இவ்வாரம் நடைபெற்ற சென்னை சட்டசபைக்கு ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் முனிசிபல் சட்டத்திற்கு ஒரு திருத்த மசோதா அனுப்பியிருந்தார். அதாவது “பொதுத் தெருவை எவரேனும் உபயோகிக்க முடியாமல் தடுப்பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கலாம்” என்று ஒரு பிரிவை அதில் சேர்க்க வேண்டும் என்று அனுப்பியிருந்தார். அது பிரேரேபணைக்கு வரும்போது சில பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் புத்தியின்படி அதைக் கொல்ல சட்ட சம்பந்தமான ஆட்சேபணைகளை எழுப்பி விட்டார்கள். தாங்கள் பார்ப்பனர் சந்ததியார்கள் என்று சொல்லிக் கொள்வதால் பெருமைப்படும் சில பார்ப்பனரல்லாதாரும் ரகசிய வருணாசிரம தர்மிகளும் அதற்கு உடந்தையாயிருந்து இந்த சபையில் அதை நிறைவேறாமல் செய்துவிட்டார்கள். பொதுத் தெருவை பொதுமக்கள் உபயோகப்படுத்திக் கொள்வதைத் தடுத்தவர்களுக்கு அபராதம் போடலாம் என்றால் அதை ஆட்சேபிப்பதற்கு நமது நாட்டில் ஜனங்கள் இருக்கும் போதும், அப்பேர்ப்பட்டவர்களை சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கக்கூடிய பைத்தியக்கார ஓட்டர்கள் நமது நாட்டில் மலிந்திருக்கும் போதும், வெள்ளைக்காரரைப் பார்த்து “நாங்கள் சுயராஜ்யத்திற்கு தயாராகி விட்டோம். எங்களிடம் ராஜ்யத்தை ஒப்புவித்துவிட்டு நீங்கள் போய் விடுங்கள்” என்று சொல்வது எவ்வளவு மடத்தனம் என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
இம்மாதிரி ஜனங்கள் மூலம் வரும் சுயராஜ்யம் பொது மக்களுக்கு உபயோகப்படுமா என்பதை பொது மக்களே உணர வேண்டும். ஸ்ரீமான் வீரய்யன் அவர்களும் எம்.சி.ராஜா அவர்களும் வெள்ளைக்கார அரசாங்கம் இருப்பதின் பலனாகத்தான் சட்டசபைக்குப் போகவும், தங்கள் சகோதரர்களாகிய 7 கோடி பேர்களுக்கு தெருவில் நடக்கும் உரிமையைக் கேட்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்பார்ப்பனர்கள் காங்கிரசும், அது கோரும் சுயராஜ்யமும் ஒரு சமயம் நமக்குக் கிடைத்து விடுவதாயிருந்தால் ஸ்ரீமான்கள் வீரய்யனும், ராஜாவும் கோரும் தெருவில் நடக்கும் பாத்தியம் இவர்களுக்குக் கிடைக்குமாவென்பதை ஒவ்வொருவரும் நிதானமாய் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். “குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் போட்டுப் புதைப்பதற்கு குழி தோண்டிற்று” என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு. அதுபோல் தீண்டாத வகுப்பார் என்று ஒதுக்கி வைத்த ஸ்ரீமான்கள் வீரய்யன், எம்.சி.ராஜா, ஹைக்கோர்ட்டு ஜட்ஜ் கிருஷ்ணன் ஆகியவர்களையும் அவர்கள் சகோதரர்களையும் தாங்களும் அனுமதிக்கக் கூடாது, சர்க்காரும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடாது, அவர்களாகவும் தலையெடுக்கக் கூடாது என்று கொடுமைப்படுத்துவதினால் அம்மக்களுக்கு வேறு கதிதான் என்ன? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதும் வகுப்புப் பிரச்சினைகளைக் கிளப்புவதும் தேசத் துரோகமென்று வெகுசுலபத்தில் நமது பார்ப்பனர்கள் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி விடலாம். ஸ்ரீமான் ஜயவேலு போன்றவர்களைக் கொண்டு ரூ.40, 50 ரூபாய்கள் கொடுத்து ஸ்ரீமான் ராஜாவையும், வீரய்யனையும் மற்றும் இதுகளுக்காக உழைப்பவர்களையும் வையும்படி செய்யலாம். இதுகளுக்குப் பயந்து கொண்டு சிலரை அடங்கி இருக்கும்படியும் செய்து விடலாம். ஆனால் அவர்கள் மனதில் உள்ள வழிநடை சுதந்திர தாகத்தை அடக்கிவிட முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.
சென்ற மாதம் நாம் கும்பகோணம் சென்றிருந்தபோது அந்த டவுனில் 3, 4 வீதிகளில் அதாவது அய்யங்கார் தெருவு, வியாசராயர் அக்கிராரம், பட்டாச்சாரித் தெருவு முதலியதுகளில் இன்னமும் சிலர் நடக்கக் கூடாது என்கிற கொடுமை இருந்துதான் வருகிறது. இதோடு மற்றொரு வேடிக்கை, அதென்னவென்றால் கூரத்தாழ்வார் கோவில் என்று ஒரு கோவில் இருக்கிறது. அதற்குள் பார்ப்பனரின் காப்பிக் கடை இருக்கிறது. அக்காப்பிக் கடைக்காக ஒரு கக்கூசு இருக்கிறது. அக்கக்கூசு எடுக்க தீண்டப்படாதவர் தினமும் இரண்டு தடவை மல பாண்டங்களுடன் போய் வந்து கொண்டிருக்கிறார். கூரத்தாழ்வார் கோவிலை விட இந்த அய்யங்கார் வீதியும், வியாசராயர் வீதியும், பட்டாச்சாரி வீதியும் நமது பார்ப்பனருக்கு உயர்ந்ததாய்ப் போய்விட்டது.
மல பாண்டத்துடன் கோவிலுக்குள் போய் வருவதை விட வெறுங்கையுடன் நடப்பது நமது பார்ப்பனருக்கு அதிக பாவமாய்ப் போய் விட்டது. இவ்வளவு துப்பாக்கியும், பீரங்கியும், ஆகாயக் கப்பலும், பட்டாளமும் இருந்தும் வீதியில் நடக்கவிடாமல் உதைக்கிறார்கள் என்றால் இதுகள் ஒழிந்த பிறகு இவர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள். வெள்ளைக்காரர்கள் வந்து 150 வருஷங்கள்தான் ஆகிறது. இந்தக் கொடுமை ஏற்பட்டு 1000-க்கணக்கான வருஷங்கள் ஆகிறது. ஏறக்குறைய வெள்ளைக்காரர்கள் வந்த பிறகே இக்கொடுமைகள் கொஞ்சமாவது மாறுபாடு அடைந்திருக்கின்றன. ஆதலால் வெள்ளைக்காரரை ஓட்டுவது இம்மக்களுக்கு உரிமைக்கும் சுயமரியாதைக்கும் நன்மை பயக்குமா? இப்பார்ப்பனீயத்தை அழிப்பது நன்மை பயக்குமா? என்பது நாம் சொல்லாமலே விளங்கும். யாரோ இரண்டொரு பார்ப்பனர் நம்ம வீட்டில் சாப்பிடுவதாலும் “தீண்டாதார் தொட்டதை சாப்பிடுவதினாலும் மக்கள் உரிமை பெற்றுவிட முடியுமா? பார்ப்பனரிலும் சில யோக்கியர்கள் இருக்கிறார்கள்” என்று சில ஏமாந்த சோணகிரிகளை ஏய்க்கவே அவர்கள் நம்ம வீட்டில் சாப்பிடுவதே ஒழிய வேறில்லை என்றே உறுதியாய்ச் சொல்லுவோம்.
உதாரணமாக, ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் குடியை ஒழிப்பதற்காக சட்டசபைக்கு ஆட்களை அனுப்புகிறேன் என்று சில பார்ப்பனர்களை அதுவும் கள் உற்பத்தி செய்து, கள்ளினால் பணம் சம்பாதித்து ஏழைகள் வயிற்றில் மண்ணைப் போட்டு, அவர்கள் தொழிலைக் கெடுத்த பார்ப்பனர்கள் பின்னால், அவருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க கிராமம் கிராமமாய்த் திரிந்தாரே; இம்மாதிரி தெருவில் நடக்கும் உரிமையும் கண்ணில் தென்படும் உரிமையும் இல்லாமல் தவித்துக் கொண்டு பூச்சி புழுக்களிலும் கேவலமாய், நாய் பன்றிகளை விட இழிவாய் நடத்தப்பட்டு கொடுமைப்படும் சகோதரர்களுக்காக சட்டசபைக்கு ஏன் ஆட்களை அனுப்பக் கூடாது? மதுவை விலக்கத் தீர்மானம் செய்தால் அது செல்லாது என்பதும், அனுபோகத்தில் நடக்காது என்பதும் நன்றாய்த் தெரிந்திருந்தும், பார்ப்பனரல்லாத மந்திரிக்கும், அவர்கள் கட்சிக்கும் கெட்ட பெயரை உண்டாக்கி, அடுத்த தேர்தலுக்கு அவர்கள் சட்டசபைக்குப் போக முடியாமல் செய்து பார்ப்பனரையும், அவர்கள்தம் அடிமைகளையும் சட்டசபைக்கு அனுப்ப முயற்சித்துப் பார்த்தார். ஆனால் தீண்டாமை விலக்குக்காக ஆள்களை சட்டசபைக்கு அனுப்பினால் அவர்கள் மெஜாரிட்டியாய் இருந்து செய்யும் தீர்மானம் நிறைவேறும். நிறைவேறியபடி நடக்க சவுகரியமுண்டு. சர்க்கார் இதில் பிரவேசிக்க முடியாது. நாம் சட்டம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் அதை நிறைவேற்றியே ஆக வேண்டும். அப்படியானால் அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு இடையூறாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலேயே அதைக் கவனிக்காமல் மூடி வைத்து விட்டார்.
இப்போதும் அதிக காலதாமத மேற்பட்டுவிடவில்லை. தீண்டாமை என்கிற ஒரு விஷயத்திற்கு மாத்திரம் சட்டசபைக்குப் போவதாய் “தீண்டாமையில் அனுதாபமுள்ள ஆச்சாரியார்” வெளிக்கிளம்பினால் அவரை ஆதரிக்க தமிழ் மக்கள் தயாராயிருக்கிறார்கள். அது நிறைவேறுவதாய் இருந்தால் தேவஸ்தான மசோதா கூட அவ்வளவு அவசியமில்லை. யார் வருவதானாலும் ஒத்து வேலை செய்யவும் தயாராயிருக்கிறோம். பார்ப்பனரல்லாதாராகிய ஜஸ்டிஸ் கட்சி யாரும் தயாராகவே இருக்கிறார்கள். ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார், இராமசாமி நாயக்கர், ராமநாதன் முதலியவர்கள் அந்தக் காரியத்திற்காக சட்டசபைக்குப் போகவும்கூட தயாராயிருப்பார்கள். அதை விட்டுவிட்டு ஆகாத காரியத்தைச் சொல்லிக் கொண்டு யோக்கியர்கள் அல்லாதவர்களும் கண்ணியமற்றவர்களும் மாத்திரம் தன்னுடன் வந்து சேரும்படியாகப் பார்த்து, அதற்காக ஒரு கட்சிப் பேரையும் மகாத்மா பேரையும் உபயோகப்படுத்திக் கொண்டு தேச நன்மை, ஏழைகள் நன்மை என்று ஏமாற்றும் காலம் மலையேறி விட்டதென்றும், பொது ஜனங்கள் இத்தந்திரக்காரப் பார்ப்பனரை நன்றாய் அறிந்துகொண்டார்கள் என்றும், வரப்போகும் தேர்தலில் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் போகிறார்கள் என்றும் சொல்லுவதோடு ஸ்ரீமான்களான வீரய்யன் அவர்களுக்கும், எம்.சி.ராஜா அவர்களுக்கும் உங்கள் தீர்மானத்தை சில பார்ப்பனர் சூழ்ச்சியால் இந்த சட்டசபைக் கூட்டத்தில் தள்ளி வைக்க நேர்ந்தாலும், அடுத்த கூட்டங்களில் கண்டிப்பாய் அது நிறைவேறவும் அமுலில் வரவும் கூடிக் காரியங்களைச் செய்ய தயாராயிருக்கிறோம் என்பதாக உறுதி கூறுகிறோம்.
(குடிஅரசு - கட்டுரை - 05.09.1926)