கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சென்னை மாகாணத்தில் பெருவாரியாய் இருக்கும் திராவிட மக்களாகிய - நமக்கு நம் ஸ்தாபனமாகிய ஜஸ்டிஸ்கட்சி என்னும் திராவிடர் கழகத்திற்கு இன்று என்ன கொள்கை, என்ன திட்டம் என்பது யாரும் அறியாததல்ல.

என்றாலும் நம் எதிரிகளும், நம்முள் இருந்து நமக்குத் துரோகிகளாக ஆகி சுயநலம் காரணமாக விபீஷணாழ்வார்களாகவும் அனுமார்களாகவும் ஆனவர்களும் நமக்குக் கொள்கை இல்லை, திட்டம் இல்லை என்று சொல்லவதோடு மாத்திரம் அல்லாமல் ஸ்தாபனம் இல்லை, அங்கத்தினர்கள் இல்லை என்றும் சொல்லி எதிரிகளுக்கு அனுகூலமாகப் பிரசாரம் செய்து எதிரிகளுக்கு நல்ல பிள்ளைகளாகிக் கூலிபெறப் பார்க்கிறார்கள். இது ஆரியருடன் கலந்து போய்விட்டதாகக் கருதும் திராவிட மக்களுக்கும் கலந்ததனால் குற்றமில்லை என்று கருதும் திராவிட மக்களுக்கும் இயற்கையேயாகும்.

ஏனெனில், நம் ஸ்தாபனம், நம் கொள்கை நம் திட்டம் முதலியனயாவும் ஆரியர்களுக்கு எதிரானவையேயாகும். அப்படிப்பட்ட ஆரியருக்கு எதிரானதும் அவர்கள் நலத்துக்குக் கேடானதுமான கொள்கைகள், திட்டங்கள் ஆகியவை "ஆரியரும் நாமும் கலந்து விட்டோம்" அப்படிக் கலந்து அவர்களுக்கு அடிமையாயிருக்க ஆதாரமான 'இந்து மதத்தினராக இருப்பதைப் பற்றி நாங்கள் வெட்கப்படவில்லை' என்று துணிந்து சொல்கிறவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும், ஆரிய எதிர்ப்பான இந்தக் காரியங்கள் ஒப்புக் கொள்ளவோ, சகிக்கவோ முடியவே முடியாது.

நம் கொள்கைகள் என்னவெனில் முதலாவது நாம் வேறு ஆரியர்கள் வேறு, நமக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகும்.

அதனாலேயேதான் நம்மை நாம் தென் இந்தியர் என்று அழைத்துக் கொண்டு நம் ஸ்தாபனத்துக்கு தென் இந்தியர் நலத்தைக் கோரும் உரிமையைக் கோரும் சங்கம் என்றும், இச்சங்கத்தில் பார்ப்பனர்களை (ஆசிரியர்களை) அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் 20 வருஷங்களுக்கு முன்னதாகவே அதாவது ஜஸ்டிஸ் சங்கம் தொடங்கப்பட்ட போதே குறிப்பிட்டுக் கொண்டிருப்பதோடு ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட அல்லது இந்துமதம் என்பதால் ஏற்பட்ட"ஜாதிகளை அழித்து ஓர் இனமாக - ஒரு வகுப்பாக ஏற்படுத்துவது" என்னும் கொள்கையும் ஏற்படுத்தப்பட்டது. இது இன்றும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கையில் இருக்கிறது. இப்படி இருக்க, ஆரியரும் நாமும் கலந்துவிட்டோம்; பிரிக்க முடியாதவர்களாக ஆகிவிட்டோம். ஆரியர் கொள்கையான அதாவது ஆரியர் உயர்வானவர்கள், திராவிடர்கள் தாழ்வானவர்கள், ஆரியர்களுக்குப் பிறந்தவர்களே திராவிடர்கள், என்னும் தன்மையை வற்புறுத்தி அமல் நடத்தும் இந்து மதமே நாம் பின்பற்றக் கூடியதாகும் என்பவர்கள் எப்படி இந்தத் தென் இந்தியர் நலத்தைக் காக்கும் ஸ்தாபனங்களில் அங்கத்தினராகவாவது இருக்க உரிமையுடையவர்களாவார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும் என்பதோடு கொள்கை இல்லாதவர்கள், திட்டம் இல்லாதவர்கள் உண்மை தத்துவம் உள்ள கொள்கை இல்லாதவர்கள் என்பவர்கள் இப்படிப்பட்ட இவர்களா அல்லது வேறு யாராவதா என்பது எந்தச் சாதாரண மனிதனுக்கும் விளங்காமல் போகாது.

இதுவரை நம்மைத் தென் இந்தியர் என்று சொல்லி வந்து, இன்றும் தென் இந்தியர் என்றால் பார்ப்பனரல்லாதவர் என்றும் சொல்லிக் கொள்ளுவதானால் பார்ப்பனரிடமிருந்து தாங்கள் பிரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்ள என்ன அடையாளத்தை என்ன இடத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற குறிப்பாவது இல்லாமல் இருப்பவர்கள் தங்களது ஏதாவது கொள்கையோ திட்டமோ கொண்டவர்களாக கருத முடியுமா என்று கேட்கிறோம். "பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனித் தொகுதி (ஓட்டுரிமை) கேட்பதும், பார்ப்பனரல்லாதவர்களுக்குத் தனி உத்தியோகம் பதவியும் கேட்பதும்" ஆக இவற்றிற்கு மாத்திரமே தனிக்கட்சி வேண்டுமானால் இப்படிப்பட்ட கட்சி சமுதாய சம்பந்தமாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ, ஏதாவது கொள்கை இருக்கிறது என்றால் எந்த அறிவாளியாவது கருதக்கூடுமா? அல்லது இப்படிப்பட்ட கட்சி 'ஓர் அரசியல் கட்சி' என்று சொல்லிக் கொள்ளவாவது வெட்கப்படாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறோம். ஏனெனில் மக்களைப் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று எந்த அடிப்படையை வைத்து, எந்த பேதத்தை வைத்துப் பிரிப்பது என்பதற்கு இவர்கள் எந்த நிபந்தனை சொல்ல முடியும். இவர்களிடம் என்ன இருக்கிறது?

உதாரணமாக, தங்களை அரசியல் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களும், பி.டி.ராஜன் அவர்களும் தங்களைத் தங்கள் வகுப்பைப் பார்ப்பனர் அல்லாதார் என்று சொல்லிக் கொள்ள என்ன அடையாளம் அல்லது பேத நடத்தை, பேத உணர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறோம். இவர்கள் தங்களுடைய வகுப்பில் எந்தவிதப் பார்ப்பனர்களைவிட மாறுபட்ட வகுப்பார்கள் என்று சொல்லிக் கொள்ள இடமிருக்கிறவர்களென்பார்கள் என்று கேட்கிறோம்.

சர்.சண்முகம் அவர்கள் தன வைசியர், அல்லது பார்ப்பனர் தவிர மற்ற எந்த வகுப்பாரிடம் புழங்காத ஜலபானம் கூட தெரியாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பவர்களாவார்கள். பி.டி.ராஜன் அவர்களும் பார்ப்பானைவிட மற்ற எந்த வகுப்பிடமும் புழங்காத ஜலபானம் கூடச் செய்யாத உயர்ந்த வகுப்பனென்பவர்களார்கள். இவர்களிருவரும் தங்களைப் பொறுத்தவரை ஜாதியை வகுப்புயர்வைப் பாராட்டுவதில்லை என்று சொல்லப்படுமானால் தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியாரும், தோழர் டி.ஆர். வெங்கட்டராம சாஸ்திரியாரும் கூடத்தான் ஜாதியைப் பாராட்டுவதில்லை என்பதோடு இன்னும் ஒருபடி மேலே சென்று பெண் கொடுப்பதிலும், பெறுவதிலும்கூட ஜாதி பாராட்டாமல் சமுதாய பழக்க வழக்க சடங்குகளில் கூட பார்ப்பனப் புரோகித உணர்ச்சியை பெரிதும் பாராட்டாதவர்களாவார்கள். இப்படி இருக்கும்போது அவர்களும் தங்களைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்றும் பார்ப்பனராவது - அல்லாதவர்கள் என்றும், "பார்ப்பனராவது - அல்லாதாராவது எல்லாம் கலந்துவிட்டது" என்றும் சொன்னால் ஒப்புக் கொண்டு கட்சியைக் கலைத்துவிட வேண்டியதுதானா? அல்லது மற்ற மக்களாவது சர்க்காராவது ஒப்புக் கொள்ளுவார்களா? என்று கேட்கிறோம்.

இந்துக்கள் என்றும், இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்த சர். ஆர்.கே.எஸ்., சர்.பி.டி.ஆர். ஒப்புக் கொண்டு தங்களைப் பார்ப்பனரல்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டு தனித்தொகுதி, தனி உத்தியோகம், தனி பதவி கேட்பதற்கு உரிமையிருந்தால் இதே இந்துக்களின் பிரிதொரு கூட்டத்தார் தங்களைச் சைவ வேளாளர்கள் அல்லாதவர் என்பன போன்ற பல வகுப்புப் பேர்களைச் சொல்லிக் கொண்டு பலர் தொகுதியும் உரிமையும் பதவியும் கேட்பதில் குற்றம் என்ன சொல்ல முடியும் என்றும் தடுக்காமல் இருப்பதற்கு நியாயம்தான் என்ன சொல்ல முடியும் என்றும் கேட்பதோடு இந்துவத்தை ஒப்புக் கொண்ட இவர் அதில் கண்டபடியும் இந்துத்துவாவை எப்படியும் பிராமண, சத்திர வைசிய, சூத்திர, அவர்ண என்கின்ற வர்ணங்களின் இல்லாமல் "இந்து"க்களின் பார்ப்பனர்களை நாத்திகம் விலக்க ஞாயம் என்று கேட்பதால் இப்படிப்பட்ட அதாவது செய்வது என்றில்லாமல் ஓட்டுக்கும் உத்தியோகத்துக்கு மாத்திரம் கொள்கை கொண்ட இவர்களோடு மானமும் அறிவும் உள்ள எந்தத் திராவிடர்கள் சேர முடியும் என்று கேட்கிறோம்.

இன்று நமக்கு எதிராகப் பார்ப்பனர் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கும் மதம், அதாவது நம் தோழர்கள் சர்.ஆர்.கே.எஸ்., சர்.பி.டி.ஆர்., அவர்கள் தங்கள் மதம் என்று ஒப்புக் கொள்ளுகிற இந்துமதம் படிக்குத்தான் நம்மை தங்களுடைய வைப்பாட்டி மக்கள் என்று சொல்லுகின்றனர். இந்து மதமும், மத சாஸ்திரமும், மதக் கடவுள்களும் அப்படியே சொல்லகின்றனர். அவை தப்பு என்றும் திராவிடராகிய நமக்கு அவை சம்பந்தப்பட்டவை அல்ல என்றும் நாம் சொன்னால் நம் தோழர் சர்.ஆர்.கே.எஸ். அவர்கள் "நாமும் பார்ப்பனர்களும் (ஆரியர்களும்) கலந்து போய்விட்டோம். ஆரியராவது திராவிடராவது? எல்லாம் கலந்துவிட்டது. இந்து மதத்தைக் குறை சொல்லக் கூடாது" என்று சொல்ல வந்தால் அப்போது பார்ப்பான் சொல்லகிறபடி நாம் "சூத்திரர்கள்" என்பதையும் "அவர்களுக்குப் பிறந்தவர்கள்" என்பதையும் ஒப்புக் கொள்ளுவதுபோல் ஆகிவிட வில்லையா என்று கேட்கின்றோம்.

எதற்கு ஆக நாமும் அவர்களும் (திராவிடரும், ஆரியரும்) "பிறவியில் கலந்து போய்விட்டோம்" என்று சொல்ல வேண்டும் என்று கேட்கிறோம். நாமும் அவர்களும் பிறவியிலும் கலாச்சாரங்களிலும் கலந்து போய்விட்டதாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒரு சமயத்தவர்களாகிவிட்ட பிறகு நமக்குத் தனித்தொகுதி, தனி உரிமை, தனி உத்தியோகம் எதற்கு ஆக வேண்டும்? அதைக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறோம். நாம் கேட்காவிட்டாலும் இந்தக் கேள்வியைப் பார்ப்பனர்கள் கேட்கமாட்டார்களா? சர்க்கார் கேட்க மாட்டார்களா? 'தேசியவாதிகள்' கேட்கமாட்டார்களா? அல்லது ஒட்டர்கள், பாமர மக்கள் கேட்க மாட்டார்களா என்று கேட்கிறோம்.

இவ்வளவு மான உணர்ச்சியும் தெளிவும் ஏற்பட்ட இந்த காலத்திலும் இந்த அறிவாளிகள் தங்களையும், மற்றும் நம் மக்களையும் எதற்கு ஆக பார்ப்பனரல்லாதார் என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள் என்றும், அதே சமயத்தில் எதற்கு ஆக இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள் என்றும் கேட்கிறோம்.

திராவிடன் என்று நம்மை நாம் அழைப்பதற்கு ஆதாரமில்லை என்றும், அப்படி அழைப்பது அவன் (ஆரியன்) கொடுத்த பெயரால் அழைத்துக் கொள்ளுவதாக ஆகும் என்றும் கூறுகிற இவர்கள் பிறவியில் பார்ப்பனரோடு (ஆரியரோடு) கலந்து விட்டவர்கள் என்றும், அதை வலியுறுத்தும் மதத்தைச் சேர்ந்த இந்து என்றும், 'பார்ப்பனர்களுக்குப் பிறந்தவர்கள் ஆனால் நாங்கள் பார்ப்பனர்கள் அல்ல' என்பது போல் பார்ப்பனர் அல்லாதாவர்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவதானால் இவர்களுடனும் பல மொண்ணைகள் சேர்வதென்றால் இந்தக் கூட்டத்திற்கு மானம் வெட்கம் மறந்தாவது கடுகளவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா என்றும் நம்மை மற்றவர்கள் கூட்டத்திலும், சமுதாயத்திலும், மான உணர்ச்சியிலும் இழி மக்கள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் இல்லையா என்றும் கேட்கிறோம். நாம் ஏன் இதை விளங்கச் சொல்லகிறோம் என்றால் இரண்டொரு கொள்கையற்ற சமயசஞ்சீவிகளுக்கு ஆக 41/2 கோடி மக்களின் தன்மானம் இப்படிக் காற்றில் பறப்பதா என்பதற்கும், மந்திரி பதவியும் நிருவாக சபை மெமம்பர் பதவியும் கவுன்சிலர், பிரசிடென்ட், புத்தக வியாபாரம், கான்டிராக்ட், சொந்தப் பிள்ளை குட்டிகள், உத்தியோகம், கவர்மென்ட் வக்கீல், சில்லரைப் பதவி ஆகிய எச்சில் எலும்புத் துண்டுகள் 1, 2 கிடைப்பதற்கும் இதற்கு ஆக பின்னால் வால்பிடித்து வழிபடுவதால் எறியப்படும் இரண்டு பிச்சைக்காசுக்குமாக இவ்வளவு மானங்கெட்ட இனத்துரோக குலத்துரோக காரியத்திற்குத் துணிவதா என்பதற்கும் நமக்கும் கொள்கையில்லையா அல்லது இவர்களுக்கு கொள்கையில்லையா என்பதற்கும் ஆகவே குறிப்பிடுகிறோம்.

இவ்வளவு படித்த, இவ்வளவு செல்வம் படைத்த, இவ்வளவு பிரபலமாக வாழ்வுக்கு எவர் தயவும் தேவையில்லாத, தக்கவர்கள் என்று சொல்லப்படும் படியானவர்களே இப்படிப் பேசிப் பலனடையப் பார்த்தால் வாழ்வுக்கு மானமுள்ள வழியில்லாதவர்களும், வழிமுறையைத் தப்பாக உணர்ந்தவர்களும், வரப்போகும் சந்ததிகளும் எப்படி நடந்து கொள்ளமாட்டார்கள் என்று கேட்கின்றோம்.

இன்று நமக்கு என்ன கஷ்ட நஷ்டம் வருவதானாலும் நாம் யார்? நம் எதிரிகள் யார்? நமக்கும் அவர்களுக்கும் என்ன என்ன பேதம்? அதனால் நாம் எப்படி எப்படிக் கெட்டோம்? இதிலிருந்து நாம் மீள என்ன என்ன செய்ய வேண்டும்? என்பவைகளே தென் இந்திய திராவிடர் மக்களாகிய நமக்குக் கொள்கையாகவும் திட்டமாகவும் மூச்சாகவும் இருக்க வேண்டியது. அதுவும் தங்களை உண்மை திராவிட மக்கள் என்று கருதுகிறவர்களுக்கும் இருக்க வேண்டும்.

அதற்கு ஆகத்தான் தென் இந்தியர் என்றால் திராவிடர்கள் என்று சொல்லுவதும், தென் இந்தியர் (நல உரிமை) சங்கம் என்றால் திராவிடர் கழகம் என்பதும், நமது கொள்கை ஆரிய ஆதிக்கச் சம்பந்த மற்ற தனி நலன்கள் பெறுவது என்பதுமாகும்.

அதற்கு ஆகவே திராவிட நாடும், ஆரிய ஆதிக்கத்தை வலியுத்தி நம்மை ஆட்படுத்தி இருக்கும் இந்துமதம் நம்மில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதும், நம் அரசியல் சமுதாய இயல் தத்துவங்கள், திட்டங்கள், பிரசாரங்கள், மேடைகள், எதிர்பார்ப்பனை ஆகியவைகள் எல்லாம் கூட இவைகளுக்கு ஏற்றவகைகளாக இருக்க வேண்டும் என்பதுமாகும். திராவிட நாடு பிரிந்து கிடைக்க வேண்டும் என்பது மேற்கண்டவைகளோடு பொருளாதார நலமும் ஏற்பட்டு மறுபடியும் எந்தக் காரணமும் கொண்டு இன்றைய இழிநிலைக்குப் போகாமல் இருப்பதற்கு அரண் கட்டுவதேயாகும்.

ஆகவே தோழர்களே நமக்குக் கொள்கையும் திட்டமும், இலட்சியமும் இல்லையா? அல்லது சர்.திவான்பகதூர், ராவ் பகதூர், ராவ் சாயபு முதலிய கூட்டத்தினர்களின் கோஷ்டிக்கும் அவர்களது வால்களின், அடிமைகளின், கூலிகளின் கோஷ்டிக்கும், கொள்கையும், திட்டமும், இலட்சியமும், அரசியல் சமுதாய இயல், பொருளியல், அறிவும் இல்லையா என்று கேட்கிறோம். சுயநலக்காரருக்கும் ஆரியருக்கு வருத்தம் தரும்படியான எந்தத் திட்டமும் பிடிக்காது. ஆதலால் ஆரியர்களுக்கும் பயந்து சுயநலத்தைக் கருதிப் போனவர்கள் போகட்டும்! போகிறவர்கள் போகட்டும்!! போக வேண்டியவர்களும் போகட்டும்!!!

மற்றவர்கள், மானமுள்ளவர்கள், மான இலட்சியமுள்ள வீர இளைஞர்கள், தன்னலமற்ற திராவிடப் பொது மக்கள் ஒரு நிலையில் இருந்து சிறிது நாட்களுக்குத் தொண்டாற்றினால் போதும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

-------------------

தந்தை பெரியார் - "குடிஅரசு" தலையங்கம் 02.06.1945

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா