தோழர் காந்தியவர்கள் அரசியலில் தலையிட்டு தலைமை ஸ்தானத்தை அடைந்ததற்கு முக்கிய காரணம் ஒருபுறம் அவர் போட்டுக் கொண்ட மத சம்மந்தமான வேஷமும், கடவுள் சம்மந்தமான பேச்சும் மற்றும் சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம், ஆத்ம சுத்தம், ஆத்ம சக்தி, பரித்தியாகம், தவம் முதலிய வார்த்தைகளும், மற்றொரு புறம் அவரது சிஷ்யர்கள் அரசியலின் பேராலும், தேசீயத்தின் பேராலும், தங்கள் வாழ்நாளைக் கழிக்க ஏற்பாடு செய்துகொண்ட தொண்டர்கள், தேசீய வாதிகள், பத்திராதிபர்கள் ஆகிய கூட்டத்தார்கள் காந்தியாரைப்பற்றி அவர் ஒரு ரிஷி என்றும், முனிவர் என்றும், கிறிஸ்து என்றும், நபி என்றும் மகாத்மா என்றும் விஷ்ணுவின் அவதாரமென்றும், சொல்லி பிரசாரம் செய்ததும், இனி ஒருபுறம் காந்தியைக் கடவுளாகவும், விஷ்ணுவாகவும் மற்றும் பலவிதமாகவும் சித்திரங்கள் எழுதி படம் போட்டு விளம்பரம் செய்ததும், மற்றும் லௌகீகத்திலும், வைதீகத் திலும் விளம்பரம் பெறவும் சுயகாரிய சித்தி பெறவும் ஆசைப்பட்ட பணக் காரர்களும், படித்தவர்களும் முறையே லக்ஷக்கணக்காகத் திரவிய சகாயமும் பிரசாரமும் செய்து வந்ததுமாகிய காரியங்களுமாக எல்லாம் சேர்ந்து அவரை அரசியல் சர்வாதிகாரியாக ஆக்கிவிட்டது.

இதனால் பாமர ஜனங்கள் தங்களது பகுத்தறிவை சிறிதாவது உபயோகப்படுத்தி காந்தீயத்தை ஆலோசித்துப் பார்க்க கூடாமற் போய் விட்டது. எப்படியெனில் கடவுள் பக்தி, மத பக்தி ஆகியவைகளுக்கு எப்படி ஒரு மனிதன் அடிமைப்பட்டு ‘கடவுள்’ அற்புதம் மத அற்புதம் ஆகிய பலவைகளைக் கண் மூடித்தனமாய் நம்புகிறானோ அது போலவே காந்தீயத்துக்கும் பகுத்தறிவு பிரயோகமே சிறிது கூட இல்லாமல் செய்து விட்டது.

இந்தியாவின் கல்வியற்ற தன்மையும், பாமரத் தன்மையும், மதக் கற்பனையும் எந்த மனிதனை வேண்டுமானாலும் கடவுள் தன்மை யுடையவனாகவும் மனித சக்திக்கு மீறின மகாத்மாவாகவும் ஆக்குவதற்கு மிக அனுகூலமாகவே இருந்து வருகின்றன. அன்றியும் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு அதற்கு தெய்வீகப் பூச்சோ, மதப் பூச்சோ சிறிது கொடுத்து விட்டால் சுலபத்தில் யாரையும் நம்பும்படி செய்து விடலாம்.gandhi reading newspaperஉதாரணமாக இதுவரை எத்தனை சாதுக்கள், சித்தர்கள், ரிஷிகள், மகாத்மாக்கள், துறவிகள், ஞானிகள் முதலியவர்கள் ஏற்பட்டு எவ்வளவோ அபூர்வ காரியங்கள் செய்ததாகவும், பார்த்ததாகவும் இன்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றன என்பதைக் கவனித்தால் உண்மை விளங்கிவிடும். ஆகையால் இந்திய ஜனங்களினிடையில் காந்தியார் அரசியல் தலைமை ஸ்தானம் பெற்றதில் அதிசயமொன்று மிருக்க ஞாயமில்லை.

தோழர் பெசண்டம்மையாரும் தோழர் காந்தியைப் போலவே பகவத்கீதைப் பிரசாரத்தாலும் கடவுள்களிடத்திலும், மகாத்மாக்களிடத்திலும் தான் தினம் பேசுவதாகவும், முன் ஜென்மம், பின் ஜென்மம் முதலியவைகள் எல்லாம் தனக்குத் தெரிகின்றதாகவும் சொன்னதாலும் மற்றும் என்னென் னமோ சொல்லிக் கொண்டதாலும், அந்த அம்மாளும் அரசியலில் தலைமை வகிக்கப்பெற்று கொஞ்சகாலம் சர்வாதிகாரியாக இருந்து இந்தியா மாத்திரமல்லாமல் ஒரு காலத்தில் உலக முழுவதுமே விளம்பரம் பெற்றிருந் ததைப் பார்த்தால் காந்தீயத்திற்கும், பெசண்டீயத்திற்கும் ஒற்றுமை இருப்ப தைக் காணலாம். ஆதலால் காந்தியாருக்கு இருந்த செல்வாக்குக்கும், மதிப் புக்கும் அவரை பின்பற்ற ஆட்கள் இருந்துவந்ததற்கும், யாருக்கும் எவ்வித தத்துவார்த்தமும், தனிக்காரணமும் சொல்லவேண்டியதில்லை.

ஆனால் அது இன்று என்ன கெதியில் இருக்கின்றது என்பதுதான் இந்தக் கட்டுரையின் முக்கிய பாகமாகும்.

பெசண்டீயத்தின் கதியே காந்தீயமும் அடைந்து வருகின்றது. காந்தி யார் உலகிலுள்ள மற்ற இயக்கங்களையும், மதங்களையும், மத ஆதாரங் களை யும் ஒரு தட்டில்வைத்து தானும் பகவத்கீதையும், இந்துமதமும் ஒரு தட்டில் இருந்துகொண்டு ஞானம்பேசி வந்ததற்கும், அதற்கு இந்தியா இடம் கொடுத்து வந்ததற்கும் காரணம் என்னவென்றால் எடுத்ததற்கெல்லாம் சத்தியம், சத்தியாக்கிரகம், அஹிம்சை, ஆத்மசுத்தம், ஆத்மசக்தி, பரித் தியாகம், கடவுள் கட்டளை ஆகிய அர்த்தமற்ற மொழிகளும், தன் இஷ்டப்படி வியாக்கியானம் செய்வதற்கு இடமுள்ளதும், தந்திரமானதுமான வார்த்தைகளை உபயோகப் படுத்தி வந்ததுமாகும்.

இதுவரையில் அவைகள் எப்படி இருந்தபோதிலும்-இருந்ததாகச் சொல்லப் பட்டபோதிலும் இன்று அக்காந்தீயத்தின் நிலை எப்படி இருக்கின்றது என்று பார்க்க வேண்டியது அறிவுள்ள மனிதனின் கடமையாகும்.

தோழர் காந்தியாரது சத்தியத்திற்கும், சத்தியாக்கிரகத்திற்கும், ஏதாவது யோக்கியதை ஏற்பட்டதா? அல்லது அவரது ஆத்ம சுத்தத்திற்கும், தியாகத்திற்கும், அஹிம்சைக்கும், கடவுள் செயலுக்கும் ஏதாவது பயன் உண் டாயிற்றா? என்பனபோன்ற காரியங்களைச் சற்று கவனித்துப் பார்ப்போம்.

தோழர் காந்தியார் யாரிடம் இருந்து பயன் பெறுவதற்காக சத்தியமாய் நடந்து சத்தியாக்கிரகம் செய்தாரோ அவர்களிடமிருந்து ஒரு காதொடிந்த ஊசியை பெறுவதற்குக்கூட இவரது சத்தியமும், சத்தியாக்கிரகமும் பயன் படாமல் போனது இன்று யாவருக்கும் தெரிந்த விஷயம். இவரது சத்தியாக் கிரகத்தின் பயன் எல்லாம் “உடும்பு வேண்டாம் கையை விட்டால்போதும்” என்கின்ற பழமொழிப்படி சத்தியாக்கிரகத்தின் பயனாய் சிறையிலடைக்கப் பட்டவர்களை விடுவிப்பதற்காக சர்க்காரோடு ராஜிபேசி இனிமேல் சத்தியாக்கிரகம் அல்லது சட்டம் மறுப்பு செய்வதில்லை என்று சொல்லி ஒப்பந்தம் பேசி சத்தியாக்கிரகிகளை விடுதலை செய்ய வேண்டியிருந்ததே யாகும். மறுபடியும் செய்த சத்தியாக்கிரகமானது ‘சத்தியாக்கிரகி வெளிப் படையாய் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் சிறையி லிருக்க வேண்டும்” என்கின்ற நிலையில் கொண்டுவந்து விட்டுவிட்டது.

ஆத்ம சுத்திக்காகவும், ஆத்ம சக்திக்காகவும் செய்த காரியமெல்லாம் ஆத்ம சுத்தியானவர்களையும், ஆத்ம சக்தி உடையவர்களையும் கண்ணி னால் பார்ப்பதற்கும் பேட்டி கொடுப்பதற்கும் அவர்கள் என்ன சொல்லு கிறார்கள் என்று கேட்பதற்கும் கூட வில்லிங்டன் பிரபுவால் அருகதை அற்றவர்களாகச் செய்து விடப்பட்டது. இவைமாத்திரமல்லாமல் நம்பிக்கை அற்றவர்களாவும் வாக்குத் தத்தப்படி நடவாதவர்களாகவும் நம்பிக்கை துரோகம் செய்தவர்களாகவும், சர்க்கார் சொல்லும் படி செய்துவிட்டது. இனி என்ன செய்யவேண்டியது பாக்கி இருக்கிறது என்பது நமக்கு புலப்பட வில்லை.

நிற்க சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு முதலாகிய காரியங்கள், அதில் ஈடுபட்ட மக்களை எல்லாம் தோல்வியடையச் செய்துவிட்டதென்றும் இனி அத்தகைய விஷயங்களை கைவிட்டுவிட்டு வேறு மார்க்கம் தேடவேண்டும் என்றும், தேசீய வாதிகளும், தேசீயப்பத்திரிக்கைகளுமே கூப்பாடு போட ஆரம்பித்து விட்டன.

மேலும் சத்தியாக்கிரகத்தினுடையவும், சட்டம் மறுப்பினுடையவும், உயிர், கடைசி மூச்சில் இருக்கின்றதென்றும், அது எப்படியாவது காந்தியார் தோல்வி அடையவில்லை யென்றும், ராஜி செய்து கொண்டாரென்றும் பொதுமக்கள் நினைக்கும்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதுவே போதும் என்கின்ற ஒரு போலி அபிமானத்திற்காகக் காத்திருக்கிறது என்றும், அப்படிக் காத்திருப்பது சுயமரியாதைக்கும், சத்தியத்துக்கும் ஏற்றதல்ல வென்றும், சத்தியாக்கிரகம் (தோற்றுவிட்டது) செத்துப்போய்விட்டது என்பதை தைரியமாயும், நாணையமாயும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும், தேசீயவாதிகளும், தேசீயப் பத்திரிகைகளுமே கூக்குரல் இட ஆரம்பித்துவிட்டன.

ஆகவே இதிலிருந்து ஆத்ம சுத்தியும், சத்தியாக்கிரமும், சத்தியமும் இதுவரை யாதொரு பலனையும் கொடுக்காமல் இருந்து வந்திருப்பதை யாரும் அறியலாம்,

1921-ம் வருஷ முதல் கள்ளுக்கடை சத்தியாக்கிரகம், அன்னிய ஜவுளிக்கடை சத்தியாக்கிரகம் பள்ளிக்கூட சத்தியாக்கிரகம், உப்புக் காச்சும் சத்தியாக்கிரகம், கோவில் சத்தியாக்கிரகம், முதலிய அனேக சத்தியாக் கிரகங்கள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அஹிம்சையின் பேரால் அனேகர் அடி, உதை முதலியவைகள் அடைந்தும் வந்தார்கள், ஆத்ம சுத்திக்காகவும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும், சத்தியாக்கிரகிகளுக்குள் “தப்பான” காரியங்கள் நடந்து விட்டதற்காகவும்.

மற்றும் பல காரியங்களுக்காகவும் பல பட்டினி விரதங்கள் இருந்துமாய் விட்டன. இவ்வளவும் போதாமல் பல தடவைகளில் காந்தியார் கடவுளிடம் பேசியுமாய் விட்டது. அசரீரி மூலம் காந்தியாருக்குப் பல கட்டளை இட்டும் ஆகிவிட்டன. இவ்வளவும் போதாமல் தினம் பிரார்த்தனைகளும், ஜபங்களும், தபசுகளும், மௌன விரதபிரார்த்தனைகளும் முறை தவராமல் நடந்தும் வருகின்றன. இவைகள் எல்லாம் எதற்காக? யாருடைய நன்மைக்காகவெனச் செய்யப்படுகின்றனவோ, அவர்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது? அல்லது யாரிடமிருந்து பெறுவதற்காக, யாருக்கு நல்ல புத்தி வருவதற்காகச் செய்யப்பட்டதோ அவர்களையாவது என்ன செய்து விட்டது? என்று பார்த்தால் ஒன்றும் இல்லையென்பதோடு தோல்வியையும், இழிவையும் கொண்டு வந்து விட்டது என்றும் சொல்லித் தீர வேண்டியது அவசியமாயிருக்கிறது. இதற்கு காந்தியாராகட்டும் மற்றவர்கள் தானாகட்டும் என்ன காரணம் சொல்லக்கூடும்? ஒன்று சத்தியாக் கிரகத்துக்கும் சத்தியத்துக்கும் ஆத்ம சக்திக்கும் கோரிய பலனைக் கொடுக்க கூடிய சக்தி இல்லை என்று சொல்ல வேண்டும்; அல்லது காந்தியாரின் சத்தியத்திலோ, சத்தியாக்கிரகத்திலோ, ஆத்ம சக்தியிலோ, தியாகத்திலோ, கடவுளைக்கண்டதிலோ உண்மையில்லை என்றாவது சொல்லியாக வேண்டும்.

பொது ஜனங்கள் பாமரர்களாயிருப்பதாலும், படித்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்களும், பணக்காரர்கள் என்று சொல்லப்படுவர்களும் தேசிய பத்திரிகை பிழைப்புக்காரர்களும் அயோக்கியர்களாகவும், சுயநலக் காரர்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் இருப்பதால் இம்மாதிரி பிரச்சினைகளுக்கே இடமில்லாமல் ஜனங்களை ஏமாற்றி விடக்கூடும் என்றாலும் பகுத்தறிவுக்காரர்களுக்கு இவ்விஷயங்கள் தெரியாமல் இருக் கும்படி செய்துவிட இனி யாராலும் முடியாது.

இந்நிலையில் ஒரு விஷயத்தை மாத்திரம் நாம் ஒப்புக் கொள்ள பின் வாங்கவில்லை. அதென்னவென்றால் தோழர் காந்தியுடையவும், அவருடைய பிரதம சிஷ்யர்களுடையவும் அந்தரங்க எண்ணம் ஒரு அளவுக்குக் கைகூடி வந்திருக்கின்றது என்பதாகும்.

எப்படியெனில், தோழர் காந்தியின் முயற்சியெல்லாம் பார்ப்பனீய மும், பணக்காரத்தன்மையும் இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே யாகும். இந்த எண்ணமே தான் அவருடைய பார்ப்பன-பணக்கார “சிஷ்யர் கள்” (நண்பர்கள்) உடையதும் ஆகும். இந்த எண்ணம் அவரிடம் இருப்பதற்கு ருஜுவு என்னவென்றால் (பணக்காரர்கள் பிழைக்க) ஏழை களுக்கு ராட்டினம் கண்டுபிடித்திருப்பதும் பார்ப்பனர்கள் பிழைக்க பகவத் கீதை வருணாச்சிரமம், ஜாதி முறை, தொழில் முறை ஆகியவைகளைக் காப்பாற்றுவதாக சுயராஜ்யத்திட்ட பிரஜா உரிமையில் ஏற்பாடு செய்திருப் பதும், வட்ட மேஜையில் இந்திய சமஸ்தானாதிபதிகளின் ஆட்சிகளையும் ஜாமீன்தாரர்கள் முதலியவர்களின் நிலைமையும் ஒப்புக்கொண்டதுமே போதிய காரணங்களாகும். நாம் சொல்வதை நம்புவதற்கு இவ்வளவும் வாசகர்களுக்கு போதிய திருப்தியைக் கொடுக்கவில்லை என்றால் மற்றும் ஒரு ஆதாரம் எடுத்துக் காட்டுகிறோம். அதென்னவென்றால் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலத்தில் தோழர் காந்தி அவர்கள் தான் எதற் காக உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார் என்று காரணம் சொல்லும் போது, “நான் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லையானால் தேசத்தில் பொது வுடமைக் கிளர்ச்சி ஏற்பட்டு விடும்” என்று ஒரு காரணம் காட்டியிருக் கிறார். (இதனால் தான் பணக்காரர்கள் காந்தீயத்திற்கு தாராளமாய் பணம் உதவ முன்வர வேண்டியதாயிற்று)

அன்றியும் தாழ்த்தப்பட்டவர்களின் தனிமுறையை ஒழித்து ஹரிஜன இயக்கம் என்று ஒன்று ஆரம்பித்து அதற்கும் பிர்லா போன்ற முதலாளி கூட்டத்தில் இருந்து 10 லக்ஷக்கணக்கான ரூபாய் பெற்று செலவு செய்து தீண்டப்படாதவர்கள் என்பவர்களிலும் சிலரை விலைக்கு வாங்கி கோவில் பிரவேசக் கிளர்ச்சி, புராணப்பிரசாரம் முதலியவைகள் செய்ததன் பலனாய் இந்து சமூகம் என்பதில் பிறருக்கு பாடுபட்டு உழைப்பதற்கு என்று ஒரு பெரிய கூட்டத்தை என்றும் நிலைக்கவைக்க வேண்டிய காரியங்கள் செய்யப்பட்டாய் விட்டது. இந்தக் காரணங்களால் தான் தோழர் காந்தியா ரின் அந்தரங்க எண்ணம் ஒரு விதத்தில் பலித்து விட்டது என்று சொன் னோம். இதே எண்ணம் கொண்ட அவரது அத்தியந்த நண்பர்களின் எண்ணமும் ஒருவாறு பலித்து விட்டது.

மற்றபடி தோழர் காந்தியவர்கள் எதிர்பார்ப்பதாக வெளிப்படையாய் சொன்ன காரியங்கள் தோல்வியேற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நம்மைப் பொருத்த வரையில் உப்பு சத்தியாக்கிரக இயக்கம் ஆரம் பித்த காலத்திலேயே இதில் நாணையம் இல்லை என்றும், இது கடைசியில் பொஸ்ஸென்றுபோய் விடுமென்றும், இதனால் மக்களுக்கு வீண் தொல் லையே விளையுமென்றும் அதோடு அனேக நல்ல காரியங்கள் செய்யப் படுவதையும் இந்த கிளர்ச்சி தடுத்து விடுமென்றும் பல தலையங்கங்கள் எழுதி யும், பல இடங்களில் பேசியும் வந்திருக்கிறோம். இதற்காக தேசியப் பிழைப் புக்காரரிடம் வசவும், பழிப்பும் அடைந்தும் வந்திருக்கிறோம். ஆனால் முடிவில் நாம் எதிர்ப்பார்த்ததற்கு மேலாகவே காந்தீயத்தின் கதி ஏற்பட்டு விட்டது.

இப்போது காந்தீயத்தின் கவலை யெல்லாம் காந்தீயம் தோற்று விட்டது என்பதில் 100க்கு 95 மக்களுக்கு ஆட்சேபனை இல்லை. என்றாலும் அது தோற்றுவிட்டது என்று ஜனங்கள் சொல்லாமல் இருப்பதற்கு ஒரு மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டும் என்பதும் வைசிராய் ராஜிக்கு வர மாட்டேன் என்கிறார் என்ற பெயரை ஏற்படுத்தி விட்டால் சர்க்கார் மீது ஜனங்களுக்கு கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டால் அதை உபயோகித்து ஏதாவது செய்யலாமா என்று யோசிப்பதுமாகும். இதை சில காந்தி பக்தர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்னலாம். ஆனால் அவர்களை ஒன்று கேட்கின்றோம். அதாவது காந்தீயம் தோல்வி அடையவில்லை, ஆனாலும் தேசியப் பத்திரிக்கைகள் எழுதுவது போல் காந்தீயமானது நாட்டிற்கு பயன்படாமல் போய் விட்டது என்பதையாவது ஒப்புக் கொள்ளுகின்றார்களா? இல்லையா? என்பதேயாகும். அதையும் ஒரு சமயம் காந்தி பக்தர்கள் ஒப்புக் கொள்ள வில்லையானால் அவர்களை மற்றொரு கேள்வி கேட்கின்றோம். அதென்ன வென்றால்,

ஒரு வாதியானவன் ஒரு பிரதிவாதியின் மீது தாவா போட்டு விசாரணை முடிந்த பிறகு பிரதிவாதியிடம் ராஜியாய் போகிறேன் என்று கேட்கப் போனால் இதற்கு என்ன அருத்தம்? வாதிக்கு விசாரணையின் போக்கிலிருந்து தன் கேசு ஜெயிக்காது என்றும், தோற்றுவிடும் என்றும் தோன்றிவிட்ட காரணமா? அல்லது வாதியின் கண்ணியமும் பெருந் தன்மையும் காரணமா? என்று கேட்கின்றோம்.

நிற்க, இப்போது காங்கிரசுக்காரர்களிலேயே அனேகம் பேர் காந்தீயம் தோற்றுவிட்ட தென்றும், சத்தியாக்கிரகமும், சட்ட மறுப்பும் செத்து விட்டதென்றும், ஆதலால் இனி சட்டசபைக்கு போக வேண்டும் என்றும் தாரா ளமாய் சொல்ல முன் வந்து விட்டார்கள். எல்லா தேசீயப் பத்திரிக்கைகளும் அப்படியே எழுதத் துணிந்தும் விட்டன. தோழர். காந்தி வைஸ்ராயைப் பார்க்க அனுமதி கேட்பது கூட இந்திய தேசீய காங்கிரசுக்கு சுயமரியாதையற்ற தன்மையை உண்டாக்கி விட்டதென்றும் எழுதி விட்டன.

இவற்றுள் ஒரு பிரபல தேசீய பத்திரிகையானது “காந்தியார் தன்னுடைய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக காங்கிரசின் மரியாதையை விற்று விட்டார்” என்றுங்கூட எழுதிவிட்டது.

காந்தியாரைப் பற்றியோ, சட்ட மறுப்பைப் பற்றியோ குறைகூற இனி சொல்ல வேண்டிய பாக்கி ஒன்றும் இல்லாமல் எல்லாம் சொல்லி ஆய் விட்டது. நமக்கு இவைகள் எதுவும் புதுமையாக தோன்றவில்லை. ஏனெனில் இதெல்லாம் நாம் முன் சொன்ன மாதிரி ஆரம்பத்திலேயே எதிர்பார்த்ததாதலால் அதிசய மொன்றும் இல்லை. கடைசியாக ஒன்று கேட்டு விட்டு இதை முடித்து விடுகிறோம். காங்கிரசுத் தொண்டர்கள் என்பவர்கள் இந்த அளவோடாவது ஒரு பாடம் கற்றதாக முடிவு செய்து கொண்டு இனி அப்படிப் பட்ட சூட்சிக் காரியங்களிலும், பயனற்ற காரியங்களிலும் சம்பந்தப்படாமல் தேசம், ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், எஜமான் அடிமை என்பனவாகிய வித்தியாசமில்லாத உண்மையான சமதர்மத்துக்கு உழைக்க வருவார்களா? அல்லது செத்த பாம்பை எடுத்து ஆட்டப்போகும் காந்தீயத் திருவிளையாடலில் மறுபடியும் போய் சேரப் போகின்றார்களா? என்பதே யாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 23.07.1933)