இடம்: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுளி கிராமத்தில் மூன்று நாட்களுக்கு முன்னதாக ஒரு வீட்டில் பெரியசாமி (70), அவரது மனைவி புஷ்பவள்ளி (60) இருவரும் கருகிக் கிடந்ததாக செய்திகள் வெளியாகின. செய்தி நாளேடுகளில் செய்தியாக வந்ததன் பின்னணியில் ஒரு சோகமான வரலாறு பொதிந்துள்ளது யாருக்கும் தெரியாது.

அவமானம் என்னும் ஆயுதம்

அவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். அவர்கள் அனைவரையும் படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்து விட்டார். அவருக்கு பராலிட்டிக் ஸ்ட்ரோக் எனப்படும் முடக்குவாதம் வந்துவிட்டது. இனி எந்த வேலையும் செய்ய முடியாத நிலை. புஷ்பவள்ளிக்கோ சொரியாசிஸ் எனப்படும் தோல் வியாதி. மூத்த மகன் வெளிநாடு சென்று விட்டார். மருமகளோ இருவரையும் மதிக்கவே மாட்டார். இன்னொரு மகனைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை. அவரது வீட்டில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டனர். அப்படிச் செய்தால்தான் இவர்களாக வெளியேறு வார்கள் என்ற தந்திரத்தை மகன் வீட்டார் கடைப்பிடித்தனர்.

old man 279சொரியாசிசைக் காரணம் காட்டி அவரைக் காணத் தகாதவராக நடத்தியது போன்ற எண்ணற்ற அவமரியாதைகள் நடந்தன. இதனால் மனம் நொந்து அவர்கள் இருவரும் ஒரு முறை விஷமருந்தித் தற்கொலைக்கு முயன்றார்கள். ஆனால், அண்டை வீட்டார்கள் காப்பாற்றிவிட்டார்கள். ஆனால் 3 நாட்களுக்கு முன்னதாக வீட்டில் யாரும் இல்லாததால் தங்கள் மேல் தாங்களே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துவிட்டனர். கருகிய நிலையில் கணவரின் காலைப் பிடித்துக்கொண்டு புஷ்பவள்ளி கிடந்த காட்சி யாரையும் கலங்க வைத்துவிடும்.

துரத்தி அடித்த அலட்சியம்

இன்னொரு சம்பவம். இது நடந்த இடம் நாகப்பட்டினம், வெளிப்பாளையம் நாராயணனுக்கு 65 வயதாகிறது. ஆச்சாரமான குடும்பம். எளிமையான கீழ் நடுத்தர வர்க்க வாழ்க்கை. வக்கீல் குமாஸ்தாவாக இருந்த அவர் மிகுந்த சிரமப்பட்டு தனது ஒரே மகனைக் கணிப்பொறி பட்டதாரி ஆக்கினார். மகன் பள்ளியில் படிக்கும்போதே மனைவி இறந்து விட்டார். அவருடைய உலகமே மகனாக இருந்தது. மகனுக்குப் பெரிய ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. அவனுக்கு மனைவியானவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிலிருந்தே பிரச்சினைகள் ஆரம்பமாகின. ஒரு வாரத்திலேயே உணவு அளிப்பதில் பாகுபாடு ஆரம்பித்தது. காலை உணவே 10 மணிக்கு மேல்தான் அவருக்கு அளிக்கப்படும். ஆறிப்போன பிய்ந்துபோன உதிரி இட்லிகள். சில சமயம் அதுவும் கிடைக்காது. அதுவும் அந்தத் தட்டு வைக்கப்படும் தொனியிலேயே அவர் அலட்சியப்படுத்தப்படுவதை உணர்வார்.

ஒரு முறை பசி பொறுக்க மாட்டாமல் சீக்கிரமே காலை உணவு கேட்டுள்ளார். அதுவும் 9 மணிக்குத்தான். மறுநாளே அவருடைய பையன் அவரிடம் பேசினான்; அப்பா இனிமேல் இங்கு வர வேண்டாம் என்றான். ஏன் என்று கேட்கிறார். இனிமேல் உன்னிடம் மரியாதையாகப் பேச முடியாது என்று கூறி விடுகிறான். இதைக் கேட்டு மனம் நொந்தவர் எதுவும் பேசவில்லை.

சில நாட்களிலேயே அவர் கடலிலிருந்து மீனவர்களால் பிணமாக மீட்கப்பட்டார். தாங்கள் கத்திக் கூப்பாடு போட்டு அவரைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் கடலில் இறங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அமிலச் சொற்கள்

போய்த் தொலைய மாட்டேங்குது, சும்மா இருக்க மாட்டியா, பெருசு, சும்மாதானே இருக் கீங்க, இந்தக் கடைக்கு போய்ட்டு வாங்க, போன் பில்கூட நாங்கதான் கட்டணுமா, நீங்க என்ன செய்றீங்க

இதெல்லாம் மகன்களையும் மகள்களையும் அரும் பாடுபட்டு வளர்த்த பெற்றோர்கள் முதியோர்களான பிறகு எதிர்கொள்ளும் அவமரி யாதைகள், உதாசீனங்கள்.

பல குடும்பங்களில் வேலைக்காரர்களுக்குப் பதிலாகப் பெற்றோர்கள் இருப்பார்கள், சம்பளம் வாங்காத குழந்தை வளர்ப்புக்கான ஆயாக்களாக இருப்பார்கள், வீட்டைப் பார்த்துக் கொள் ளும் வாட்ச்மேன்களாக வீட் டைக் காப்பார்கள்.

முதுமையில் கொடுமை

இதுதான் முதியோர்களின் நிலைமை. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடனே அவர்களின் நரக வாழ்வு தொடங்கி விடுகிறது. ஏற்கனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடனே ஏற்படும் மன அழுத்தம், சமூக அங்கீகார இழப்பு ஆகியவற்றுடன் குடும்பத்திற்குள் மகன்களைச் சார்ந்து வாழ்வதிலிருந்து அலட்சியப் படுத்துதல் தொடங்குகிறது. பல குடும்பங்களில் மருத்துவச் செலவுகளுக்குக் கூட பெற்றோருக்குப் பணம் அளிப்பதில்லை. பணம் கேட்டால் உனக் குச் சாப்பாடு போடுவதே பெரிய விஷயம், இது வேறயா என்று திட்டுவார்களோ என்று அஞ்சும் முதியோர்களைச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

வசதியானவர்களாக இருந்தால் பெற்றோர் களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடு வார்கள். பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து சொந்த பந்தங்களிலிருந்தும் வேரோடு பிடுங்கி அனாதைகளாக முதியோர் இல்லங்களில் வைக்கப்படுகிறார்கள். வசதியற்றவர் களாக இருந்தால் அவமானங்களைப் பொறுக்க முடியாமல் போகும்போதும் மகனே தங்களைச் சுமையாகக் கருதும்போதும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

மனித உரிமை மீறல்கள்

ஏஜ்வெல் பவுண்டேஷன் என்ற ஐநாவின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் இந்தியாவில் முதியோர் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், இந்தியாவில் ஏறத்தாழ ஒரு கோடிப் போ முதியோர்கள். இது 2025இல் 324 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 65 விழுக் காடு முதியோர் ஏழைகள். அவர்களுக்கு எந்த வருமானமும் கிடையாது. 35 விழுக்காடு முதி யோருக்குச் சொத்துகள், முதலீடுகள், சேமிப்புகள், பணம் ஆகிய வசதிகள் உள்ளன. மீதிப் பேருக்கு அதெல்லாம் இல்லை. அத் தகைய ஏழை முதியோர்களின் நிலைதான் மிகவும் மோசம்.

ஆனால், முதியோரின் பொருளாதார அந்தஸ்து எப்படி இருந்தாலும் பெரும் பாலான முதியோர்கள் முறை கேடா கவே நடத்தப்படுகிறார்கள். முதியோர் எதிர் கொள்ளும் மனித உரிமைகளாக ஆய்வில் தெரிய வந்தவை;-

உணவு, மருத்துவப் பரா மரிப்பு, மருந்துகள் ஆகிய அடிப்படைத் தேவைகளை மறுப்பது போன்றவற்றை 13 விழுக்காடு முதியவர்கள் எதிர் கொள்கின்றனர். உடல் மீதான வன்முறை (அவர்களை அடித்து உதைப்பது), பேரக் குழந்தைகள், வெளி நபர்கள், நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என யாரையும் சந்திக்க விடாமல் தடுப்பது, சில சமயங்களில் கட்டிப் போட்டு வைப்பது, வீட்டு வேலை களைச் செய்யக் கட்டாயப்படுத்துவது, அவர்களின் உணர்வுகளை வைத்து பிளாக்மெயில் செய்வது, அவர்களின் அன்றாடத் தேவைகளான தூய்மையான குடிநீர், நல்ல உணவு ஆகியவற்றை மறுப்பது, அவர்களின் உடை மைகளையும் சேமிப்புகளையும், பத்திரங்கள் போன்ற சட்ட ஆவணங்களையும் பறித்துக் கொள்ளுதல் போன்ற மனித உரிமை மீறல்களை 37 விழுக்காடு முதியோர்கள் எதிர் கொள்கின்றனர். 13 விழுக்காடு முதியோர்கள் அன் றாடம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

விதவைகளின் நிலை

இதில் பெண்கள் படும்பாடு இன்னும் மோசமானது. பாலியல் பாகுபாட்டுடன் அடிக்கப்படுவதும் சாதாரணமாக நடைபெறுகிறது. அவர்கள் நான்கு சுவர்களுக்குள் அவமானங்களுடன் அனைத்தையும் தாங்கிக் கொண்டு பொறுமையாகவும் அளவற்ற சகிப்புத் தன்மையுடனும் வாழ்க்கையின் கடைசிக் காலத்தைக் கழிக்க வேண்டும். விதவைகளாக இருந்தால் நரக வாழ்வுதான் காத்திருக்கும்.

சமூக மாற்றங்கள்

இந்த நிலை ஏற்படுவதற்கான சமூக மாற்றங்கள் புரிந்துகொள்ளக்கூடியவையே. நாடு சுதந்திரமடைந்ததில் அரசியல் அதிகாரம் தான் மாறியதே தவிர சமூக மாற்றங்கள் பெரிதாக நடைபெறவில்லை. சாதி, பெண்ண டிமைத்தனம், மூட நம்பிக்கைகள், கிராமங்கள் தோறும் நிலவிய பிரபுத்துவம், அதன் எல்லை யற்ற அதிகாரங்கள் ஆகியவை அப்படியே நீடித்தன. நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஒரு பகுதியாகவே கூட்டுக் குடும்ப அமைப்பும் இருந்தது. கூட்டுக் குடும்ப அமைப்பில் சுதந்திரமின்மை, அந்தரங்கமின்மை போன்ற எதிர் மறை அம்சங்கள் இருந்தாலும் அக்குடும்ப அமைப்பில் மனிதாபிமான உணர்வுகள் இல்லாமல் இல்லை.

நிலப்பிரபுத்துவ சமூகத் தின் தன்மைகளான போலியான வம்ச கௌரவம், குலப்பெருமை, தனி மனித வழிபாடு, இவற்றுடன் பிரிக்க முடியாத அம்சமாகவே தயாள குணம் இருந்தது. மன்னர் களும் பிரபுக்களும் அந்தச் சமூகத்தின் குடும்பங்களும் தங்களது பெரு மைக்காக ஊதாரித்தனமான தயாளத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. அந்தத் தயாளமே சமூகத்தில் முதியோர்களையும் ஆதரவற்றவர்களையும் காப்பாற்றி வந்தது.

கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பு முதியோர்களைக் கைவிட வில்லை. அவர்கள் படுத்த படுக்கையிலிருந்தாலும் வைத்துப் பராமரித்தது. அது மட்டுமின்றி விதவைகள், மன நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களையும் கைவிடாமல் அது ஆதரவளித்தது.

ஆனால் மூலதனத்தின் வீச்சால் கூட்டுக் குடும்ப அமைப்பு மட்டுமல்ல, அனைத்துச் சமூக அமைப்புகளும் சிதையத் தொடங்கின. இந்தியாவில் ஐரோப்பிய நாடுகளைப் போன்று புரட்சியின் மூலம் நிலப்பிரபுத்துவச் சமூகம் ஒழிக்கப்பட்டு நவீன முதலாளித்துவச் சமூகம் உருவாக்கப் படவில்லை. இங்கு பிரஷ்யன் ஜங்கர் பாணியில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையையும் சமூகத்தையும் மாற்ற முயற் சிகள் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன. பிரஷ்யன் ஜங்கர் பாணி என்றால் நிலவுடைமைச் சமூகத்தை அடியோடு புரட்சியின் மூலம் மாற் றாமல் அந்தச் சமூகத்தின் தோள்மீது கை போட்டு சமரச முறையில் மெதுமெதுவாக மாற்றும் முறையாகும். இப்படிப் பட்ட சமரச முறையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் நிலவிவந்த நிலவுடைமை சமூகத்தை மாற்றுவது என்பது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புத் தொழில் பிரி வினருக்கும் கொடிய வேதனை அளிப்பதாகும்.

விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தூக்கி எறியப்பட்டனர். சமூக அமைப்புகளும் உறவுகளும் சிதையத் தொடங்கின. அதுதான் கூட்டுக் குடும்ப அமைப்பிலும் நடந்தது. பணிக்காகப் பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை. அதனால் பெற்றோர்களைக் கூட்டிச் செல்ல முடியாத நிலை. அவர்களை விட்டும் செல்ல முடியாது. இதேபோல் மாற்றுத் திறனாளிகள், மனநோயாளிகள் உள்ளிட்ட நிர்க்கதியாக விடப்பட்டவர்கள் பலர் எண்ணற்ற துயரங்களை எதிர்கொண்டனர். பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் அதிகரித்தன. இந்த அவலம்தான் முதலாளித்துவம் ஏற்படுத்திய மாபெரும் மனித குலத் துயரமாகும். இந்தப் பின்னணி தான் முதியோர்களைப் பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறியும் நிலையை உருவாக்கியுள்ளது.

நுகர்வுக் கலாச்சாரமும் ஆடம்பரக் கலாச்சாரமும் உலகமயமாக்கல் கொள்கைகளும் அமல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. முதியோர்கள் தேவையற்றவாகளாகிப் போனார்கள். இளைய தலைமுறையினர் அவர்களைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. முதியோர்களால் புரிந்து கொள்ள முடியாத தகவல் தொழில் நுட்பமும் இந்த இடைவெளியை அதிகப்படுத்தியது.

- திருநம்பி

Pin It