மகா மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சாஸ்திரியார் அவர்கள் தென் ஆப்பிரிக்கா ரவுண்ட் டேபிள் கான்பரன்சுக்கு சர்க்காரால் நியமிக்கப்பட்டு போவதை ஒட்டி ‘இந்து’ பத்திரிகை பிரமாதமாய் எழுதி இருப்பதோடு, அவரது படத்தையும் தனது பத்திரிகையில் போட்டு அவரை விளம்பரப் படுத்தியிருக்கிறது. ஸ்ரீமான் சாஸ்திரிகள் இந்து பத்திரிகையின் கோஷ்டிக்கும் அதன் கொள்கையான சுயராஜ்யக் கட்சிக்கும் விரோதமானவர். அப்படி யிருந்தும் அதாவது தங்களது கோஷ்டிக்கும் தங்களது கொள்கைக்கும் விரோதமாயிருந்தும் ஸ்ரீமான் சாஸ்திரியார் பார்ப்பனர் என்கிற காரணத்துக்காக அவரை விளம்பரப்படுத்தி தூக்கி விடுகிறது. அதுபோலவே ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களும் சர்க்கார் உத்தியோகஸ்தராயிருந்தும், சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாய்ப் பேசிக்கொண்டிருந்தும் சர்க்கார் மனுஷனாக மேல் நாட்டுக் குப் போயிருந்தும்கூட அவரது பிரயாணத்தையும், வருகை, வரவேற்பு, உபசாரம் முதலியதுகளையும், சென்றிருந்த இடத்தில் நடந்த விசேஷங் களையும் பேட்டி கண்டு பேசியதுகளையும் பார்ப்பனர் என்கிற காரணத்திற் காக படம் போட்டுத் தனது பத்திரிகையில் பிரசுரித்து விளம்பரப்படுத்தி யிருக்கிறது.
ஸ்ரீமான் ஸ்ரீவிஜயராகவாச்சாரியார் என்கிறவரும், ஒரு பார்ப்பனரும் சர்க்கார் ஊழியர் என்கிற முறையில் மேல்நாட்டுக் குப் போயும் சுயராஜ்யத்திற்கு இந்துக்கள் இன்னும் பக்குவம் இல்லை என்றுகூடச் சொல்லியும் சுயராஜ்யக் கட்சி வேஷத்திற்கு விரோதமாய்ப் பேசியும், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு ஏற்பட்டது இந்தியாவின் பாக்கியம் என்றும், கடவுள் அருள் என்றும் பேசியும், பிரிட்டிஷாரின் பெயரை இந்தியர்கள் பெறும் குழந்தைகளுக்கு வைக்க வேண்டிய மாதிரிக்கும், தான் நிர்வாக சபை மெம்பர் வேலை பெறத்தக்க அளவுக்கும் ராஜபக்தி காட்டியு மிருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரு பார்ப்பனர் என்கிற காரணத்துக்காக அவரது பிரயாணத்தையும் வரவையும் அங்கு போய் செய்ததையும் பேட்டி கண்டு பேசியதையும் படம் போட்டு விளம்பரப் படுத்தியிருக்கிறது.
கோயமுத்தூர் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் பார்ப்பனரல்லாத கட்சியிலிருந்து விலகி பார்ப்பனர் கக்ஷியான சுயராஜ்யக் கக்ஷியினராயும், அக்கட்சியில் முக்கிய கொரடாவாயுமிருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாயிருந்தும் பார்ப்பனர் சொல்லுகிற பக்கங் களிலும் கூட்டங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் அவமரியாதைகளை யெல்லாம் தான் முன்னிருந்து காப்பாற்றியும் பார்ப்பனர்கள் “தங்கள் கக்ஷியிலும் ஒரு யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்” என்று சொல்லிக் கொள்ளுவதற்கு உடந்ததாயிருந்திருப்பதுமல்லாமல் ஆஸ்ட்ரே லியா பார்லிமெண்ட் கான்பரன்ஸ் என்கிற ஒரு முக்கிய கூட்டத்திற்கு இந்தியாவின் பொது மக்கள் சார்பாய் பொதுமக்கள் பிரதிநிதிகளால் தெரிந் தெடுக்கப்பட்டும் போயிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி அவர் பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்தினாலேயே பிரயாணமும் இல்லை, உபசரிப்பும் இல்லை, அவரது படமும் இல்லை அங்குபோய்ச் சேர்ந்தாரா? இல்லையா? அது விபர மும் இல்லை. அவர் ஆஸ்ட்ரேலியாவில் என்ன செய்கிறார் என்ற தகவலும் இல்லை. ஒன்றும் இல்லாமல் ஏதோ ஒரு அநாம தேயம் போல் கொஞ்சம் கூட கணக்கிலேயே சேர்க்காமல் வேண்டுமென்றே அடக்கி வைத்து அலக்ஷியப் படுத்தி இருக்கிறார்கள்.
தங்கள் சுயநலத்திற் காக “சுயராஜ்யக் கட்சிக்கு மற் றொரு மெம்பர் போட்டியில்லாமல் தெரிந் தெடுக்கப்பட்டார்” என்று சொல்லிக்கொள்ள மாத்திரம் அவரது பெயரை உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். மற்றபடி வெகு ஜாக்கிரதையாய் விலகிக் கொண்டு வருகிறார்கள். இந்தப்படி இவர்கள் நடந்து கொண்டு மற்றவர்களை மாத்திரம் வகுப்புத் துவேஷம் வகுப்புத் துவேஷம் என்று சொல்லிக் கொள்ளுகிற இந்தப் பார்ப்பனர்கள் தங்களது நடவடிக்கைகளையும் தங்களி டம் இருக்கும் வகுப்புத் துவேஷத்தையும் பிறத்தியார் அறிய மாட்டார்கள் என்றும் பார்ப்பனரல்லாதார்கள் எல்லாம் முட்டாள்கள், இந்த சூழ்ச்சியை அறிய சக்தியற்றவர்கள் பார்ப்பனரல்லாப் பத்திரிகைகளும் எல்லாம் சுத்தப் பயங்கொள்ளிகள் தங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப் பவர்கள் என்று நினைத்துக் கொண்டு தாராளமாய் தங்கள் வகுப்புப் பிரசாரம் செய்கிறார்கள். இதிலிருந்தாவது வகுப்புத் துவேஷக்காரர்கள் பார்ப்பனர் களும் அவர்களுடைய பத்திரிகைகளுமா? அல்லது பார்ப்பனரல்லாதாரும் அவர்களுடைய பத்திரிகைகளுமா? என்று பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். அதோடு வரப்போகும் தேர்தலி லும் இப்பார்ப்பனர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டுகிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 24.10.1926)