இலங்கைத் தீவில் இப்போது தெற்கு பற்றி எரிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு (2009) வரை தெற்கிலிருந்து வடக்கைப் பற்ற வைத்து எரித்து மகிழ்ந்தார்கள். வடக்கு எரிக்கப்பட்டபோது கொண்டாடியவர்கள்தான், இப்போது எரித்தவனை எரிப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள்.
காலம் கொடுத்த தண்டனை கடவுள் வழங்கிய தண்டனை என்று பலரும் அதைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார்கள். ராஜபக்சேவின் குடும்ப அரசியல் முடிவுக்கு வருவதாக வரிக்கு வரி சுட்டிக்காட்டி மகிழ்கின்றன பார்ப்பன ஏடுகள். உண்மையில் ராஜபக்சே வீழ்ந்ததில் இந்தியப் பார்ப்பனர்களுக்குத்தான் அச்சமும், கவலையும் மிகுந்துள்ளது. தங்கள் அச்சத்தை மறைக்கவும் கவலையை மடைமாற்றவுமே ‘ராஜபக்சே குடும்பம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ராஜபக்சேக்களின் வரிசைக்குத் தகுதியானவர் யார் என்பதை இந்திய இளைஞர்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர்.
1956 இல் தொடங்கிய ‘ஒன்லி சிங்களா’ சட்டத்தைத் தமிழர்கள் எதிர்க்கத் தொடங்கியது முதல் 2009 இல் இதே மே மாதத்தில் சர்வதேச சட்ட விதிகள், போர் நெறிமுறைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்தபடி இதே ராஜபக்சே முள்ளிவாய்க்காலை மொத்தமாய் எரித்து எக்காளமிட்டுச் சிரித்தது வரை அரைநூற்றாண்டு காலம் இனவெறியை மட்டுமே முழு முதல் முதலீடாகக் கருதி செயல்பட்டன சிங்கள அரசும், சிங்கள ஆட்சியாளர்களும்!
மக்களின் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம், போக்குவரத்து போன்ற எந்தவொரு வளர்ச்சித் திட்டம் குறித்து திட்டமிடலோ தொலைநோக்குப் பார்வையோ ஏதுமின்றி, தேசபக்தி, மதவெறி, இனப்பகை, போர் என்கிற போலியான வெற்றிகளைக் காட்டித் தங்களைச் சவ்கிதார்களாகக் காட்டி மக்களை ஏமாற்றி, சுகபோக வாழ்வில் திளைப்பதே சிங்கள ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருந்து வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகளாவிய பொது முடக்கம் ஆகப் பெரிய நாடுகளின் பொருளாதார சூழ்நிலைகளையே ஆட்டங்காணச் செய்துவிட்ட நிலையில் முழுக்க முழுக்க சுற்றுலா, மீன்பிடித் தொழில், அந்நிய முதலீடுகள் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருந்த இலங்கை போன்ற நாடுகள் தப்பிவிடுமா என்ன?
ஏற்கனவே முடமாகிக் கிடப்பவனைப் படுக்கைப்புண் பற்றிக் கொண்ட கதையாக இலங்கை கடும் பொருளாதாரப் பின்னடைவையும், வேலையின்மையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானது.
பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலைகள் விண்ணை முட்ட உயர்ந்தன. இது விலைவாசியை உயர்த்தியது. பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் இல்லாத நிலையில் மின்சாரத் தடையும் கைகோர்க்க தொழில்கள் முடங்கின. வேலையின்மை காரணமாக வறுமையில் தள்ளப்பட்ட மக்கள் ஒரு ரொட்டித் துண்டுக்காகச் சக மனிதனோடு போட்டி போடுகிற அளவிற்கு இயல்பு வாழ்க்கை சீரழிவடைந்தது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறை, பணமதிப்புக் குறைவு, கடன் சுமை, மக்களின் போராட்டம் என அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைந்தது. கட்டுப்பாடற்ற நிலைமையில் நாட்டின் சட்டம் ஒழுங்கும் கைமீறியது. தலைக்குமேல் போனபின் சான் என்ன? முழம் என்ன? என்கிற நிலையில் மக்கள் தெருவிலே இறங்கி வன்முறையைக் கையிலெடுத்துக் கொண்டனர்.
விளைவு, பிரதமர் ராஜபக்சே உயிர்ப்பிச்சை கேட்டு தமிழீழ மண்ணில் (திரிகோணமலை) தஞ்சம் புகுந்துள்ளார். அதேநேரம் அதிபராக இருக்கிற கோத்தபய ராஜபக்சேவையும் பதவி விலகக் கோரி மக்கள் தொடர்ந்து தெருவிலே நிற்கிறார்கள்.
சாதி, இன, மதவெறிச் சர்வாதிகாரம் ஒரு நாட்டை வறுமையின் பிடியிலும் வன்முறையின் மடியிலும் கிடத்தியிருக்கிறது என்கிற உண்மையைப் பேசுவது இந்தியாவில் சிலருக்குக் கிலியை உண்டாக்குகிறது. யார் மறுத்தாலும் யார் மறைத்தாலும் மக்கள் கிளர்ந்தெழுகிறத் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு முன்பு ஹிட்லர்களும், இடிஅமீன்களும், ராஜபக்சேக்களும் மட்டுமல்ல போலிச் சவ்கிதார்கள் யாருமே தப்ப முடியாது என்பதுதான் எரியும் இலங்கை உணர்த்தும் பாடம்!
- காசு. நாகராசன்