சைனாவுக்கும், ஜப்பானுக்கும் சுமார் ஒன்றரை வருஷ காலமாக யுத்தம் நடைபெற்று வருகின்றது. இதுவரை யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்து விட்டார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிந்தும் விட்டன.

இந்த யுத்தத்தின் தத்துவம் “வலுத்தவன் இளைத்தவனை உதைத்து அவனிடமிருப்பதை பிடுங்கிக் கொள்ளலாம்” என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நம்மைப் பொருத்தவரையில் சீனாவை சீனாக்காரனாண்டாலும்சரி, ஜப்பான்காரனாண்டாலும் சரி இதில் ஒன்றும் நமக்கு பிரமாதமான கவலை யில்லை. ஆனால் இதில் நடைபெறும் சூழ்ச்சிகள் ஒழிக்கப்பட வேண்டியதாகும்.

சர்வதேச சங்கம் என்று ஒன்றிருப்பது யாவருக்கும் தெரியும். அது “உலக சமாதானத்துக்காக இருந்து வருகிறது” என்று சொல்லப்படுவதாகும். எப்படியென்றால் 1914ல் ஏற்பட்ட பெரிய யுத்தத்தின் பயனாய் அநேக உயிர்ச் சேதங்கள் பொருள் சேதங்கள் ஏற்பட்டு உலக பொதுஜனங்களுக்கும் அதிக மான கஷ்டங்களைக் கொடுத்து விட்டதால் “இனி ஒருவருக்கொருவர் நாடு பிடிக்கும் ஆசைகொண்டு யுத்தம் செய்து கொள்ளக் கூடாது” என்பதற்காகவே ஏற்பட்டதாகும்.periyar 509ஆனால் இதை நாம் ஒரு நாளும் சரி என்று ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தானாளுவதும், ஒருவன் அதிக பூமி வைத்துக் கொண்டு மற்றொருவனுக்கு சிறிய பூமியை விட்டு அத்துட னேயே அவனை இருக்கச் செய்வதும், ஒரு நாட்டிற்கு அதிக சௌகரியமும் ஒரு நாட்டுக்குச் சௌகரியக் குறைவும் இருப்பதும் ஆகியவையான இப்படிப்பட்ட நிலையில் “இனி ஒருவரும் நாடு பிடிக்கும் ஆசையில் சண்டை பிடிக்கக் கூடாது” என்று தீர்மானம் செய்து கொண்டால் அது சிறிய நாடுகளுக்கும், ஒருகாலத்தில் தோல்வியடைந்து தனது நாடுகளை அன்னிய னுக்கு விட்டு விட்ட நாடுகளுக்கும், அன்னியன் ஆதிக்கத்தில் சிக்குண்டு அடிமைப்பட்டுத் தவிக்கும் நாடுகளுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். பிற நாட்டானிடம் சென்று தங்கள் குறைகளை எடுத்துச்சொல்லி விடுதலை பெறுவதற்கும் இடமில்லாமல் போய்விடும்.

ஆதலால் இது சூதாடிகள் தங்கள் சூதாட்ட முடிவில் ஜெயித்துக் கொண்டவர்களும் தோற்று விட்டவர்களும் சேர்ந்து “இனிமேல் நாம் யாவரும் சூதாடக்கூடாது” என்று ஒரு ஒப்பந்தம் பேசிக் கொண்டால் எப்படி அது ஜெயித்தவர்களுக்குத்தான் லாபமாகவும் தோற்றவர்களுக்கு நஷ்டமாகவும் இருக்குமோ அதுபோன்ற ஒப்பந்தமேயாகும். அப்படியிருந்தும் அந்தப்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகாவது அது கிரமமாய் நடைபெறுகின்றதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எப்படியெனில் இப்போது சைனா தேசத்தையும் ஜப்பான் தேசம் துன்புறுத்தி யுத்தத்தில் ஜெயிக்கப் பார்க்கிறது. இதற்கு ஜப்பான் சொல்லும் காரணம் “எனது ஜனத் தொகை அதிகமாய் விட்டது, தொழில் திறமையில் நான் மேன்பாடடைந்து விட்டேன். எனக்கு இன்னும் அதிகமான துறைமுகங்கள் வேண்டும். ஆதலால் சைனாவைக் கைப்பற்ற வேண்டியிருக்கிறது என்கின்ற காரணமே ஒழிய வேறில்லை” என்கின்றது.

இதை பிரிட்டிஷ் பத்திரிகைகளில் சிலது ஆதரித்தும் எழுதுகிறது. அதாவது “ஜப்பான் தேசம் தனது நெருக்கடியாலும் அடிக்கடி ஏற்பட்ட பூகம்பத் தொல்லைகளாலும் மிகவும் கஷ்டப்படுகிறது. இதற்கு ஏதாவதொரு வழி ஏற்பட்டுத்தானாக வேண்டும்” என்று எழுதியிருக்கிறது.

இதுதான் ஜப்பானின் நிலைமை. ஆனால் சர்வதேச சங்கம் தங்களது ஒப்பந்தங்களை மீறி ஜப்பான் நடந்ததற்கு என்ன செய்தது என்று பார்ப்போமானால் எழுத்தில் ஜப்பானை ஊரார் மெப்புதலைக்கு பொய் மிரட்டு மிரட்டுவதும் காரியத்தில் ஜப்பானுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கடனாக என்று கொடுப்பதும், ராணுவ வீரர்களை ரகசியமாயனுப்புவதும் சண்டைக்கு வேண்டிய சண்டைக் கப்பல் சண்டை ஞானம் முதலியவைகளை ரகசியமாய் உதவுவதுமாயிருக்கின்றதாம்.

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் “சைனாவை ஜப்பான் கைப்பற்றா விட்டால் அது ரஷ்ய செல்வாக்காலும், ஆதிக்கத்தாலும் சைனா முழுவதும் பொதுவுடமை தேசமாகிவிடும்” என்றும், “சைனாவும், ரஷ்யாவும் பொதுவுடமை தேசமாகி விட்டால் இந்தியாவே பொதுவுடமை ஆட்சிக்கு தலைமை ஸ்தாபனமாகி விடும்” என்றும் “அப்போது மற்ற தேசங்கள் எல்லாம் வலிய வந்து பொதுவுடமையை சரணமடைய வேண்டி ஏற்பட்டு விடும் என்றும் சர்வதேச சங்கமும் சிறப்பாக பிரிட்டனும் கருதுகின்ற காரணமேயாகும்.

ஆகவே சர்வதேச சங்கம் இப்பொழுது எதற்கு என்னமாயிருக்கின்றது என்று பார்த்தால் அது முதலாளிகளின் கூட்டுறவுச் சங்கமாகவும், ஏழைகளை வஞ்சித்து வதைக்கும் சதிகார சங்கமாகவும் தான் இருக்கின்றது.

இதில் தலை சிறந்து விளங்குவது பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மென்பதே பொதுவுடமைக்காரர்களின் முடிவு. அதுவே உண்மையுமாகும். மற்ற அரசுகளும் பொதுவுடமையை எதிர்க்கவோ ஒழிக்கவோ பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தைத் தான் தூண் போல நம்பியிருக்கின்றது. இந்தியாவும் இந்திய முதலாளிகளும், இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசியல் கிளர்ச்சிகளும் பிரிட்டிஷுக்கு அடிமையாகவும் பிரிட்டிஷ் கொள்கைகளைப் பின்பற்றுவனவாகவும் பிரிட்டிஷைப் போலவே பொதுவுடமைக் கொள்கையை வெறுப் பாகவும் இருப்பதால் இந்தியாவுக்கு என்ன அதிகாரம் என்ன சுதந்தரம் கொடுத்தாலும் தங்களுக்கு அழிவுவராதென்கின்ற தைரியம் பிரிட்டிஷுக்கு இருப்பதால்-இந்திய ஆதாரத்தால் பிரிட்டிஷும் உலகில் ஒரு பெரிய வல்லரசாக இருந்து சர்வதேச சங்கத்தை ஆட்டி வைக்கின்றது. பிரிட்டிஷ் பார்த்து உண்மையான முறையில் ஒரு மிரட்டு மிரட்டியிருக்குமானால் ஜப்பான் நடுநடுங்கி யுத்தத்தை விட்டு மன்னிப்புக்கூட கேட்டிருக்கும். ஆனால் பிரிட்டிஷானது அப்படிச் செய்வதற்கு பதிலாக ஜப்பானுக்கு யுத்தக்கப்பல்கள் தளவாடங்கள், தளகர்த்தர்கள், பணம் ஆகியவைகளை சப்ளை செய்கிறது என்றும், இன்று சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் சைனாவுடன் ஜப்பான் சண்டை செய்யவில்லை என்றும் பிரிட்டிஷ் தான் ஜப்பான் பேரால் சண்டை செய்கின்றது என்றும் சொல்லத்தக்க மாதிரியில் லண்டனிலேயே சேதிகள் வெளியாகின்றன. இதை நம்பாமல் இருக்க போதிய காரணம் இல்லை.

இந்த சண்டைக்குப் பெயர் சீனா ஜப்பான் சண்டை என்றோ, பிரிட்டிஷ் சைனா சண்டையென்றோ சொல்வதையெல்லாம்விட முதலாளி தொழிலாளி சண்டையென்று சொல்லுவதுதான் சரியான பெயர் என்பது நமது கருத்து.

நிற்க, இந்திய தேசியமும் சீனா ஜப்பான் சண்டையை முதலாளி தொழிலாளிச் சண்டை என்று அறிந்து கொண்டதினாலேயே அதைப்பற்றி காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தனது முதலாளித் தனத்தைக் காப்பாற்ற யாருக்கோ வந்த விருந்து போல் நடித்துக் கொண்டிருக்கின்றது.

இது விஷயத்தைப் பற்றி தோழர் சக்லத்வாலா அவர்கள் பேசியிருக்கும் பேச்சை மற்றொரு பக்கத்தில் காணலாம். அதிலிருந்து சீனா ஜப்பான் யுத்த ரசசியமும், பிரிட்டிஷ் நிலைமையும், இந்தியத் தேசியத் தலைவராகிய தோழர் காந்தியின் நிலைமையும் ஒருவாறு விளங்கும். மற்ற விபரம் பின்னால் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 02.04.1933)

Pin It