Engelsமார்க்சும் எங்கெல்சும் தொழிலாளர் வகுப்புக்கு ஆற்றிய சேவைகளை இரத்தினச் சுருக்கமாக்க் கூறுவதெனில்: தொழிலாளர் வகுப்பு தன்னைத்தான் அறிந்து கொள்ளவும் தன்னைத்தான் உணர்ந்து கொள்ளவும் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். கனவுகளின் இடத்தில் அறிவியலை அமர்த்தினார்கள். -- இலெனின்.

நிகழ் பொருளியல் அமைப்புதான், அதாவது முதலிய (முதலாளித்துவ) அமைப்புதான் தொழிலாளர் வகுப்பைப் பெற்றெடுத்தது. முதலிய அமைப்பின் ஒரு முனையில் முதலாளர் இருக்க வேண்டுமானால் மறு முனையில் தொழிலாளர் இருந்தாக வேண்டும். இவ்விரு குமுக வகுப்புகளும் இந்தப் பொருளில் உடன்பிறப்புகள் எனலாம்.

ஒன்றுக்கொன்று பகையான உடன்பிறப்புகள்! தொழிலாளர் வகுப்பின் கோரிக்கைகள் யாவும் முதலிய அமைப்பிலிருந்தே விளைகின்றன. அவை தொழிற்சங்கத்தின் கண்டுபிடிப்புகள் அல்ல.

இந்தப் பொருளியல் அமைப்பும் முதலாளர் வகுப்பும் சேர்ந்து தொழிலாளர்கள் அமைப்பு வழித் திரள வேண்டிய தேவையைத் தோற்றுவிக்கின்றன. முதன்முதலில் இந்த உண்மையை மெய்ப்பித்த இரட்டையர் மார்க்ஸ் - எங்கெல்ஸ்.

மாந்தக் குலத்தை ஒடுக்கும் தீங்குகளிலிருந்து அதனை விடுவிப்பது எப்படி? உயர்ந்த மனிதர்களின் நல்லெண்ண முயற்சிகளாலா? சூராதி சூரர்களின் வீரச் செயல்களாலா? இல்லை, இல்லை. அமைப்புவழித் திரண்ட பாட்டாளிகளின் வகுப்புப் போராட்டமே விடுதலைக்கு வழிவகுக்கும்.

குமுகியம் (சோசலிசம்) என்பது கனவுலக வாசிகளின் கண்டுபடைப்பல்ல, அது புதுமக்காலக் குமுகத்தில் (நவீன கால சமூகத்தில்) பொருளாக்க (உற்பத்தி) ஆற்றல்களின் இறுதி நோக்கமும் தவிர்க்கவியலா விளைவும் ஆகும் என்பதைத் தம் அறிவியல் நூல்களில் விளக்கினார்கள்.

இன்று வரைக்குமான ஏடறிந்த வரலாறு அனைத்தும் வகுப்புப் போராட்டங்களின் (வர்க்கப் போராட்டங்களின்) வரலாறே. வகுப்புப் போராட்டத்துக்கும் வகுப்பு ஆளுமைக்கும் அடித்தளங்களான தனிச் சொத்துடைமையும் அரசிலி (அராசக) குமுகப் பொருளாக்கமும் மறையும் வரை இந்தப் போராட்டங்கள் தொடரும்.

இந்த அடித்தளங்களை அழிப்பதே பாட்டாளி வகுப்பின் நலன்களுக்கு ஏற்றதாகும். ஆகவே அமைப்புவழித் திரண்ட தொழிலாளர்களின் உணர்வார்ந்த வகுப்புப் போராட்டம் இந்த அடித்தளங்களுக்கு எதிராகச் செலுத்தப்பட வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் அறிவுறுத்தினார்கள்.

பாட்டாளி மக்களுக்கு இந்தப் பாடங்களைக் கற்றுத்தர மார்க்சும் எங்கெல்சும் தங்கள் வாழ்நாள் கூட்டுழைப்பை நல்கினார்கள். சிந்தனை, சொல், செயல் மூவகையிலும் இருவரும் ஒருவருக்கொருவர் நிகராகப் பாடாற்றினாலும் எங்கெல்ஸ் எப்போதும் மார்க்சுக்கே முதலிடம் தந்தார். ஆனால் மார்க்ஸ், மார்க்சியம் என்றாலே எங்கெல்சும் அவர்தம் சிந்தனைகளும் அதில் அடக்கம் என்பதில் ஐயமில்லை.

கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் ஆற்றிய கூட்டுழைப்பின் சாறம் இதுவே என்றாலும், பிரெடெரிக் எங்கெல்சின் இருனூறாம் ஆண்டில் மார்க்சியத்தில் அவரது பங்களிப்பைத் தனித்துப் பார்க்கும் தேவை இருக்கத்தான் செய்கிறது.

இலெனின் சொல்கிறார்:

பிரஷ்யாவின் ரைன் மாகாணத்தில் பார்மென் என்ற ஊரில் 1820 நவம்பர் 28ஆம் நாள் எங்கெல்ஸ் பிறந்தார். அவருடைய தகப்பனார் தொழிலுரிமையாளராய் இருந்தார். 1838 இல் எங்கெல்ஸ் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள்ளேயே ஒரு வணிக நிறுவனத்தில் எழுத்தராய்ப் பணியிலமர்ந்தார்.

மாணவப் பருவத்திலேயே எங்கெல்சுக்குக் கொடுங்கோலாட்சியின் மீது வெறுப்பு வளர்ந்தது. வணிக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே அவர் மெய்யியல் பயின்று வந்தார்.

அக்காலத்தில் ஜெர்மானிய மெய்யியல் உலகில் ஹெகலின் அறவுரை ஆட்சிசெலுத்தியது. மார்க்சைப் போலவே எங்கெல்சும் ஹெகலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். ஹெகல் பிரஷ்ய முடியரசைப் போற்றிக் கொண்டிருந்தாலும் அவரின் எண்ணங்கள் புரட்சியமாய் இருந்தன.

மாந்தரின் பகுத்தறிவிலும் அந்தப் பகுத்தறிவுக்குள்ள உரிமைகளிலும் ஹெகல் நம்பிக்கை வைத்திருந்தார். இந்த உலகம் ஓயாமல் வளர்ந்து கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது என்பதுதான் ஹெகலிய மெய்யியலின் அடிப்படையாக இருந்தது.

எங்கெல்ஸ் 1842இல் பிரித்தானியத் தொழில்துறை மையமாகிய மான்செஸ்டரில் குடியமர்ந்தார். அங்கு அவருடைய தகப்பனாரைக் கூட்டுப்பங்காளராகக் கொண்ட ஒரு வணிக நிறுவனத்தில் சேர்ந்து வேலைசெய்தார்.

எங்கெல்ஸ் அலுவலகத்திற்குள்ளேயே அடைந்து கிடக்க மாட்டார். சேற்றில் புழுக்கள் போல் தொழிலாளர்கள் நிறைந்து கிடக்கும் சேரிகளுக்குப் போவார். உழைக்கும் மக்களின் அவல வாழ்வைக் கண்டறிவார். பிரித்தானியத் தொழிலாளர் வகுப்பின் நிலைமை பற்றி எழுதப்பட்டவற்றையெல்லாம் படித்தறிவார். தமக்குக் கிடைத்த அதிகாரமுறை ஆவணங்களையெல்லாம் கவனமாக ஆராய்வார்.

எங்கெல்ஸ் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்து எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளர் வகுப்பின் நிலைமை என்ற நூல் 1845இல் வெளிவந்தது.

பாட்டாளி வகுப்பின் அவல நிலைமை அது தன் இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நெருக்கித்தள்ளும் என்று எங்கெல்ஸ் கருதினார். போராடுகிற பாட்டாளி வகுப்பு தனக்குத்தானே உதவிக் கொள்ளும்.

தொழிலாளர் வகுப்பின் அரசியல் இயக்கமானது குமுகியம் (சோசலிசம்) தவிரத் தங்களுக்கு வேறு வழியே இல்லை என்பதைத் தவிர்க்க முடியாதபடி தொழிலாளர்களை உணரச் செய்யும். மறுபுறம் குமுகியம் என்பது தொழிலாளர் வகுப்பினது அரசியல் போராட்டத்தின் நோக்கமாக அமைந்தால்தான் வலிமை பெறும்.

இங்கிலாந்து வந்த பிறகுதான் எங்கெல்ஸ் குமுகியர் (சோசலிஸ்டு) ஆனார். மான்செஸ்டரில் அவர் அப்போது பிரித்தானியத் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்; ஆங்கிலேயக் குமுகிய ஏடுகளுக்குக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்து வந்தார்.

கொலோன் நகரில் மார்க்ஸ் - எங்கெல்ஸ் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. 1844 செப்டெம்பரில் பிரெடெரிக் எங்கெல்ஸ் பாரிசுக்குச் சென்று மார்க்சைச் சந்தித்து, அது முதல் மார்க்சின் உயிர்த் தோழராகி விட்டார். நண்பர்கள் இருவரும் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் கூட்டாகச் செயல்படத் தொடங்கினர்.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருவரின் முதல் கூட்டுப்படைப்பு 1845 இல் அவர்கள் எழுதிய ஜெர்மானியக் கருத்தியல் ஆகும். அப்போது வெளியிடப்படாத இந்நூல் 80 ஆண்டு கழித்தே வெளிவந்தது. புரட்சியின் தேவையை மறுத்தவர்களை மறுத்து எழுதப்பட்ட நூல் அது.

மார்க்ஸ் விரிவான பொருளியல் ஆராய்ச்சிகள் செய்யத் தீர்மானித்ததற்கு எங்கெல்சுடனான தொடர்பும் ஒரு காரணமாயிற்று.

1845 முதல் 1847 வரை எங்கெல்ஸ் பிரசெல்சிலும் பாரிசிலும் தங்கிக் கொண்டு அறிவியல் பணியும் நடைமுறை வேலைகளும் செய்து வந்தார்.

1848ஆம் ஆண்டில் பிரான்சில் வெடித்து ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவிய புரட்சிக்குப் பிறகு மார்க்சைப் போலவே எங்கெல்சும் தாய்நாடு திரும்பினார். நண்பர்கள் இருவரும் நியூ ரைனிஷ் ஜைட்டங் ஏட்டில் முழுமூச்சாய் உழைத்ததோடு, பிற்போக்கு ஆற்றல்களை எதிர்த்துக் களத்திலிறங்கியும் போராடினார்கள்.

மக்களின் ஆய்த எழுச்சியில் தம்மை இணைத்துக் கொண்ட எங்கெல்ஸ் மூன்று சமர்களில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டார். ஆய்த எழுச்சி தோற்ற பிறகு புரட்சிக்காரர்கள் சுவிட்சர்லாந்து வழியாக இலண்டனுக்குத் தப்பிச் சென்றார்கள்.

எங்கெல்ஸ் படைத்துறைக் கூறுகளில் தேர்ச்சி மிக்கவராய் இருந்தார். புரட்சியப் பாட்டாளி வகுப்பின் முதல் படையியல் வல்லுநர் அவரே எனலாம். எங்கெல்சின் படையியல் அறிவை உயர்வாய் மதித்த மார்க்ஸ் ”மான்செஸ்டரில் உள்ள படைத்துறை அமைச்சகத்தை” (அதாவது எங்கெல்சை) தாம் முழுமையாய் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

எங்கெல்ஸ் அந்தப் பழைய மான்செஸ்டர் நிறுவனத்திலேயே எழுத்தராக வேலைக்குச் சேர்ந்து, பிறகு பங்காளராகி விட்டார்.

1845இல், பிரஷ்ய அரசு வற்புறுத்தியதால் பிரெஞ்சு அரசு மார்க்சை "ஆபத்தான புரட்சியாளர்” என்று சொல்லி பாரிசிலிருந்து நாடு கடத்தியது. அவர் பிரசெல்சுக்குச் சென்றார்.

பாரிசில் இருந்த போதே மார்க்சும் எங்கெல்சும் புரட்சியமான பாட்டாளி வகுப்புக் குமுகியக் கோட்பாட்டை வகுத்து உருவாக்கினார்கள். இவ்வகையில் 1847இல் வெளிவந்த மார்க்சின் நூலாகிய மெய்யியலின் வறுமை முகன்மையானதாகும். அதே ஆண்டில் பொதுமைக் கொள்கைகள் என்ற நூலை எங்கெல்ஸ் எழுதினார்.

மார்க்சும், எங்கெல்சும் 1847இல் "பொதுமைக்கழகம்" (கம்யூனிஸ்ட் லீக்) என்ற அமைப்பில் சேர்ந்தார்கள். இந்த அமைப்பின் சார்பில்தான் இன்றும் புகழ் பெற்று விளங்கும் பொதுமைக்கட்சியின் கொள்கையறிக்கையை (Communist Manifesto) அவர்கள் எழுதினார்கள்.

இந்த அறிக்கை 1848 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்தச் சிறுநூல் புதிய உலகக் கண்ணோட்டத்தின் உருவரைகளைத் தெள்ளத் தெளிவாய் எடுத்தியம்புகிறது. வரலாற்றுப் பொருண்மியமும், வளர்ச்சியின் சாறமாகிய இயங்கியலும், வகுப்புப் போராட்டக் கோட்பாடும், பொதுமைக் குமுகத்தின் படைப்பாளியாக உலக வரலாற்றில் பாட்டாளி வகுப்பு வகிக்கும் புரட்சிப் பங்கு பற்றிய கோட்பாடும் இந்தப் பதிய உலகக் கண்ணோட்டத்தின் கூறுகளாகும் என்பார் இலெனின்.

ஓயாமல் நாடு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும் சரி, இலண்டனில் வாழ்ந்த போதும் சரி, மார்க்கம் ஜென்னியும் அவர்கள் ஈன்றெடுத்த அன்புக் குழந்தைகளும் பட்ட துயரத்தைச் சொல்லி மாளாது. மார்க்ஸ் குடும்பம் கொடிய வறுமையில் உழன்று தவித்தது.

பிரெடெரிக் எங்கெல்ஸ் தன்னலமே கருதாமல் ஓயாமல் வழங்கிய பொருளுதவி மட்டும் இல்லாமற் போயிருந்தால், மார்க்ஸ் தமது வாழ்க்கைப் பெரும் படைப்பாகிய மூலமுதல் (Capital) என்ற நூலை எழுதியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதவாறு வறுமையின் சுமை தாளாமல் அழிந்தே போயிருப்பார் என்கிறார் இலெனின்.

”மூஷ்” என்று செல்லமாய்க் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்த சின்னஞ்சிறு மகன் எட்காரைப் பறிகொடுத்த போது மார்க்ஸ் துடித்துப் போனார். தமது துயரத்தையெல்லாம் ஒருசேரக் கொட்டி எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் அவர் சொன்னார்: "எத்தனையோ துன்பங்கள் பார்த்து விட்டேன்.

ஆனால், உண்மையான துன்பம் என்றால் என்னவென்று இப்போதுதான் உணர்கிறேன். உன்னைப் பற்றிய, உனது நட்பைப் பற்றிய நினைப்பும், நாம் இருவரும் சேர்ந்து இவ்வுலகில் உருப்படியாகச் செய்ய வேண்டியது இன்னும் ஏதோ இருக்கிறது என்று நம்பிக்கையும்தான் இந்தக் கொடிய மன வேதனைகளுக்கிடையே எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது."

மூலமுதல் என்ற பொருளியல் அறிவியல் பெருநூலைப் படைப்பதில் ஈடுபட்டிருந்த மார்க்சுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் தொடர்ந்து உதவி வர வேண்டும் என்பதற்காகவே எங்கெல்ஸ் வணிகத் துறையில் ஈடுபட்டிருந்தார்.

அவர் மார்க்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது: "எனக்கு உளச் சோர்வு ஏற்படுத்தி எனது நேரத்தையெல்லாம் தட்டிப் பறிக்கும் இந்த நாய்த்தனமான வணிகத்தைத் தொலைத்துத் தலைமுழுகி விட வேண்டும் என்பது தவிர வேறெந்த ஆசையும் எனக்கில்லை."

1869இல் வணிகத்திலிருந்து விடுபட்ட போது எங்கெல்ஸ் "நான் விடுமை மாந்தன்” என்று அறிவித்துக் கொண்டார்.

"எகிப்தியச் சிறையிலிருந்து நீ தப்பி விட்டாய்" என்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார் மார்க்ஸ். இதற்கிடையில் எங்கெல்ஸ் தமது வாழ்க்கைத் துணையை இழந்து விட்டார். "புரட்சி மனங்கொண்ட அயர்லாந்துக்காரி" என்று அவரால் வண்ணிக்கப்பட்ட அவருடைய மனைவி மேரி பேர்ன்ஸ் 1863 சனவரி 6ஆம் நாள் இதய நோய்க்குப் பலியானார். தமது இழப்பு குறித்து எங்கெல்ஸ் மார்க்சுக்கு எழுதினார்:

"நான் இவ்வளவு காலம் இந்தப் பெண்மணியுடன் வாழ்க்கை நடத்தியதால் அவளது மறைவு என்னைப் பெரிதாக உலுக்கியே விட்டது. அவளுடன் கூடவே எனது இளமையின் இறுதித் துளியையும் சேர்த்துப் புதைத்து விட்டதாக உணர்ந்தேன்.’’

1870 வரை எங்கெல்ஸ் மான்செஸ்டரிலும், மார்க்ஸ் இலண்டனிலும் வசித்து வந்தனர். ஆனால் இருவருக்கும் இடையில் உயிர்த்துடிப்பான அறிவுப் பரிமாற்றம் தொடர்ந்து நிகழ்வதற்கு இந்தப் பிரிவும் தொலைவும் தடையாகவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொள்ளாத நாளே இல்லை எனலாம்.

நண்பர்கள் இருவரும் இந்தக் கடிதங்களில் கருத்துப் பரிமாற்றமும் அறிவுப் பரிமாற்றமும் செய்து கொண்டார்கள்; அறிவியல் குமுகியம் (விஞ்ஞான சோசலிசம்) என்னும் அறிவாய்தத்தை வார்த்து உருவாக்கிக் கூர் தீட்டுவதில் கூட்டாய்ச் செயல்பட்டார்கள்.

1870இல் எங்கெல்ஸ் இலண்டனுக்கு வந்து விட்டார். மார்க்ஸ்-எங்கெல்சின் கூட்டுழைப்பு மார்க்சிடமிருந்து மூலமுதல் நூலாகவும், எங்கெல்சிடமிருந்து டூரிங்குக்கு மறுப்பு, குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் நூல்களாகவும் மலர்ந்தது.

மார்க்ஸ் திட்டமிட்டவாறு மூலமுதலை முழுமையாக எழுதி முடிப்பதற்குள் இறந்து விட்டார். மார்க்ஸ் விட்டுச்சென்ற வரைவுக் குறிப்புகளின் அடிப்படையில் மூலமுதலின் இயல் இரண்டையும் இயல் மூன்றையும் அணியமாக்கி வெளியிடும் பெரும்பணியை எங்கெல்ஸ் ஏற்றுக்கொண்டார். 1885இல் இயல் இரண்டையும் 1894இல் இயல் மூன்றையும் வெளியிட்டார். (அவர் இயல் நான்கை அணியமாக்குவதற்குள் இறப்பு குறுக்கிட்டு விட்டது.)

ஆட்லர் என்பார் சொல்வது போல் மூலமுதலின் இயல் இரண்டையும் இயல் மூன்றையும் அணியமாக்கி வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் தமக்கு நண்பராய் விளங்கிய மாமேதைக்கு ஒரு மிடுக்கான நினைவுச் சின்னத்தை நிறுவியதோடு, அந்த நினைவுச் சின்னத்தில் தாம் விரும்பாமலே தமது பெயரையும் அழிக்க முடியாதபடி பொறித்துக் கொண்டு விட்டார்.

மூலமுதலின் இயல் ஒன்று மார்க்சின் தனிப்படைப்பு என்றால், இயல் இரண்டையும், இயல் மூன்றையும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகிய இருவரின் கூட்டுப் படைப்பாகவே கருத வேண்டும் என்கிறார் இலெனின்.

எங்கெல்ஸ் எப்போதுமே தம்மை மார்க்சுக்கு அடுத்த நிலையில்தான் வைத்துக் கொண்டார். மார்க்சிடம் அவர் கொண்டிருந்த நேசத்திற்கும் மதிப்பிற்கும் எல்லையில்லை.

1864இல் பன்னாட்டுத் தொழிலாளர் பேரவையை மார்க்ஸ் நிறுவிய போதும், பத்தாண்டு காலம் அதனை வழிநடத்திக் கொண்டிருந்த போதும் எங்கெல்ஸ் பேரவைப் பணிகளில் முனைப்புடன் பங்கேற்றார்.

இந்தப் பேரவையின் காலம் முடிந்த பிறகும் கூட மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும் தொழிலாளர் வகுப்பு இயக்கத்தின் வழிகாட்டிகளாகச் செயல்பட்டார்கள். மார்க்சின் மறைவிற்குப் பிறகு எங்கெல்ஸ் இந்தப் பணியைச் செய்து வந்தார். பற்பல ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்த குமுகியர்களுக்கு எங்கெல்சின் கோட்பாட்டுச் செல்வமும் பட்டறிவுச் செறிவும் துணைநின்றன.

மார்க்ஸ் மறைந்த பின் எங்கெல்ஸ் ஆற்றிய பணி மார்க்சியத்துக்கு அவரது தனித்துவமான பங்களிப்பு என்பதில் யாருக்கும் எவ்வித ஐயப்படும் இருக்க முடியாது.

அவர் மெய்யாகவே பன்மொழி அறிஞராக விளங்கினார். குறைந்தது பன்னிரண்டு மொழிகளில் ஆற்றொழுக்காகப் பேசவும் எழுதவும் அவரால் முடிந்தது. படிப்பதற்கு மட்டுமென்றால் அவருக்குத் தெரிந்த மொழிகள் இருபதுக்கு மேல்.

பட்டங்களும் விருதுகளும் வாங்குவதற்கன்று, பன்னாட்டுப் பாட்டாளிகளுக்குப் புரட்சித் தொண்டு புரிவதற்காகவே அவர் இத்தனை மொழிகளும் கற்றுக் கொண்டார். கோட்பாட்டு ஆராய்ச்சியிலும் நடைமுறைப் பணியிலும் தமது பன்மொழிப் புலமையை அவர் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இதை விடவும் முகன்மையானது மார்க்சியத்தின் பெயராலேயே மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக அவர் மார்க்சியத்தைக் காத்து நின்றதாகும். குறிப்பாக பொருளியல் அடித்தளத்துக்கும் கருத்தியல் மேற்கட்டுமானத்துக்குமான இயங்கியல் உறவை அவர் சரியாக விளக்கப்படுத்தினார்.

தன் இறுதியாண்டுகளில் நண்பர்களுக்கு எழுதிய மடல்களில் இது குறித்துத் தங்களின் (மார்க்ஸ்-எங்கெல்ஸ்) சிந்தனையை விளக்கப்படுத்தியதோடு, தாங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு தாங்களும் காரணமாக அமைந்து விட்டதற்குத் தற்குற்றாய்வும் செய்து கொண்டார்.

பொருளியல் அடித்தளத்தை மட்டுமே கண்டு மேற்கட்டுமான்ங்களின் செயலூக்கமான பங்கினைக் காண மறுத்த இளம் பிரெஞ்சு ‘மார்க்சியர்களை’ப் பற்றி 1870களிலேயே மார்க்ஸ் கூறியதை எங்கெல்ஸ் எடுத்துக் காட்டினார்: ”எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் ஒரு மார்க்சிஸ்டு அல்ல என்பதே.”

எழுபது வயதைத் தாண்டிய பிறகும், கண் பார்வை மங்கத் தொடங்கிய பிறகும் கூட, எங்கெல்ஸ் கடுமையாக உழைத்து வந்தார். 1894 கடைசியில் அவர் ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில், முன்னைப் போல் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார். அப்போதே அவரைப் புற்றுநோய் தாக்கியிருந்தது.

1895 ஆகஸ்டு 5ஆம் நாள் பிரெடெரிக் எங்கெல்ஸ் இலண்டனில் காலமானார். இன்றைக்கு இருநூறு ஆண்டு முன்பு பிறந்த அந்த அறிவுச் சுடர் உடலால் அணைந்தாலும் மாந்தக் குல விடுதலைக்கான பாதையில் இன்றளவும் ஒளியேற்றி வழிகாட்டி வருகிறது.

தியாகு