பதினாறு முழப் புடவையிலும்
பளபளக்கும் நகைகளிலும்
அடக்கமாக நடப்பதிலும்
அதிராமல் பேசுவதிலும்
பெண்ணுக்கு அழகென்ற
கற்பிதங்களை வெறுத்திடுவாயா தோழி
கழுத்தில் தாலி
கால்களில் மெட்டி
நெற்றியில் பொட்டு
கூந்தலில் பூ - இந்தப்
பண்பாட்டு விலங்குகளை
உடைத்தெறிந்து வந்திடுவாயா தோழி
அதிகாலைப் பொழுது எழுந்து
அழகான கோலம் வரைந்து
அடுப்படி வரையில் வெந்து - வீட்டில்
கடைசியாக உறங்கப் போவதற்குச்
சம்பளம் இல்லாத வேலைக்காரிக்கும்
குடும்பத் தலைவி பட்டத்திற்கும்
வேறுபாடு ஏதாவது இருந்தால்
விளக்கிச் சொல்ல முடியுமா தோழி
சிவனுள் சக்தி ஒருபாதி-எனச்
சொல்லி வைத்தான் இந்து மதவாதி
மக்கள் தொகையில் பெண் சரிபாதி
இருந்தும் கிடைக்கவில்லை சமநீதி - இந்திய
முதல்குடிமகளாய் அமர்ந்த பின்பும்
முப்பத்திமூன்றுக்கே முட்டி மோதலாம்
சாதனை படைக்க வந்தாலும்
சனாதனம் வழியை விட்டிடுமா தோழி
தடகளப் போட்டியில்
தங்கம் வென்றும்
விண்வெளியில் ஒரு நாள்
நடந்த பின்பும்
அச்சம் நாணம் என்பதும்
மடம் பயிற்பு போன்றதும்
ஆணாதிக்கக் குணங்களின்
ஆயுதங்கள் தானே தோழி
நெற்றி நிறையப் பொட்டு வைத்து
தழையத் தழைய பட்டுடுத்தி
கணவன் பெயரைக் கத்தரித்துத்
தன் பெயரில் ஒட்ட வைத்து
வர்க்கங்களைப் புரட்டிப் போட்டு
வாய் கிழியப் புரட்சி பேச
ஆக்சுஃபோர்டு போனாலும்
ஆரம்பக் கல்வியோடு நின்றாலும்
இந்துமத அழுக்குகளைச் சுமக்கின்ற வரை
பெண் விடுதலை கிடைத்திடுமா தோழி
பிள்ளைப் பெறாதவள் மலடியானாள்
கணவனை இழந்தவள் விதவையானாள்
இன்னொருவனுடன் இணைந்தவள் விபச்சாரியானாள்
எதிர்வார்த்தை பேசுபவள் பஜாரியானாள் - இவை
தவறாமல் செய்யும் ஆண்களுக்குத்
தமிழில் குறிக்கப் பெயரில்லையே தோழி
விமான ஓட்டியானாலும் - ராணுவத்தில்
வீர நடை போட்டாலும்
வரதட்சணை கொடுக்காமல் - பெண்ணுக்குத்
திருமணம் தான் நடந்திடுமா
சுருக்குக் கயிறு கட்டாமல்
கன்னிகாதானம் சாத்தியமா - இந்த
ஓரவஞ்சனை தொடரும் வரை
கள்ளிப்பால்தான் குறைந்திடுமா தோழி
இரத்தம் சுத்திகரிக்கும் மூன்று நாளும் - வீட்டில்
தீண்டாமைக்குள்ளாகும் எந்தப் பெண்ணும்
இழிவு வேலைகள் பார்க்கும் எந்நாளும் - ஊரில்
ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் தீண்டப்படாதவனும்
இந்து மதம் பெற்றெடுத்த சவலப்பிள்ளைகள் - இவர்களைச்
சட்டமேதை கண்டெடுத்த தத்துப்பிள்ளைகள்
கொத்தடிமை வாழ்விலிருந்து விடுவித்து
சொத்துரிமை வாங்கித் தந்தவரை - பெண்
குழந்தையைத் திருமணத்திலிருந்து மீட்டெடுத்து
விளையாட வீதியில் விட்டவரை
விவாகரத்து பெறும் உரிமை தந்து - பெண்
சயமரியாதையைக் காத்தவரை
தலித்துகளின் தலைவரெனச் சொல்லி
தவிர்த்து விட்டாயே அம்பேத்கரை - மகளிர்
சட்டத்தால் பெறும் உரிமையெல்லாம் - அவர்
சித்தத்தால் விளைந்த விளைச்சல்தானே தோழி
பெண்கள் என்ன போகப்பொருளா
பிள்ளைகள் பெறும் பண்ணை வயலா
நகைகள் மாட்டிடும் ஸ்டேண்டா அவள்
கர்ப்பக் கிரகத்தையும்
கருங் கூந்தலையும்
வேண்டாமென்று
வெட்டியெறியச் சொல்லி
ஆணாதிக்கக் கோட்டையினை
அடியோடு அசைத்தவரை
பெண்ணுரிமை என்றவுடன்
மனைவியை எண்ணிப் பார்க்காதே - உன்
சகோதரியை நினைத்துப் பாரெனக் கூறி
பெண்ணிய விடுதலைக்கு ஆண்களையும்
அணிதிரண்டு வர வைத்தவரை
மகளிர் ஒரு மாநாட்டை கூட்டி - நமது
பெரியார் இவர்தானென அறிவித்தவரை
கடவுள் சிலையை உடைத்தவரெனச் சொல்லியே
பெரியாரைப் புறக்கணிப்பது முறையா தோழி?