திலகரும் தாக்கரேவும்  கூறுபோட்ட பங்கு 

மராட்டிய மாநிலத்தில் பிளேக் நோய் பரவுவதைத் தடுப்பதற்காக  எலிகளைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு முயன்றபோது எலிகளைக் கட்டுப்படுத்துவது இந்து மதத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்  எனவும், எலிகள் மீதான நடவடிக்கை ஆங்கிலேயே அரசின் மத தலையீடு என்ற  அறிவியலுக்கு முரண்பட்ட மத வாத தலைப்புகளில் திலகர் நடத்தி வந்த கேசரி, மராட்டா ஆகிய பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளை எழுதி கடைசியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையே ஆங்கிலேயே அரசு கைவிட்டது. விளைவு, பிளேக் நோயால் மேலும்  பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போயினர் இந்த மாபெரும் சாதனைக்காகவே தன் பெயருக்கு முன்னால் லோகமான்ய என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டு தன்னை மதவாதத் தலைவராக முன்னிலைப் படுத்திக்கொண்டு தொடர்ச்சியாக மத கலவரம் ஏற்படுத்துவதற்காக அது வரையில் வட நாட்டில் வீட்டிற்குள்ளே வழிபட்ட விநாயகனை வீதியில் கொண்டு வந்து வைத்து மதக் கலவரத்தை  தொடங்கி வைத்தவரே லோகமான்ய திலகர்.

திலகரின் தொடக்கப் புள்ளியை வட மாநிலமான மராட்டியத்தில்  நீண்டதொரு மத வாதக் கோடாகவும், கேடாகவும் விரிவுபடுத்தி விநாயகச் சிலைகளை வீதிகளில் வைத்து அரசியல் களம் கண்டு ஆதாயம் அடைந்தவரே பால்தாக்கரே என்னும் மதவாதி, இவரால் 1966ஆம் ஆண்டு விநாயகர் பண்டிகை ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பலிகளும், 1992இல் விநாயகர் பண்டிகைக் கலவரத்தில் 1000க்கும் மேற்பட்ட பலிகளுமே மக்களுக்கு இவர்களால் கிடைத்த பலன்கள். இதுபோன்ற பலன்கள் தமிழகத்திற்கும் ஏற்படவே கடந்த இருபது ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். 

காவிகளின் கள்ளவழி

மதவாதக் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கும் பா.ஜ.கவுக்கும் அதற்கான களப்பணிகளைச் செய்து வரும் சங்பரிவாரங்களுக்கும் மாபெரும் கலவரத் துருப்புச் சீட்டுதான்  விநாயகர் பண்டிகை.  எங்கெல்லாம் புதிய விநாயகர் சிலை தெருவில் வைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சிலையை கரைத்தபின்பு நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு காவிக்கொடி ஏற்றுவதும் அந்த இடத்தில் அதுநாள் வரை இல்லாத மத பிரச்சனைகளை தேடித்தேடி  உருவாக்கியும், கண்டுபிடித்தும் மதவாத பிரச்சனையை ஏற்படுத்துவதும் வடநாட்டு சர்மாக்களின்  தடித்த பேச்சுகளுக்கு அறியாமை ஆதரவுகளை அள்ளி வீசுவதும்  என இதுபோன்ற அறியாமை செயல்பாடுகளினாலேயே கழகம் இல்லாத தமிழகம் வேண்டுமென பகல் கனவு சுவரொட்டிகளை ஒட்டி, கானல் நீரை வாரி  குடிக்க சங்பரிவாரங்களும் பா.ஜ.க.வும் முயல்கிறார்கள்.

தமிழ் விழா அல்லாத பண்டிகை

விழா என்பதெல்லாம் தமிழரின் கொண்டாட்டங்கள், பண்டிகை என்பதெல்லாம் வட நாட்டானின் கொண்டாட்டம் மட்டுமல்ல திராவிடரான தமிழர்களுக்கு விரோதமானவை  என்றார் தந்தை பெரியார். எங்கோ வட நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்தி  ஆதாயம் காண ஏற்படுத்தப்பட்ட விநாயகர் பண்டிகை நமக்கு சிறிதளவும் தொடர்பற்றது என்பதற்கு தமிழ்வழியான சான்று, "சங்க இலக்கிய நூல்கள் எதிலேயும் எந்தவொரு சிறு வரி கூட விநாயகர் பற்றி இல்லை" புறநானூற்றில் எருக்கம் பூவைச் சூடி வழிபடுவது பற்றிய பாடல் இருப்பதாகக்  கூறுபவர்கள் அந்த வரிகளுக்கு முந்தைய, பிந்தைய வரிகளில் எங்கும் விநாயகர் பற்றி இதுவரைக் கண்டறிந்ததில்லை. உண்மை என்னவெனில் பிரகஸ்பதி வழிபாடு பற்றி கூறும் புறநானூற்றுப் பாடல்களை விநாயகர் பாடல்களே என்று பொய் சொல்கிறார்கள். இதனை மேலும் எளிமையாக விளக்க வேண்டுமானால் விநாயகப் பண்டிகையின் பிறப்பிடமான மராட்டியத்தில் எருக்கம் பூவுக்கும் விநாயகனுக்கும் தொடர்பே இல்லை, அங்கு எருக்கம் பூக்கூட இல்லை. ஔவையாரே பாடியுள்ளார் என்றொரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.  ஔவையார் என்பவர் ஒரேயொருவர்  இல்லை பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு பெண்பாற் புலவர்களை ஔவையார் என்றழைக்கிறது இலக்கியம். ஆகவே சங்க இலக்கியத்திலும் சங்க கால ஔவையாரின் பாடல்களிலும் காணப்படாத விநாயகர் பண்டிகை தமிழருக்கு தொடர்பற்றது என்பதே உண்மை.

குறிவைக்கப்படும் சிறுபான்மையினர்

விநாயகர் பண்டிகையின் ஊர்வலங்களுக்கு பிரதான வழிகள் பல இருந்தாலும் எங்கெல்லாம் மாற்று மதத்தவரின் இருப்பிடங்களும் வழிபாட்டு இடங்களும் இருக்கின்றனவோ அந்தப் பகுதியில் ஊர்வலம் நுழைவதையும் அந்த பகுதியில் மதவெறி முழக்கத்தை எழுப்புவதுமே இந்து உரிமை என்கிறார்கள்.  சிறுபான்மை மக்கள்  வசிக்கும் பகுதிகளின் வழியே செல்லும் ஆடி மாத விழாக்களுக்கும், புரட்டாசி கோவிந்தாக்களுக்கும், கார்த்திகை மாத ஐயப்ப பூசைகளுக்கும், மார்கழி பஜனைக்கும் ஏற்படாத எதிர்ப்பு  எழுவதற்கு காரணம் விநாயகர் பண்டிகையல்லாத பிறவற்றில் மாற்று மதத்தை மதவெறியுடன் பேசும் கலவரத் தூண்டுதல் முழக்கங்கள் இல்லை.  ஆனால், விநாயகர் பண்டிகையை தெருவில் வைத்துக் கொண்டாடும் பிரதான நோக்கமே மத வெறி தான்.  விமானத்தில் சோஃபியா முழக்கம் இடுவதை விமர்சனம் செய்யும் பரிவாரங்களும் பாஜகவும் தான் மாற்று மதத்தவரின் இருப்பிடப் பகுதிகளிலும் வழிபாட்டுப் பகுதிகளிலும் மதவெறி முழக்கம் இடுவதை உரிமை என்கிறது.

ஏமாற்று வலையில் இந்துவல்லாத மக்கள்

இந்து மத வெறியை ஏற்படுத்தி மதக் கலவரங்களின் மூலம் பலன் தேட எத்தனிக்கும் பார்ப்பனியத்திற்கு களப்பலியாகும் பெரும்பான்மை மக்களும் நம்மவர்கள் தான். மதவெறியை ஏற்படுத்தவே நாமெல்லாம் இந்து என்கிறான். மற்ற நேரங்களில் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்கிறான் தீட்டாகும் நேரங்களில் மட்டும் நாமெல்லாம் இந்து என்ற ஏமாற்று முழக்கம் எங்கே போனது? 

சன் தொலைக்காட்சி ஒளிபரப்பும் விநாயகர் புராணம் தொடர் மேலும் இதுபோன்று மக்களை ஏமாற வகை செய்கிறது. விநாயகர் வினை அரசியலை ஈரோட்டு கண்கொண்டு பார்த்தாலொழிய மத வெறியிலிருந்து விடுதலை கிடைக்காது என்பதே நிதர்சனம்.         

Pin It