பேறு கால ஆரோக்கியம் குறித்து அரசு மிகவும் சிரத்தையோடுப் பணியாற்றிவரும் காலம் இது. காரணம், பேறு கால ஆரோக்கியம் தாய் மற்றும் பிறக்கப்போகும் சேய் என இருவரோடும் தொடர்புடையது. பேறுகாலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு வராமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம், முக்கியமாக இரும்புச் சத்து. காரணம், உலகம் முழுதும் நிகழும் பேறுகால இறப்பில் சுமார் 20% பேறுகால இரத்தச்சோகையோடு தொடர்புடையது. இந்தியாவில், அண்மையில் நிகழ்ந்த தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 3 (National Family Health Survey - NFHS 3) இன் படி 59% கர்ப்பிணிப் பெண்களும் 63% தாய்ப்பாலூட்டும் பெண்களும் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களில், இரத்தச்சோகையென்பது குழந்தைப் பருவத்தினில் ஆரம்பித்து, இளம் பருவத்தினில் மோசமாகி, கர்ப்பம் தரித்தப் பின் மேலும் மோசமடைகின்றது. ஆக, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மூலம் பெண்களின் இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, முக்கியத்துவம் தரப்படுகின்றது. தொடர் முயற்சிக்குப் பின்னேயும், பேறு கால இரத்தச் சோகையென்பது பெரும் உடல்நலப் பிரச்சனையாக இருந்து வருகின்றது. இரத்தச் சோகையென்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது. அக்காரணங்களில் முக்கியமானது:

  1. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் இரத்தச் சோகை
  2. போலிக் அமிலக் (Folic Acid) குறைபாட்டால் ஏற்படும் இரத்தச் சோகை
  3. வைட்டமின் பி 12 சத்துக் குறைபாட்டால் ஏற்படும் இரத்தச் சோகை
  4. தைராய்டு சுரப்புக் குறைபாடு, நெடுநாளைய சிறுநீரக நோய்
  5. சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுளோபினில் உள்ள குறைபாடுகள்.

இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் மேற்கூறியவற்றில், இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் இரத்தச் சோகை மிகப் பரவலாகக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம்:

  1. தேவைக்கும் குறைவான உணவு உட்கொள்ளுதல்
  2. உணவிலிருந்து சத்துக்கள் பெறப்படுவது குறைதல்
  3. குடற்புழுக்கள் பெருகுதல்
  4. காச நோய், ஹெச்ஐவி நோய்த் தோற்று போன்ற நெடு நாளைய நோய்கள்
  5. மலேரியா
  6. கர்ப்பம் தரிக்கும் முன் கடுமையான நோய்த்தொற்று
  7. கர்ப்ப காலங்களுக்கு இடைேய குறைவான இடைவெளி (இரண்டு வருடங்களுக்குக் குறைவாக)

நம் உடலில் 2/3 பங்கு இரும்புச்சத்து ஓட்டத்தில் இருக்கும் இரத்தத்திலும் 1/3 பங்கு பெரிட்டின் (Ferritin) என்ற புரதமாகவும் இருக்கும். ஆக, உடலில் எப்பொழுதேனும் இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படுமாயின் பெரிட்டினில் உள்ள இரும்புச் சத்தினை உடல் உபயோகித்துக் கொள்ளும். கர்ப்பம் தரிக்கும் முன் உடலில் இரும்புச்சத்து சேமிப்பு 300 மில்லி கிராமிற்கும் மேலாக இருந்து பேறுகாலத்தின் போது சரிவிகித உணவு உட்கொண்டால் தான் பேறுகாலத்தில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையினில், 3/4 இந்தியப் பெண்கள் மேற்சொன்ன அடிப்படைத் தேவையினை பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. மேலும் முன்பு சொன்னது போல, இரத்தச் சோகையென்பது சிறு வயதில் இருந்தே இருப்பதால், உடலில் சேமித்து வைக்கப்பட்ட இரும்புச் சத்தும் குறைவாகவே இருக்கும். அதோடு, நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது என்னவெனில், ஒவ்வொரு நாளும் வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தின் வழியேவும் 1 மில்லிகிராம் அளவு இரும்புச் சத்தினை இழக்கிறோம்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணிற்கு இருக்கும் இரும்புச் சத்து தேவை என்ன என்பதனை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். கர்ப்பம் தரித்ததில் இருந்து பேறு கால முழுமைக்கும், சராசரியாக 55 கிலோ எடையுள்ள பெண்ணிற்கு தோராயமாக 1200 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவை. பேறு காலத்தின் போது மற்றைய காலத்தினோடு அதிகமாக இரும்புச் சத்து தேவையென்பது இருக்கின்றது. கர்ப்பம் தரித்த இரும்புச் சத்து இழப்பினை ஏற்படுத்தும் மாதவிடாய் நின்று விடுவதனால் இரும்புச் சத்து தேவை உடனடியாக உயர்ந்துவிடுவதில்லை. ஒரு நாளைக்கு 0.8 முதல் 1 மில்லிகிராம் அளவிலான தேவையென்பது இருக்கும். இரண்டாம் டிரைமெஸ்டர் முதல் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் அளவு 30 முதல் 50 % உயர்ந்து அதே சமயம் இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்கள் 15 - 30 % உயரும். இந்த திடீர் பிளாஸ்மா அளவு உயர்வினாலும் சிவப்பு இரத்த அணுக்களின் உயர்வினாலும், மிதமான இரத்தச் சோகை ஏற்படும். ஆக, அக்காலத்தில் ஒரு நாளைக்கான இரும்புச் சத்துத் தேவையென்பது 4 - 5 மில்லிகிராம் அளவிற்கு உயரும். மூன்றாம் டிரைமெஸ்டர் போது, தாய்க்கும் சேய்க்குமான தேவை அதிகமாவதால், ஒரு நாளைக்கான தேவை 6 - 7 மில்லிகிராம் அளவிற்கு உயரும்.

இக்காலத்தில், அஸ்கார்பிக் அமிலம் அதிகமுள்ள கறி, மீன் மற்றும் உணவு வகைகள் அடங்கிய சரிவிகித ஊட்டச்சத்துடனான உணவினை உட்கொள்ளுதல் வழி, 3 முதல் 4 மில்லிகிராம் அளவிற்கு இரும்புச் சத்தினை உடல் பெற்றுக்கொள்ள முடியும். சராசரியான இந்திய உணவிலோ, தானியங்கள் மிகுந்திருப்பதால், அதில் உள்ள பைட்டேட்ஸ் (phytates) மற்றும் நார்ச் சத்து இரும்புச் சத்து உடலினால் உறிஞ்சப்படுவதனை மட்டுப்படுத்தும். மேலும், இந்திய உணவில் 50% இரும்புச் சத்து மாத்திரமே உடலினால் உறிஞ்சக்கூடிய வகையினில் இருக்கின்றது. ஆகவே, நமது உணவினால் பெறப்படும் இரும்புச் சத்து என்பது ஒரு நாளைக்கான தேவையினை அரைவாசி கூட பூர்த்திசெய்ய இயலாதபடிக்கு உள்ளது.

உணவினால் பூர்த்திசெய்ய இயலாத தேவைகளுக்காகவே சத்துக்கள் மருந்துகளாக வழங்கப்படுகின்றது. இந்தத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் போனால், அது இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகைக்கே இட்டுச்செல்லும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு முதல் டிரைமெஸ்டரில் 11கிராம்/டெசிலிட்டர் அளவிற்கு குறைவாக, இரண்டாம் டிரைமெஸ்டரில் 10.5 கிராம்/டெசிலிட்டர் அளவிற்கு குறைவாக மற்றும் மூன்றாம் டிரைமெஸ்டரில் 11 கிராம்/டெசிலிட்டர் அளவிற்கு குறைவாக இருப்பின் அது பேறுகால இரத்தச் சோகையெனப்படும். பேறுகாலத்தின் பொது ஏற்படும் இரத்தச்சோகைத் தாய்க்கும் சேய்க்கும் உடல் நலன் சார்ந்த சிக்கல்களை உண்டாக்கும், உதாரணமாகக் குறைப்பிரசவம், சேய் குறைந்த உடல் எடையோடு பிறத்தல், சேய் இறப்பதற்கான வாய்ப்பு அதிகரித்தல், தாய் இறப்பதற்கான வாய்ப்பு அதிகரித்தல்.

தாய்க்கு இரும்புச் சத்துக் குறைவாக இருந்தால் இரும்புச் சத்து சேமிப்பானது உபயோகப்படுத்தப்பட்டுவிடும். ஆக, தாயின் இரத்தத்தில் குறைவாக இரும்புச் சத்து இருக்குமாயின் சேயின் உடலில் இரும்புச் சத்து சேகரமாவது குறைந்துவிடும். ஆக, பிறக்கும் போதே குறைவான இரும்புச் சேகரத்தினோடு பிறக்கும் குழந்தை இரும்புச் சத்து குறைவான தாய்ப்பாலும், உணவினையும் உட்கொண்டு, அதன் வழி பிறந்த 6 மாதத்திலேயே இரத்தச் சோகை ஏற்பட்டுவிடும்.

அதனால் தான் அரசாங்கம் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் இரும்புச் சத்திற்கான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள அறிவுறுத்துகிறது. இம்மாத்திரைகள், இரும்புச் சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளாக, பேறுகாலத்தில் பன்னிரெண்டாவது வாரத்தில் இருந்து பேறுகாலம் முடிந்து 8 வாரம் உட்கொள்ளச் செய்யப்படுகின்றார்கள்.

 இச்சத்து அதிகம் இருக்கும் உணவுப்பொருட்கள், கீரை, மாட்டின் ஈரல், மாட்டின் சிறுநீரகம், ஆட்டின் மண்ணீரல், உலர்ந்த திராட்சை , வெல்லம், பேரிச்சை, பாதாம். அதனினும் முக்கியமாக நினைவிலிருக்க வேண்டியது, இரும்புச் சாது மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுது ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுடன் உட்கொள்ளுதல் நலம். காரணம் அதில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் இரும்புச் சத்து உடலால் உறிஞ்சப்பட உறுதுணையாய் இருக்கும். அதே சமயம், பால், காபி, டீ போன்றவையோடு இம்மாதிரி உட்கொள்ளப்பட்டால், இரும்புச் சத்து உடலால் உறிஞ்சப்படுத்தல் மட்டுப்படும். ஊட்டச்சத்து சரிவிகித அளவில் இருக்கும் உணவு மற்றும் இரும்புச் சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகள் மாத்திரமே பேறுகால இரத்தச் சோகை ஏற்படாமல் தடுக்க வழிசெய்யும். எனவே, ஊட்டச்சத்தின் தேவையினை மறக்காமல் இருந்து, நிறைவான பேறுகாலத்தினையும் இனிமையான குழந்தைப்பேறினையும் உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் சுற்றத்தினருக்கும் உறுதிசெய்யுங்கள்

Pin It