திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் 29 தேதி காலையில் சென்னையிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டேஷனில் கிரான்ட் டிரன்க் எக்ஸ்பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டிருந்தார் ; பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
திரு. ஈ.வெ. இராமசாமி 29 காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும் போது எதிரிலிருந்த கூட்டத்தை கவனிக்கும்போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண்டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த திரு. பட்டாபி சீதாராமையரையும் கண்டு மரியாதை செய்தார். அந்த சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையையும் எல்லோருக்குமே ஞாபகப் படுத்தியது என்பதில் ஆnக்ஷபணை இல்லை. பிறகு வண்டி புறப்பட்டதும் திருவாளர்கள் எஸ். இராமநாதன், கண்ணப்பர் ஆகியவர்களுடன் திரு. இராமநாதன் அவர்கள் ஜாகைக்குப் புறப்பட்டு விட்டார்கள்.
இந்த விஷயம் ஏன் தெரிவிக்கப்பட்டது என்றால் பத்திரிகைகளில் ஈ.வெ.இராமசாமி அங்கிருந்த விஷயத்தைக் குறிப்பிட்டதைப்பற்றி பலர் பலவிதமாகப் பேசியதாக தெரிய வந்ததால் எழுத வேண்டியதாயிற்று. திரு. ஆச்சாரியாரை பார்க்கவே அங்கு சென்றிருந்ததாக வைத்துக் கொண்டாலும் திரு. ஆச்சாரியாரைப் பார்க்கக் கூடாதான விரோதம் ஒன்றும் இருவருக்குள்ளும் கிடையாது. பார்த்ததினால் இருவர் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவும் முடியாது.
திரு. ஈ.வெ. இராமசாமியைப் பொருத்தவரையில் தனது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அன்றியும் இன்றைய காங்கிரசில் சேரும் உத்தேசமும் இல்லை.
“மக்கள் விடுதலை அடைவதற்கு செல்வம் ஒரே பக்கம் சேராமல் பார்ப்பதும், ஜாதியையும் அதற்காதாரமான மதத்தையும் ஒழிப்பதும் ஆகிய தத்துவங்கள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய கொள்கையாகும்” என்ற நிலைமை ஏற்படும் போது யாருடைய தயவையும் எதிர்பாராமல் காங்கிரஸ்வாதியாயிருப்பார். ஆதலால் இதற்காக யாரும் சந்தேகப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.02.1931)