periyar ambedkhar 350இப்போது கோர்ட்டும் பள்ளிக்கூடமும் மூடப்பட்டு லீவு நாளாய் இருப்பதால் அந்த நாளைக் காங்கிரஸ் பிரசாரம் மென்னும் பார்ப்பன பிரசாரத்திற்காக ஊர் ஊராய் சென்று வெகு கவலையாய்ப் பிரசாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும், மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள்.

இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குள்ளும், மாணவர்களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது. பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர்களையும் காங்கிரஸ் பிரசாரம் செய்யும்படி நாம் விரும்பவிலை. ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரசாரம் ஏன் செய்யக்கூடாது என்றுதான் கேட்கின்றோம். பார்ப்பனரல்லாத சமூகம் ஒரு மனிதன் தன்னை தூக்கி ஏதோ விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவுதான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவுக்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்? நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள் தனது தனது சொந்த உத்தியோக நலத்திற்கு ஆத்திரப் படுவதல்லாமல் அந்த சமூக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்திலுமே அரிதாயிருக்கின்றது.

படித்த மகமதிய சகோதரர்களிடமும் அதுபோலவேதான் சமூக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. இந்த சமயத்தில் ஒரு மகமதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரசாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்படவில்லை. யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாக ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் அவ்வுத்தியோகங்களில் “எனக்கு பங்கு கொடு” என்று கேட்க மாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின்றார்களே யொழிய பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி, அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவித்து, சமத்துவத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய்வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடையாது.

ஆகையால் பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச் சென்று பார்ப்பனப் புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 24.05.1931)

Pin It