சென்னை சட்டசபையில் தோழர் வைத்தியநாதய்யர் தக்ளியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாராம்! தோழர் ரஸாக் என்பவர், தலைவரைப் பார்த்து “சட்டசபையில் நியூஸ் பேப்பர் படிக்கக் கூடாதென்றால், தக்ளியில் மட்டும் நூற்கலாமா?” என்று கேட்டாராம்! நூற்கக் கூடாதுதான் என்று உத்தரவிட்டாராம், தலைவர்.

kuthoosi gurusamy 268“நான் மந்திரி சபையில் கதர்த் திட்டத்தைத் தானே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்; அங்கத்தினர் பேசுவதைக் காது தானே கேட்கிறது; வேலை செய்வது கைதானே!” என்றாராம், வாதத்தில் நிபுணராம் வைத்தியநாதய்யர்வாள்!

பேஷான ஆர்குமெண்ட்! வக்கீல்ஸார் கேட்கும் உறுப்பு காதுதான் என்பதைக்கூட சட்டசபைத் தலைவர் மறந்துவிட்டாரே! காது தவிர இதர உறுப்புக்கள் என்ன செய்து கொண்டிருந்தால், என்ன? பேப்பர் படிப்பது கூடத் தவறில்லை யல்லவா? காதா படிக்கிறது? கண்தானே படிக்கிறது? கண் பேப்பரைப் படித்துக் கொண்டும், கை தக்ளியைச் சுற்றிக் கொண்டும், வாய் ‘ராம், ராம்’ என்று ராம்துன் பஜனை செய்து கொண்டும், (சத்தம் போடாமல்தானே!) கால் ஆடிக்கொண்டும், (‘காலாடி’ என்று சேர்த்துப் படிக்க வேண்டாம்!) அதே சமயத்தில் காது சட்டசபை நடவடிக்கைகளைக் கேட்டுக்கொண்டும், இருப்பதில் தவறென்ன என்று கேளுங்கள், ஒரு நாளைக்கு!

“பார்லிடெண்ட் முறைக்கு இதெல்லாம் ஏற்றதல்ல,” என்பார் தோழர் சிவஷண்முகம். பார்லிமெண்ட் முறை என்பது வெள்ளையர் ஏற்றுமதிச் சரக்கு! நாம்மதான் வெள்ளையரை விரட்டிக் கொண்டிருக்கிறோமே! ஆகையால் நாம் ஏன் அவர்கள் சட்ட திட்டங்களை அடிமைத்தனமாகப் பின்பற்ற வேண்டும்?” என்று அதட்டிக் கேளுங்கள்!

என்னைப் பொருத்தவரையில், நீங்கள் தக்ளி மட்டுமல்ல; கை ராட்டினத்தையேகூட, சட்டசபைக்குக் கொண்டு போய் வைத்து, நூல் நூற்றுக் கொண்டிருக்கலாம் என்று தான் சொல்வேன். ஏன் தெரியுமா?

“காங்கிரஸ்காரர்கள் எவரும் மந்திரி சபையை எதிர்த்துப் பேசக் கூடாது, வெட்டுப் பிரேரணைகளிலும் பேசக் கூடாது,” என்று தோழர் பிரகாசம் உத்தரவு போட்டிருக்கிறாரே! ஆனால் அவர் எவ்வளவோ தேவலாமே! வெட்டுத் தீர்மானம் தவிர மற்ற சமயங்களிலாவது பேசலாம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறாரே!

தோழர் ஆச்சாரியார் காலத்தில் அதுவுமில்லையே! கொட்டாவி விட்டால்கூட ‘பேசுவதற்கு வாய் திறப்பதாகக் கருதி முறைத்துப் பார்ப்பாரே என்று நடுங்கிக் கொண்டு பின் பக்கம் திரும்பி, வாயில் துணியை வைத்துக் கொண்டுதானே காங்கிரஸ் மெம்பர்கள் கொட்டாவி விட்டார்கள்!

நிலைமை இப்படியிருக்கும்போது, 6 மணிநேரம் சும்மா உட்கார்ந்திருப்பதென்றால், “அந்தத் திறமரிது, சத்தாகியென் சித்தமிசை சூடிகொண்ட அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே” என்பதை சட்டசபைத் தலைவர் மறந்து விட்டாரோ?

வெளியே போய் ‘செக்ரட்டேரியட்’ கட்டிடத்தையாவது சுற்றிப் பார்க்கலாமென்றால், எத்தனை தடவைதான் பார்க்க முடியும்? ஹோட்டலில் போய் அடிக்கடி ‘காபி’ சாப்பிடலாமென்றால், ‘செக்ரட்டேரியட்’ ஹோட்டல் காபியோ, சர்க்கரை, பால், காப்பித்தூள் ஆகிய மூன்றையும் துறந்த முனிபுங்கவராக விளங்குகிறது!

ஆகையால், தோழர் வைத்தியநாதய்யர் தக்ளி சுற்றியதில் தவறில்லைதான்! அவர் தோழர் காந்தியாருக்கு ஒரு தந்தியைத் தட்டி விட்டிருந்தால் தெரியும், சிவஷண்முகம் படும்பாடு!

“அது சரி! தக்ளி சுற்றத் தெரியாதவர்கள் என்ன செய்வது?” என்று கேட்கலாம், சில அங்கத்தினர்!

அது அவரவர் இஷ்டம்! தையல் வேலை தெரிந்தவர்கள் சிறு தையல் மிஷின்களைக் கொண்டுவந்து எதிரில் வைத்துக் கொண்டு தைக்கலாம்! பெண் அங்கத்தினர்களோ, (சேர்ந்து மட்டும் உட்காராமல்) அப்பளம் போடலாம்! ஊறுகாய் போடுவதற்கு எலுமிச்சங்காய் நறுக்கலாம்! வத்தலுக்குத் தேவையான கத்தரிக்காய் அரியலாம், ரொம்பக் குப்பையாக்காமல்! நவீன நாகரிக நாரீமணிகளாயிருப்பவர்கள் ஜாக்கெட்டு பூவேலை செய்யலாம்!

பக்திமான்களா யிருப்வர்கள் ஏதாவது ஒரு படத்தைக் கொண்டு வந்து எதிரே வைத்துக் கொண்டு தினந்தோறும் லட்சார்ச்சனை செய்யலாம்! இலையோ, பூவோ கிடைக்காவிட்டால் எதிரே வைத்திருக்கும் பேப்பர்களைத் துண்டு துண்டாக கிழித்துப் போடலாம்! இவ்வாறு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன, சட்டசபையில் பொழுது போக்குவதற்கு!

மனமுண்டானால், வழியுண்டு! ஆனால் கதர்த் திட்டத்திற்கு அடிப்படையான தக்ளியைச் சுற்ற வேண்டாமென்றாரே, சபைத் தலைவர்! இதை நினைத்தாலே, என்ன பொங்கு பொங்குகிறது தெரியுமா?

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It