பெண்கள் யாவரும் படிக்க வேண்டும். தங்களுடைய சீர்திருத்தத்தின் படி அரசாங்க உத்தியோகங்கள் பெரும்பாலும் இனி பெண்களுக்கே வழங்கப்படுமாதலால் அவர்கள் படித்து தயாராயிருக்க வேண்டும். இனி மேல் சுயமரியாதை உள்ள எந்த ஆண்களும் படித்த பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்வார்கள். ஆதலால் பெண்கள் படித்திராவிட்டால் அவர்கள் 'கன்னியாஸ்திரிகள்' மடத்திற்குதான் இனி அனுப்பப்படுவார்கள். அனேக ஆண்கள் தாங்கள் கல்யாணம் செய்து கொண்ட பிறகுகூட இப்போது யோசித்துப் பார்த்து தங்களது சுயமரியாதையை உத்தேசித்து தாங்கள் முன்கலியாணம் செய்து கொண்ட படிக்காத பெண்களை தள்ளிவிட்டு படித்த பெண்களாகப் பார்த்து மறு விவாகம் செய்து கொள்ளப் பார்க்கின்றார் கள். ஆதலால் பெரிய பெண்கள் கூட தங்களுக்கு ‘எப்படியோ ஒருவிதத்தில் கல்யாணமாகி விட்டது. இனி பயமில்லை’ என்று குருட்டு நம்பிக்கையில் இருந்து விடாமல் அவர்களும் கஷ்டப்பட்டு படித்து தங்கள் தங்கள் புருஷன்மார்களை வேறு கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் படித்தால் கள்ளப் புருஷர்களுக்குக் கடிதம் எழுதுவார்கள் என்று மூடப் பெற்றோர்கள் கருதுகிறார்கள், சொல்லுகின்றார்கள். அது மிகவும் முட்டாள்தனமும் போக்கிரித்தனமுமான கருத்தாகும். எந்த பெற்றோர்களும் இதற்காக பயப்பட வேண்டியதில்லை. எந்தப் பெண் கடிதம் எழுதினாலும் ஆண் பிள்ளைகளுக்குத்தான் எழுதுவார்களே ஒழிய வேறு யாருக்கும் எழுத மாட்டார்கள். ஆதலால், நாம் ஆண்களுக்கு இப்போதே சொல்லி வைத்துவிடலாம். என்னவென்றால் எந்தப் பெண் கடிதமெழுதினாலும் படித்துப் பார்க்காதீர்கள் என்றும், படித்துப் பார்த்தாலும் பதில் எழுதாதீர்கள் என்றும் சொல்லி வைத்து விடலாம். அந்த வார்த்தைகளை ஆண்கள் கேட்காவிட்டால் அந்த ஆண்களை தண்டிக்கின்ற தண்டனையையே பெண்களுக்கும் தண்டித்து விடலாம். இந்த காரியத்திற்காக உலகில் உள்ள மக்கள் சமூகத்தில் பாதியைப் படிப்பில்லாமல் வைத்திருப்பது என்பதும் மிகவும் மோசமான காரியமேயாகும்.
சற்றுமுன் இங்கு நடந்த துருவ சரித்திரத்தில் பெண்கள் நடித்த மாதிரி மிகவும் போற்றத்தக்கதாகும். இதை கற்பித்த உபாத்தியாயர் மிகவும் கற்பிப்பதில் தேர்ந்த உபாத்தியாயர் என்பது எனது அபிப்பிராயம். பிள்ளைகளும் மிகவும் கூர்மையான அறிவுள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும் .
ஆனால், கதை மாத்திரம் மிகவும் மோசமானது. ஏனெனில் இக் கதையில் அறிவும் இல்லை ஒழுக்கமும் இல்லை. இரண்டு பெண்டாட்டி கதை சில விஷயங்களில் இயற்கையாகக் காணப்பட்டாலும், காட்டுக்குப் போய் தபசு செய்து ஏதோ காரியம் சாதித்ததாகச் சொல்லப்படுவது இயற்கைக்கும். அறிவுக்கும் நேர்விரோதமானதோடு மக்கள் அறிவைக் கெடுப்பதுமாகும். ஆதலால் உபாத்தியாயர்கள் இனி இம்மாதிரி காரியங்களுக்கு நல்ல கதைகளாக அதாவது அறிவு, ஒழுக்கம், முயற்சி, தன்நம்பிக்கை ஆகிய காரியங்களுக்கும் மக்கள் பின்பற்றி நடப்பதற்கும் ஏற்றதாகப் பார்த்துத் தெரிந்தெடுத்து நடத்தப்பட வேண்டும்.
தவிர கும்மி, கோலாட்டங்களை ஒழித்து விட்டு ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக் குத்து, குஸ்தி முதலியவைகளையும் சொல்லிக் கொடுத்து ஒரு ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம் உணர்ச்சி ஆகியவைகள் பெண்களுக்கும் உண்டாக்கும் படியாகவும் செய்ய வேண்டும்.
(குறிப்பு : ஈரோட்டில் 20.04.1931 அன்று ‘பெண்கல்வி’ பற்றி ஆற்றிய உரை.
'கருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை' என்ற தலைப்பில் வெளியானது. குடி அரசு - சொற்பொழிவு - 26.04.1931)