கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தியது ஏன்? (2)

தஞ்சை மாநாட்டில் பெரியார் ஜாதி ஒழிப்பைப் பற்றி மிக ஆவேசமாகப் பேசுகிறார். தன்னுடைய தொண்டர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஜாதியை ஒழிப்பதற்கு ஆயிரம் பாப்பனரைக் கொன்றால்தான் முடியும் என்றால், கொல்லத் தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார். மக்கள் ஆரவாரித்து உடன்பாடான பதிலைக் கொடுக்கிறார்கள். அந்த மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கிற இந்தச் சட்டப் பிரிவுகளை நீக்கவில்லை என்றால், வருகிற நவம்பர் 26 நாளன்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவுகளை எரிப்போம் என்று அறிவிக்கிறார்.

periyar speech 533ஏன் நவம்பர் 26ஐ அவர் தேர்ந்தெடுத்தார் என்றால், அரசியல் சட்ட வரைவு எழுதப்பட்டு அதை நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தில் நம்முடைய பெரும் மதிப்பிற்குரிய அம்பேத்கர் அவர்களால் முன் வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதலை கொடுக்குமாறு நாடாளுமன்றத்தைக் கோருகிறார்; 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் தான் அந்த அரசியல் சட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. எனவே தான் அதை அரசியல் சட்ட தினமாக Constitution Day என்று கொண்டாடுகிறார்கள்.

எனவே அந்த நாளில் நாங்கள் அரசியல் சட்டப் பிரிவுகளை எரிப்போம் என்று பெரியார் அறிவித்தார். உடனடியாக தமிழ்நாடு அரசு விரைவாக செயல்படத் தொடங்கியது. பெரியாருக்கு ஆதரவாக இருந்த காமராசர் முதலமைச்சராக இருந்தாலும் கூட காவல்துறை - உள்துறை என்பது பக்தவச்சலம் என்கிற ராஜாஜியின் ஆதரவாளர் கையில் தான் இருந்தது. பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் என்கிற இராஜாஜியின் ஆதரவாளர்கள் இருவருமாக சேர்ந்து அந்த சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். 3 ஆம் தேதி பெரியார் பேசி முடித்தார் நவம்பர் 6 ஆம் தேதியே அந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்கனவே பெரியார் தேசியக் கொடியை எரிப்பேன் என சொல்லி இருந்ததையும், 1952 ஆம் ஆண்டு தேவைப் பட்டால் அரசியல் சட்டத்தை எரிக்க நேரிடும் என்று சொல்லி இருந்ததையும் கணக்கில் கொண்டு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த அந்த மசோதாவை அவர்கள் அவசர அவசரமாகத் தாக்கல் செய்கிறார்கள். அது விவாதத்திற்குப் பின்னால் நவம்பர் 11 ம் நாள் சட்டமாக்கப்பட்டது. அது தான் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம்.

அதன்படி காந்தியார் படத்தையோ அரசியல் சட்டத்தையோ தேசியக் கொடியையோ எரிப்பதும் அவமதிப்பதும் தண்டனைக்குரிய குற்றம்; அதற்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கலாம் என்ற அந்த சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். உடனடியாக பெரியார் தனது விடுதலை ஏட்டில் அறிக்கை விடுகிறார் “தோழர்களே! தெரிந்து கொள்ளுங்கள்! இப்படிப்பட்ட சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டால் உங்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை என்பதைப் புரிந்து கொண்டு, விருப்பமுள்ளவர்கள் பெயர் கொடுங்கள்” என்கிறார்.

ஏற்கனவே பெயர் கொடுத்திருந்த 10,000க்கும் மேற்பட்டவர்கள் எல்லோரும் உறுதி செய்கிறார்கள், நாங்கள் அரசியல் சட்டத்தை எரிப்போம் என்று. அரசியல் சட்ட எரிப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு பெரியாரை அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு முதல் நாள் கைது செய்து விடுகிறார்கள். 25 ஆம் தேதி பெரியாரைக் கைது செய்து வேறு ஒரு வழக்கிற்காக எனச் சொல்லியும், இன்னொன்று இந்த குற்றம் நிகழாமல் தடுப்பது என்பதை 151ஆவது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைப் பயன்படுத்தியும் பெரியாரைக் கைது செய்கிறார்கள். 26 ஆம் நாள் போராட்டத்தில் பெரியார் கலந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவர் சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார். இருந்தாலும் 10,000க்கும் மேற்பட்டோர் அந்த அரசியல் சட்டத்தின் பிரிவுகளை, தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும், சின்னச் சின்ன கிராமங்கள் உட்பட, எரிக்கிறார்கள்.

ஒன்றை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னற்றக் கழகம் பிரிந்த போதே, பெரியாரிடம் இருந்த இளைஞர்களும் தொண்டர்களும் எல்லோரும் போய் விட்டார்கள்; இவரோடு யாரும் இல்லை என்று பலர் கருதிக் கொண்டு பேசிக் கொண்டிருந்த வேளையில்தான் - தி.மு.க பிரிந்து போன ஏழாண்டுகள் கழித்து அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டப் பின்னாலும், 10,000க்கும் மேற்பட்டோர் எரித்தார்கள். வசதியின்மை காரணமாக போக்குவரத்து இல்லாத காரணத்தால் பலர் கைது செய்யப்படக் கூட இல்லை. அப்படி கைது செய்து கொண்டுவந்து தண்டிக்கப் பட்டவர்கள் 4000 பேர். எல்லோருக்கும் ஒரு மாதம் முதல் ஓர் ஆண்டு வரை சிறை தண்டனை கொடுத்தார்கள்.

அந்த சமயத்தில் ஒரு முறை தமிழ்நாட்டுக்கு இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த நேரு அவர்கள் வந்தார். வந்து பல கூட்டங்களில் பேசினார். பெரியார் போராட்டத்தை அறிவித்தவுடன் “அரசியல் சட்டத்தை ஏற்க மறுப்பவர்கள் உடனடியாக மூட்டை முடிச்சைக் கட்டுக் கொண்டு வெளிநாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்’ என்று கூறுகிறார். இங்கு வந்த பின்னாலும் “அவர்கள் இருக்க வேண்டிய இடம் பைத்தியக்கார மருத்துவமனை அல்லது சிறைச் சாலையில் தான் இருக்க வேண்டும்” என்று பேசுகிறார். இது டிசம்பர் மாதம். தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட பேச்சு வந்தவுடன் உடனடியாக வழக்கு விசாரணை நடந்த வழக்குகளில் எல்லாம் தண்டனையை உயர்த்தி கொடுக்கத் தொடங்குகிறார்கள்.

சிலருக்கு மட்டும் ஓராண்டு, ஒன்பது மாதங்கள் வரை மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த தண்டனையானது நேருவின் வருகைக்கு பின்னால் 18 மாதங்களாக, 2 மடங்காக உயர்கிறது. ஏனென்றால் பெரியார் அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்ட நாளில் இருந்து அதை எதிர்த்து வந்திருக்கிறார். இந்த அரசியல் நிர்ணய சபையில் அனைத்து மக்களுக்கும் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு நடந்த பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களின் பிரதிநிதிகளால் எழுதப்பட்ட சட்டம் அல்ல இது. இது 100க்கு 14 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்த நில உடமையாளர்கள், கல்வியாளர்கள், பட்டப்படிப்பை முடித்தவர்கள், பட்டாதாரர்களும் பட்டதாரிகளும் என்று சொல்லுவார்கள், அப்படி வரி செலுத்துவோராக 14 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி வெகுமக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்? பணக்காரர்களுக்கும் படித்த கூட்டத்திற்கும் தான் இவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இவர்களால் எழுதப்பட்ட சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொடக்கத்திலிருந்து பெரியார் சொல்லி வந்தார். அதையும் இணைத்து தான் நேரு அவர்கள் இப்படி கடுமையான சொற்களால் சொன்னார்.

அதற்கு பின்னால் 4000 பேர் தண்டிக்கப் பட்டார்கள். அவர்களை அரசியல் கைதிகளாக நடத்தவில்லை. விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் காங்கிரஸ்காரர்கள் கைது செய்யப் பட்டால் அரசியல் கைதிகள் என்று கூறி உரிய மரியாதையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் கைதானவர்கள் கிரிமினல் குற்றவாளிகளைப் போன்று நடத்தினார்கள். கடுமையான வேலைகள் வழங்கப்பட்டன. சரியில்லாத உணவுகள் வழங்கப்பட்டன. சிறைக்குள்ளேயே போராட்டம் நடந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு மாதத்திலேயே வயிறு சரியில்லாததால் வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்பட்டது. இதனால் சிலர் இறக்க நேரிட்டது. குறிப்பாக பட்டுக்கோட்டை ராமசாமி என்பவரும் மணல்மேடு வெள்ளைச்சாமி என்பவரும் 1958 ஜனவரி மாதமே சிறைக்குள்ளேயே இறந்து போனார்கள். அந்த உடல்கள் கூட சிறைக்குள்ளேயே புதைக்கப்பட்டன. ஆனால் அன்னை மணியம்மையார் நடத்திய போராட்டமும், நேரடியாக உள்துறை அமைச்சரிடம் செய்த விவாதமும் அந்த உடல்கள் இவர்களுக்குத் தோண்டியெடுத்துக் கொடுக்கப்பட்டது. உடல்களை கொடுங்கள் என்று சொல்வதற்கு ஒரு நாள் முன்பு இன்னொருவரும் இறந்து போனார். அவரையும் சேர்த்து அடக்கம் செய்தார்கள்.

இவர்கள் இரண்டு பேர் மட்டும் இறக்கவில்லை. எங்கே இவர்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் இறந்து விடுவார்களோ என்று அச்சப்பட்டு இடையிலேயே விடுதலை செய்யப்பட்டார்கள். விடுதலை செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்குள் இறந்தவர்கள் 13 பேர். மொத்தம் 18 பேர் இந்த போராட்டத்தில் சிறையிலும் வெளியிலும் இறந்தார்கள் என்பது வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.

அதுமட்டுமில்லை கைது செய்தவர்களைப் பற்றியும், கைது செய்யப்படாதவர்களைப் பற்றியும் பல செய்திகள் உள்ளன. கைக் குழந்தையோடு பெண்கள் பலர் கைதாயிருக்கிறார்கள், இளைஞர்கள், மாணவர்கள் கைதாகியிருக்கிறார்கள்.

கும்பகோணத்தை அடுத்த சோழபுரத்தில் சட்டத்தை எரித்த 139 பேர் கைது செய்யப்பட்டு திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். நள்ளிரவு காவல் உதவி ஆய்வாளர், 40 பேர்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துகொண்டு மீதி 99 பேர்களைத் திரும்பிப் போகச் சொல்லியுள்ளார். நாங்களும்தானே எரித்தோம், எங்களை ஏன் அனுப்புகிறீர்கள் என வினவியதற்கு, நீங்கள் எரித்ததை நான் பார்க்கவில்லை என்று கூறியதற்கு, அப்படியானால் உங்கள் கண் முன்னே இப்போது மீண்டும் எரிக்கிறோம், கைது செய்யுங்கள் என்று வாதாடியிருக்கிறார்கள். இருட்டில் எரித்தால் எப்படி அடையாளம் கண்டு கைது செய்ய முடியும் என அவர்களை விரட்டியிருக்கிறார்.

அடுத்த நாள் அவர்கள் 99 பேரும் சட்ட நகல்களை பாதியளவு எரித்து, எரியாத பகுதிகளையும், எரித்த சாம்பலையும் சேர்த்து வைத்து, உள்துறை அமைச்சருக்கு பார்சல் அனுப்பியுள்ளனர். உடன் எழுதியனுப்பிய கடிதத்தில், காவல் உதவி ஆய்வாளரின் கடமை தவறிய புகாரையும், தங்களின் பெயர், முகவரி விவரங்களையும் எழுதியதோடு, நேற்று தாங்கள் எரித்ததைப் பேருந்து நிலையத்தில் பார்த்த ஏராளமான சாட்சிகள் உள்ளனர் என்றும், குறிப்பாக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. இராமாமிர்த தொண்டைமானும் பார்த்தார் என்றும், எனவே தங்களை கைது செய்யுமாறு காவல்துறைக்கு ஆணையிடுமாறு கேட்டு விண்ணப்பம் அனுப்பியுள்ளனர். ஒருவேளை தங்களுக்கு சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பு அவர்களுக்கு.

திருச்சி வாளாடியைச் சேர்ந்த பெரியசாமியைப் பற்றிச் சொல்லுவார்கள், அப்போது ஆளுநராக இருந்த விஷ்ணுராம் மேதி சிறையைப் பார்வையிட்ட போது ஒரு 16 வயது சிறுவன் திருச்சி சிறையில் இருந்திருக்கிறார். திருச்சி சிறையில் மட்டும் 1940 பேர் இருந்ததாக கணக்குகள் கூறுகின்றன. அப்போது ஆளுநர் சிறுவனை அழைத்து “ஏதோ தவறு செய்து விட்டாய் உன்னை மன்னித்து விடுதலை செய்ய நான் தயாராக இருக்கிறேன், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் விடுவிக்கிறேன்” என்று சொல்லுகிறார் ஆளுநர். ஆனால் அந்த சிறுவர் சொல்லுகிறார் “நீங்கள் விடுதலை செய்தாலும் வெளியே சென்று அரசியல் சட்டத்தை மீண்டும் எரிப்பேன்” என்று அந்த மாணவர் சொல்கிறார். 'கடவுள் தான் உன்னை காப்பாற்ற வேண்டும்' என்று சொல்லிவிட்டு ஆளுநர் போய் விடுகிறார்.

மற்றொரு பக்கம் அதே வாளாடியைச் சேர்ந்த பெரியசாமி என்கின்ற மற்றொரு 13 வயது மாணவன் தூத்துக்குடியிலே இருக்கிற சிறுவர் சிறையிலே வைக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கும் உடல்நலம் குன்றிப்போய் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் 'மன்னிப்பு எழுதி கொடுத்துவிட்டு வெளியே செல்' என்கிறார்கள். முடியாது என்று மறுத்து சிறையிலேயே அவன் மடிந்தும் போனான்.

மண்ணச்சநல்லூரில் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில், அ.சேட்டு என்ற கிளைச் செயலாளரும், மகன் செல்வராசுவுடன் அவரது மனைவி அஞ்சலை அம்மாளும் 26.11.1957 அன்று மாலை கைது செய்யப்பட்டு லால்குடி கிளைச் சிறையில் விசாரணைச் சிறைவாசிகளாக அடைக்கப் படுகின்றனர். இரண்டு நாள் கழித்து, 29.11.1957 அன்று அதிகாலை 5.00 மணிக்கு அஞ்சலை அம்மையார் ஓர் ஆண் மகவை ஈன்றதாக 30.11.1957 ‘விடுதலை’ நாளேட்டில் செய்தி வந்துள்ளது. ஆக நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், எந்த அளவு கொள்கை உறுதி கொண்டவராக இருந்திருந்தால் தனது இளம் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு சட்டத்தை எரித்திருப்பார்?

இப்படி சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மட்டுமல்ல சிறை சென்றதன் காரணமாக குடும்பங்களைப் பிரிந்தவர்கள். திருமணமான பின் சிறைக்குப் போனவர்களின் குடும்பங்களை காப்பாற்ற ஆள் இல்லாததால் சிதறுண்டு போன குடும்பங்கள் ஏராளம், ஏராளம்! சரியாகச் சொல்ல வேண்டுமானால் பெரும் தியாகங்களைச் செய்திருக்கிறார்கள் அந்த அரசியல் சட்ட எரிப்புப் போராளிகள். அப்படிப்பட்ட அரசியல் சட்ட எரிப்புக் போராட்டம் என்பது தமிழ்நாட்டில் ஜாதிக்கு எதிரான, ஜாதி ஒழிப்புக்கு ஆதரவான பல கருத்துக்களை உருவாக்கிய போராட்டமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னாலும்கூட பெரியார் தொடர்ச்சியாக பல ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்தி இருக்கிறார். ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் படையை தமிழ்நாடெங்கும் அனுப்புகிறார். பாரதிதாசன் தலைமையில் ஒரு ஜாதி ஒழிப்பு மாநாடு அதில் பலரும் கலந்து கொள்கிறார்கள். அதில் பல பிரச்சாரப் படைகள், பேராசிரியர் சி. இலக்குவனார் தலைமையில் திருச்சியில் இருந்து தொடங்குகிறது. அதற்கு பின்னால் ஈரோட்டிலிருந்து, தஞ்சையிலிருந்து பல பிரச்சாரப் படைகள் பரப்புரை செய்த பின் தான் இந்தப் போராட்டம்.

எனவே மக்கள் முன் ஆதரவான கருத்துக்களை உருவாக்கிவிட்டு நடத்தப்பட்ட இந்த போராட்டம், ஜாதி ஒழிப்பு சிந்தனைகளை அது எழுப்பியது என்றாலும் அது மிகையானதல்ல. இப்படிப்பட்ட போராட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டுள்ள நாம், இதைப் பற்றி அறிந்து கொள்ளுகிற நாம், இந்த நாட்டின் பெரும் கேடாக இருக்கின்ற ஜாதி, ஜாதியத்தைக் கட்டிக் காப்பாற்ற உலகெங்கிலும் இல்லாத அளவு நிலவுகின்ற பெண்ணடிமைத்தனம், இவை இரண்டைப் பற்றியும் நாம் சிந்திப்பதும், அவற்றை ஒழிக்கும் முயற்சியில் நாம் ஈடுபடுவதும் தேவையான ஒன்று; அதை நாம் செய்தாக வேண்டும்; மற்றவர்களையும் செய்ய தூண்டியாக வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து உரையை முடிக்கிறேன்.

(அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை.)