நாம் இதுவரை பார்த்த இலக்கிய, வேத, புராண ஆதாரங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்திகள் சொல்வதென்ன?

(1) இந்தியத்துணைக்கண்டத்தின், அனைத்துப்பகுதியிலும் ஆடுகளும், மாடுகளும், பறவைகளும், மீன்களும் மனிதர்களின் உணவாக இருந்தன. அவற்றில் எந்த விலங்கும் விலக்கப்படவில்லை.

(2) சிந்து சமவெளிப் பகுதிகளுக்குள், ஆரியர் ஊடுருவலுக்குப் பின் ஏற்பட்ட வேதங்களில் மாடு உட்பட அனைத்து விலங்குகளும் பறவைகளும் உணவுக்காகக்கொல்லப்பட்டன. யாகங்களில் பலியிடப்பட்டன. பசுக்களை பார்ப்பனர்களுக்கும் கொடுத்துவிட வேண்டும் என்ற கருத்தும் வந்தது.

(3) வேதங்களுக்கு விளக்கம் சொல்ல வந்த உபநிடதங்கள் எழுதப்பட்ட காலத்தில் தான் விலங்குகளைப் பலியிடுவதற்கு எதிராக சில கருத்துகள் சொல்லப்பட்டன. புராணங்களில் பசுவும் பார்ப்பனரும் ஒன்றாகக் கருதப்படவும் வழிபடவும் கதைகள் எழுதப்பட்டன. ‘‘மனு’’ ஸ்மிரிதியிலும் கூட மாடு உண்பது தடை செய்யப்படுவதில்லை.

(4) தமிழ் இலக்கியங்களின் அடிப்படை அறநூலான திருக்குறள் ‘‘கொல்லாமை” என்று பேசியதே தவிர எந்த விலங்கும் புனிதமானது என்று கூறவில்லை.

(5) சங்க இலக்கியங்களில் பார்ப்பனர்கள் இறைச்சி அதுவும் கொழுத்த பசுமாட்டின் இறைச்சியை விரும்பி உண்டதைக் கூறும் பல பாடல்கள் உள்ளன.

(6) மணிமேகலைக் காப்பியத்தில் பார்ப்பனர் வீட்டு வாசலில் யாகத்திற்காகக் கட்டப்பட்டிருந்த பசுமாட்டை அவிழ்த்து அதனைக் காப்பாற்றிய ‘ஆபுத்திரனை” பார்ப்பனர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கியதும், அவனை வளர்த்த பார்ப்பனர் இனி நீ என் மகனல்ல என்று வீட்டைவிட்டு விரட்டிய செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.

(7) சிலப்பதிகாரத்திலும், பின் வந்த பக்தி இலக்கியங்களிலும் ஆரிய மயமான கடவுள் வழிபாடு, சாதி அமைப்பு, பெண்ணடிமை இவை அனைத்தும் போற்றப்பட்டு, பார்ப்பனர்களின் செல்வமாகிய பசுமாடும் தனிச்சிறப்பு பெற்றதாக எழுதப்பட்டது. அதற்கான அரசமுறைப் பாதுகாப்புகளை அரசர்களை அண்டி வாழ்ந்த பார்ப்பனர்கள் சாதித்துக் கொண்டார்கள்.

(8) சமணர்களும், பௌத்தர்களும் துறவு வாழ்க்கையில் ஒழுக்கத்தையும், கொல்லாமையையும் வலியுறுத்தி மக்களிடம் பெரு மதிப்பைப் பெற்றார்கள். அதன் பின்பே பார்ப்பனர்கள் முதலில் மாட்டுக்கறிச் சாப்பிடுவதை நிறுத்தினார்கள். பிறகு இறைச்சி சாப்பிடுவதையே நிறுத்தி விட்டு, சைவ உணவே உயர்ந்தது. அதை உண்ணும் பார்ப்பனரே உயர்ந்தவர்கள் என்ற இடத்தை உருவாக்கினார்கள். பசு பார்ப்பனரின் செல்வமாகியது.

(9) தங்கள் மேலாண்மையை வடக்கே குப்த வம்ச அரசர்கள் மூலமும் தெற்கே பிற்காலச்சோழ, பாண்டிய மன்னர்கள் மூலமும் பார்ப்பனர்கள் நிறுவினார்கள். பசுவை பலி கொடுக்கக்கூடாது என்பதை அரசாணையாக வெளிப்படச் செய்தார்கள்.

(10) மன்னர்களுக்கு அருகில் இருந்து ஆலோசனை கூறும் அதிகாரத்தைப் பெற்ற பார்ப்பனர்கள் கூறுவதே தர்மம் என்று நம்பிய இஸ்லாமிய மன்னர்களும் பசுவைப் பலியிடக் கூடாது என்று உத்தரவிட்டார்கள். பாபரும் ஹீமாயூனும் மிகக்கடுமையாக அந்தத்தடை உத்தரவை செயல்படுத்தினார்கள். ஆனால் முகலாய மன்னர்கள் ஆட்சிக்காலத்தி0ல்தான் மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் இந்தியாவில் ஏற்பட்டது என்று தங்கள் வழக்கப்படி பொய்மையை மெய்போல் எழுதி அதை வரலாறாக்கும் முயற்சி இந்தியாவில் நடக்கிறது.

(11) முகலாய மன்னர்களைத் தொடர்ந்து, போர்த்துகீசியர்களும், ஆங்கிலேயர்களும் இந்தியத்துணைக்கண்டத்தின் பகுதிகளை ஆளத் தொடங்கியபோதும் பசுமாடு பலியிடப்படுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவை தனியே வெட்டப்பட்டு உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருந்து வந்தது.

இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக ஆங்கிலேயரை எதிர்ப்பதற்கு இந்தியர்கள் என்ற அடிப்படையை விட்டு ஹிந்துக்கள் என்ற பிரிவினைக்குரலை முன் வைத்தவர்கள் பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் வாழ்ந்த பார்ப்பனர்களே அவர்களால்தான் பசுப்பாதுகாப்பு என்ற முழக்கமும், பசு நம் தாய் என்கிற தர்ம சாஸ்திரக்கதையாடல்களை மையமாகக் கொண்ட இயக்கமும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இந்தியாவில் தொடங்கப்பட்டது. அதுவும் குறிப்பாக 1824இல்  குஜராத்தில் பிறந்த மூல்சங்கர் என்ற சுவாமி தயானந்த சரஸ்வதி என்று பின்னர் பெயர் மாற்றம் பெற்ற பார்ப்பனர் ஆர்யசமாஜம் என்ற அமைப்பை நிறுவி பிரச்சாரத்தைத் தொடங்கிய பிறகுதான் ‘‘பசு” ஹிந்துத்வ அரசியலில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றது. அவர்தான் முதல் கௌரக்ஷினிசபா (GOWRAKSHINI SABHA) என்ற அமைப்பை 1882 ஆம் ஆண்டில் நிறுவினார்.  அதற்கு முன்பே பஞ்சாப் பகுதிகளில் பசுப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் 1870 ஆம் ஆண்டில் போராட்டங்கள் நடந்தன. 1893 இல் நாக்பூர், பனாராஸ் ஹரித்துவார் ஆகிய இடங்களில் பெரும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

1880 ஆம் ஆண்டு முதல் 1893 ஆம் ஆண்டிற்குள் நூற்றுக்கணக்கான கோசாலைகள் நிறுவப்பட்டன. மக்களிடம் பணமும் உணவும் பொருட்களும் நன்கொடையாகப் பெற்று கோசாலைகளுக்கு வழங்கப்பட்டன. கசாப்புக்கடைகளில் இருந்த பசுக்களை பறித்துச் சென்று பராமரித்து இந்த பசுரட்சகர்களின் வேலையாக இருந்தது. இப்படி நடந்த போராட்டங்களை ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டமாக ஹிந்துவாதிகள் சித்தரித்து அதற்காகக் கலவரங்களிலும் ஈடுபட்டார்கள். அதே நேரத்தில் அதற்கான எதிர்க்குரலும் ஹிந்து மதக்குழுக்களிடம் எழுந்தன. சான்றாக,  மனிதர்களை விடவும் பசுக்கள் உயர்ந்தவை என்கிற வாதத்தை இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கும் இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதற்கும்; செயல்படுகின்ற அமைப்புகளின் பிரச்சாரச் சின்னமாக விளங்கும் விவேகானந்தர் சொன்ன கருத்து வித்தியாசமானது. மனிதர்களைப் புறக்கணித்துவிட்டு பசுவைப் பாதுகாக்கப் போராடும் மனிதர்கள் பற்றி விவேகானந்தர் என்ன கூறினார் என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம்.

சென்னை ராமகிருஷ்ணமடம் வெளியிட்ட எனது சிந்தனைகள் என்ற நூலில் சுவாமி விவேகானந்தர் உடன் இருந்து அவரதுக் கருத்துக்களை பதிவு செய்தவர் சரத் சந்திரவர்த்தி என்ற சீடர். அதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் ஏ.சுப்பிரமணியம் அவர்கள்.அந்த நூலின் பக்கம் 7 முதல் 10 வரை உள்ள பதிவு இது. நாள் 1897 பிப்ரவரி 20 இடம் கல்கத்தாவில் பாக்பஜாரில் காலம் சென்ற பிரியநாத் முகோபாத்யாயரின் வீடு.

‘நரேந்திரபாபு சென்றதும் பசுக்களைப் பாதுகாக்கும் சங்கத்தின் மிக உற்சாகமான பிரசாரகர் ஒருவர் சுவாமிஜியைக் காண உள்ளே வந்தார்.  அவர் காவிக் குல்லா அணிந்து ஏறக்குறைய ஒரு துறவி போலவே உடை அணிந்திருந்தார்.  மேற்கிந்தியாவைச் சார்ந்தவர் என்பது தெளிவாகத் தெரிந்தது.  இந்தப் பசு பாதுகாப்புச் சங்கத்தின் பிரசாரகர் வருவது அறிவிக்கப் பட்டதும் சுவாமிஜி அவரைக் காண அந்த அறையை விட்டு, அதை ஒட்டியிருந்த வராந்தாவிற்கு வந்தார்.  அங்கிருந்த பிரசாரகர் சுவாமிஜியை வணங்கித் தன் கையில் இருந்த பசுமாதாவின் படம் ஓன்றைக் கொடுத்தார்.  சுவாமிஜி அதை வாங்கிச் சிறிது நேரம் பார்த்து விட்டு அருகிலிருந்தவரிடம் கொடுத்தார்.  பிறகு இருவருக்கும் கீழ்வரும் உரையாடல் தொடர்ந்தது.

சுவாமிஜி: உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?

பிரசாரகர்:  நாங்கள் கசாப்புக் கடைக்காரனிடமிருந்து பசுமாதாவைக் காப்பாற்றுகிறோம்.  பல இடங்களில் பசு காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கே நோயுற்ற, வயதான பசுக்களையும், கசாப்புக்கடைக்காரர்களிடமிருந்து மீட்டு வந்த பசுக்களையும் தீனி முதலியவை கொடுத்துக் காப்பாற்றுகிறோம்.

சுவாமிஜி: உண்மையில் இது நல்ல காரியம்தான். இந்தச் செலவிற்கு உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது?

பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரியவர்கள் கருணையுடன் தரும் நன்கொடைகளால்தான் இந்தக் காரியங்கள் நடக்கின்றன.

சுவாமிஜி: இதுவரையில் எவ்வளவு பணம் செலவழித்திருக்கிறீர்கள்?

பிரசாரகர்: மார்வாரிகள் இதற்கு மிக அதிகமாக உதவினார்கள். இந்த நல்ல காரியத்திற்கு அவர்கள் தாம் ஒரு பெரிய தொகையைத் தந்திருக்கிறார்கள்.

சுவாமிஜி: மத்திய இந்தியாவில் இப்போது பயங்கரமான பஞ்சம் மக்களை வாட்டுகிறதே! அந்தப் பஞ்சத்தில் ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் செத்துப் போனதாக இந்திய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறதே. உங்கள் சங்கம் இந்தப் பஞ்சத்தில் மக்களைக் காப்பாற்ற ஏதாவது செய்ததா?

பிரசாரகர்: நாங்கள் இது போன்ற பஞ்சங்களிலும் துன்பங்களிலும் உதவுவதில்லை. இந்தச் சங்கம் பசுமாதாவைக் காப்பாற்றுவதற்கு மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமிஜி: இந்தப் பஞ்சத்தில் உங்களுடைய சகோதாரர்களும் சகோதரிகளுமாகிய ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவின் கொடிய பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். வசதி இருந்தும் அவர்களுக்கு உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை என்பதை நீங்கள் நினைக்கவில்லையா?

பிரசாரகர்: அதை நாங்கள் செய்ய வேண்டியதில்லை. இந்தப் பஞ்சம் அவர்களின் கர்மத்தின் விளைவாக, பாவங்களின் விளைவாக வந்திருக்கிறது. ‘கர்மம் எப்படியோ அப்படியேதான் பலனும்”.

இதைக் கேட்டதுதான் தாமதம்! சுவாமிஜியின் கண்கள் கோபத்தால் நெருப்புத் துண்டங்கள் போல் ஜொலித்தன. அவரது முகம் உணர்ச்சியால் சிவந்து போயிற்று. தன் கோபத்தையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டவராக, ‘சொந்தச் சகோதரர்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறு கூடத் தராமல் அவர்களிடம் சிறிதும் இரக்கம் கொள்ளாமல், மாடுகளையும் பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்குச் சிறிது கூட அனுதாபமோ மதிப்போ கிடையாது. அத்தகைய சங்கங்களின் மூலம் ஏதாவது நல்லது நடக்கும் என்று நான் நம்புவதே இல்லை. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கர்மங்கள் காரணம் என்று கர்ம நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால், இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ போராடுவதோ அனைத்துமே பயனற்ற வேலைதான். உங்களுடைய பசுக்களைக் காப்பாற்றும் வேலையும் அப்படிப்பட்டது தான். அந்தக் கொள்கையின்படிப் பார்த்தால் பசுமாதாவும் அதன் கர்மத்தால்தான் கசாப்புக்கடைக்காரரிடம் மாட்டிக் கொண்டு சாகிறது. நாம் அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.

இதைக் கேட்ட பிரசாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார், பிறகு சமாளித்துக் கொண்டு, ‘நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நமது அன்னை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே!” என்றார்.

சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி, ‘ஆமாம், பசு நம் தாய் தான், பசுதான் நம் அன்னை என்பது எனக்கு இப்போது புரிகிறது. இல்லையென்றால் நம்மைப் போன்ற இவ்வளவு அறிவு நிறைந்த பிள்ளைகளை வேறு யார் பெற முடியும்?” என்றார்.

பிரசாரகர் பிறகு பசு மாதாவைக் காப்பாற்றுவது பற்றி ஒன்றுமே பேசவில்லை. சுவாமிஜியின் கிண்டலின் முழுப் பொருளையும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றியது. சுவாமிஜியிடம் பசுமாதாவைக் காப்பாற்றும் தங்கள் சங்கத்திற்காக ஏதேனும் கொடுக்கும்படி அவர் மீண்டும் கூறினார்.

சுவாமிஜி: நான் ஒரு துறவி, பக்கிரி, உங்களுக்கு உதவுகின்ற அளவுக்கு எனக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கும்? அப்படி எனக்கு எங்கிருந்தாவது பணம் கிடைத்தாலும் அதை நான் துன்பப்படும் மனிதர்களின் உதவிக்காகவே முதலில் பயன்படுத்துவேன். முதலில்  மனிதன்தான் காப்பாற்றப்பட வேண்டும். அவனது பசிக்கு உணவும், அறிவுக்குக் கல்வியும், ஆன்மீக ஞானமும் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் செய்த பிறகு ஏதாவது பணம் எஞ்சினால் உங்கள் சங்கத்திற்குக் கொடுக்கலாம்.

இதைக் கேட்டதும் பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிவிட்டு எழுந்து வெளியே சென்றார். சுவாமிஜி எங்களைப் பார்த்துப் பேசத் துவங்கினார்:

‘என்ன பொய்யான பேச்சுக்கள் இவை! ‘மனிதர்கள் கர்மபலனால் சாகிறார்கள்.  அவர்களுக்கு உதவி செய்வதால் என்ன பலன்?’ என்று அந்த மனிதன் கேட்கிறான். இந்த நாடு அடியோடு நாசமாகி விட்டது என்பதற்கு இதுவே சாட்சி. உங்கள் இந்து சமயத்தில் கர்ம நியதிக் கொள்கை எவ்வளவு கேவலமாகப் பயன்படுத்தப்படுகிறது பார்த்தீர்களா? மனிதர்களாக இருந்து கொண்டு மற்ற மனிதர்களுக்காகச் சிறிதும் இரக்கம் காட்டாத இவர்களை இவர்களை மனிதன் என்று நினைக்கலாமா?” சுவாமிஜி இவ்வாறு பேசும்போது மிகுந்த உடல் வேதனையும் மன வேதனையும் அடைந்தது போல் தோன்றியது. பிறகு சுவாமிஜி புகை பிடித்தவாறே சீடரிடம், ‘நல்லது மறுபடியும் என்னை வந்து பார்” என்று கூறினார்.

இப்படி இருவேறு குரல்கள் தீவிர ஹிந்துவாதிகள் இடம் இருந்து வந்தபோதும் பசு உட்பட்ட விலங்குகளை உண்பவர்கள் அதுபற்றி கவலைப்படவில்லை. ஆனால் இப்போராட்டத்தை காங்கிரஸ் மூலமாக சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதில் பார்ப்பனர்கள் ஈடுபட்டனர். அதற்கு வாய்ப்பாக 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் படையின் இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்திய குண்டுகளில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் பூசப்பட்டதென்ற பிரச்சாரமும் அதனால் எழுந்த சிப்பாய்க்கலகமும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வேெறாரு செயல்பாட்டுக்குத் தள்ளியது. அதாவது விலங்குகளைக் காப்பதில் பிரிட்டிஷ் அரசு கவனம் செலுத்தும் என்று அறிவிப்பது அதற்கான முதல் சட்டம் 1890 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் 1890 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டம். (XI of 1890)இச்சட்டம் முழுமையான பாகிஸ்தான் மாநிலத்திற்கும் நீட்டிக்கப்பட்டது. இந்த சட்டத்துடன் இந்து அரசியல் தலைவர்கள் நிம்மதி அடைந்திருக்கலாமே. அதுதான் இல்லை.  ஏனெனில் அவர்கள் கேட்ட சட்டமானது ‘‘பசுவை” மட்டும் கொல்லத்தடைவிதிக்கும் சட்டம். ஆனால் பிரிட்டிஷ் அரசு, போட்ட சட்டமோ” அனைத்து விலங்குகளையும் துன்புறுத்துவதில் இருந்தும் காப்பாற்றும் சட்டம். எங்களுக்குத் தேவை ஜீவ காருண்யமல்ல. பசுமாதா புனிதம் என்று அறிவிப்பதுதான் என்று பார்ப்பனர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

அதனைத் தீவிர அரசியலின் அங்கமாக்கியவர் காங்கிரஸ் தலைவரான பாலகங்காதர திலகர் அவர் 1920 இல் இறந்து விடுகிறார். பசுவின் மீதான தன் பாசத்தை ஹிந்து தர்மம் என்று அடையாளப்படுத்திய மகாத்மா காந்தி அதனை ஹிந்து அரசியலின் சின்னமாக முன்னெடுக்கவில்லை. ‘என் சகோதரனின் உணவு பசுதான் என்றால் அவனிடம் கையெடுத்து கும்பிட்டு பசுவை விட்டு விடுமாறு கேட்பேன் முடியாதென்றால் பசுவுக்காக நான் என் சகோதரனைக் கொல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறினார். 1924 ஆம் ஆண்டில் முடிவடைந்த உலகப்போருக்குப் பிறகு இந்திய முஸ்லீம்கள் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஒரு பெரும் இயக்கம் நடத்தினார்கள். அதன் பெயர் கிலாபத் இயக்கம். அந்தப்போராட்டத்தினை நடத்திய இசுலாமிய தலைவர்கள் அதில் கலந்து கொள்ள  இந்து காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்தார்கள். இந்தப்போராட்டத்தை காந்தி ஆதரித்தார்.  அந்த நேரத்தில் தாங்கள் பசுவைப் பலியிடுவதை நிறுத்திக்கொள்வதாக இஸ்லாமியத் தலைவர்கள் காந்திக்கு உறுதியளித்தார்கள் என்பதை மகாத்மா காந்தியின் கட்டுரைத் தொகுப்பில் காணமுடிகிறது. 

இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான அறிகுறிகள் 1942 முதல் வெளிப்படையாகத் தெரிந்தன. அந்த காலக்கட்டத்தில் காங்கிரசில் இருந்த மேல்ஜாதித் தலைவர்களும், இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் அரசியல் சாசனக் கொள்கை வரைவுக்குழுவுக்கு ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் காங்கிரசு கட்சி அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அதுபற்றி 1947 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாளன்று தனது காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மாகாந்தி பேசினார்.  அவ்வுரையில், பசுக்கொலையை சட்டப்படித் தடை செய்ய முடியாது என்ற அவரது கருத்து மிக உறுதியாக வெளிப்பட்டது.

‘ராஜேந்திரபாபு அவர்கள் என்னிடம் கூறுகிறார், அவருக்கு பசுக்கொலையை தடுக்கச் சொல்லிக்கேட்டு 50,000 அஞ்சல் அட்டைகளும் சுமார் 25 ஆயிரம் அல்லது 30 ஆயிரம் தந்திகளும் வந்ததாம். இதுபற்றி நான் முன்பே உங்களிடம் பேசியிருக்கிறேன். எதற்கு இப்படி வெள்ளம்போல தந்திகளும், கடிதங்களும்? அவற்றால் எந்தப்பயனும் இல்லை.

என்னிடம் இன்னொரு தந்தி இருக்கிறது. அந்தத் தந்தி சொல்கிறது ஒரு நண்பர் இதற்காக உண்ணாநோன்பு தொடங்கிவிட்டாராம். இந்தியாவில் பசுக்கொலையைத் தடை செய்து எந்த சட்டமும் இயற்ற முடியாது. இந்துக்கள் பசுக்களை கொல்ல தடைவிதிக்கப்பட்டவர்கள்தான் என்பதில் எனக்கு அய்யமில்லை. நான் பசு சேவை செய்வதற்காக உறுதி பூண்டுள்ளேன்.  ஆனால் என்னுடைய மதமே மற்ற இந்தியர்களின் மதமாகவும் இருக்க முடியும்? ஹிந்து அல்லாத இந்தியர்களுக்கு அது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாகத்தான் தோன்றும்.

மத விசயத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இருக்காது என்று நாம் வீட்டுக்கூரையின் மேலிருந்து கூவுகிறோம். நமது பிரார்த்தனைகளில் குரான் வசனங்களையும் பாடுகிறோம். ஆனால் என்னை அந்த வசனங்களை பாடுமாறு யாராவது வற்புறுத்தினால் கட்டாயப்படுத்தினால் நான் அதை விரும்ப மாட்டேன். பசுவை கொல்லக்கூடாது என்று தானே நினைக்காத ஒருவரை நான் எப்படி வற்புறுத்த முடியும்? இந்த இந்திய யூனியனில் ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என்ற நிலையில்லை. முஸ்லீம்கள், பார்சியர், கிறிஸ்தவர் மற்றும் பிற மதக்குழுவினரும் இங்கு வாழ்கிறார்கள்.

இந்தியா இப்போது ஹிந்து நாடாகிவிட்டது என்று நினைப்பது மிகத்தவறானது. இந்தியா இங்கு வாழும் அனைவருக்கும் சொந்தமானது. இங்கு நாம் பசுவைக் கொல்லத் தடை விதித்தால் பாகிஸ்தானில் அதற்கு நேர் எதிராக நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்?  ஒருவேளை. சிலை வழிபாடு ஷரியத் சட்டத்திற்கு எதிரானது அதனால் ஹிந்துக்களும் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இசுலாமியர்கள் சொன்னால் என்னவாகும்? நான் ஒரு கல்லில்கூட கடவுளைக் காண்கிறேன். ஆனால் அந்த நம்பிக்கையைக் கொண்டு நான் எப்படி மற்றவர்களைக் காயப்படுத்துவது? எனவே, நான் கோயிலுக்குச் செல்லக்கூடாதென்று தடுக்கப்பட்டால், நான் கட்டாயமாகக் கோயிலுக்குப் போவேன். அதனால்தான் சொல்கிறேன் இந்தத் தந்திகளும், கடிதங்களும் நிறுத்தப்படவேண்டும். இதற்கு பணம் செலவழிப்பது முறையல்ல.

தவிர, வசதியான ஹிந்துக்கள் பலர் பசுமாடு கொல்லப்படுவதை ஊக்கப்படுத்துகிறார்கள். ஆம். அவர்கள் தங்கள் கைகளால் அதைச் செய்யவில்லை. ஆனால், பசுமாடுகள் கொல்லப்படும் ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும், பசுமாடுகளை அனுப்பி அங்கே அவை கொல்லப்பட்டு, அவற்றின் தோலால் செய்யப்பட்ட காலணிகளை திரும்ப இந்தியாவுக்கே அனுப்பி வைக்கச் செய்வது யார்?   எனக்கு ஒரு தீவிர வைணவ ஹிந்துவைத் தெரியும். அவர் தன் குழந்தைகளுக்கு மாட்டுச் சூப்பை குடிக்கக் கொடுப்பார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு மாட்டு இறைச்சியை மருந்துக்காகச் சாப்பிடுவது தவறில்லை என்று கூறினார்.

உண்மையில் நாம் மதமென்றால் என்ன என்று நின்று நிதானமாக நினைத்துப் பார்ப்பதில்லை, மாறாக பசுவைக் கொல்வதைச் சட்டம்போட்டு தடை செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறோம். கிராமங்களில், ஹிந்துக்கள் பெருஞ்சுமைகளை மாடுகளே நசுங்கிப்போகும் அளவிற்கு அவற்றின் மேல் ஏற்றி இழுக்கச் செய்கிறார்களே, அது பசுவதை இல்லையா.. .. என்னதான் மெதுவாக நடந்தாலும் அதுவும் பசுவதைதானே? எனவே தான் அரசியல் சாசன வரைவுக்குழுவில் இந்தப் பிரச்சனையை வலியுறுத்த வேண்டிய அவசியம் இல்லை, என்று நான் சொல்கிறேன்.

மகாத்மா காந்தியின் இந்த உரையில் பசுவதைத் தடுப்பு பற்றிய கருத்து இத்துடன் முடிகிறது. ஆனால் அதற்குப்பிறகு அவர் தெரிவித்த கருத்துக்கள் ஹந்து இசுலாமியர் ஒற்றுமை மற்றும் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற அவரது ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகும். இன்றைய இந்தியச் சூழலில் நாம் கட்டாயம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து காந்தியின் உரைையப் படிப்போம்.

‘என்னைக் கேட்கிறார்கள், இசுலாமியர்களால் தூண்டப்படும் வன்முறைகளைப் பார்க்கின்ற பொழுது எந்த இசுலாமியரை நம்புவது என்று முடிவு செய்வது மிகக் கடினமாக இருக்கிறது; இந்திய இசுலாமியர்களிடம் நமது அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும்? பாகிஸ்தானில் இருக்கும் இசுலாமியர் அல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்று.

நான் ஏற்கனவே இந்தக் கேள்விக்கு விடை சொல்லி விட்டேன். மீண்டும் சொல்கிறேன் இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களும் பெரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. சீக்கியர்கள் ஹிந்துக்கள், இசுலாமியர், கிறிஸ்தவர்கள் என ஒவ்வொரு மதக்குழுவினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் இந்தியாவின் செயல்பாடுகளை எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் வேண்டுமானால் இசுலாமியர்களுக்கு உரியது என்று சொல்லப்படலாம். ஆனால் இந்தியா அனைவருக்கும் உரியது. உங்களுக்குள் இருக்கும் கயமைத்தனத்தை உதறித்தள்ளிவிட்டு துணிவுடன் சிந்தித்தால் நீங்கள் இசுலாமியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற ஆலோசனை செய்யத் தேவையில்லை. ஆனால் இன்று நமக்குள் கயமை இருக்கிறது. அதற்கானப் பழியை நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு விட்டேன்.

முப்பது ஆண்டுகளாக நான் கற்றுத்தந்த அனைத்தும் இவ்வளவு வலுவற்றதாக இருப்பதை நினைத்து நான் வியப்படைகிறென். வன்முறையற்றவழி என்பது கயவர்களுக்கான ஒரு ஆயுதமாக இருக்க முடியும் என்று நான் எப்படித் தீர்மானித்தேன். இப்போதும், நாம் உண்மையிலேயே துணிவுடையவர்களாகமாறி இசுலாமியர் மீது அன்பு காட்டினால், நமக்கு எதிரான சதிச்செயல்கள் மூலம்அடையப்போவது என்ன என்று அவர்களும் நின்று யோசிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் அன்புக்கு பதிலாக அன்பைக் கொடுப்பார்கள். இந்தியாவில் இருக்கும் கோடிக் கணக்கான இசுலாமியரை நாம் அடிமைப்படுத்தி வைக்க முடியுமா? மற்றவர்களை அடிமைப்படுத்த பார்ப்பவன் தானே அடிமையாவான். நாம் வாளுக்கு வாள், தடிக்குத்தடி, உதைக்கு உதை என்ற முறையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், பாகிஸ்தானின் நடப்புகள் மட்டும் வேறுவிதமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் எவ்வளவு விரைவாக சுதந்திரத்தைப் பெறுகிறோமோ அவ்வளவு விரைவில் அதை இழந்துவிடுவோம்.

இந்த உரையில் காந்தி குறிப்பிடும் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் தான் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவரான Dr.பாபு ராஜேந்திர பிரசாத் 1950 முதல் 1962 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். பீகாரில் பிறந்தவர். 1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்தியாவின் அரசியல் சாசனக் கொள்கை வரைவுக்குழுவின் தலைவராக இருந்தவர் காங்கிரசில் இருந்த இவரைப் போன்ற பலர் தீவிர ஹிந்துக் கொள்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்  தொடர்பில் இருந்தன என்பதையே பசுக்கொலைத் தடுப்புக்கான கடிதங்களும், தந்திகளும் மகாத்மா காந்திக்கு அனுப்பப்படாமல் பாபு ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பப்பட்ட செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகும்கூட பசுவதைத் தடைச்சட்டத்தை இந்திய அளவில் நிறைவேற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் பாபு ராஜேந்திர பிரசாத்தை பெருமளவிற்கு நம்பியிருந்தது என்பதை இனிவரும் செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.                                                                                                                                       1947 இல் ஆற்றிய மகாத்மா காந்தியின் இந்த உரையை 2015 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தின் தாத்ரி என்ற ஊரில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக ஒரு குடும்பமே கொடுமையான முறையில் குண்டர்களால்  தாக்கப்பட்டு முகம்மது அக்லக் என்ற முதியவர் கொல்லப்பட்டபோது தி வயர் என்ற ஆங்கில ஏடு மீண்டும் வெளியிட்டது

இப்படியாக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் பார்ப்பனத் தூதுவர்களை காங்கிரஸ் கட்சியில் நிறையவே வைத்திருந்தது. ஆனாலும் இந்திய அரசியல் சாசனத்தில் பசுக்கொலையைத் தடுக்க தீவிரச் சட்டப்பிரிவை அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம் அரசியல் சாசனக் குழுவின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களே. ஆனால் பார்ப்பனர்களும், சனாதனிகளும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பசுப்பாதுகாப்பு என்பதை அரசியல் சாசனத்தில் வரையறைக்குள் கொண்டு வர முடியவில்லை. லாலா லஜபதிராய், மதன்மோகன் மாளவியா, ராஜேந்திர பிரசாத், போன்ற தலைவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. ‘‘இந்திய அரசியல் சாசனத்தை” எழுதுவதற்கான கொள்கை வரைவுக்குழுவின் விவாதத்தில் (Constitutional Assembly Debates)  இந்துக்களிலேயே பல பிரிவு மக்களும், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என ஒரு பெரும் எண்ணிக்கையிலான இந்திய மக்களின் உணவாக இருக்கும் மாட்டிறைச்சிக்கு எப்படித் தடை விதிக்க முடியும். அதையும் அரசியல் சட்டத்திலேயே அதை எப்படிச் சேர்க்கமுடியும் என்ற விவாதம் பலவாறு விவாதிக்கப்பட்டது. கடைசியில் பசுமாட்டைப் பற்றிய குறிப்பு கூட இல்லாமல் அரசியல் சாசனம் வரைவு செய்யப்பட்டது. அந்நிலையில் என்ற பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான பண்டிட் தாகூர்தாஸ்பார்கவர் வரைவுக்குழுவின் பரிசீலனைக்கு ஒரு திருத்தத் தீர்மானத்தை முன் மொழிந்தார். அத்தீர்மானமானது  இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்பு 38A வாக அரசுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. அப்பிரிவு என்ன சொல்கிறது. ‘‘அரசானது விவசாயம் மற்றும் விலங்குப் பாதுகாப்பினை புதிய முறையில் அறிவியல் பூர்வமாக பாதுகாத்து வளர்க்கவும், குறிப்பாக கால்நடைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் பசு மற்றும் பயன்தரும் விலங்குகளையும் பால்தரும் கால்நடைகளையும் அவற்றின் கன்றுகளையும் கொல்வதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இப்படியாக பசு உட்பட விவசாயத்திற்கு உதவும் அனைத்து கால்நடைகளையும், பால்கொடுக்கும் விலங்குகளையும் சேர்த்துதான் அரசியல் சாசனத்தின் பாதுகாப்பிற்குள் கொண்டுவர முடிந்தது. இது ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவர்கள் திட்டமிட்டது பசுப்பாதுகாப்பை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் சேர்ப்பது. அதனைத் தோற்கடித்து  பசு என்பது பால் கொடுக்கும் விவசாய விலங்குகளில் ஒன்று இந்தியாவின் புனிதச்சின்னமல்ல என்று ஆக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மீது வன்மத்தையும் ஆத்திரத்தையும் பார்ப்பனர்கள் வெளிப்படுத்தி வருவதன் பின்னணியில் இதுவும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி இந்திய அரசியல் சாசனத்தின் வரைவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு விட்டது. இனி நாம் அரசியல் சாசனத்திற்குள் பசுவோடு நுழைய என்ன வழி என்று ஆர்.எஸ்.எஸ் திட்டமிடத் தொடங்கியது.

ஒரு போதும் ‘‘பசுமாடு” ஒட்டு மொத்த இந்தியகலாச்சாரத்தின் சின்னமாக இருந்ததில்லை. ஒட்டு மொத்தமாக இந்தியாவே இருந்ததில்லை என்பதுதானே வரலாறு. கிழக்கிந்தியக்கம்பெனியின் வணிக ஆதிக்கத்தில் விழுந்து கிடந்த பல்வேறு நகரங்களையும், குறுநில மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளையும் இணைத்து தன் ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியாளர்கள், தங்களுடைய அதிகார வசதிக்காக உருவாக்கிய கட்டமைப்பே இந்தியா. இந்தியாவின் ஆட்சி முறை, நீதிமன்றங்கள் தபால் தந்தித்துறை, ரயில்வேத்துறை நில அளவைத்துறை அனைத்தும் பிரிட்டிஷாரின் உருவாக்கமே.  ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் போற்றிப்பாடும் பாரத்வர்ஷ் என்கிற பரதகண்டமானது இன்றைய அளவில் வட இந்தியாவில் இரண்டு மாவட்டங்களின் மொத்த அளவில் தான் இருந்திருக்க முடியும். அது போல் 56 தேசங்களைக் கொண்ட வட பகுதிகளில் எங்குமே பசு மாடு என்பது ஆட்சியின் அடையாளமாக வேதத்திலோ புராணத்திலோ பின்னர் வந்த காவியங்களிலோ சொல்லப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். எவ்வளவோ முயன்றும் அதை அரசியல் சட்டம் மூலம் சாதிக்க முடியவில்லை. கடைசியாக 1952 ஆம் ஆண்டு தான்  ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அதற்கான ஒரு அரசியல் கோரிக்கையை உருவாக்கினார்கள். உண்மை இவ்வாறு இருக்க 1925 இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ்.ஸோ யுகயுகமாய் பசுவே நம் கலாச்சாரச் சின்னம் என்று கதைவிடுகிறது. வரலாறு எழுதாத காலத்திற்கு இப்படி கதை சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கல்விமுறையும், வரலாற்றுப்பதிவும் எல்லோருக்கும் தெரிந்து விட்ட 20 ஆம் நூற்றாண்டிலும் இப்படிக்கதைவிட முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ். இடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

நேர்காணல் தொடரும்

Pin It