அமெரிக்க நாட்டில் பிப்ரவரி மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மறைக்கப்பட்ட வரலாறுகளை, ஒடுக்கப்பட்ட இனத்தின் மக்களே உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிடும் உன்னத மாதம். ஒரு நீண்ட போராட்டம் கடந்து வந்த பாதையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் மாதம். ஆம் பிப்ரவரி மாதம் முழுவதும் அமெரிக்காவில் கறுப்பின மக்களின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக "The Black History Month " கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதனைத் தொடங்கியவர் Dr. Carter G.Woodson. Dr. Carter அவர்களின் பெற்றோர்கள் அடிமைகளாகப் பணி செய்தவர்கள். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த Dr. Carter அவர்கள் தன் உழைப்பால், ஊக்கத்தால் வரலாற்றுப் பாடத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 1912ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். அப்போது தான் வரலாற்றுப் பாடங்களில் அமெரிக்காவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த கறுப்பினத்தவரின் வரலாறு முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதைக் கண்டு வருத்தமுற்று 1915இல் கறுப்பின மக்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் Association for the Study Of Negroes Life and History என்ற அமைப்பே பின்னாளில் Association for the Study Of Afro -American Life and History என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1926 ஆம் ஆண்டு தான் Dr. Carter G.Woodson, நீக்ரோ வரலாற்று வாரம் என்ற முன்னெடுப்பு மூலம் நாடு தழுவிய அளவில் கறுப்பின மக்களின் வரலாற்றுப் பங்கைத் தெரிந்து கொள்ள ஆவண செய்தார்.
வூட்ஸ்ன் அவர்களின் மரணத்திற்கு பின், 1940களில் மெல்ல மெல்ல கறுப்பின மக்களின் வரலாற்றைச் சொல்லும் மாதம் விரிவாக்கப்பட்டது. அமெரிக்காவின் தென் பகுதிகளில் கறுப்பின மக்களின் வரலாற்று முக்கியத்துவம், பங்களிப்பு பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டது. கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பரந்த சிந்தனைக் கொண்ட வெள்ளையர்களும் வரலாற்றைத் தெரிந்து கொண்டனர். இதனால் இரு பிரிவினிரிடம் இருந்து வந்த மோதல் போக்குகள் சற்றே மறையத் தொடங்கின. பின் 1976ஆம் ஆண்டு தான் ஒரு வாரமாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த நிகழ்வு ஒரு மாதமாக மாற்றப்பட்டது.
ஏன் பிப்ரவரி மாதம் திரு. வூட்ஸ்ன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பாக கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்ட இருபெரும் தலைவர்கள் Frederick Douglass மற்றும் Abraham Lincoln அவர்கள் இருவரும் பிறந்த மாதம். அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி மாதம் வரலாற்று ரீதியாகவே பல சிறப்புகளைக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் சமூக உரிமைச் செயற்பாட்டாளர், மற்றும் The National Association for the Advancement of Colored People (civil rights organization in the United States) என்ற அமைப்பின் துணைத் தலைவராகச் செயலாற்றிய W. E. B. Du Bois அவர்களின் பிறந்த நாள் பிப்ரவரி 23, 1868.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில், 15 வது சட்டத்திருத்தம் மூலம் கறுப்பின குடிமக்களுக்கு அமெரிக்க மண்ணில் ஓட்டுப்போடும் உரிமை வழங்கப்பட்டது பிப்ரவரி 3, 1870 ஆம் ஆண்டு.
முதல் ஆப்பிரிக்க அமெரிக்க செனட்டராக (senator) Hiram Rhodes Revels பதவி ஏற்றுக்கொண்டது பிப்ரவரி 25,1870.
The National Association for the Advancement of Colored People (NAACP) உருவானது பிப்ரவரி 12, 1909.
இப்படித் தொடர்ச்சியாக கறுப்பின மக்களின் பங்களிப்பில், பிப்ரவரி மாதம் முக்கியமாக இருந்து வந்த காரணத்தினால் வூட்ஸ்ன் அவர்கள் இம்மாதத்தைத் தேர்ந்தெடுத்தார். கறுப்பின மக்கள் கடந்து வந்த பாதையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு மாதமாக பிப்ரவரி மாதம் இருக்கின்றது எனின் அது மிகையல்ல .
அமெரிக்காவில் மட்டுமல்லாது கனடா, நெதர்லாண்ட்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த முன்னெடுப்பு கடைப்பிடிக்கப்படுகின்றது.
கறுப்பின விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் பலரின் பங்களிப்பு அமெரிக்காவில் வளரும் பல இனத்தவருக்கும் தெரிவிக்கும் ஒரு முயற்சியே இந்த மாதம். மேலும், கறுப்பின மக்களின் பண்பாடு, அவர்களின் விடுதலை உணர்வு, அதனை அடைய அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் என இம்மாதம் முழுவதும் தகவல் சுரங்கமாகவே முன்னெடுக்கப்படுவது மிகச் சிறப்பான செயல்பாடு.
Maya Angelou (கவிஞர்), Langston Hughes (கவிஞர், jazz) Alexa Candy (முதல் கறுப்பின மரபியல் மருத்துவ நிபுணர்) எனப் பலரைப் பற்றியும் இந்த மாதத்தில் குறுந்தகவல்களை பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் அறியமுடியும், மேலும் இன்றைய காலகட்டங்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரப்புகின்றனர்.
இந்தச் சிறப்பு வாய்ந்த முன்னெடுப்பை நாம், நம் தமிழ் நாட்டில் திராவிடர் இன எழுச்சி மாதமாக ஏதேனும் ஒரு மாதத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டாடுதல் வருங்காலத்தில் நிறைய பலன்களைத் தரும். 100 ஆண்டு கால வெற்றி இயக்கமாக திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது? திராவிடர் தலைவர்கள் செய்தது என்ன? திராவிட ஆட்சிகள் வழங்கிய சமூக நீதி திட்டங்கள் என விரிவுபடுத்தி அடுத்த தலைமுறையினருக்கு தகவல்களை வழங்கிடும்போது சில ஒட்டுண்ணிகளும் இன எதிரிகளும் செய்யும் சதி வலைகளை அறுத்தெறிய முடியும்.
எடுத்துக்காட்டிற்கு 1939 தான் முதல் கோயில் நுழைவு போராட்டம் வைத்தியநாத அய்யர் நடத்தினார் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு தெரியும் சில அரைவேக்காடுகளின் முகத்திரையைக் கிழித்து, சுயமரியாதைத் தோழர்கள் 1927களில் நடத்திய கோயில் உள் நுழையும் போராட்ட வரலாறுகளைக் கண்காட்சிகள் மூலம் பொது இடங்களில் குறுந்தகவல்கள் மூலம் பரப்பலாம். இப்படி ஒரு மாதம் முழுக்க நாம் கடந்து வந்த பாதையின் வலிகளை, வெற்றிகளைப் பரப்புவதன் மூலம் உண்மையில் திராவிடம் இந்த உழைக்கும் மக்களை வீழ்த்தியதா? வாழ வைத்ததா? என்பதை இளைஞர்களுக்குப் புரிய வைக்க முடியும். அடுத்து வரும் திராவிட ஆட்சியில் நாம் இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதே பெரியாரியத் தொண்டர்களின் அவா.