பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (6)

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் குறித்து இங்கே நான் பேசும் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு வரலாறுகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான். பொதுவாக பெரியார் இயக்கத்தினருக்கு இது ஏற்ககனவே தெரிந்த வரலாறுகள்தான் என்றாலும் இளைய தலைமுறைக்கு நாம் அதைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போது வைக்கம் போராட்டம் வரலாறு குறித்து பெரியார் ஆற்றிய உரையை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இது பெரியார் சந்தித்த அடக்குமுறைகளில் ஒன்றாகக் குறிப்பிடலாமே தவிர, பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறையாகக் குறிப்பிட முடியாது. காரணம் இந்தப் போராட்டம் நடந்தபோது பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர். போராட்ட வரலாறு குறித்து 1959ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பெரியார் நிகழ்த்திய இந்த உரை முக்கியத்துவம் நிறைந்தது.

 மார்த்தாண்டத்தில் பெரியார் நிகழ்த்திய உரை:

வைக்கத்திலே போராட்டம் ஆரம்பமானதே ஒரு சிறு நிகழ்ச்சியிலிருந்துதான்.

தோழர் மாதவன் என்ற பி.ஏ.பி.எல். படித்த வக்கீல் ஒரு வழக்குக்காக (நீதிமன்றத்திற்கு) ஆஜராகப் போனார் வழக்கு விசாரணைக்காக. கோர்ட் இடம் இராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையில்) ஓர் இடம். இராஜாவின் பிறந்த நாள் விழாவிற்கு அந்த இராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையில்) எல்லாப் பக்கங்களிலும் பந்தல் போட்டதில் கோர்ட் நடக்கும் இடமும் பந்தலுக்குள் ஆகி ஒரு கேசில் (வழக்கில்) ஆஜராக அங்கே போக வேண்டிய அவசியம் வந்தது. இராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக முறை ஜெபம் ஆரம்பமாயிற்று. அங்கே இந்த வக்கீல் ஈழவ (நாடார்) சமுதாயத்தைச் சேர்ந்தவராதலால் அங்கே போகக் கூடாது என்று தடுத்தார்கள்.

அந்த நேரம் நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்! கலப்பு மணம், சமபந்தி போஜனம், எல்லோரும் பள்ளிக் கூடத்தில் படிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துகளில் தீவிர நம்பிக்கைக்கொண்டு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும், பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துத் தான் காந்தியும் அவற்றை நிருமாணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். அந்தக் காலத்தில் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சிக்காரர் நல்லபடி வெளியாக்கி வெளுத்து வாங்குவார்கள். ரோட்டிலே (சாலையிலே) பார்ப்பனர்கள் அப்போது தைரியமாகத் தனியே நடக்கக்கூட முடியாது. டி.எம்.நாயரும், தியாகராயரும், ஜஸ்டிஸ் இயக்கமும் ஜனங்களிடத்தில் (மக்கள்) தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, பார்ப்பனரல்லாதாரின் ஆதரவைத் திரட்டி, ஆட்சியைப் பெற்று ஆண்டு கொண்டிருந்தது. பார்ப்பனர்கள் அவர்களைக் கண்டு நடுங்குவார்களே! பார்ப்பனர்களுக்கு மேடையே இல்லாமல் போன காலம் அது!

அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் எங்களுக்கு ஆட்சி வேண்டாம்; அதிகாரம் வேண்டாம்; சட்டசபை வேண்டாம்; என்று குள்ளநரித் தந்திரம் செய்து மக்களை வசப்படுத்தச் சதி செய்து கொண்டு இருந்த காலம். அந்தக் காலத்தில்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு (நீதிக் கட்சிக்கு) இருந்த செல்வாக்கைக் கண்டு வஞ்சக மனத்தோடு பித்தலாட்டக் கருத்துக் கொண்ட தீண்டாமை விலக்கு என்பதைத் தங்கள் திட்டத்தில் காந்தி சேர்த்தார்.

அந்தக் காலத்தில் நான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு மிகவும் வேண்டியவனாகத்தான் இருந்தேன். என்னை நிரம்பவும் மதிப்பார்கள். காரணம், நான் எல்லாப் பதவிகளிலும் இருந்து வந்தவன். திரு. இராஜகோபாலாச்சாரியாரே வந்து சமுதாயச் சீர்திருத்தம் தானே நமக்கு வேண்டும். அது காந்தியால்தான் முடியும் என்று சொல்லி என்னைக் காந்திக்கு சிஷ்யன் ஆக்கினார். நானும் சேர்மன் (ஈரோடு நகர் மன்றத் தலைவர்) பதவியை இராஜிநாமா கொடுத்து வெளியேறி, காங்கிரசில் சேர்க்கப்பட்டு விட்டேன். சென்ற பிறகு தமிழன் ஒருவனுக்காவது அதுவரை கிடைத்திருக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர், தலைவர் இடத்தில் உட்கார வைத்தார்கள்.

ஏனென்றால், திரு.வி.க. சாதாரணமாக ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தவர். டாக்டர் வரதராஜலு அவர்கள் வாரப் பத்திரிகை நடத்தி வந்தார் என்றாலும் பார்ப்பனர்கள் அவரை அவ்வளவு நம்ப மாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றி விடலாம் என்று அவர்களுக்குத் தெரியும். வ.உ.சிதம்பரனார் ஒருவர். அவர் பாவம்! எல்லாவற்றையும் விட்டு நொடித்துப் போய் கஸ்தூரிரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். அதனால் சிறிது வசதி உள்ளவன்; பெரிய வியாபாரி; பதவிகளை விட்டு வந்தவன் என்கிற முறையில் இராஜகோபாலாச்சாரியார் என்னைத்தான் நம்பி எதற்கும் எனக்கு மதிப்புக் கொடுத்து முன்னே வைப்பார்.

உண்மையாகவே நானும் அதை நம்பி அவரிடம்மிக்க விசுவாசமாக இருந்து பெரிய பிரச்சாரம் செய்து பார்ப்பனருக்கு நாங்கள் மேடை தேடிக் கொடுத்து விட்டோம்! அப்போதே நான் நாம் தொட்டால் தீட்டுப் பட்டுவிடும் என்கிற சாமி நமக்கு எதற்கு? அதை எடுத்து ரோட்டுக்கு ஜல்லி போடணும்; அல்லது ஆற்றிலே தூக்கிப் போட்டு வேட்டி துவைக்கப் போடணும், இப்படித்தான் பேசுவேன். டாக்டர் வரதராஜலு, கல்யாண சுந்தரனார், சிதம்பரனார், நான் ஆகிய நால்வரில் பார்ப்பனர்கள் என்னைத்தான் முன்னே தள்ளு வார்கள்! என்னைப் பார்த்து பதவி வேட்டைக்காரன் என்று எவரும் சொல்ல முடியாது என்பதால் பார்ப்பனர்களும் நான் என்ன சொன்னாலும் வாயை மூடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

சாதி, மதம், கடவுள் துறையில் இப்பொழுது சொல்லுவதெல்லாம் நான் அப்போதே சொல்லுவேன். நான் பேசி முடித்து வந்ததும் ஆச்சாரியார் சொல்லுவார். நாயக்கர் உங்களுடையது ரொம்ப (நிறைய) ஸ்ட்ராங் டோஸ் என்று சொல்லுவார். நான் சொல்லுவேன் நீங்க என்னங்க, இந்த மடப் பசங்களுக்கு ஸ்ட்ராங் என்ன, லேசு என்னங்க, என்று சொல்லித் தப்பித்துக் கொள்வேன். அவரும் வேறு வழி இல்லாததால் சிரித்துக் கொள்ளுவார். அந்த மாதிரி முறையில் நாட்டைப் பார்ப்பனர் கைக்குப் போகும்படியான அளவுக்குப் பக்குவப்படுத்தி விட்டோம்.

இந்த மாதவன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன் (கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர்), கே.பி. கேசவமேனன் இவர்களெல்லாரும் இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். முறை ஜெபத்தன்று சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பது என்று முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாக் கிரகம் ஆரம்பிக்கலாமென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால், அந்த ஊரில்தான் ஊர் நடுவில் கோயிலும், அதன் 4 வாயிலுக்கு எதிரிலும் 4 நேர்வீதிகளும், கோயில் மதில்கள், சுற்றியும் தெருக்கள், பிரகாரம் எல்லாமும் இருக்கும்.

அந்த வீதிகளில் கீழ்ச்சாதிக்காரர்களான அவர்ணஸ்தர்கள் எல்லோரும், ஆயித்தார்கலி எனப்படும் தீண்டாதாரும் நான்கு புறத்திலும் கோயில் வாசல்களுக்கு முன்னாலும் நடக்கக் கூடாது! மூன்று ஃபர்லாங் தூரத்திலேயும், 4 ஃபர்லாங்கு தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில் (சாலையில்) கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக் கொண்டுதான் எதிர் ரோட்டுக்குப் போக வேண்டும். தீண்டப்படாதவர்களைப் போலவேதான், ஈழவர்கள், ஆசாரிகள், வணிகர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக் கூடாது.

இதே மாதிரிதான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த இராஜ்ஜியத்தில் உள்ள மற்றக் கோயில்கள் பக்கமும் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

வைக்கத்தில் கோயிலுக்குப் பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில்தான் எல்லா முக்கிய ஆபீசுகளும் (அலுவலகங்களும்), கோர்ட் (நீதி மன்றம்), போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டர்களையோ, குமாஸ்தாக்களையோ மாற்றுவதனாலுங்கூட கீழ்ச்சாதியார்களை அங்கு மாற்ற மாட்டார்கள். ஏனென்றால், அந்த போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்கள் இருக்கும் இடத்திற்குப் போக கீழ்ச்சாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், முக்கியமான கடைகளும் இந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ச்சாதிக் கூலிகள் அங்குச் செல்ல முடியாது.

சத்தியாக்கிரகம் ஆரம்பமானவுடன் வக்கீல் மாதவன், பாரிஸ்டர் கேசவமேனன், டி.கே. மாதவன், ஜார்ஜ் ஜோசப் முதலியவர்களைப் போல் சுமார் 19 பேரை இராஜா அரஸ்ட் (கைது) செய்யும்படி உத்தர விட்டு, அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தினசரி ஒருவர் வீதம் கைது செய்து, அவர்களை மாத்திரம் தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் (தனிப்பட்ட) கைதிகளாக நடத்த உத்தரவிட்டார்கள். அப்போது இராஜாவிடம் மிஸ்டர் பிட் என்ற ஒரு வெள்ளைக்காரர் போலீஸ் அய்.ஜி.யாக இருந்தார். அவர் இந்தப் பத்தொன்பது பேரைப் பிடித்து உள்ளே போட்டு விட்டவுடன், அடுத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட யாரும் முன் வர ஆள் கிடைக்கவில்லை. அதோடு அதுவும் நின்று விடும் போலத் தோன்றியது. உடனே எனக்கு ஜார்ஜ் ஜோசஃபும், பாரிஸ்டர் கேசவமேனனும் சேர்ந்து கையொப்பம் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்.

நீங்கள் வந்துதான் இதற்கு உயிர் கொடுக்கணும்; இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வiத் தவிர வேறு வழியில்லை. அப்படி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதானால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்றாலும், பெரிய காரியம் கெட்டுப் போகுமே என்று கவலைப்படுகிறோம். உடனே நீங்கள் வந்து பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எழுதி அனுப்பினார்கள்.

எனக்கு ஏன் எழுதினார்கள் என்றால் தீண்டாமைப் பற்றி பேசுவதில் நான் கெட்டிக்காரன்; கிளர்ச்சியிலும் நான் கெட்டிக்காரன் என்று எனக்குப் பேர்; நான் அப்போது சுற்றுப் பிரயாணத்தில் இருந்தேன்.

ஈரோட்டிற்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் ரீ டைரக்ட் செய்யப்பட்டு மதுரை ஜில்லாவில் உள்ள பண்ணப்புரம் என்ற ஒரு மலைப்பக்க கிராமத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவன் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்தபோது எனக்குக் கிடைத்தது.

உடனே, மீதி சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை எல்லாம் ஒத்திப் போட்டுவிட்டு நேரே ஈரோட்டுக்குப் போனேன்; வீட்டுக்கு வந்தவுடன் வைக்கத்திற்குப் போய்ச் சத்தியாகிரகத்தை நடத்துவதென்று மிக்க மகிழ்ச்சியோடு மூட்டைக் கட்டிவிட்டேன்; திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கும் நான் வரும் வரை தலைமைப் பதவி ஏற்றுக் கொள்ளும்படி ஒரு கடிதம் எழுதிவிட்டு, இந்தச் சந்தர்ப்பம் ஒரு நல்ல வாய்ப்பு; இதை விட்டால் இந்த மாதிரி அருமையான வேலை செய்ய வேறு கிடைக்காது என்ற எழுதி விட்டு 2 பேரை கூட்டிக் கொண்டு வைக்கத்திற்கு வந்தேன்.

(பெரியார் வரலாற்று உரையின் தொடர்ச்சி அடுத்த இதழில்)

Pin It