kuthoosi gurusamy 300“இந்தாப்பா! நீ எதையாவது எழுதி வம்பு வளர்த்துக் கொண்டிருப்பதைவிட சட்டசபைக்குள்ளாவது போய்த் தொலையேன்!”- என்று கழகத் தலைவர் என்னைப் பார்த்து உத்தரவு போடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்!

“அங்கே போய் என்னய்யா பண்ணச் சொல்கிறீர்கள்? காங்கிரஸ்காரர் எண்ணத்தை மாற்ற முடியுமா? எதற்காகப் போவது?” - என்று கேட்பேன்!

“இங்கிலீஷிலோ, தமிழிலோ, அல்லது முத்துராமலிங்கத் தேவர் மாதிரி இதில் பாதி அதில் பாதியாகவோ, பேசேன்!” - என்பார், அய்யா!

“அதுவுங்கூட அதிகமானால் 15 நிமிஷத்துக்கு மேல் பேச முடியாதே! அதுவும் மாதத்துக்கு இரண்டு தடவை கிடைக்கலாம்! அதுவும் சட்டசபை கூடும்போதுதானே? வருஷத்தில் ஏதோ 7-8 தடவை அதாவது மொத்தம் 2 மணி நேரம், பேசுவதற்காகவா அங்கே போகச் சொல்கிறீர்கள்? அதுவும் “பார்லி மெண்டரி பாஷையில்” அடங்கி ஒடுங்கி, அளந்து, நிறுத்து-ப் பேசவேண்டும்! இது என்ன வேலை?”- என்று திருப்பிக் கேட்டால் என்ன சொல்வார்?

“அதனால்தான் நம் கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைத்து, அத்தனை பேரும் முழு யோக்கியர்களாக இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு அளவுக்காவது நாணயமாகவும் கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ளக் கூடிய நிலைமை ஏற்படுகிற வரையில் சட்டசபைப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கக் கூடாது என்றால், நம்மவர்களில் பலருக்குச் சரியாகப் புரியவே இல்லை. என்ன செய்வது?”- என்று தான் பதில் சொல்வார்!

நிதி மந்திரி உயர் திரு. சுப்ரமண்யம் அவர்கள் சபையில் பேசிக் கொண்டிருந்த போது, எதிர்க்கட்சிக்காரர்கள் எதையோ மறுத்துக் கூச்சலிட்டார்களாம்!

“நீங்கள் சும்மா கூச்சல் போட்டுக் கொண்டிருங்கள்! பரவாயில்லை” என்று சொல்லிவிட்டுப் பேசிக் கொண்டே யிருந்தாராம், நிதிமந்திரி!

டில்லி பார்லிமெண்டில் “ஃபாசிஸம்” என்று காங்கிரஸ் ஆட்சியைப் பற்றிக் குறை கூறினாராம், டாக்டர் மேகநாத் சாகா என்ற உறுப்பினர்! உடனே காந்தி சீடர் நேருவுக்குப் பிரமாதமாகக் கோபம் வந்து விட்டதாம்!

“அர்த்தந் தெரியாத சொல்லை உபயோகிக்கக் கூடாது; அது அறிவுடைமையல்ல” என்றாராம்!

உடனே அந்தச் சொல்லின் அர்த்தங்கூற எழுந்தாராம், டாக்டர்!

ஸ்ரீமான்கள் மாட்டுப் பெட்டிகள் கூக்குரலிட்டார்களாம்! பலகையைத் தட்டினார்களாம்! எதிர்க்கட்சிக்காரர்கள், “டாக்டர் பேசட்டும்,” என்று எதிர்க் கூச்சலிட்டார்களாம்! பார்லிமெண்டில் ஒரே குழப்பமேற்பட்டு விட்டதாம். நேருவினால் பேச முடியவில்லையாம்! தலைவரால் அடக்க முடியவில்லையாம்!

சரி! இவ்வளவுதானே! இதற்குமேல் வேறென்ன செய்துவிட முடியும்?

சாதுவான ஆசிரியர் சிக்கிக் கொண்டால் பள்ளிப் பையன்கள் கூடத்தான் இந்த மாதிரி “கலாட்டா” செய்கிறார்கள்! இதிலென்ன லாபம்?

ஏதோ கோபம் வரும்போது, (காலஞ்சென்ற சிங்காரவேலர் அடிக்கடி சொல்வது வழக்கம்) சட்டசபைக்குள் ஒருவருக்கொருவர் இங்க் புட்டி, அல்லது ‘பேப்பர் வெயிட்’டையாவது கையாண்டாலும் சிறிது சுறுசுறுப்பா யிருக்கும்!

கனம் மந்திரிக்கு இன்றைக்குக் கன்னத்தில் காயம் இருக்கிறது; சட்டசபைக் கூட்டத்திலிருந்து வருகிறார் போலிருக்கிறது! ஆனரபிள் மெம்பருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வருகிறது; பட்ஜெட் கூட்டத்தில் விவாதம் நடத்தியிருக்கிறார் போலத் தெரிகிறது!

சட்டசபைக் காரியதரிசியின் மூக்குக் கண்ணாடி தூளாய் நொறுங்கியிருக்கிறது; இன்றைக்குச் சட்டசபைக் கூட்டம் நடந்திருக்கும் போலத் தெரிகிறது!

10-12 தச்சர்கள் இன்று மாலை சட்டசபைக்குள் போய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்; காலையில் நடந்த கூட்டத்தில் மரச்சாமான்களை அதிகமாகப் பிரயோகப்படுத்தி யிருப்பார்கள் போலத் தெரிகிறது! - என்று இந்த மாதிரியாகப் பொதுமக்கள் பேசிக் கொள்ள வேண்டும்!

அப்போதுதான் சட்டசபை என்றால் எல்லோருக்கும் ஒரு விறுவிறுப்பு ஏற்படும்!

இதைவிட்டு, அவரவர் உளறுவதை விடாப்பிடியாக உளறிக் கொண்டே தானிருக்க வேண்டும்; மற்றவர் கேட்டுக்கொண்டே தானிருக்க வேண்டும் என்று கூறினால் இவ்வளவு பொறுமை எல்லோருக்குமே இருக்காது! அதுவும் 5 ஆண்டுவரையில்! யாருக்கு இருந்தாலும் எனக்கு இருக்காதய்யா!

நியாயம், ஒழுங்கு, நேர்மை ஆகிய சங்கதிகள் குண்டூசி முனையளவாவது அரசியல்வாதிகளிடம் இருக்குமேயானால், சட்டசபை மூலம் ஏதோ கொஞ்சமாவது சாதிக்கலாம்! அவைகள் தான் இங்கே சுத்த சூன்யமாச்சே!

யார் எதைச் சொன்னலும் வாயை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்றால், எப்படி முடியும்?

“கருஞ்சட்டைக்காரர்களெல்லோரும் அறிவில்லாதவர்கள்; கலகக்காரர்கள்; காலிகள்; கபோதிகள் - கதர்ச் சட்டைக்காரர்களே இந்த நாட்டை ஆளப் பிறந்த தியாகிகள்; அறிஞர்கள்; நாணயஸ்தர்கள்”- என்று ஆச்சாரியாரைப் போன்ற ஒரு மந்திரி ஏதாவதொரு பொதுக் கூட்டத்தில் பேசிவிட முடியுமா? சந்தேகமிருந்தால் மாயூரத்தில் இது போலப் பேசி உடல் உப்புதலோடு திரும்பிய வீரமுத்துச்சாமியைக் கேட்டுப் பாருங்கள்!

ஆனால் இதே மந்திரி, இதே வார்த்தைகளைச் சட்டசபைக்குள் கூறினால் என்ன செய்ய முடியும்? “இல்லை; இல்லை” என்று கத்தலாம்! தொண்டைக்குத் தானே சேதம்?

- குத்தூசி குருசாமி (05-07-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It