இந்திய வீடுகளில் 30 சதவீத எரிபொருள் செலவு, மின் விளக்குகளால் மட்டும் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனால் தேவையில்லாத நேரத்தில் விளக்குகள், மின் சாதனங்களை அணைத்துவிடுவது உத்தமம். அலுவலகத்திலும் வீட்டிலும் தேவையில்லாமல் இயங்கும் மின்சாதனங்களை நிறுத்திவிடுங்கள். எதையும் ஸ்டாண்ட் பை நிலையில் வைக்காதீர்கள். முழுமையாக நிறுத்திவிடுங்கள். இதனால்தான் அதிக மின்சார விரயம் ஏற்படுகிறது. அத்துடன் விளக்குகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் அதிக வெளிச்சமும், மின்சாதனங்களை முறைப்படி பராமரித்தால் அதிக பயனும் கிடைக்கும்.

தற்போது மின்சாரத்தை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் சி.எப்.எல். குறுங்குழல் விளக்குகள் வந்துவிட்டன. எடுத்துக்காட்டாக 75 வாட் திறன் கொண்ட சாதாரண விளக்கு 100 மணி நேரம் எரிய 7.5 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. ஆனால் அதேநேரம் 15 வாட் சி.எப்.எல் விளக்கு அதே அளவு வெளிச்சத்தைக் கொடுத்தாலும் 1.5 யூனிட் மின்சாரத்தையே செலவழிக்கும். இதன் காரணமாக மின்சார செலவு குறையும்.

மேலும் நமது வீட்டை சூரியஒளி பரவும் வகையில் வடிவமைப்பதும், முடிந்த வரை இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்துவதும் அவசியம். இது மின்சார செலவை குறைப்பது மட்டுமின்றி கண் பார்வைத்திறனையும் பாதுகாக்கும். அதேபோல காற்று வீசும் திசையைப் பார்த்து ஜன்னல்களை அமைத்தாலே வீடு குளிர்ச்சியாக இருக்கும். காற்று வரும் திசையில் பெரிய ஜன்னல்கள், காற்று வெளியேறும் பகுதியில் சிறிய ஜன்னல்களை பொருத்த வேண்டும்.

மின்சாதனங்களை வாங்கும்போது, பி.இ.இ நட்சத்திர குறியீட்டைப் பார்த்து வாங்க வேண்டும். அதிக நட்சத்திரம் கொண்ட மின் சாதனங்கள் அதிக மின்சாரத்தை சேமிக்கும் தன்மை கொண்டவை.

எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள உள்ள மிகப்பெரிய பிரச்சினை நாம் தேவையில்லை என்று ஒதுக்கும் மின்சாதனக் கழிவுகளே. எத்தனை கணினிகள், அவை சார்ந்த உபரி பொருள்கள் சில வருடங்களிலேயே வீணாக உள்ளன என்று பார்த்தால் அது உங்களை ஆச்சரியப்படுத்தும். எனவே, எந்த ஒரு மின்சாதனத்தை வாங்குவதற்கு முன்பும் அது தேவையா, அவசியமா என்று யோசித்து வாங்குங்கள்.

அதேநேரம் நமக்குத் தேவையற்ற மின் ஸ்சாதனங்கள் இயங்கும் நிலையில் அரசு பள்ளிகள், தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடலாம். முடிந்த வரை எல்லாவற்றையும் பயன்படுத்துவது மட்டுமே சூழலை காக்க கைகொடுக்கும்.

Pin It