ஆத்மா, என்னும் விஷயத்தைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் நமது நண்பர்கள் பலர் இது ஒரு தத்துவ விசாரணை விஷயம். இதைப் பற்றி எழுதவோ, பேசவோ வேண்டிய அவசியம் சமுதாய சீர்திருத்தக்காரருக்கு எதற்கு? சுயமரியாதைக்காரர்கள் அனாவசியமாய் கண்ட கண்ட விசயங்களிலெல்லாம் தலையிட்டு சீர்திருத்தத் துறையைப் பாழாக்கிக் கொள்ளுவானேன்? என்று கூசாமல் பேசுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட நண்பர்கள் சமுதாய சீர்த்திருத்தம் என்பது என்ன என்பதாக சரிவர உணராதவர்கள் என்று நினைத்துவிட்டு நம் பாட்டுக்கு நாம் மேலே செல்லக் கூடிய நிலையிலேயே இருக்கின்றோம்.
ஏனெனில் சமுதாய சீர்த்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் இடிந்து போன - சுவண்டு போன - ஆடிப் போன பாகங்களுக்கு சுரண்டி கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கின்றார்கள். ஆனால் நம்மைப் பொருத்தவரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். மற்றபடி நாம் யார்? என்றால் என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் (மக்கள் சமுதாயம் என்றால் உலக மக்கள் சமுதாயம்) ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைமைக்கு வந்தது? என்பதை உணர்ந்து உணர்ந்தபடி மறுபடியும் அந் நிலை ஏற்படாமல் இருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கின்ற படியால் சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அனேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
இதனாலேயே தான் பலவற்றில் உலக மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும், சரி என்பதைத் தப்பு என்றும், தேவை என்பதை தேவை இல்லை என்றும், கெட்டது என்பதை நல்லதென்றும், நல்லது என்பதை கெட்டது என்றும், காப்பாற்றப்பட வேண்டும் என்பதை ஒழிக்க வேண்டும் என்றும், மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயத்தை கூறுவோராக - செய்வோராகக் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆனால் நம்போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும் மதிக்கப்படுவதும் பழிக்கப்படாமல் - குற்றம் சொல்லப்படாமல் இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும். உதாரணமாக இது விஷயமாய் நாயனார் அவர்களது குறளில்
“உலகத்தார் உண்டென்பதில் என்பான் - வையத்
தலகையா வைக்கப்படுவான்”
என்று ஒரு குறள் காணப்படுகின்றது. இதன் பொருள் அக்குறளில் காண்கின்றபடி பார்த்தால் “உலகத்தாரால் உண்டு என்று சொல்லப்பட்டதை இல்லை என்று சொல்லுபவன் உலகில் பிசாசாக மதிக்கப்படுவான்” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதில் இருந்து உலகத்தார் என்பது யாரைக் குறிப்பிடுகின்றது? “உலகத்தார் என்றால் உயர்ந்தோர்” என்று சொல்லுவதானால் உயர்ந்தோர் என்பதற்கு லக்ஷணமென்ன? பிசாசு என்றால் அர்த்தமென்ன? வையத் தலைகை என்பதற்கு திருவள்ளுவர் கருத்தென்ன? அவர் பிசாசை நம்பி இருந்தாரா? என்பன போன்ற பல தர்க்க விவகாரங்கள் அக்குறளுக்குப் பொருள் கூறுவதில் சிலருக்கு ஏற்பட்டாலும் அதன் அதிகாரத்தின் தலைப்புப்படி அக்குறளின் கருத்து “அநேக மக்களால் உண்டு என்று கருதப்பட்ட ஒரு விஷயத்தை இல்லை என்று சொல்லுபவன் அறிவில்லாதவன்” என்று பொருள் படுவதாகவே வைத்துக் கொள்ளுவோம்.
இப்படி இருந்தாலும் இதிலிருந்து அவன், அதாவது உலகத்தாரால் உண்டு என்பதை இல்லை யென்று சொல்லுபவன் எதனால் அறிவில்லாதவன் என்று கண்டுபிடிக்க வேண்டியது இங்கு முக்கியமாகின்றது. எவ்வாறெனில், உண்டு என்பதை இல்லை என்று சொல்லுகின்றதற்காக அவன் கொண்ட கருத்து குற்றமுடையதா? அல்லது பலர் - அநேகர் மற்றவர்கள் - எல்லோரும் உண்டு என்று சொல்லப்பட்ட ஒரு அபிப்பிராயத்திற்கு, அது எப்படி இருந்தாலும் கண்மூடித் தனமாய் பின்பற்றாமல் தனது சொந்த அபிப்பிராயத்தை துணிந்து சொல்ல வந்துவிட்டானே அந்த அடங்காத - கீழ்படியாத - ஊருடன் ஒத்துப் போகாத - ஆணவமான தண்மையுடைய அந்த செய்கை குற்றமுடையதா? என்று யோசிக்க வேண்டியது இங்கு முக்கியமான காரியமாகும். ஆகவே உலகத்தார் உண்டு என்பதை மறுத்துக் கூறியதற்கு ஆதாரமாக அவன் கொண்ட அபிப்பிராயம் குற்றம் என்று ஏற்படுமானால் இங்கு உலகத்தார் சொல்லுவதெல்லாம் சரியானதாய்த்தான் இருக்கும் என்று பொருள் கொண்டு நாயனார் சொல்லி இருக்க வேண்டும். அல்லது அப்படி உலகத்தார் அபிப்பிராயத்துக்கு விரோதமாக அபிப்பிராயப்பட்டதை ஒருவன் தனித்து எடுத்துச் சொல்லுவது என்கின்ற தன்மை குற்றமானதென்று கருதி நாயனார் சொல்லி யிருந்தால் மனிதனுக்கு அவனவனபிப்பிராயத்திற்கு சுதந்திரமில்லை என்று வள்ளுவர் கருதி அப்படிச் சொல்லி இருக்க வேண்டும். ஆகவே அக்குறளானது உலக மக்களில் பொதுவாக பெரும்பான்மையோரையோ அல்லது அறிவாளிகளாகிய பெரும்பான்மையோரையோ யாரைக் குறிப்பில் வைத்துக் கொண்டு நாயனார் சொல்லி இருந்தாலும் அக்குறள் பொதுவில் குற்றமுடையது என்பதே நமதபிப்பிராயம்.
ஆதலால் ஆத்மா என்கின்ற விசயத்தைப் பற்றி யார் என்ன சொல்லி இருந்தாலும் - உலகமே என்ன கருத்துக் கொண்டிருந்தாலும் அதை லக்ஷியம் செய்யாமலேயே நாம் நம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றோம்.
ஆதலால் ஆத்மா என்பது ஒரு வஸ்து அல்ல, பொருள் அல்ல. அது சுதந்திரம், அறிவு உணர்ச்சி முதலாகியவைகளை உடையதல்ல என்பதோடு அது ஒரு பெரிதும் அர்த்தமற்ற வார்த்தை என்றே நமக்கு காணப்படுகின்றது. இங்லீஷ், தமிழ் அகராதிகளில் பார்த்தாலும் ஆத்மா என்பதற்கு இங்லீஷில் சோல் (soul) என்றும், சோல் என்றால் அறிவு - யோசனை - ஆசை பிறக்கும் இடம், ஊக்கம், உள் சக்தி, மனிதவர்க்கம், உயிர் என்கின்ற பொருள்கள் காணப்படுகின்றன.
தமிழ் அகராதிகளிலும் அதுபோலவே ஆத்மா அல்லது ஆன்மா என்றால் காற்று, அறிவு, உடல், உயிர், பிராணன், மூளை முயற்சி, பிரம்மன், சுபாவம் என்கின்ற பொருள்கள் காணப்படுகின்றன. இவைகளில் இருந்து அதாவது இந்த வார்த்தைகளில் இருந்து விளக்கப்பட வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான் ஆகும். பிராணன் அல்லது உயிர் என்பதற்குத்தான் அர்த்தம் விளங்க வேண்டி இருக்கின்றது. மற்ற வார்த்தைகள் எல்லாம் தானே அர்த்தம் புரியும்படியாய் இருக்கின்றன.
ஆகவே பிராணன் என்பது என்ன என்று பார்த்தால் அது ஒரு காற்று, பிராணவாயு இருதயத்தில் இயங்கிக் கொண்டிருப்பது என்பதாகத் தான் அகராதிகளில் காணப்படுகின்றது.
இது இங்ஙனமிருக்க இப்போது பழக்கத்தில் ஆத்மா என்றால் அது சரீரத்திற்குள் இருக்கும் ஒரு நித்திய வஸ்துவென்றும் அது சூக்ஷம வஸ்து வென்றும் அதற்கு பிறப்பு இறப்பு இல்லை என்றும் அது மனிதன் இறந்த பின்பு வெளிப்பட்டு மறுபடியும் சரீரம் எடுப்பது என்றும், மற்றும் அது சரீரத்தில் இருக்கும்போது செய்த காரியங்களுக்காக அதன் பயனை சரீரத்தை விட்டுப் பிரிந்த பின்பு கடவுள் மூலம் அனுபவிக்கின்றதென்றும் மற்றும் எத்தனையோ விதமாக அதைப்பற்றி பல மதங்களில் பல விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றதாய் அறிகின்றோம்.
உதாரணம் என்னவென்றால் அது மனிதனுக்குள் இருந்து மனித சரீரத்திற்கு வேறாய் “என் சரீரம்” என்று சொல்லுவதன் மூலம் சரீரத்திற்கும் வேறுபட்டதென்றும் சொல்லுவது போன்ற ஏதேதோ பிரிவுகள் காட்டி அந்த ஆத்மா சரீரம் விட்டுப் பிரிந்த பிறகு அடைய வேண்டிய - அடையக்கூடிய பலன் ஆகியவைகளைப் பிரதானமாகக் கருதி அதற்கு தகுந்தபடி அதற்காகவே மனிதன் வாழ வேண்டியது அவசியமென்று சொல்லப்பட்டு அந்த மாதிரி ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையே மதங்கள் போதிக்கின்றன வென்றும் அதற்காகவே உலகத்தில் மனித கோடிகளுக்கும் மதம் அவசியமென்றும் சொல்லப்படுகின்றது.
ஆகவே கிறிஸ்து, பௌத்தம், இஸ்லாம், இந்து ஆகிய மதங்களில் பௌத்த மதம் தவிர மற்ற முக்கியமான மூன்று மதங்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையில் தான் ஆத்மாவுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் பற்றிய விஷயங்களை வைத்துக் கொண்டு இருக்கின்றன.
நிற்க மேற்கண்ட ஆத்மா என்பதில்
- மனித ஆத்மா மாத்திரம்தான் மேற்கண்ட மத சம்மந்தங்களுக்கு அதாவது கடவுளுக்கும் ஆத்மாவுக்குமுள்ள சம்மந்தத்திற்காக ஏற்பட்ட மதங்களுக்கு சேர்ந்ததா? அல்லது புல், பூண்டு, அணு, ஜெந்து, ஊர்வன, பறப்பன, நகர்வன, நீர் வாழ்வன முதலிய ஜெந்துக்களின் ஆத்மாக்கள் என்பவைகளும் அதில் சேர்ந்தவைகளா?
- இந்தப்படி மனித ஆத்மாவுக்கும் மற்றய ஆத்மாக்களுக்கும் வித்தியாசங்கள் உண்டா? அல்லது எல்லாம் ஒரே தன்மையானதுதானா?
- மனித ஆத்மா மனித சரீரத்தில் இருக்கும்போது அது செய்த வினைக்கு ஏற்ற பலனை சரீரத்தை விட்டுப் பிரிந்த பிறகு அனுபவிக்கின்றது என்பது போலவே மற்றப் புல், பூண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன, நீர் வாழ்வன, அணு ஜந்துக்கள் முதலியவைகளின் ஆத்மாக்களும் சரீரத்தை விட்டு விலகிய பிறகு அவைகளின் வினைக்குத் தகுந்த பலனை அனுபவிக்கின்றனவா?
- இந்த ஆத்மாக்களில் மேல் கண்ட ஜந்துக்கள் ஒவ்வொன்றுக்கும் சிறிது சிறிது வித்தியாசங்கள், குணங்கள், தன்மைகள் முதலியவைகள் அதாவது புலன் வித்தியாசங்கள் அறிவு வித்தியாசங்கள், உள்ளது போலவே மனிதஜீவனும் மற்ற ஆத்மாக்கள் போலவே இருப்பதோடு புலன் அறிவு விஷயத்தில் சற்று கூடுதல் வித்தியாசம் மாறுதல் முதலியவைகள் உடைய ஜந்துவா?
- உலகத்திலுள்ள மேல் கண்ட ஜந்துக்கள் எல்லாம் வேறு. மனித ஜெந்து மாத்திரம் வேறு என்று சொல்லும்படி வேறுபாட்டை உடைய ஜந்துவா மனிதன்?
என்பன போன்ற இன்னும் பல கேள்விகளும் சந்தேகங்களும் ஒரு பக்கமிருந்தாலும், மனிதன் என்பதையே நாம் என்ன என்பதாக முதலில் ஆராய்வோம். மனிதன் என்பதின் தன்மை விளக்கம் ஆங்கிலத்தில் (Self) என்பதான தான், நான், என் என்கின்ற குறிப்பு உணர்ச்சிகளே யாகும். அக்குறிப்புகளில் ஒரு மனிதன் தன்னை நான் என்று சொல்லிக் கொள்ளும் போதும் எனக்கு என்னுடைய என்று சொல்லிக் கொள்ளும் போதும் ஏற்படுகின்ற உணர்ச்சி எப்படிப்பட்டது? அது எப்படி உண்டாகின்றது? என்பதை கவனித்தால் ஆத்துமத் தன்மை என்பது தானாகவே விளங்கும்.
அதாவது ஒரு மனிதன் நான் என்பதில் அந்த மனித சரீரத்தின் எந்தப் பாகம் தனித்து இருந்து நான் என்கின்றது? அல்லது அந்த சரீரம் மொத்தமுமா? அல்லது சரீரமில்லாமலா? சரீரத்தில் எதுவரை நான் என்ற உணர்ச்சி இருக்கின்றது? சரீரத்தில் இருந்து எது போய்விட்டால் நான் என்பது போய்விடுகின்து? என்பது முதலாய் கேள்விகளுக்கு சமாதானம் கிடைத்தாலொழிய நான் என்பது விளங்காது.
இந்த முறையில் நான் என்பதை கவனிக்கும்போது என் சரீரம், என் உயிர், என் ஆத்மா, என் ஆவி, என் ஜீவன், என் மனம், என் அறிவு, என் புத்தி, என் எண்ணம், என் சித்தம், என் பிராணன், என் பிராணவாயு, என் சூக்ஷம சக்தி, என் கடவுள், என் ஆண்டவன் என்பது போன்ற அதாவது மனிதன் அல்லது ஆத்மா அல்லது ஜீவன் என்பவைகளாகிய எது எதை நாம் மனிதனாக ஆத்மாகவாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றோமோ அவைகளை எல்லாம் தன்னில் இருந்து தனிப்படுத்தி அவைகள் கூட என் என்பதைச் சேர்த்து பேசுவதைப் பார்க்கின்றோம். ஆகவே என் ( நான் ) வேறு. மேற்கண்ட மற்றவைகள் எல்லாம் வேறு என்பதாக நினைக் கும்படியாக இருக்கின்றது. ஆதலால் இவைகள் எல்லாம் மனிதனுடைய தன்மை உணர்ச்சி ஆகிய நான் என்பது அல்ல என்றே சொல்ல வேண்டி யிருக்கிறது.
இந்த நிலையில் மனிதனாகிய நான் என்னும் தன்மை உணர்ச்சி செய்த காரியங்களுக்கு ஆக நான் அல்லாத அதாவது என் ஆத்மா என்பதாகிய ஒரு வஸ்துவோ ஒரு ஜீவனோ ஒரு சக்தியோ ஆகிய சூக்ஷம ஜீவன் என்பது எப்படி அந்தப்பயனை அனுபவிக்க முடியும்? அனுபவிப்பதுதான் எப்படி நியாயமாகும்? நான் செய்த காரியத்திற்கு என் ஆத்மாவை தண்டிப்பதோ, கண்டிப்பதோ சன்மானமாகியவைகளை கொடுப்பதோ எப்படி கடவுளின் நீதியாகும்? என்கின்றதான விஷயம் மிகவும் யோசிக்கத் தக்கதாகும்.
இந்தமாதிரியான பிரச்சினைகளுக்கு சமாதானம் சொல்லுபவர்கள் பெரிதும் ஒரே சமாதானம் தான் சொல்லுவார்கள். அதென்னவென்றால் “இம் மாதிரியான பிரச்சினை வெகு ஆயிரம் வருஷங்களுக்கு முன்னமேயே பலரால் கேட்கப்பட்டாய் விட்டது. இவை சாதாரண மனிதர்களுக்கு புரியும் படியானவைகள் அல்ல, சொன்னாலும் உங்களைப் போன்றவர்களால் கிரகித்துக் கொள்ள முடியாது. வேண்டுமானால் கைவல்யம், ஞானவெட்டி, வாகிஷ்டம், கீதை, வேதாந்தசாரம், தத்துவகீதை முதலாகியவைகளைப் பாருங்கள். அதற்கு வேறு பல பக்குவங்கள் வேண்டும்” என்பது போன்ற பதிலை சொல்லி விடுவார்கள்.
சாதாரணமாக கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமானவர்களுக்கும் அனேகர் இந்த விஷயத்தில் கவலைப்படாமல் தீர்ப்பு நாளை உத்தேசித்து தாங்கள் இந்த சரீரத்துடனேயே ஒரு காலத்தில் மறுபடியும் எழுப்பப்பட்டு ஏதோ ஒரு பலனை அடையக்கூடும் என்கின்ற அளவோடு விட்டு விட்டார்கள். ஆதலால் அவர்களிடம் அதிக சிக்கலோ புரட்டோ கிடையாது. பௌத்தர்கள் “ஆத்மா என்பதே கிடையாது நித்திய வஸ்து என்பதே கிடையாது” என்பதாக முடிவு கட்டிவிட்டார்கள். ஆதலால் அவர்களுக்குள்ளும் இம்மாதிரியான கொசமுசாக்கள் கிடையாது.
ஆனால் இந்து மதக்காரர்கள் என்பவர்கள் மாத்திரம், ஆத்மா, சூக்ஷம சரீரம், மோக்ஷ லோகம், நரகலோகம், மறுபிரப்பு அதுவும் பலவித மாய் அதாவது புல்லாகிப் பூண்டாகி என்று படிப்படியாய் ஏற்பட்டது என்றும் இவைகள் எல்லாவற்றையும்விட மற்றொரு விதமாய் அதாவது ஆத்மாக்கள் பிதுர் தேவதைகள் ஆகி பிதுர்லோகம் என்பதில் இருந்து கொண்டு பிள்ளைகள் சந்ததியார்கள் முதலியவர்களால் இந்த உலகத்தின் பிராமணாளுக்கு கொடுக்கப்படுவதை அவர்களது மந்திர சக்தியின் மூலமாய் பெற்று அடைந்து வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் இன்னும் பலவிதமாய் சொல்லப் படுகின்றன. ஆகவே இவை தானாகவே ஒன்றுக்கொன்று முரண்படுவதாலும் அதைப்பற்றி முன்னமேயே பலபல சமயங்களில் வேறுவேறு வியாசங்களில் எழுதப்பட்டதாலும் இதை நிறுத்திவிட்டு அடுத்த வியாசத்தில் “நான்” அல்லது Self தன்மை என்பதைப் பற்றி விவரிப்போம்.
(குடி அரசு - கட்டுரை - 03.05.1931)