மதப் பிரசாரகர்கள் என்பவர்கள் 100க்கு 99 பேர்கள் மதத்தை பற்றி எங்கோ மூலை முடுக்குகளிலோ அல்லது வேதம் வேதாந்த சாஸ்திரம் என்பவைகளில் உள்ளவற்றை எடுத்து தங்கள் இஷ்டபடி வியாக்கியானம் செய்தோ பிரசாரம் பண்ணிக் காட்டி பாமர மக்களை ஏமாற்றி தங்கள் தங்கள் மதம் பெரிதென்று பேசி சண்டப் பிரசண்டர்களாகிறார்களே ஒழிய, அந்த மதத்தை சேர்ந்த 100 க்கு 99 முக்கால் பாக மக்களிடத்தில் அந்த மதத்தின் பேரால் நடக்கின்ற காரியங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி தங்கள் மதத்தின் யோக்கியதையை நிர்ணயிக்கும் யோக்கியர்கள் இன்று மிக மிக அருமையாகவே இருக்கிறார்கள்.periyar 540ஒவ்வொரு மதத்துக்கும் வேதமிருக்கிறது புராணமும் இருக்கின்றது. ஒவ்வொரு மதத்திலும் 100க்கு 99 முக்காலரைக்கால் மக்கள் புராணப்படி தான் புராணத்திலுள்ள வேஷக் குறிபடிதான் நடக்கின்றார்களே ஒழிய வேறில்லை. அதாவது ஒவ்வொரு மதத்ததுக்கும் தலை மயிரில் மத தத்துவம் இருக்கிறது, உடையில் மத தத்துவமிருக்கிறது. ஆகாரத்தில் மத தத்துவமிருக்கிறது, மனித வாழ்க்கை சம்பந்தம், புணர்ச்சி பந்துத்துவ முறை ஆண் பெண் தத்துவம், கல்யாணம், உற்சவம் சொத்துரிமை முதலாகியவைகளிலும் மத தத்துவம் இருக்கின்றது.

இவை மாத்திரமல்லாமல் ஒவ்வொருவரும் தங்கள் கடவுளை ஆதாரம் வைத்து அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்துத் தான் இவற்றில் அனேகத்தை நிர்தாரணம் செய்கின்றார்கள். ஒரு மதத்தை விட்டு மற்றொரு மதத்திற்கு ஜனங்கள் மாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்தக்காரர்கள் தினம் ஒரு சீர்திருத்த முறையை பிரசாரம் பண்ணிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்த விரோதிகள் மத வெறியர்கள் பலாத்காரச் செய்கையை நம்பியோ சர்க்கார் தயவை எதிர்பார்த்தோ தங்கள் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற வைதீகர்கள், சனாதன தர்மிகள், மகான்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் எந்த மதத்தை மாத்திரம் தனியாக நாம் குற்றம் சொல்ல முடியும் என்பது யோசிக்கத் தக்கது.

(குடி அரசு - கட்டுரை - 02.04.1933)

Pin It