கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்து

இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேசப்பக்திக் கிளர்ச்சிக்கும் ஜாதியக் கிளர்ச்சிக்கும் அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறுபட்டிருப்பதாகவும் இவ்வித கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டு அதின் பேரால் சோம்பேரி வாழ்க்கைப் பிரியர்களாலும், பேராசைக்காரர்களாலும் நடத்தப்படும் போட்டி “வியாபாரங்களே” இன்று தேசீயமாயும், ஜாதீயமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர அவற்றுள் நாணயமோ உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை யென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப் பிடித்து வெடிக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகின்றதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், இப்போதையப் பெரும்பாக கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்ப தற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார்.

(குறிப்பு : 20-10-1932 இரவு கொழும்பு பர்ஷியன் விடுதியில் தோழர் டி.சாரனாதன் மற்றும் சில செட்டித் தெரு தோழர்கள் ஆகியோர் அளித்த விருந்தில் கலந்து கொண்டு பேசியது.

குடி அரசு - சொற்பொழிவு - 13.11.1932)

***periyar and veeramani 644கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பு

இந்த சினிமாக் காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும் ரம்மியமாயும் காணப்பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூட நம்பிக்கையும், அடிமைத் தன்மையையும் சோம்பேரிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ, படக் காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்ற தென்றும் சொன்னார்.

(குறிப்பு : 21-10-1932 மாலை கொழும்பு கெயிட்டி திரையரங்கில் சில சிங்கள வாலிபர் களால் நடத்தப்பட்ட திரைப்படக் காட்சியைப் பார்த்தும் வரவேற்புப் பத்திரத்திற்கு பதில் அளித்தும் பேசியது.

குடி அரசு - சொற்பொழிவு - 13.11.1932)

***

ஆதி திராவிடர் சங்க வரவேற்பு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் - உலக தாழ்த்தப்பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமூகத்தை 2 வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டுமென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேரி செல்வ வான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடையத் தயாராயிருக்க வேண்டுமென்றும் பேசினார்.

(கடைசியாக ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தையும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறதென்றும் சொன்னார்.) அதற்கு ராமசாமி பதிலளிக்கையில், கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷயமாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்பவர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம்பேரியாய் வாழும் அயோக்கியத்தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் தான் காரணஸ்தர்களாகவும் பொருப்பாளிகளாகவும் இருக்கின்றார்களே ஒழிய வேறில்லை என்றும், ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

(குறிப்பு : 22-10-1932 இரவு கொழும்பு ராதாபுரம் டிவிஷன் திருநெல்வேலி ஜில்லா ஆதிதிராவிடர் சங்கத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசியது.

குடி அரசு - சொற்பொழிவு - 13.11.1932)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.