மீண்டும் மீண்டும் ‘இந்தியா’ தமிழனை

       மெய்அடிமை எனச் சொல்வதா?

மிதிபடப் பிறந்த நாயினம் என்றே

       மென்னியைத் திருகிக் கொல்வதா?

தோண்டத் தோண்டப் பிணங்கள்! மகிந்தா

       சோனியா மிதப்பில் துள்ளுவான்

தொகைதொகை யாகத் தமிழனைக் கொன்று

       குப்பைக் குழியில் தள்ளுவான்

ஐ.நா. குழுவின் கேள்வி களுக்குச்

       சோனி யா! பதில் எங்கே?

அகதிக் கொட்டிலில் அட்டைகள் உறிஞ்ச

       அழியும் பேரினம் அங்கே!

பொய்நா கொண்ட மன்மோ கன்சிங்

       போலிப் புன்னகை மருந்தா?

பூவும் பொட்டும் அழித்த வனுக்குப்

       போட்டிப் போட்டு விருந்தா?

அனைத்துத் தன்னல அழுக்கும் சேர்ந்த

       அழுகுணிப் பேர்கள் நாமா?

அண்டையில் நம்மினம் சண்டையில் மாண்டும்

       அமைதியில் இருந்திட லாமா?

மனத்தில் துளியும் கவலை இல்லை

       மனிதர் தனித்தனி நடந்தோம்!

மரணத்தின் ஒலி கேட்கும் எல்லை

       மரக்கட் டைகளாய்க் கிடந்தோம்!

கழுவாய்த் தேடும் எண்ணம் உண்டா?

       காலங் கடந்திட வில்லை

காங்கிர சான்இனி ஆள்வது தொல்லை

       கழற்று வீர்அவன் பல்லை

பழிகா ரன்அவன் இராச பக்சே

       படுகளம் காண வேண்டும்!

பழந்தமிழ்க் கொடி ஈழ மண்ணில்

       பறக்கக் காண வேண்டும்!
Pin It