periyar with kidsபார்ப்பன சுயராஜ்யக் கட்சியின் மோசத்தை வெளியிட உடனே சம்பள பிரேரணையை எதிர்க்க வேண்டும் என்று நமது “ குடி அரசு” கூறிற்று, சட்டசபையில் மைனாரடி கட்சியார் எதிர்க்கக் கூடாதென்கிறார்கள். மந்திரி சம்பள விஷயத்தைப் பற்றி ஆலோசித்த அநேக கூட்டங்கள் சீனிவாசய்யங்கார் பங்களாவில் கூடியது யாவும் அந்தரங்கம் வெளியிட முடியாது என்றார்கள். முடிவில் சம்பளப் பிரேரபணையின் பொழுது வெளியே போய் விட்டார்கள். இவையாவும் சுத்த புரட்டென்றும் மந்திரி கட்சியை கைவிட்டு விடாதீர்கள் என்று நேருவும், சீனிவாசய்யங்காரும் தந்தி கொடுத்தார்களென்பதையும், அண்டப்புளுகர் திரு. சத்தியமூர்த்திக்கு மாதா மாதம் சம்பளம் மந்திரிகளால் கொடுக்கபடுகிறதென்றும் “குடி அரசு” அக்காலத்திலேயே கூறியிருக்கிறது. இவைகளை யாரும் மறுக்கவில்லை. இச்சம்பவத்தையொட்டி எண்ணற்ற, அர்த்தமற்ற அறிக்கைகள் வெளிவந்தது. நேற்றைய ஐயங்கார், ஐயர் சண்டையில் குட்டு வெளியாயின.

சத்தியமூர்த்தியிடமிருந்து டெல்லியில் கிடைத்த தந்தியை சினிவாசய்யங்கார் எனக்கு காட்டி அதன்படி நடக்கவேண்டுமென்றும் கூறினார். எங்கள் மாகாணக் கமிட்டி தடுத்திருப்பதால் சம்பள பிரேரபணையை ஆதரிக்குமாறு ஆந்திர அங்கத்தினர்களுக்கு தந்தி கொடுக்க நான் மறுத்துவிட்டேன். பின், நேருவும் சீனிவாசய்யங்காரும் சென்னை சட்டசபை சுயராஜ்யக்கட்சி அங்கத்தினர்களுக்குத் தந்தி கொடுத்தார்களென்று திரு பிரகாசம் நேற்று ஒப்புக் கொண்டுவிட்டார். அடுத்தார்ப்போல் சத்தியமூர்த்தி, சீனிவாசய்யங்காரிடம் சம்பளம் பெற்று வருவதை ஐயங்காரே சொல்லிவிட்டார். இனி மந்திரிகளிடம் சத்தியமூர்த்தி பெறும் சம்பளவிகிதம் வெளியாக வேண்டியது. பாக்கி அதுவும் வெகு சீக்கிரத்தில் வெளியாகிவிடும் என்றே எதிர்பார்க்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 05.06.1927)

***

ஐயங்காருக்கு அமெரிக்கா மாதின்   நற்சாக்ஷி பத்திரம்

ஸ்ரீ.ளு.சீனிவாசஐயங்காருடையவும் அவர்தம் சிஷ்ய கோஷ்டிகளுடையவும், மோசத்தைப் பற்றியும் அவர்களது தேசத்துரோகம் நாணயமற்றதனம் பார்ப்பனரல்லாதாரிடம் துவேஷம் திறமையின்மை ஆகியதுகளைப் பற்றியும் நாம் பன்முறை எடுத்துக் காட்டி இருக்கிறோம். அதற்கு அனுசரனையாக அநேக சாக்ஷிகளும் குவிய ஆரம்பித்த இக்காலத்தில் ஐயங்கார் கூறும் ஒரே பதில் யாதெனில் “நான் பலர்களுக்கு கொடுத்து வந்த பணத்தை நிறுத்தி விட்டேன் அதற்குத்தான் இவ்விதம் கூறுகிறார்கள். அதை நம்பாதீர்கள்” என்கிறார். ஆனால் இன்று ஐயங்கார் யோக்கியதையைப் பற்றி, ஓர் அமெரிக்கா மாது சொல்வதற்கென்ன சொல்கிறார். மிஸ். கிரேஸ் ஹட்சின்ஸ் என்ற அமெரிக்கா மாது எழுதுவதாவது,   “மகாத்மா காந்தி அரசியல் விஷயங்களிலே தலையிடுவதில்லை. அவர் சமய இயக்கத்தையே நடத்திவருகிறார். இந்தியா உயர்ந்த வாழ்வை பெறவேண்டுமானால் அது அங்குள்ள 7000 கிராமங்களின் வாயிலாகவே முடியும்” .................................................. “இந்தியன் நேஷனல் காங்கிரஸுக்குத் தலைமை வகித்தவர் ளு. சீனிவாச ஐயங்கார் என்பவர், நடுத்தரமான யோக்கியதை உடையவர். அரசியல் கக்ஷிகளை ஒழித்து ஒற்றுமைபடுத்த போதுமான ஆற்றல் இல்லாதவர்”

ஒரு சமயம் இந்த அம்மையாரும் பணம் கேட்டு ஐயங்கார் கொடுக்க வில்லையோ?                                     

(குடி அரசு - செய்தி விமர்சனம் - 05.06.1927)

Pin It