டாக்டர் சுப்பராயன் அவர்களின் மசோதாவானது தீண்டாமை ஒழிப்பு விஷயத்தில் ஏதோ பிரமாதமான நன்மை செய்துவிடப் போவதாக ஜனங்களுக்குள் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைப் பற்றி முன் ஒரு குறிப்பு காட்டி இருந்தோம்.
அதன் இரகசியம் என்ன என்பதும், எதற்காக அந்தப்படி பிரசாரம் செய்யப்படுகின்றது என்பதும் அநேகர் அறிந்திருக்கவே மாட்டார்கள். இருந்தபோதிலும் அந்த மசோதாவின் யோக்கியதை என்ன என்பதும் அதனால் என்ன பயன் ஏற்படும் என்பதும் அடியில் குறிப்பிட்ட தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரின் இரண்டொரு வாக்கியத்தில் இருந்து ஒருவாறு உணரலாம். அதாவது,“டாக்டர் சுப்பராயனின் கோவில் பிரவேச மசோதாவை அவர்கள் (வைதீக ஜனங்கள்) எதிர்க்க வேண்டிய அவசியமே ஏற்படாது.
ஹரிஜனங்களை கோவிலுக்குள் விட்டே தீர வேண்டுமென்றும், அம்மசோதா சொல்லவில்லை. அம்மசோதா சட்டமானவுடன் ஹரிஜனங்கள் கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள் என்று யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம்” என்று 9-1-33-ந் தேதி சுதந்திரச்சங்கு என்னும் பேப்பரில் 5-வது பக்கம் இரண்டாவது கலத்தில் எழுதி இருக்கிறார். இதைப் பற்றி வியாக்கியானம் ஒன்றும் தேவையில்லை என்றே கருதுகிறோம்.
நிற்க, இந்த விளம்பரத்தின் இரகசியம் என்ன என்பது பற்றி மற்றொரு சமயம் வெளியாகும்.
(குடி அரசு - கட்டுரை - 15.01.1933)