இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த ‘நாரம் பர்க் விசாரணைகள்’ கற்பழிப்பு மனித குலத்திற்கு எதிரான குற்றமெனக் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. ஆனால் மகளிருக்கு எதிரான வன்முறை குறிப்பாக கற்பழிப்பு அதற்கே உரித்தான அவமான முத்திரையை சமீபத்தில் நிகழ்ந்த போர்களில் முள்ளாய் மனித இதயங்களில் விதைத்துள்ளது.

போன்ஸீயா, ஹேர்ஸ கோவினா, பேரு, ருவாண்டா ஆகிய நாடுகளில் மூண்ட போர்களில், பெண்களும் சிறுமிகளும் கற்பழிப்பு, சிறை  வைப்பு, சித்திர வதைகளை நாட்டைக் காக்கும் படையினரே செய்துள்ளனர்.

கம்போடியா, சைப்ரஸ், ஹைதியை பீரியா, சோமாலியா, உகாண்டா, வங்க தேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு ஆயுதப் போராட்டங்களிலும் இக்கோரக் கொடுமைகள் கோலோச்சியுள்ளது.

போர்க்காலங்களில் பெண்களும் சிறுமிகளும் கற்பழித்தலுக்குப் பின் கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். வியட்நாம் போரின் போதும் ஆசியப் பெண்களுக்கு இத்தகைய அவலநிலையை அமெரிக்க இராணுவத்தினர் உருவாக்கினர். போருக்கு அஞ்சி நாட்டை விட்டு பொருள் உடமைகளை இழந்து புலம் பெயர்ந்த ஐந்து கோடியே முப்பது இலட்சம் மக்கள் எண்பது விழுக்காடு பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

1993இல் சோமாலிய அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த பெண்களை கற்பழிப்பு வன்கொடுமைகள் வெகுவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. உணவு பஞ்சத்திலும் குடிநீர் பற்றாக்குறை தலை விரித்தாடும் எதிரிகள் முகாம்களில் ஒவ்வொரு இரவும் பெண்களைத் துன்புறுத்தி கற்பழிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பாராளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முந்தைய ஆட்சியாளர் நிறைவேற்றாமலேயே நடையைக் கட்டிவிட்டனர். 128 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பெண்கள் சரிபாதி அளவில் உள்ளனர். ஆனால் பெண்களுக்கு இழைக்கப்படும் வன் கொடுமைகள் ஏராளமாய் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

அன்னியர்களை இந்திய நாட்டைவிட்டு வெளியேற்றுகின்ற தீவிர போராட்ட முறைகளை கையிலெடுத்து அண்ணல் காந்தி ஆட்படுகையில் இருந்த சூழலில் நவகாளி கலவரத்தால் வெடித்துக் கிளம்பிய வன் முறையில் ஏராளமான பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார்கள். பதறிப் போன காந்தி பெண்களுக்கு மறுவாழ்வு மையங்களை நிறுவி புனர் வாழ்வுக்கு வழிகண்டார். இதெல்லாம் சுதந்திரக் காலவடுக்கள் அல்லவே!

பதினாறு வயது பருவத்தில் போர்க்களத்திற்கு சென்ற வீரத்தின் விளை நிலம், தியாக சீலன் தீரன் திப்பு சுல்தான், போர்க்காலத்திலேயே போரிட்டு 50 அகவை எட்டாத போது உயிர் நீத்த மைசூர் புலி, தனது போர்ப்படையினருக்கு கூறுகிறார். போர் முடிந்த பின்னர் தோற்கடிக்கப்பட்ட நாட்டிலுள்ள பொருட்களையும் உடமைகளையும் யாதொரு காரணத்திற்க்காகவும் சூறையாடக் கூடாது. குறிப்பாகப் பெண்கள் மீது அத்து மீறல்களும் கண்டிப்பாகத் தொடரக் கூடாது. பெண்கள், சிறார்கள், முதியவர்கள், கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். சமூகத்தில் இயலாத வகை மக்களில் பெண்களை முதன்மைப் படுத்தியதன் விளைவே இவ்வறியச் செயலாகும். மண்ணாளும் வேந்தனுக்குரிய பண்பாகும்.

“குடும்ப வன்முறைக் கொடுமை தடுப்புச் சட்டம் நடை முறையில் இருந்தும் வீடுகளில் கணவன், மாமனார், மாமியார்களால் பெண்களுக்கு ஏற்படும் வன்துன்பம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இருபாலரும் நன்கு கல்வி கற்றவர்களாயிருக்கும் குடும்பங்களிலும் வன் கொடுமைகள் நிகழத்தான் செய்கின்றன” என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம்

பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்புச் சட்டம்

பெண்கள் பணிப் பாதுகாப்புச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம்.

விண்ணைத் தொடும் எண்ணிலா வண்ண வண்ணச் சட்டங்கள் இயற்றியும் விளைவும் விளைச்சலும் குறைவே!

மேற்காணும் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பல இருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழ்நாடு பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு மக்களின் தொப்புள் கோடி உறவான ஈழத்தில் இறுதி கட்டப் போரில் தமிழர்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் சொல்லொன்னா துயரத்திற்கு ஆட்படுத்தி கொன்று குவித்தது ஆளும் சிங்கள அரசு. ஒரு நாட்டின் மக்களையே ஒரு அரசே போரால் கொன்று குவித்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் நடந்திராத அதிசயம். புலிகள் என்ற பெயரில் நாட்டிலுள்ள இளைஞர்களை  வேட்டையாடிக் கொன்றும் பெண்களை சித்தரவதை செய்தும் உடலுறுப்புகளை சின்னாபின்னமாக்கி சிதைத்து, வன்புணர்வு கொண்டு கொன்று குவித்தது  இராணுவம். பெண்களின் அவலக் குரல் இன்றும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

தலைநகர் டில்லியில் கடந்த 2012 இல் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்விப் பயிலும் மாணவி ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு நோயகற்றல்(சிகிச்சை) பயனளிக்காமல் இறந்தது, இந்தியா மட்டுமல்லாமல் அனைத்துலக நிலையிலும் மிகப் பெரிய அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தின.

சமகாலத்தில் தூத்துக்குடி பள்ளி மாணவி பள்ளிக்குச் செல்லும் போது வல்லுறவு கொண்டு, கொன்று போட்டனர் ஒரு கோடரிக் கும்பல். பண்பாட்டிலும் நாகரீகத்திலும் தொட்டிலாய் விளங்கும் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாய் வருகின்ற ஊடகத் தகவல்கள் அனைத்தும் நெஞ்சைப் பதறவும், சமூகத்தை சிதற வைக்கின்றனவாய் அமைந்துள்ளன. சான்றாய் ஒன்று; விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி நாற்பத்தைந்து வயது வாலிபனால் சீரழிக்கப்பட்டாள். என்னே காமப் பசி எத்தனை பெரிய காமக் கொடூரம். மனிதம் எங்கே எதை நோக்கிப் பயணிக்கிறது.

மேம்போக்காகப் பார்த்தால் சமூகத்தில் பெண்கள் பழகக் கூடாது என்று சொல்லும் ஆணாதிக்கம் இன்றும் கிராமப் புறங்களில் நிலவிக் கொண்டு தான் இருக்கின்றன. கணவனை இழந்த மனைவியை விதவை கைம் பெண் என்ற பட்டங்கள் உண்டு. மனைவியை இழந்த கணவனுக்கு பட்டங்கள் இல்லையே; இங்கேயே பெண்ணடிமை முளைக்கிறது. பெண்களைப் போற்றுவதை விடப் பெண்ணடிமை என்னும் இழிச் சொல்லி அகற்றி அவர்களும் மானுடப் பிறவி தான் என்று நினைத்தாலே போதும், பெண்ணியம் உயர்வு பெற்றுவிடும்.

மானுடம் போற்றும் பெண்ணியப் போராளி தந்தை பெரியார் “பெண்களுக்கு விடுதலை என்பது பெண்களால் தான் போராடிப் பெற முடியும். எந்த ஓர் ஆணும் பெண்ணும் விடுதலையையும் பெற்றுத் தர மாட்டார்கள்” என்று கூறுவார்.

அனைத்து நிலையிலும் ஒரு சமுதாயத்தை உயர்த்திக் காட்டுவதற்கு அடிப்படையாக அமைவது பெண் விடுதலையே. விடுதலை என்பது பெண் வீட்டிலிருந்து வெளியேற  வேண்டும் என்பதல்ல. உரிமையையும் கடமையையும் இணைந்த வாழ்வைப் போற்றுவதே ஆகும்.

பெண்களின் வாழ்க்கை கண்ணீரில் தொடங்கி கண்ணீரிலேயே முடிவதல்ல, விடுதலையும் முழு உரிமையும் பெற்ற பெண் குடும்பத்தினரை மேலாண்மை செய்தால் அந்தக் குடும்பமே ஒரு பல்கலைகழகமாக அமையும்.  

Pin It