periyar mahalingam 640ஊத்துக்குளி ஜமீன்தாரர் (பாளையத்தார்) உயர்திரு. திவான்பகதூர் முத்துராமசாமி காளிங்கராயர் அவர்கள் 1-5-31 தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஊத்துக்குளியில் தமது அரண்மனையில் முடிவெய்தினார் எனக் கேட்டு மிகவும் வருந்துகின்றோம்.

ஜமீன்தாரர் அவர்கள் கோயமுத்தூர் ஜில்லாவில் புராதனமும், பிரபலமும், கீர்த்தி வாய்ந்ததுமான ஒரு பாளையத்தார் ஆவார்கள். இவர் 1864 ஜனவரி 24-ந் தேதி பிறந்தார். இன்றைக்கு இவரது வயது 67 ஆகின்றது. 1881ல் பட்டத்திற்கு வந்தார். இவர் பட்டத்துக்கு வந்து இன்றைக்கும் 50 வருஷம் ஆகின்றது. இந்த ஜமீன் பரம்பரைக்கிரமத்தில் இவர் ஒருவரே 50 வருஷம் பட்டம் ஆண்டார் என்பதோடு இவர் 33-வது பாளையதாரர் ஆவார். இவர்களது பாரம்பரியர்களால்தான் பவானியிலிருந்து ஈரோடு வழியாக கொடுமுடி வரை வெட்டப்பட்டிருக்கும் காளிங்கராயன் வாய்க்கால் என்னும் 50 மைல் நீளமுள்ள வாய்க்கால் வெட்டப் பட்டதாகும். இந்த ஜமீன்தாரர் அவர்கள் பட்டம் ஏற்றுக் கொண்டது சிறு வயதாய் இருந்தாலும் ஒரு ஆங்கில உபாத்தியாயர் மூலமே கல்வி, பழக்க ஒழுக்கம், நாகரிகம் முதலியவை கற்பிக்கப்பட்டு வந்தார். இவருடைய 50 வருஷ­ ஜமீன்தாரர் வாழ்க்கையானது இவரைப் போன்ற இரண்டு பங்கு, மூன்று பங்கு வரும்படியுள்ள பெரிய ஜமீன்களையெல்லாம் விட மிகப் பெருமையாகவும், பிரபலமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கோயமுத்தூர் ஜில்லாப் பொது வாழ்வுக்கு ஒரு திலகம்போல் இருந்தவர் என்று சொல்வது மிகையாகாது. இவர் கொங்கு வேளாள சமூகத்தைச் சேர்ந்தவர். அச்சில்லாவாசிகளான மற்ற பிரமுகர்கள்போல் அல்லாமல் ஜில்லாவிலுள்ள எல்லா சமூகப் பிரபலஸ்தர்களிடமும் நெருங்கின பழக்கமும், நேசமும் உடையவராயிருந்ததோடு ஜில்லாவின் சகல காரியங்களுக்கும் தலைவராக இருந்து மக்களுக்கு யோசனை சொல்லி வந்தார். ஜமீன்தாரர் கர்நாடகப் பெரிய மனிதர்கள்போல் ஜாதி பேதங்களில் தங்களைப் பார்ப்பனர்களுக்குக் கீழ்ப்பட்ட ஜாதி என்றும், தாங்கள் சில ஜாதிகளுக்கு மேல்பட்டவர்களென்றும் கருதி வருணாச்சிரம தர்மத்தைக் காப்பாற்றி பிராமண விசுவாசத்தாலும், பக்தியாலுமே நாகரீகமடைந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதுபோல் இல்லாமலும், பார்ப்பனர் வீடு தவிர மற்ற யார் வீட்டிலும் சாப்பிடுவதில்லையென்று வேஷமாகச் சொல்லிக் கொள்வதாலேயே பெரியவர்கள் என்று கருதும்படியாகவும் இல்லாமல் அதற்கு நேர் விரோதமாய் ஊண், உடை, மரியாதை ஆகிய விஷயங்களில் ஜாதி வித்தியாசம் என்பதே இல்லாமல் எல்லாருடனும் சமத்துவம் காட்டுவதும், பட்லர்கள் ( 'பறையர்கள்') என்பவர்களைக் கொண்டு சமையல் வகையரா செய்வித்து சாப்பிட்டு வந்தார். கடவுள் என்னும் விஷயத்தில் மாத்திரம் சற்று அதிகமான உணர்ச்சி இருந்து வந்த போதிலும், புதிய நாகரீகம் அதாவது (up to date fashion) என்கின்ற விஷயத்தில் இந்தியாவுக்கு மேல்நாட்டு நாகரீகம் எது இறக்குமதி யானாலும் அது முதலில் ஜமீன்தாரர் அவர்கள் வீட்டில் வந்து புகுந்து அவர்கள் மூலம்தான் அது மதிப்புபெற்று உலாவும்படியாக இருக்கும்.

தவிர, ஜமீன்தாரர்கள் என்ற பேரால் அநேகர் இந்நாட்டில் இருந்த போதிலும், மரியாதை கொடுத்து, மரியாதை வாங்குவது என்பதிலும், யாருடனும் பட்சமாய்ப் பேசுவது என்பதிலும், ஒரு மனிதனிடம் முதல் நாள் பழகும்போது எப்படிப் பழகினோமோ அதே முறையில் கடைசிவரை நடந்து கொள்வது என்பதிலும் மிக்க ஆசையும், கட்டுப்பாடும் உடையவர்.

ஆங்கிலத்தில் எட்டிக்கட் என்று சொல்லப்படும் அதாவது மக்களிடம் மக்கள் பழகும் வாழ்க்கைப்பத்ததி என்னும் விஷயத்தில் வெள்ளைக்காரர்கள்கூட நமது ஜமீன்தாரிடம் வந்து பழகிப் போகும்படியான உயர் நிலையில் இருந்தவர். தென்னாட்டு மற்ற ஜமீன்தாரர்களின் மரியாதையை மிகவும் பெற்றவர் என்பதோடு அவர்களின் மதிப்பையும் நன்கு பெற்றிருந்தார். பொதுக்காரியங்களுக்குத் தாராளமாய் பணம் உதவும் பிரபு. இவருக்கு 5-வது ஜார்ஜ் அரசர் பட்டாபிஷேக ஞாபகார்த்தமாய் 1913ம் வருஷம் திவான்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரது குமாரர்கள் இருவரில் உயர்திரு முத்துக் கிருஷ்ணசாமி காளிங்கராயர் அவர்கள் மூத்தவர். குமார ராஜாவாக இருந்து பட்டத்துக்கு வந்து விட்டார்கள். இளையவர் லண்டன் சென்று உயர்தரக் கல்வி கற்று வந்து, திருவாங்கூர் மகாராஜாவின் பிரைவேட் செக்ரிடியாய் இருந்து இப்போது அதை விட்டு ஊருக்கு வந்து தாமதிக்கின்றார்.

இக்குடும்பம் மற்ற பணக்காரர்களைப் போல் பார்ப்பன தாசர்களாயல்லாமல் எப்போதும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையில் மிகவும் கவலை கொண்ட குடும்பமாகும்.

தென் இந்தியாவுக்கே ஏன்? இந்தியாவுக்கே முதல் முதலாய் கோயமுத்தூரில் கூட்டப்பட்ட பார்ப்பனரல்லாதார் மகாநாட்டை முன்னின்று நடத்திய கனவான் நமது ஜமீன்தாரவர்களே யாகும். அன்று முதல் இன்றளவும் எக்காரணம் பற்றியும் அக்கொள்கையில் சிறிதும் மாற்ற மேற்பட இடமே யில்லாமல் இருந்து வந்திருக்கின்றது. இவர்கள் 67 வருஷ­காலம் உயிருடன் இருந்து 50 வருஷகாலம் ஆக்ஷியில் இருந்து காலமானதோடு அடுத்த பட்டத்திற்கு தன்னிலும், எவ்விதத்திலும், குறையாத குணமும், மேன்மையும் உள்ள குமார ஜமீன்தாரர் வந்திருப்பதோடு மிக்க புத்தி சாதுர்யமும், தைரியமும் வீரமும் பொருந்திய இளைய குமாரர் நடராஜ காளிங்கராயர் உற்ற துணையாய் இருந்து பழையபடியே எல்லாக் காரியங்களும் நடைபெற்று வரும் என்பதில் எவ்வித ஆnக்ஷபத்திற்கும் இட மில்லை என்று இருந்தாலும், ஒப்பற்ற ஒரு பெரியாரை கோயமுத்தூர் ஜில்லா இழந்து விட்டது என்பதற்கு புதிய ஜமீன்தாரரும் அவரது சகோதரரும் தான் மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென்று கூறி முடிக்கின்றோம்.

(குடி அரசு - இரங்கலுரை - 10.05.1931)

Pin It