணவு, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என எதைக் கண்டுபிடித்தாலும், உருவாக்கினாலும், அவை அனைத்தும் மொழியால், இனத்தால், பழக்கவழக்கத்தால், பண்பாட்டால் வேறுபட்டு பல மாநிலங்களில் அவை தன் சொந்த பூமி இங்கு நாம் அமைதியாகவும், சுதந்திரமாகவும் தனக்குப் பிடித்த வாழ்க்கையை இந்தியனாக வாழ்பவனை, வாழவைப்பதும் காப்பதும்தான் இந்தியாவை ஆள்கிற மத்திய அரசின் கொள்கையாக இனி இருக்கும். இருக்க முடியும். இருக்கவேண்டும், என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். அதைத் தவிர்த்து மத்தியில் ஆள்பவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி எல்லாம் மக்களை ஆட்டுவிக்க நினைக்கக்கூடாது, அது தேவையில்லாதது. ஏனென்றால் ஒட்டுமொத்த மாநிலமும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தால், மத்திய அரசும் கிடையாது. பிரதமரும் கிடையாது. மத்தியில் இருப்பவர்கள், வர நினைப்பவர்கள் இதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
தவிர மத்திய அரசுக்கென்று தனிப்பட்ட எந்தவிதமானதொரு விருப்பமும், அதிகாரமும் தேவையில்லாத ஒன்று. இனி மாநிலத்திற்கென உள்ள அதிகாரங்கள், அல்லது உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி மத்தியிலே குவிக்கும் எண்ணங்களை விட்டு மைய அரசு திருந்த வேண்டும். எப்போதும் பெரியண்ணன் மனநிலையில் உள்ள ஆட்சியாளர்கள்! இனி அதுபோல் யோசிக்கவே கூடாது என்ற இந்த நிலை வருமா? இது நடக்குமா? சத்தியமா? இவைகளைப் பொதுமக்களாகிய உங்களுடைய விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்.
நாடும், நாட்டு மக்களும் நலமுடன் வாழ வேண்டுமானால் அதற்கு அதிகாரம் மக்களிடம்தான் இருக்க வேண்டும். ஆட்சியாளரிடம் இல்லை! அந்த நிலையில்தான் நாம் இருக்கின்றோமா? இல்லையெனில் அந்த அதிகாரம் நம் கைக்கு எப்போது கிடைக்கும்? அதை நாம் எப்படி? பெறப்போகிறோம்! போராடாமல் எதுவும் கிடைக்காது. ‘’அனைவரும் வீதிக்கு வாருங்கள்’’ போராட! நம் உரிமைையப்பெற! அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு முழுச் சுதந்திரக்காற்றைக் சுவாசிக்க. நாம் நாமாய் வாழ. போராடுவோம்! போராடுவோம்! வெற்றி கிடைக்கும்வரை போராடுவோம்.