தலையங்கம்

“இந்து மத மற்றும் சமூக அமைப்பானது எப்படி இருக்கிறது என்றால், நீங்கள் ஒருபோதும் அதன் பிம்பத்தினை நடைமுறையோடு இணைக்க முடியாது. ஏனெனில், அந்த பிம்பம் அத்தனை மோசமாக இருக்கிறது. மாறாக, நடைமுறையை பிம்பத்தின் நிலைக்கு உயர்த்தலாம் என்றால், நடைமுறையானது மோசத்திலும் மோசமானதாக இருக்கிறது. இது மிகையல்ல. இந்து மத அமைப்பையோ, இந்து சமூக அமைப்பையோ எடுத்துக் கொண்டு - சமூகப் பயன்பாடு மற்றும் சமூக நீதிப் பார்வையில் அதை ஆராய்ந்து பாருங்கள். பொதுவாக, மதத்தை எந்தப் பூச்சும் இன்றி அப்படியே எடுத்துக் கொண்டால், மதம் நன்மையை அளிப்பது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கூற்றின் அடிப்படையில் ஆராய, இந்து மதம் ஒரு மோசமான சான்றாகவே இருக்கும். இந்து மதம் பரிந்துரைக்கக்கூடிய இந்து பிம்பமானது, இந்து சமூகத்தை ஒழுக்கங்கெட்ட நிலைக்கும், தரக்குறைவான நிலைக்குமே தள்ளுகிறது.''

டாக்டர் அம்பேத்கர், ஆங்கில தொகுப்பு : 1, பக் : 218

கருநாடக மாநிலம் மங்களூரில் சனவரி 24 அன்று, ஒரு கேளிக்கை விடுதிக்குள் ராம சேனா பயங்கரவாதிகள் நுழைந்து - அங்கிருந்த பெண்களை விரட்டி, தலைமுடியை இழுத்து, கன்னத்தில் அறைந்து, கீழே தள்ளி, மானபங்கப்படுத்தியுள்ளனர். இனி வரவிருக்கும் காதலர் நாளன்றும் இதே போன்ற விலங்காண்டித்தனத்தை அரங்கேற்றப் போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. இவர்கள் "இந்து கலாச்சாரத்தின் காவலர்களாம்.' அப்படியெனில், ஒட்டுமொத்த ஒழுக்கக் கேட்டின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் இந்து கோயில்களைத்தான் இவர்கள் முதலில் தங்களுடைய குறியிலக்காக வைத்திருக்க வேண்டும். ஆபாசக் களஞ்சியங்களான இந்து மத புராணங்களும், சாஸ்திரங்களும்தானே ஒழுக்கக் கேட்டையும், ஊழலையும் அங்கீகரிக்கின்றன!

மங்களூரில் அய்ந்து பெண்கள் மீது மட்டுமே இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கருத முடியாது. பெண்களுக்கான சுதந்திரத்தின் மீது ஏற்பட்ட அச்சுறுத்தலாகத்தான் இது பார்க்கப்பட வேண்டும். அதனால்தான் அவை ஒரே நாளில் நாடெங்கும் எதிரொலிக்கின்றன. அதே நேரத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். குஜராத் இனப்படுகொலையின்போது, முஸ்லிம் பெண்களின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துக் கொன்ற போதும், கயர்லாஞ்சியில் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு கொல்லப்பட்ட போதும், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும்போதும் - சாதி இந்து பெண்கள் அமைதி காக்கின்றனர்; ஊடகங்களும் அதைப் பரபரப்புச் செய்தியாக்குவதில்லை.

பெரும்பங்கு பெண்கள் குறிப்பாக, சாதி இந்து பெண்கள்தான் இந்து மதத்தின் அத்தனை இழிவுகளையும் பண்பாடு என்ற பெயரில் சுமக்கின்றனர். இந்து மதம், இந்தியாவை சாதி ரீதியாக கூறு போட்டிருப்பது குறித்தும், இங்கு நடக்கும் சாதி, மத ஒடுக்குமுறைகள் குறித்தும் அவ்வளவு ஏன், சாதியும் மதமும் பெண்கள் மீது இடையறாது செலுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்க வன்முறைகள் குறித்தும் குறைந்தபட்ச அறிவோ, அக்கறையோ இந்திய மேல்தட்டு ஆதிக்க சாதிப் பெண்களுக்கு இல்லை.

பெண்களை அடிமைப்படுத்தும் இச்செயலை "தாலிபான்மயமாக்கல்' என்றே அறிவு ஜீவிகளும் ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றனர். உண்மையில் அது "இந்துமயமாக்கல்.' இந்து வெறியர்களும், சனாதனவாதிகளும் தங்களின் அடிப்படைவாதங்களுக்கு முஸ்லிம்களை காரணம் காட்டுவதுதான் பார்ப்பனியம். இந்து வெறித்தனங்கள் ஏதோ முஸ்லிம்களிடம்தான் கற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதுபோல சித்தரிக்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஓர் இந்து பிறப்பது முதல் இறக்கும் வரை, அவனுடைய ஒவ்வொரு முடிவையும் தீர்மானிப்பது இந்து பண்பாடுதான். சமத்துவமின்மைதான் இப்பண்பாட்டின் அடித்தளம்.

பெண்களிடம் நாம் கேட்பது ஒன்றுதான். இப்போது நீங்கள் யாரை எதிர்க்கப் போகிறீர்கள்? மங்களூர் போன்ற நிகழ்வுகளுக்கு காட்டப்படும் எதிர்வினை, அந்நிகழ்வோடு முடிந்துவிடும். "பண்பாட்டைக் காப்பது' என்ற பெயரில் நடத்தப்படும் இது போன்ற வன்முறை களுக்கான தீர்வு - இந்து கருத்தியலை இடையறாது எதிர்ப்பதிலும், புறக்கணிப்பதிலும்தான் இருக்கிறது. இந்துத்துவவாதிகளுக்கு கொடுக்கப்படும் உண்மையான பதிலடியும் அதுவே. பெண்கள் தாலி கட்டிக் கொண்டு, சமையலறைக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்பது இன்று ராம் சேனாவோ, பிற இந்துத்துவவாதிகளோ கண்டுபிடித்த விதிமுறை அல்ல. இந்துக்களின் மநு தர்மத்தில் எழுதி வைக்கப்பட்ட, பெண்களுக்கு எதிரான அடிமை சாசனம் அது. இந்த ஆணி வேரை எதிர்க்க பெண்கள் துணிய வேண்டும்.

 

Pin It