சென்ற 5-9-32 ந்தேதி இந்தியா சட்டசபையில் மேன்மைதங்கிய வைசிராய் அவர்கள் செய்த பிரசங்கம் தற்கால நிலைமையில் மிகவும் கவனிக் கத் தக்க தொன்றாகும். ‘காங்கிரசானது பயமுறுத்தலினால் சுயராஜ்யம் வாங்கி விடலாம் என்னும் நோக்கத்துடன் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் செய்யும் போராட்டமானது பலாத்காரமில்லாதது, சாத்வீகமானது என்ற பெயருள்ளதாயிருப்பினும், உண்மையில் தேசத்தில், கலகத்தையும், அமைதியின்மையையும், பலாத்கார உணர்ச்சியையும் உண்டாக்குவதற்கு காங்கிரசின் கிளர்ச்சியே காரணமாக இருக்கின்றது. ஆகையால், எந்த வகை யிலும், காங்கிரசின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு வேண்டிய முயற்சியை அரசாங்கம் செய்யாமலிருக்க முடியாது’ என்னும் அபிப்பிராயம் வைசி ராயின் பிரசங்கத்தில் காணக்கிடக்கின்றது. இந்த அபிப்பிராயம் தவறான தென்று நடுநிலையும், உண்மையும், பகுத்தறிவும் உள்ள எவரும் கூறமுடியாது என்றே நாம் கூறுவோம். இதற்கு உதாரணமாகச் சென்ற பம்பாய் கலகத் தையும், வங்காளத்தில் நடைபெற்று வரும் புரட்சி இயக்கத்தையும் கூறலாம். இதையும் வைசிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பொதுவாகவே, காங்கிரசின் மூலம் சத்தியாக்கிரகம் ‘சட்ட மறுப்பு’, ‘சாத்வீகப் போராட்டம்’ என்னும் பெயர்களால் சட்டத்தையும், ஒழுங்கையும் மீறி நடக்கும் விதத்தை மக்களுக்கு கற்பிக்கப்பட்ட பிறகே தேசத்தில், கலகமும், புரட்சியும், சண்டை சச்சரவுகளும் பெருகலாயின என்னும் உண்மையை யாரும் மறுக்கமுடியாது.

அன்றியும், காங்கிரஸ் இந்த மாதிரியான போராட்டத்தை ஆரம்பித்த தனால் தேசம் அடைந்த லாபந்தான் என்ன என்பதையும் சிறிது ஆலோ சித்துப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளுகின்றவர்கள், நாம் கூறு வதைப் பற்றிச் சிறிதும் குறைகூற மாட்டார்கள் என்பது திண்ணம்.periyar and maniammaiஅதாவது காங்கிரஸ் “சுயராஜ்யம்” என்னும் பெயரால் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்தவுடன், உண்மையிலே தேசீய வெறி கொண்ட சில இளைஞர்களும் வேறு வேலை செய்து பிழைக்க வழி தெரியாத மற்றும் பல வாலிபர்களும் அதில் சேர்ந்தார்கள்; தலைவர்கள் என்பவர்கள் இடுகின்ற கட்டளைகளைச் செய்து, தடியடியும், பிரம்படியும் பட்டுச் சிறைசென்று கஷ்டப்படுகிறார்கள். தலைவர்கள் என்பவர்களில் சிலர் சிறை சென்றாலும் அவர்கள் ‘ஏ’ வகுப்பில் சௌக்கியமாக உட்கார்ந்திருந்து விட்டு வீடு வந்து சேர்கிறார்கள். கடைசியாக, சட்டசபை தேர்தலோ, ஸ்தல ஸ்தாபனத் தேர்தலோ வருகின்ற காலங்களில், காங்கிரசின் பேரால் தலைவர்களாக விளங்கியவர் களும், காங்கிரஸ் அனுதாபிகளாக விளங்கியவர்களும், ஒன்றும் தெரியாத ஏழை இளைஞர்களைச் சிறைக்கனுப்பக் காரணமாய் இருந்தவர்களும், ‘தேசாபிமானி’ என்னும் பட்டத்துடன் தேர்தலில் அபேட்சகர்களாக நின்று பதவி பெறுகிறார்கள். இதுதான் சட்ட மறுப்பில் நாம் அடையும் பலன். எந்த வகையில் பார்த்தாலும், ஏழைகளின் உழைப்பும், கஷ்டமும், தியாகமும், பணக்காரர்கள் பட்டம் பதவி பெறுவதற்கே உபயோகப்படுகிறதேயொழிய வேறு கடுகளவாவது ஏழை மக்களின் நன்மைக்கு உபயோகப்படுவதில்லை யென்பதை நாம் அறிந்துதானிருக்கிறோம்.

அன்றியும், நீண்ட நாளாகச் சட்டமறுப்புப் போராட்டம் நடந்து கொண்டிருப்பதனால், நாட்டின் வியாபாரமும், கைத்தொழிலும் பாதிக்கப் படுகிறதே தவிர அவைகளிலும் ஒருவித முன்னேற்றத்தையும் காண வழியில்லாமலிருக்கிறது.

எந்த வகையிலும். சட்ட மறுப்பு இயக்கம் ஒழிய வேண்டுவது அவசியமாகும். ஆகையினால், காங்கிரஸ் தலைவர்கள், புத்திசாலித்தன மாகச் சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு, உண்மையில் நாட்டு மக்கள் முன்னேற்றமடையத் தக்க வழியில் உழைப்பார்களானால் அவர்கள் உழைப்பு பலனளிக்கக் கூடியதாகும். இன்றேல் அவர்கள் உழைப்பு வீண் என்பது நமது அபிப்பிராயமாகும். சேனைகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உள்ள ஒரு அரசாங்கத்துடன், ஒன்றுமில்லாத பேர்வழிகளாகிய நெல்லிக்காய் மூட்டை கள், “கை ராட்டினத்தாலும்” “ஆத்ம சக்தி” யாலும் எதிர்த்து போர் செய்து வெற்றிபெற முயற்சிப்பது, நமது நாட்டிலுள்ள மதப்பித்து கொண்டவர்களுக்கு “சாத்தியமானது” என்று தோன்றினாலும், உண்மை அறிவுடையவர்களுக்கும் அயல்நாட்டு மக்களுக்கும் சிரிப்பை உண்டாக்காமல் போகாது. ஆகையால் “சத்தியாக்கிரகம்” “ஆத்ம சக்தி” என்று பைத்தியக்காரக் கொள்கைகளையும், அவைகளின் மூலம் உண்டான “சாத்வீகச் சட்ட மறுப்பு” போராட்டம் என்பதையும் அடியோடு நிறுத்திவிடுவது தான் புத்திசாலித்தனமாகும் என்பதை பகுத்தறிவுடையோர் எவரும் மறுக்க முடியாது.

இப்படி இல்லாமல், இன்னும் காங்கிரஸ்காரர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டே போவார்களாயின், வைஸ்ராய் அவர்கள் கூறியிருப்பது போல தேசத்தின் அமைதியை உத்தேசித்து, அவ்வியக்கத்தை அடக்க, அரசாங்கத்தாரும் பொது ஜனங்களும் தங்களால் ஆன முயற்சியை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அறிவுடைய எவரும் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்.

அடுத்தபடியாக வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பைப் பற்றி வைஸ்ராய் அவர்கள் கூறியிருக்கும் அபிப்பிராயமும் குறிப்பிடத் தக்கதாகும். அவர், இந்தியப் பிரதிநிதிகள் வகுப்புப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியாத காரணத்தாலேயே பிரிட்டிஷ் பிரதம மந்திரியால் வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்ய நேர்ந்தது. ஆகவே “அம்முடிவை இந்தியர் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது தங்களுக்குள் வேறு சமரசமான முடிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு முயற்சிக்காமல் சும்மா இருந்துவிட வேண்டியது. இம்மூன்றைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.

மூன்றாவது கூறிய அரசியல் சுதந்திரம் வேண்டாம் என்ற விஷயத்தைப் பற்றிப் பேசுவது இதுவரையிலும் இந்தியா அடைந்து வந்திருக் கும் அரசியல் அபிவிருத்திக்கும் நோக்கத்திற்கும். முரண்பாடானதாகும் என்பதை வைசிராயே குறிப்பிட்டு விட்டார். ஆகவே மற்ற இரண்டு விஷயங் களை அதாவது வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பை ஒப்புக் கொள்ளுவது அல்லது வேறு முடிவு செய்து கொள்ளுவது என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டால் வேறு சமரசமான முடிவு செய்து கொள்ளுவது என்பது நமது நாட்டு அரசியல்வாதிகளால் முடியாத காரியம் என்பதை நாம் கோபுரத்தின் மேல் நின்று கொண்டும் கூறத் தயாராயிருக்கிறோம். ஆகவே இம்முடிவை ஒப்புக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நாம் முன்னமே எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

ஆகையால் இனியேனும் நமது நாட்டு அரசியல் வாதிகள் நாட்டின் உண்மை நிலையையும் அரசாங்கத்தின் பிடிவாதத் தன்மையையும், அதனோடு எதிர்த்து போராட முடியாத நமது சக்தியற்ற தன்மையையும் உணர்ந்து சட்ட மறுப்புப் போராட்டத்தை நிறுத்திவிட்டு வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பையும் ஒப்புக் கொண்டு மேலே ஆக வேண்டிய காரியங்களை செய்ய முன் வருவார்களா என்று கேட்கிறோம்.

உண்மையில் நமது நாடு சுதந்தரமடைய வேண்டுமானால் நமது மக்கள் அனைவரும் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் கிடைக்கப் போகும் மாகாண சுயாட்சியின் அதிகாரத்தைக் கொண்டு சாதி மத வித்தியாசங்களை ஒழித்துச் சமத்துவத்தை உண்டாக்கித் தேசத்தை முன்னுக்குக் கொண்டுவர முயலுவதே அறிவுடைமையாகும். இதை விட்டு வீண் கூச்சல் போட்டுக் கொண்டு இன்னும் காந்தி விழாவும், நேரு விழாவும், பாரத மாதா விழாவும், தீபாவளிப் பிரசாரமும், நடத்திக் கொண்டு மக்களை மூடர்களாகவும், குருட்டு பக்தியுடையவர்களாகவும், பகுத்தறிவு இல்லாதவர்களாகவும் ஆக்க முயல்வது பிராமணீயப் பிரசாரத்திற்கும், வருணாச்சிரம தருமப் பிரச்சாரத் திற்கு அடிகோலுவதாகுமென்றுதான் நாம் கூறுவோம்.

வைசிராய் அவர்களின் பிரசங்கத்தையும், இதுவரையிலும் செய்த அரசியல் ஆர்ப்பாட்டத்தால், நாம் அடைந்த பலனையும் கவனிப்பவர்கள் இந்த முடிவுக்குத்தான் வரக்கூடும் என்று நாம் உறுதியாகக் கூறுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.09.1932)

Pin It