மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் நாள் சீர்மரபினர், பழங்குடிகள் கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கணக்கெடுப்பை நடத்தி விவரங்களை தாக்கல் செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா கணக்கே ஆயிரத்தெட்டு குளறுபடியோடு எடுக்கும் நம் மாநில அரசு சீர்மரபினர் மற்றும் பழங்குடியினர் கணக்கெடுப்பை எந்த லட்சணத்தில் எடுக்கப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் டிசம்பர் மாத இறுதிக்குள் கணக்கெடுப்புத் தகவலை மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையிடம் சமர்ப்பிப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
இடஒதுக்கீடு இல்லாமல் ஆக்குவதற்கு அத்தனை அயோக்கியதனமும் நடந்து வரும் இன்றைய காலகட்டத்தில் உண்மையிலேயே கணக்கெடுப்பு நடத்துவார்களா? சீர்மரபினர்; பழங்குடியினருக்குக் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பது ஐயமே.
இருந்தாலும் இந்த விடயம் தமிழ்ச் சாதிய சமூகத்திற்குள் சிறு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதால் இதைப்பற்றிய கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்வது அவசியமாகிறது.
குற்றப்பரம்பரை எப்படி உருவாக்கப்பட்டது?
சீர்மரபினர் என்றால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தின் மூலம் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும். இந்தியாவில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்க, அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மய்ய அரசு கி.பி.1871-இல் குற்றப் பரம்பரைச் (The Criminal tribes Act of 1871) சட்டத்தை வடஇந்தியா முழுக்க அமல்படுத்தினர்.
கி.பி 1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் இந்தச் சட்டம் அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர், கடைசியாகக் குற்றப் பரம்பரை சட்டம், 1924 ஆம் ஆண்டில் VI வது திருத்தம் செய்யப்பட்டது.
கி.பி 1871இல் அமல்படுத்தப்பட்ட சட்டம் அரை நூற்றாண்டுக்குப் பின்பே சென்னை மகாணத்தில் கொண்டுவரப்பட்டது இடைப்பட்ட காலகட்டத்தில் சென்னை மாகாண அரசு, குற்றப் பரம்பரையினரை உருவாக்கும் வேலையை செய்தது. அது எப்படி என்பதை இனி பார்ப்போம்.
தமிழகத்தில் 68 சாதியினர் குற்றப் பரம்பரையினராக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர், அதில் குறவர் சமூகம் மட்டுமே இருபதுக்கும் மேல் இருக்கும். குறிஞ்சி நிலம் எனப்படும் மலையிலும், மலை சார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள் குறவர்கள். இவர்கள் மலை அடிவாரங்களில் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள், இவர்களின் முக்கிய உணவு தேன், கிழங்கு வகைகள் மற்றும் காடுகளில் வாழும் மான், முயல், காட்டுக்கோழி போன்றவற்றை வேட்டையாடி உண்பது. இப்படி முழுக்க முழுக்க காடுகளை நம்பியே அவர்கள் வாழ்க்கை இருந்தது.
கி.பி 1850 இல் நாடு முழுக்க ரயில் தண்டவாளம் போடுவதற்கு வனச் சட்டம் என்ற ஒன்றை இயற்றினார்கள். அதன்படி லட்சக்கணக்கான மரங்கள் காடுகளில் வெட்டப்பட்டன. காடுகளை நம்பியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த குறவர்களின் உணவு ஆதாரம் வெள்ளைக்காரர்களின் புதிய வனச் சட்டத்தால் பறிபோனது. வனங்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட அவர்கள் ஊர்களுக்குள் வர ஆரம்பித்தனர்.
சென்னை மகாணத்தில் 1887-இல் ஏற்பட்ட பஞ்சம், வனச் சட்டம், போட்டி வணிகம், ரயில் போக்குவரத்து விரிவாக்கம் ஆகியவற்றின் விளைவுகளும் சேர்ந்து சமூகத்தில் மிகப்பெரிய சீரழிவுகளும் பல குற்றங்களும் மலியக் காரணமாகின. அதை அடக்குவதற்கு வட இந்தியாவில் இருப்பதுபோல் 1911இல் சென்னை மாகாணத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
வன்னியர் சமூகம் மீது பாய்ந்த குற்றப் பரம்பரைச் சட்டம்:
வடஇந்தியா போல் சாதிப் பெயரின் அடிப்படையில் குற்றப்பரம்பரை சட்டத்தை அமல்படுத்தாமல் பூகோளப் பகுதிகளின் அடிப்படையில் வரையறுத்தனர். கள்ளர், வன்னியர், மறவர், முத்தரையர் என்று தமிழகத்தில் 89 சாதிகள் மீது குற்றப் பரம்பரை நடவடிக்கையை அன்றைய ஆங்கிலேய அரசு எடுத்தது.
ஆனால் அது முழுதாகச் சாதியின் அடிப்படையில் இல்லை. பூகோளப் பகுதியின் அடிப்படையிலேயே இருந்தது. இதில் "ஒரே ஒரு சாதிக்கு மட்டும் மொத்த சமூகமும் குற்ற பரம்பரையாக தற்காலிகமாக அறிவிக்கப்பட்டு பின்னர் நீக்கிக் கொண்ட சம்பவமும் நடந்தேறியது."
இதைப்பற்றி 'குடியரசு' இதழில் 08.12.1935இல் வெளிவந்த செய்தியில் ; “வன்னியர்கள் மீதான குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அரசாங்க உத்தரவு சில வாரங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.
சத்திரிய வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களான படையாட்சிகள் ஏன் குற்றம் செய்யும் வகுப்பினராக சேர்க்கப்பட்டார்கள்? அதற்குக் காரணமென்ன? சில பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்கள் அவர்களுடைய ரிப்போர்ட்'களில் அவ்வகுப்பினரைக் குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் மிக அவசியம் என்று எழுதியதனால் தான் அரசாங்கத்தார் தவறாக அப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டார்கள்.
அந்த உத்தரவை எதிர்த்து தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர் ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பிரயாசைப்பட்டு வெற்றிபெற்ற விஷயம் அந்த ஜில்லாவாசிகளான படையாட்சிகளுக்கு தெரியும் என்று நம்புகிறோம்”
வன்னியர்களைக் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரால் அவசர தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் விளைவாக அது ரத்து செய்யப்பட்டது என்கிற தகவல் பெரியாரின் குடியரசு இதழ் மூலம் நமக்கு கிடைக்கிறது.
அதே சமயம் மொத்த வன்னியர்கள் மீதான குற்றப்பரம்பரைச் சட்டம் ஆங்கிலேயரால் முற்றிலுமாக ரத்து செய்யப்படவில்லை. நெய்வேலி பகுதியில் சில கிராமத்து படையாட்சிகள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் 1948வரை கொண்டு வரப்பட்டிருந்தனர் என்ற தகவல்கள் கலசம் ராமலிங்கம் வெளியிட்டுள்ள 'வகுப்புவாரி மலர்' என்கிற புத்தகத்தில் காணக் கிடைக்கிறது.
சட்ட நடைமுறைகள்:
குற்றப்பரம்பரையினர் என அறிவிக்கப்பட்ட பகுதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது.
காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கும் கூட விதிவிலக்கு கிடையாது என்று கொடுமைகளை அனுபவித்தனர்.
ஆனால் இவர்களில் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பரம்பரை நடவடிக்கையால் சிவகங்கை மதுரை பகுதிகளில் வாழ்ந்த கள்ளர் சமூகத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர் கும்பகோணம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த கள்ளர்கள் ஒரு போதும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு உட்படுத்தப்படவில்லை.
ரத்தானது எப்படி:
இது 1911-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 1947 ஆம் ஆண்டு சென்னை சட்டமன்ற மேலவையில் வலியுறுத்தப்பட்டது. குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் மனுக்களை அன்றைய அரசும் பரிசீலித்தது.
குற்றப்பரம்பரையினர் மீது சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதால் அவர்கள் திருந்துவதற்கு பதிலாக மேலும் கடும் குற்றவாளிகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிய வருகிறது என்றும், இப்பரம்பரையைச் சேர்ந்த குற்றம் புரிபவர்களை சமாளிக்க இந்திய தண்டனை விதியாம் இந்தியன் பீனல் கோட் குற்றவியல் நடைமுறை விதிகள் போதுமானவை என்றும், எனவே குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கண்டுள்ள சிறப்பு விதிமுறைகளை தொடர்ந்து செயல்படுத்தத் தேவையில்லை என்று அரசு முடிவு செய்து இச்சட்டம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சாதியினராக 68 சாதிகளை அரசு வெளியிட்டு அவர்கள் சீர்மரபினர் என்று அழைக்கப்பட்டனர்.
சீர்மரபினரும் இடஒதுக்கீடும்:
தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், என்கிற நான்கு பிரிவுகளிலும் இந்த 68 சாதிகள் உள்ளடங்கி இருந்ததால் 1979இல் ஆட்சியிலிருந்த எம்ஜிஆர் சீர்மரபினரை பழங்குடியினராக சாதி அடிப்படையில் இல்லாமல், வகுப்பு அடிப்படையில் மாற்ற அரசாணை பிறப்பித்தார்.
இந்தியா முழுக்க சீர்மரபினர் சாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் மட்டும் சீர்மரபினர் வகுப்பாக அடையாளப்படுத்தியதால் மத்திய அரசின் வேலை வாய்ப்பு, கல்விக்கு முன்னுரிமை போன்ற சலுகைகள் தமிழக சீர்மரபினருக்கு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் 2018 நவம்பரில் இன்றைய எடப்பாடி அரசால் அமைக்கப்பட்ட வருவாய்துறைச் செயலர் தலைமையிலான குழு, இந்த ஆண்டு மார்ச் 4 ல் அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் 1979 ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப்பெற்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட 68 சமூகத்தினரும் தமிழக அரசு நலத்திட்டங்களைப் பெற சீர் மரபினர் என்றும், மத்திய அரசு நலத்திட்டங்களைப் பெற சீர்மரபுப் பழங்குடியினர் எனவும் அழைக்கப்படுவர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு :
சீர்மரபு பழங்குடியினர் கணக்கெடுக்கும் பணி நடக்குமானால், சமூகநீதி அடிப்படையில் நிறைய குழப்பம் நேரும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 12.10.2020 தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்; தமிழகத்தில் சீர்மரபினர் என்ற பிரிவு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை சீர்மரபினர் என்ற பெயரில் சான்றிதழ் பெற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வளர்ந்த சமூகங்கள் பறித்துக் கொள்ளும் கொடுமை தொடரும். இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் சீர்மரபினரை தனிப்பிரிவாக அறிவித்து, அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம், என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பின் தேவை:
எந்த சாதிக்கும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு வரக்கூடாது என்றால் சாதிரீதியாக மக்கள் கணக்கெடுப்பை கட்டாயம் எடுத்தே ஆகவேண்டும். ஆனால் எந்த மத்திய அரசும் எடுக்காது, அப்படியே எடுத்தாலும் அதை வெளியிட மாட்டார்கள்.
சாதிரீதியான மக்கள் கணக்கெடுப்பை நடத்தாத வரை அனைத்து சாதியினரும் தங்களுக்கான உரிமை பாதிக்கப்பட்டதாகவே கருத வாய்ப்புண்டு. அதுவரை மத்திய மாநில அரசுகள் சமூகநீதி அடிப்படையில் முன்னெடுக்கும் முன்னெடுப்புகள் அனைத்தும் முழுமை அடையாததாகவே இருக்கும்.
ஒருபக்கம் சமூகநீதிச் சலுகை என்று அறிவித்து விட்டு இன்னொரு பக்கம் அதை யாருக்கும் கிடைக்காதவாறு வஞ்சகம் செய்கிறது ஒன்றிய அரசு.
நாம் கோரிக்கையாக வைக்க வேண்டியது. 80 வருடமாக வெளியிடாமல் இருக்கும் சாதி ரீதியான கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். அரசு வேலைகளில் எந்த சாதி எத்தனை சதவீதம் இருக்கிறது என்ற புள்ளிவிவரம் வெளிவர வேண்டும். விகிதாச்சாரப்படி அனைத்து சாதிகளுக்கும் அரசு வேலைகளில் கல்விக்கூடங்களில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கை மட்டுமே வகுப்பு வாரியான இட ஒதுக்கீட்டுக்கு ஒரே தீர்வு.
- வெங்காயம் ஆசிரியர் குழு