நண்பர்களுக்கு,

வணக்கம்.

கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் நிகழும் 'கவிதை சங்கம'த்தில் கவிதை வாசிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். தொடக்கத்தில் எனது கவிதைகளுக்கான அங்கீகாரமாகக் கருதியும் பின்னர் வந்த ஆண்டுகளில் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வாகவும் தொடர்ந்து பங்களித்து வந்தேன்.

இந்த ஆண்டும் கவிதைச் சங்கமத்தில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. என்னை நினைவில் வைத்திருந்து அழைத்த நண்பர்களுக்கு நன்றி. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கும் கலாப்ரியா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. ஆனால் இந்த ஆண்டு கவிதைச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்டு சிபிஐ-ன் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் இந்த ஆண்டும் சென்னை சங்கமத்தில் பிரதான பங்களிப்பைச் செய்கிறது. சென்னை சங்கமத்தின் இணையதளத்தில் தமிழ் மையம் பற்றி சிலாகிக்கப்பட்டிருக்கிறது.  கறையின் நிழல் விழுந்த ஒரு நபருக்கும் அவரது அமைப்புக்கும் சென்னை சங்கமம் அளிக்கும் முக்கியத்துவத்தை எதிர்க்கிறேன். எதற்காக தமிழ் மையத்திற்கும் ஜெகத் கஸ்பருக்கும் சென்னை சங்கமம் இடமளிக்கிறது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கவிஞர் கனிமொழியின் இடத்தை ஸ்திரமாக்கப்படுவதற்கு நடத்தப்படுகிறது என்பது ஒரு காரணம் என்றாலும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்குமான இடமாக சென்னை சங்கமம் விளங்கி வருவதாக உணர்கிறேன். அதே சமயம் சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகாக தனது புனித பிம்பத்தை மறு உருவாக்கம் செய்து கொள்ள முனையும் கஸ்பருக்குத் துணையாக இந்தச் சென்னை சங்கமம் அமைந்துவிடக் கூடாது என்பதை நான் விரும்புகிறேன்.

இலக்கியமும் கலையும் சினிமா கவர்ச்சியிலும், அதிகாரத்தின் விரலசைவிலும், அரிதாரங்களினாலும் வெளிச்சம் பெறுவதில்லை. அப்படி விழக் கூடிய வெளிச்சம் தற்காலிகமானதுதான். தன் சுய நலங்களுக்காக இலக்கியத்தையும் கலையையும் பயன்படுத்திக் கொள்பவர்களை காலத்தின் சுழல் தாட்சண்யமின்றி தூர எறிந்துவிடும்.

சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் பாதுகாப்பிற்காகவும், குற்றச்சாட்டினை மறைப்பதற்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் கலையையும், இலக்கியத்தையும் பயன்படுத்துவதற்கு எதிராக இந்த ஆண்டு நடைபெறும் கவிதைச் சங்கமத்தில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை.

நான் புறக்கணிப்பதனால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் வரப்போவதில்லை; அதே சமயத்தில் எனது கவிதைகளுக்கான பிரசுர வாய்ப்புகள் குறையலாம் -எனினும் அது பற்றிய எந்தவிதமான விசனமும் இல்லாமல் எனது எதிர்ப்பினை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்கிறேன்.

நன்றி.

- வா.மணிகண்டன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It