ஏகாதிபத்திய ஆட்சி :

kamarajar 350புதுதில்லியின் ஏகாதிபத்தியம் பற்றியும், அதற்கு எப்படி எப்படி எல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டமும், மற்றச் சட்டங்களும், நீதி அமைப்பும் துணை செய்கின்றன என்பது பற்றியும் இளங்கலை, முதுகலை, பொருளியல் படிப்பு மற்றும் இளநிலை சட்டப் படிப்புப் படிக்கும்போதே ஓரளவு படித்திருக்கிறேன்.

வகுப்பில் 50 நிமிடப் பாட நேரத்தில் 3, 4 முறை பேராசிரியர்களிடம் மேற்குறித்த நிலைமைகள் மாற வேண்டும், பொதுவுடமை அரசு மட்டுமே தீர்வு என்ற அடிப்படையில் வினா எழுப்பி விடை பெறுவது என் இயல்பு. அப்படிப்பட்ட நேரங்களில் தில்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பற்றியும், அதே நேரத்தில், தமிழ் நாட்டின் முதல்வராக ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த மாண்புமிகு கு.காமராசர் பற்றியும் அதிகம் விமர்சனம் செய்துள்ளேன்.

குறிப்பாக மாநிலங்களுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லாதது பற்றியோ, இந்திய ஏகாதிபத்திய வல்லாட்சியில் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்பது பற்றியோ பேசாத, கவலைப்படாத காமராசரை தில்லிக் காங்கிரசோடு இணைத்துப் பலமுறை குறை கூறிப் பேசியுள்ளேன்.

மேன்மை மிகு காமராசர் ஆட்சிக் காலத்தில் அவர் செய்த சாதனைகளான இராசாசியின் குலக்கல்வி ஒழிப்பு மற்றும் கல்விப் புரட்சி, தொழிற்புரட்சி, நீர்த் தேக்க அணைகள் கட்டி செய்த வேளாண்மைப் புரட்சி என்பதெல்லாம் அப்போது தெரியவில்லை.

தான் ஒரு புரட்சியாளன் என்று தனக்குத்தானே காமராசர் கூறிக் கொண்டதுமில்லை. மற்றவர்கள் அப்படிக் கூற அனுமதிக்கவும் இல்லை. ஆனால், இன்றோ உண்மையான புரட்சிக்கு எதிர்ப்புரட்சியாளர்கள் ‡ புரட்சி என்ற சொல்லின் ஒரே ஒரு எழுத்துக்குக் கூடத் ‘தகுதியற்றதுகள்’ எல்லாம் புரட்சித் தலைவர் என்றும், புரட்சித்தலைவி என்றும், புரட்சிப் புயல் என்றும் கோயபெல்ஸ் வேலை செய்கின்றனர்.

நாடார்:

பொன்னை நாடார், பொருளை நாடார், பெண்ணை நாடார், காமராசர் நாடார் என்பதெல்லாம் காலம் போகப் போகப் பின்னாட்களில் அறிந்து, பக்குவப்படாத இளமைக்காலத்தில் காமராசர் பற்றிக் குறைவாகப் பேசியது பற்றி மிக, மிக வருந்தியதுண்டு. மக்களாட்சியின் மாண்புகள் அறியாத -வாக்குச் சீட்டின் தன்மை, வல்லமை அறியாத  - படிப்பும், அறிவும் குறைவான மக்களிடம்; எப்படி எப்படியோ தரம் தாழ்ந்த முறையில் வாக்குப் பெற்று, ஆட்சியில் அமர்வது என்பது, நாட்டு வளத்தை, மக்கள் செல்வத்தைக் கொள்ளையோ கொள்ளையயன அன்றாடம் கொள்ளை அடிக்க, வாக்குச் சீட்டுகள் மூலம் மக்கள் தங்களுக்கு அளித்த அனுமதி. அங்கீகாரம் என்றே கருதி, கொள்ளை அடிக்கும் இன்னாள் மாண்புகளுக்கும், ஊழல் என்றால் என்ன? சொத்து சேர்க்கும் “அறிவியல் ஊழல்” என்றால் என்ன, என்றே அறியாத மக்கள் முதல்வர் காமராசருக்கும் அனுவளவும் தொடர்பு இல்லை.

தந்தை பெரியார் :  காந்தியையும் காங்கிரசையும் முழு மூச்சாக எதிர்த்த தந்தை பெரியார் காமராசரை மட்டும் பச்சைத் தமிழன் என்று பெருமையுடன் கூறி, ஆட்சியில் அமர்த்தி  ஆதரித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்தப் பச்சைத் தமிழன் பிறந்த நாளான சூலை 15 - ஆம் நாள் அவர் பிறந்த விருதுநகர் இல்லத்தில் தொடங்கி சூலை 21 முடிய 7 நாட்கள் காமராசர் பிறந்த நாள் விழா - மது ஒழிப்புப் பிரச்சாரம் என்ற இரு செய்திகள் பற்றித் தொடர் ஊர்திப் பயணம் செய்தோம்.இந்தப் பயணத்தை சென்னை கவிஞர் இராமலிங்க சோதி தொடங்கி வைத்தார். இந்தப் பயணத்தில் 2.10.2014ல் குமரியில் தொடங்கி 12.1.2015 இல் சென்னையில் நிறைவு செய்த மது ஒழிப்பு 103 நாட்கள் பிரச்சார நடை பயணத்திற்கு ஏற்பாடு செய்தத் தோழர் இனாமுல் அசன், தஞ்சை விசிரி சாமியார், மூங்கில் அமைப்பின் உறுப்பினரும், சென்னைப் பல்கலைக்கழக முதுகலை மாணவருமான நாகார்சுனன் அவர்களும் பிரச்சார பயணத்தில்  கலந்து கொண்டது சிறப்பாகும்.

குட்டம் சிவாஜி முத்துக்குமார் :

இவர் தான் காமராசர் - சிவாஜி பொது நல இயக்கத்தின் நிறுவனத் தலைவர். காங்கிரசால், காமராசரால் பதவியும், கோடி, கோடியாகப் பணமும் குவித்தவர்கள் செய்யத் தவறியதைத் ‡காமராசர் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யத் தவறியதை இந்த ஏழை சிவாஜி முத்துக்குமார் 7 நாட்கள் ஊர்திப் பிரச்சார பயணமாகச் சிறப்பாக செய்தார். நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம், குட்டம் ஊரினரான 46 வயது நிரம்பிய துடிப்பு மிகும் இளைஞர் இவர். 2.10.2014 முதல் 12.01.2015 வரை நடந்த 103 நாட்கள் குமரி - சென்னை  - மது ஒழிப்பு நடைப் பயணத்தில் முழுமையாகப் பங்கேற்று உணர்ச்சி மிகு வீர உரையாற்றியவர்தான் இவர்.

ஏழையிலும் ஏழை முதல்வர்களில் முதல்வர் :

15.7.2017 காலை 10 மணியளவில் காமராசர் பிறந்த இல்லத்தில் நுழைந்தோம். 10 அடி அகலம் கூட இல்லாத சந்துத் தெருவில், சுமார் 300 சதுர அடி கூட இல்லாத வீட்டில்தான் 9 ஆண்டுகாலம் தமிழ் நாட்டின் ஒப்பற்ற முதல்வராகவும், இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியப் பிரதமர்களை நிலை நிறுத்திய ஈடிணை இல்லாத் தலைவராகவும் இருந்த காமராசர் வாழ்ந்திருக்கிறார் என உணர்ச்சிப் பொங்க நான் பேசியபோது “அய்யா கொஞ்சம் பொறுங்கள்” என்றது ஒரு குரல்! என்னங்க என்று கேட்டேன். நீங்கள் கூறிய சிறிய வீடும் அவருடையதல்ல. அவருடைய தாய் மாமாவின் வாடகை வீடுதான் என்றார் ஒருவர்! அதிர்ந்தே விட்டேன்!

மெய்யும் பொய்யும் : 

வேறு எவ்வித அசையும் மற்றும் அசையா சொத்துகளும் இல்லாமல் வெறும் 136 ரூபாய் மட்டுமே தன் வங்கிக் கணக்கில் வைத்துவிட்டு மறைந்த மனிதருள் மாணிக்க முதல்வர் காமராசர் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்பார். “ஏழை பங்காளன் காமராசர் என்று கூறுகிறார்கள். அது சுத்தப்பொய். காமராசர் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்!” என்று கரகரத்தக் குரலில் குரைத்தப் பிச்சைக்கார அரசியல்வாதிகள், பொது வாழ்வுக்கு வந்த பின் எத்தனை எத்தனை கோடிகளுக்குச் சொந்தக்காரர்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாது. அவர்கள் வாரீசுகளுக்கும் தெரியாது! ஏன் வருமானவரித் துறைக்கேத் தெரியாது.

திருவிழா :

எங்களின் ஊர்திப் பயணம் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பயணித் தது. அந்த ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து ஊர்களில் பிரச்சாரம் செய்தோம். எல்லா ஊர் களிலும் சுமார் 50% மக்கள் நாடார் சமூகமே. காமராசர் சிலையோ காமராசர் பேரால் பேருந்து நிலையமோ, மருத்துவமனை போன்ற பொது அலுவலகங்களோ இல்லாத ஊர்கள் சில ஊர்கள்தான். காமராசர் பிறந்த நாள் விழா சூலை 15க்குப் பிறகும், தொடர்ந்து நடை பெறுகிறது. ஊரெங்கும் விழாக்கோலம்!

கலை நிகழ்ச்சிகள், ஆண், பெண் சிறார்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பொது விருந்துகள், ஊரின் நடுவே பெரிய, பெரியப் பந்தல்கள். அவற்றில் மிகச் சிறந்த உணவு விருந்துகள். ஏற்றத் தாழ்வு பாராமல் ஊரார் அனைவரும் விருந்தில் பங்குபெரும் மாட்சி!

மறக்க முடியுமா?  நெல்லை மாவட்டம், வேலப்ப நாடார்  ஊர் என்ற ஊருக்கு இரவு 8 மணிக்குச் சென் றோம். நல்ல வரவேற்பு. விருந்து சாப்பிடுங்கள் - பயணச் செலவுக்குப் பணமும் தருகிறோம் - இன்று காமராசர் பிறந்த நாள் விழாப் பற்றி மட்டுமே பேசுங்கள் - மது ஒழிப்புப் பற்றிப் பேச வேண்டாம். ஏனெனில், இந்தக் காமராசர் பிறந்த நாள் விழாவில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரின் ஒத்துழைப்புடன் ஒன்றாக விழா நடத்து கிறோம். நீங்கள் மது ஒழிப்புப்பற்றிப் பேசினால், மதுவுக்கு ஆதரவான சிலர் மறுப்புக் கூறக் கூடும். இந்த விழா தடைபடலாம். அதனால், வேறு ஒரு நாளில் நீங்கள் வந்து மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்ய மேடை மற்றும் வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம் என்றுத் திட்டவட்டமாகக் கூறினர்.

“ஏழைப் பங்காளன்” காமராசர் பிறந்த நாள் விழாவில் மது ஒழிப்புப் பற்றிப் பேசத் தடையா? உங்கள் விருந்தும் வேண்டாம் ‡பணமும் வேண்டாம் என்று வீராவேசமாக சிவாஜி முத்துக்குமார் கூறி, அந்த வேலப்ப நாடார் ஊரை விட்டு வேறு ஊருக்குப் புறப்பட்டுச் சென்றோம்.

கல்விக் கூடங்களில் :

நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், குட்டம் ஊரில் உள்ள அரசு மேனிலைப் பள்ளி, நெல்லை நகரம் KTC நகர் அருகில் உள்ள சாரதாக் கல்லூரி மேனிலைப் பள்ளி மற்றும் நெல்லை, இராதாபுரம் கல்லிக்குளம் ஊரில் தட்சிண மாரா நாடார் சங்கக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங் களில் சிறப்பாகப் பேசினோம்.

இந்தப் பயணத்தில் காமாராசர் பற்றி ஒரு புறமும், மது ஒழிப்பு பற்றிப் மறுபுறமும், கொண்ட 17,000 துண்டறிக் கைகள், காமராசர் வரலாறு பற்றிய 2000 புத்தங்கள், சுவடிகள், எழுதுகோல்கள், மாணவர்களுக்கு வழங்கினோம்.

ஊர்வலம் :

ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தை திசயன் விளை நகரில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்கள் தொடங்கி வைத்து, ஊர்வல இறுதியில் ஊர்திப் பயணப் பிரச்சாரக் குழுவிற்கு சால்வை அணிவித்து நிறைவுரை ஆற்றினார்.

காமராசர் பிறந்தநாள் விழா - மது ஒழிப்பு ஊர்திப் பயணம் முக்கடல் சந்திக்கும் குமரி முனையில் உள்ள காமராசர் நினைவு மண்டபத்தில் ஏழாம் நாள் நிறைவு பெற்றது. குமரியில் உள்ள புகழ்பெற்ற சிவந்தி மருத்துவமனை உரிமையாளர் மரு.கார்த்தீசன் அவர்கள் மகிழ்வுரையும், நிறைவுரையும் நிகழ்த்தி நிறைவு செய்தார்கள்.

காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் மது ஒழிப்புப் பிரச்சாரம் எனும் பெயரால் குட்டம் சிவாஜி முத்துக்குமார் அவர்கள் மிகவும் கடினமாகப் பாடுபட்டு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த, அந்த இனிய மகிழ்ச்சியான ஊர்திப் பயணத்தை வாழ்வில் மறக்க முடியாது!

பச்சைத் தமிழர் காமராசருக்கு நடைபெறும் இந்த விழாவைப் போல குடும்ப விழாவாக, ஊர் விழாவாக வேறு எவருக்கும் இந்தியாவில் நடைபெறுகிறதா என்பது ஆய்வுக்குரியது - மகிழ்ச்சிக்குரியது.

ஒற்றுமைப் பேரவை  (EKTA PARISHAD)

மானிட ஒற்றுமை சமத்துவம் எனும் உயர்ந்த குறிக்கோளுடன் 1990 முதல் இந்த ஒற்றுமைப் பேரவையை P.V.இராசகோபால் என்பவர் இயக்கிக் கொண்டுள்ளார். நாடெங்கும் இருந்தக் கொத்தடிமை களை மீட்பதற்காக உச்ச நீதுமன்றம் இவரை ஆணையராக நியமித்து. நான்கு ஆண்டுகளில் 6000 தமிழ் நாட்டுக் கொத்தடிமைக் குடும்பங்களை வட இந்தியாவில் இருந்து மீட்டது இவரது சீரிய சாதனை!

இந்த ஒற்றுமைப் பேரவையின் தமிழ் நாட்டு அமைப்பாளராக மதுரைத் தோழர் தனராசு அவர்கள் துடிப்புடன் இயங்குகிறார்கள். நிலம், நீர், வனம் ஆகிய மக்கள் உரிமைகளைத் தனியார் மற்றும் அரசு ஆக்கிரமிப்பிலிருந்து காப்பது இந்த அமைப்பின் நோக்கம். இந்தியாவின் 12 மாநிலங்களில் இந்த அமைப்புக்குக் கிளைகள் உள்ளன.

நிலமற்ற ஏழை உழவுத் தொழிலாளிகளுக்கு நிலத்தைப் பங்கீடு செய்து அளிக்க இந்தப் பேரவை பாடுபடு கிறது. மலைகளிலும் காடுகளிலும் காலங்காலமாக நிரந்தரமாக வசித்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் காட்டுவாசிகள் அவர்களின் மலை மற்றும் காடுகளில் தொடர்ந்து வாழ்வதைப் பறிக்கும் செயலை யார் செய்தாலும், அதைக் காந்திய வழியில் தடுத்து நிறுத்தி மலைவாழ் மக்கள் மற்றும் காட்டுவாசிகளைக் காப் பாற்றும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது இந்தப் பேரவை. இந்த நோக்கத்திற்காக 2007 இல் மத்தியப் பிரதேசம் குவாலியரில் தொடங்கி புதுதில்லி வரை 25000 போராளிகளை நீண்ட பயணமாகப் போராட்டப் பயண மாக நடத்தியது இந்த ஒற்றுமைப் பேரவை. இந்த அமைப்பின் கோரிக்கையை மத்திய அரசு 2012 இல் ஏற்று அடித்தட்டு மக்களுக்கு நிலமும், வீடும் அளிக்க உறுதி கூறியுள்ளது.

ஒற்றுமை அமைதி சமத்துவம் சமநீதிக்கான இளைஞர்களின் பயிற்சி முகாம்களை 500 மாவட்டங்களில் நடத்தத் திட்டமிட்டுத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறது இந்தப் பேரவை.

தமிழ்நாட்டில் இந்த ஒற்றுமைப் பேரவையின் பயிற்சிமையமாக  CESCI (Center for Experiencing Soio Cultural Interaction) என்ற பெயரில் மதுரைக்கு அருகில் கடவூர் என்ற மலைப் பகுதியில் இயங்குகிறது.

இந்த ஒற்றுமைப் பேரவை பலத் தோழமை அமைப்பு களை அழைத்து 30.7.2017 இல் மதுரைக் கடவூர் CESCI மையத்தில் வெகுமக்களின் வாழ்வியல் சிக்கல் கள் என்ற கருத்தரங்கை நடத்தியது. இதில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக நான் கலந்து கொண்டு மதுச்சிக்கல்தான் மக்கள் அனை வரின் உடனடிப் பிரச்சினை என்று கருத்துக்களைக் கூறினேன். இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து பல கருத்தரங்குகளையும், இளைஞர் களின் பயிற்சி வகுப்புகளையும் களப் போராட்டங் களையும் நடத்துகின்ற - நடத்த இருக்கின்ற இந்த ஒற்றமைப் பேரவை வாழ்க! வளர்க! என மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி வாழ்த்துகிறது!

- காமராசர் புகழ் நீடு வாழ்க 

Pin It