கரூர் முனிசிபல் சேர்மென் அவர்களே! வைஸ் சேர்மென் அவர்களே! முனிசிபல் கவுன்சிலர் அவர்களே!! கரூர் நகர மகாஜனங்களே!!!
இன்று நீங்கள் இவ்வளவு ஆடம்பரத்துடன் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரிகைக்கும் மற்றும் நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற வரவேற்புக் கொண்டாட்டத்திற்கும் நான் சிறிதும் தகுதியுடையேன் அல்ல என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், நீங்கள் உங்களுடைய அபிமானத்தையும், ஆமோதிப்பையும் கொண்ட ஒரு தொண்டனுக்கு நீங்கள் காட்ட வேண்டிய ஒரு அதிகமான அன்பையும் மரியாதையுமே பொருத்தமற்ற என் விஷயத் தில் காட்டியிருக்கின்றீர்கள் என்றே நான் கருதுகிறேன்.
ஆக இந்த அன்பையும் மரியாதையும் எனக்கு என்றோ அல்லது எனது தொண்டுக்கென்றோ கருதாமல் எனது கொள்கைக்கென்றே கருதுகிறேன். இதற்கு உதாரணம் என்னவெனில் உங்கள் உபசாரப் பத்திரத்தில் கண்டிருக்கும் வாக்கியங்களேயாகும். ஆகவே அதற்காக என் என்றும் மறவாத நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கனவான்களே! இன்று இந்திய நாட்டின் பல பாகங்களிலும் தேச விடுதலையின் பேரால் ஒருவித கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது நான் மனித சமூக விடுதலைக் கென்று ஒரு தனி வழியில் சென்று கொண்டி ருப்பதை நீங்கள் பாராட்டிப் புகழ்ந்திருப்பது எனக்கு மேலும் மேலும் ஊக்கத்தையும் உறுதியையும் கொடுக்கக் கூடியதாயிருக்கின்றது.
ஏனெனில் சிற்சில சமயங்களில் எனது தொண்டிற்கு ஏற்படும் எதிர்ப்புகளையும், பழிப்புகளையும் கண்டு நிதானித்து அயர்கின்ற சந்தர்ப் பங்களிளெல்லாம் உங்கள் போன்ற பொது ஜனங்களுடையவும், பொது ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களுடையவும் ஆமோதிப்பும் அன்பும் அனு கூலமாயிருப்பது அவ்வயர்வையும், நிதானிப்பையும் மாற்றி விடுகின்றது.
இது போது சமூக சமத்துவத் தொண்டே வேண்டற்பாலது என்கின்ற குறிப்பை நீங்கள் எடுத்துக் காட்டியது போலவே நானும் எனது 10, 20 வருஷத்திய பொது சேவையின் பலனாய் கண்டு பிடித்த ஒரு உண்மை யாகும்.
நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், விடுதலை பெற வேண்டுமானால், ஒற்றுமையான லக்ஷியமும் ஒன்றுபட்ட அபிப்பிராயமும் வேண்டும். ஆகவே அதற்காக பாடுபடுவது தான் நாட்டு விடுதலை முயற்சி என்று நான் கருதுகிறேன்.
ஏனெனில் சரித்திர காலம் தொட்டே - புராணக்கதைகளின் கற்பனைக் காலந்தொட்டே இந்நாடு மடமையிலும் அடிமைத் தனத்திலும் ஆழ்த்தப் பட்டிருப்பதை உணர்ந்தவர்களுக்கு இப்போது நடைபெறும் சமூகத் தொண்டின் பெருமையும் அவசியமும் தானாக விளங்கும்.
ஆகவே இது விஷயங்களைப் பற்றிய விரிவுரைகளை இவ்வூர் பிரபல கனவான்கள் ஏற்பாடு செய்திருக்கும் வெளிப்பொதுக் கூட்டத்தில் நிகழ்த்தலாம் எனக் கருதி இத்துடன் நிறுத்தி விட்டு முனிசிபல் நிருவாக சம்பந்த விஷயமாக சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று நீங்கள் உங்கள் உபசாரப் பத்திரத் தில் கேட்டிருக்கின்ற படி அதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டபடி நான் ஈரோடு முனிசிபல் சேர்மெனாயிருந்திருந்தாலும் சொர்ப்ப காலமாகிய இரண்டு வருஷ காலமே இருந்திருக் கிறேன். அதுவும் எனக்குப் பிடிக்காமல் நான் ராஜீனாமா செய்து விட்டு வந்தவன். அன்றியும் இன்றைய நிலைமை வேறு.
ஆகவே நான் நிர்வாகத்தில் இருந்த கால சுவல்ப அனுபவத்தையும் வெளியில் வந்த பிறகு அறிந்த சில அனுபவத்தையும் அதைப்பற்றிய என் சொந்த அபிப்பிராயத்தையும் பற்றி ஏதோ சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.
அந்தப்படி நான் எடுத்துச் சொல்லும் விஷயங்களில் சிலது பச்சை உண்மையாகக் கூட இருக்குமாதலால் சிலருக்கு அது மன வருத்தமாயிருந்தாலும் இருக்கலாம். ஆன போதிலும் நம்நாட்டு விஷயங்களைச் சகோதரர்களாகிய நாம் நமக்குள் பேசிக் கொள்வது நமது நடப்புக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்குமே தவிர அதனால் எவ்விதக் கெடுதியும் ஏற்பட்டு விடாதாதலால் நான் அதற்காக கவலைப்படவில்லை.
நண்பர்களே! முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு, ஜில்லா போர்டுகள் என்பது நம் நாட்டு மக்களின் சுகாதாரம், போக்குவரத்து வசதி, வாழ்க்கை சௌகரியம், கல்வி முதலிய ஒரு சிறு நன்மையான விஷயங்களின் பொறுப்புகளை அரசாங்கத்தார் குடி ஜனங்களாகிய நம்மிடமே ஒப்புவித்து நடத்திக் கொண்டு போகும்படி செய்திருக்கும் காரியங்களின் ஸ்தாபனங் களாகும்.
இவற்றை நாட்டு நடப்பு மொழியில் சொல்லுவதானால் குடிமக்கள் பஞ்சாயத்து நிர்வாகம் என்று சொல்லலாம். இதை நாம் ஒழுங்காக நிர்வாகம் செய்யத் தெரிந்து கொண்டோமானால் நமக்கு மேற்பட்ட ஒரு அரசாட்சியே தேவையில்லாத சமதர்ம பஞ்சாயித்து ஆட்சியை நாமே நடத்திக் கொண்டு போகக் கூடிய நிலைமை அடையலாம்.
அவ்வாட்சியில் மேல் ஜாதி, கீழ் ஜாதி, ஏழை பணக்காரன், அரசன் குடிகள் என்கின்ற வித்தியாசக் கொடுமைகள் இல்லாமல் எல்லோரும் சமமான மனிதர்களே என்கின்ற கொள்கைதான் தலைசிறந்து விளங்கும்., அப்படிப்பட்ட ஆட்சிதான் மனித சமூகத்திற்கு சாந்தியைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.
ஆகையால் இன்று நம் வசமிருக்கும் முனிசிபாலிட்டி முதலிய பஞ்சாயத்து ஸ்தாபனங்கள் மேல் குறிப்பிட்ட சுகாதாரம், போக்குவரவு சாதனம், வாழ்க்கை சௌகரியம், கல்வி முதலியவைகளுக்கு மாத்திரம் ஏற்பட்டது என்பது மாறி நீதி, குற்றவிசாரணை, நிர்வாகம், றாணுவம் ஆகிய விஷயங்களும், இப்பஞ்சாயத்துகளின் மூலமாகவே நடத்த நாம் முயற்சித்து வெற்றி பெற வேண்டும்.
அதுதான் நமது பஞ்சாயத்து ஆட்சியின் முடிவான லட்சியமாயிருக்க வேண்டும். அதற்குத் தயாராவதற்கே, இன்றைய தினம் நம் கைவசமிருக்கும் பஞ்சாயத்துகளை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அக்காரியத்தை சுலபமான காரியம் என்று கருதிவிடக் கூடாது. அதற்கு அநேக கஷ்டப்படவேண்டும் என்பதோடு குறிப்பாய் நமது நாட்டில் அதிகக் கஷ்டமாயிருக்கும்.
ஏனெனில் இங்கு மற்ற நாடு களைப் போல பணக்காரன், எளியவன், வலுத்தவன், இளைத்தவன் என்கின்ற கொடுமை மாத்திரமில்லாமல் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிறவி காரணமுமிருக்கின்றது. இது எந்த நாட்டிலுமில்லாதது என்பதோடு இங்கு மிக்க மோசமான நிலையிலிருந்து கொண்டு எல்லாப் பொதுக் காரியத்தையும் எவ்வித முன்னேற்றமுமடையாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.
முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் என்பவை இவ்வித வித்தியாசங்கள் ஒழிந்தவைகளேயாகும். இந்த நாட்டு ஸ்தல ஸ்தாபன பஞ்சாயத்து ஆட்சிக்கு இந்த ஜாதி உயர்வு தாழ்வுகளே இன்று பல வழிகளில் தொல்லை விளைவிப்பதாக இருந்து வருகின்றது.
அதோடு மக்களின் மூட நம்பிக்கை முதலிய பல மடமைகளும் நமது நாட்டு நிர்வாகத்தை நல்வழிப்படுத்தி சமதர்மமடையத் தடை கல்லாயிருக்கின்றது. ஆகவே இவையிரண்டும் இப்போது முதல் முதலாக ஒழிக்கப் பட வேண்டும். பொதுவாக இன்றைய பஞ்சாயத்துக்கள் பெரிதும் சீர்கேடாகவே இருக்கின்றன.
முதலாவது பஞ்சாயித்து அமைப்பு முறைகளும் அதன் தேர்தல் எலக்ஷன் முறைகளும் அரசாங்கத்தின் பேரால் பஞ்சாயத்து ஸ்தாபனங்களின் மீது ஆட்சி செய்யும் முறைகளும் மிக்க கேவலமாக இருக்கின்ற வென்றே சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன். அதிலும் எனக்கு சற்று அனுபவமுள்ள நமது மாகாணத்தைப் பொருத்தவரை இங்கு ஸ்தல ஸ்தாபன ஆட்சியென்பது ஒரு பஞ்சாயித்துப் பொது நல நிர்வாக ஆட்சி என்று சொல்வதற்கில்லாமல், கூட்டு வியாபார ஆட்சியென்றே சொல்ல வேண்டும்.
இதிலுள்ள ஓட்டர்கள், அபேட்சகர்கள், அங்கத்தினர்கள், தலைவர்கள் நிர்வாக மந்திரிகள் வரை ஒரே யோக்கியதை அதாவது சுயநலமே முக்கிய லட்சியமாயல்லாமல் பஞ்சாயித்தின் உண்மைத் தத்துவத்தை அறிந்து அதற்கு மரியாதை கொடுப்பவர்கள் மிக்க அபுரூபமாகவே காணப்படுகின்றார்கள்.
பஞ்சாயத்து ஸ்தாபனங்களின் கடமை என்ன? எப்படிப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? யார் தலைவர்களா யிருக்க வேண்டும் முதலிய விஷயங்கள் மக்களுக்கு கற்பிக்கப்படவேயில்லை. அதற்கு இங்கு எவ்வித பள்ளிக் கூடமுமில்லை.
எவ்வித யோக்கியர் பஞ்சாயத்து ஸ்தாபனங்களுக்கு வந்தாலும் கடமை என்ன என்பதை அறிவதற்கு ஜனங்கள் விடுவதேயில்லை. சுய நலமும் கவுரவமும் தான் கடமையென்பதையே கற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.
இன்றைய தினம் கௌரவத்திற்கும், கீர்த்திக்கும் தான் ஸ்தல ஸ்தாபனப் பதவி என்பது ஆnக்ஷபிக்க முடியாத உண்மையாயிருக்கிறது. இந்த லக்ஷனத்தில் தேர்தல் முறைகளோ மிக்க ஆபாசமானது. இப்படிச் சொல்லுவதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது.
உதாரணம் வேண்டுமானால் சொல்லுகிறேன். ஒன்று நம் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள் அநேகம் கோர்ட்டுக்குப் போவது. இரண்டு ஸ்தல ஸ்தாபனத் தலைவர்களுக்கு இருந்த அதிகாரங்களை அரசாங்கத்தார் பிடுங்கி அதிகாரிகளுக்கும் கொடுத்து விட்டது.
மூன்று பணம் காசு புளக்கம் வெளிப்படையாயும் தாராளமாயும் ஏற்பட்டு விட்டது. இன்னும் என்ன உதாரணம் வேண்டுமென்பீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நமது ஓட்டர்களுக்கு, பிரதிநிதிகளுக்கு வேண்டிய யோக்கியதைகள் என்ன என்பதே தெரியாது.
சுய நல லட்சியம் கொண்ட பிரதிநிதிகளே தெரிந்தெடுக் கப்படுகின்றார்கள். கடமை உணர்ந்தவர்களையோ, போதிய சாவகாச மிருப்பவர்களையோ, பொது நலத்திற்கு நாணயமாயுழைக்க சக்தியும், சௌகரியமும், அறிவும், ஆசையும் கொண்டவர்கள் தெரிந்தெடுக்கப்பட முடிவதே யில்லை. சிறு மீன் போட்டு பெருமீன் எடுக்கக் கூடியவர்கள் தான் தெரிந் தெடுக்கப்பட முடிகின்றது.
பொறுப்பை உணர்ந்த பிரதிநிதிகளும் இல்லை. பொருப்பை வலியுருத்தி உணர்த்தும் ஓட்டர்களும் இல்லை. இந்த நிலையிலுள்ள மக்களைக் கொண்ட எந்த ஸ்தாபனந்தான் என்ன செய்யும்.
இந்த லட்சணத்தில் ஜாதிச் சண்டையும் கட்சிச் சண்டையும் கலந்து கொண்டால் பிறகு சொல்லவும் வேண்டுமா? நான் கீழே உள்ளவர்களை மாத்திரம் குற்றம் சொல்லவில்லை, மேலே உள்ள நிர்வாக அதிகாரிகள் மந்திரிகள் ஆகியவர்களே இந்த மோசமான நிலையை வளர்ப்பவர்களாயிருக்கின்றார்கள்.
ஏனெனில் அவர்களும் நாணயமாய் நடந்து கொள்ள முடியாத நிலைமையில் அப்பதவிகளை அடைபவர்களாய் இருக்கின் றார்கள். அவர்கள் அப்பதவியில் இருக்க வேண்டுமானால் கீழே நடக்கும் அக்கிரமங்களை ஆதரித்து அநீதியாய் நடந்து கொண்டால் தான் முடியும் படியாய் அந்தப் பதவிகள் அமைக்கப்பட்டுவிட்டன.
20, 30 வருஷ காலமாய் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அதிகமான சுதந்திரங்கள் அளிக்கப்பட்ட தாகச் சொல்லப்பட்டாலும் முன் இருந்த நாணயமும் நல்ல ஆட்சியும் இப்பொழுதிருக்க முடிவதில்லை. இந்தக் காரணங்களால் சில சுதந்திரங்கள் பிடுங்கப்படுவதும் நம்பிக்கையில்லை தீர்மானங்கள் பேரால் பல நிர்பந் தங்களும் அவநம்பிக்கைகளும் பாதுகாப்புகளும் ஏற்படுத்த வேண்டிய தாய் விட்டது.
இன்னும் சில சுதந்திரங்கள் பரித்துக் கொள்ளவும் முயற்சிக் கப்பட்டது. ஆனால் அச்சுதந்திரங்களை அனுபவித்து அதனால் நன்மை அடைகின்றவர்களே ஜட்ஜிகளாயிருந்ததினால் அது சற்று சாத்தியப்படாது போயிற்று. அதாவது ஸ்தல ஸ்தாபன தலைவர்களின் நிர்வாக அதிகாரத்தை பரித்து விடுவது என்பது.
ஆனால் அது ஏதாவது ஒரு காலத்துக்கு நடந்து தான் தீரும். இன்றைய நிலைமையில் நானும் கூட அந்த சுதந்திரங்களை தலைவர்களிடமிருந்து பரித்து அங்கத்தினர்களுடைய தாட்சண்ணியத்திற்கும், நிர்பந்தத்திற்கும் உட்படாத ஒரு நிர்வாக அதிகாரியிடம் ஒப்ப டைக்க வேண்டுமென்றுதான் விரும்பினேன், விரும்புகிறேன்.
ஸ்தல ஸ்தாபனங்கள் இன்று வக்கீல்கள் கட்சிக்காரர்களை சம்பாதிப் பதற்கும், பணக்காரர்கள் சட்டசபைக்குப் போவதற்கும், கிராமத்து மிராசு தாரர்கள் விவசாயத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும், ஒரு முதல் படிக் கட்டாயிருக்கின்றன. அது மாறியாக வேண்டும்.
பொருப்பை உணர்கின்றவர்கள் வர வேண்டும். ஒரு 5 வருஷ காலமாவது ஒருவன் நிர்பயமாய்ப் பொது நன்மைக்குத் தாக்ஷண்ணியமில்லாமல் உழைக்கத்தக்க மாதிரி யில் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஸ்தல ஸ்தாபன விஷய அனு போகங்கள் இருக்க வேண்டும்.
தவிர சுகாதார விஷயம் முக்கியமாய்க் கவனிக்கப்படவேண்டும். பொது ஜனங்களுக்கும் சுகாதாரம் வாழ்க்கையில், நடைமுறையில் கொண்டு வரும் மாதிரியில் கற்பிக்கப்பட வேண்டும். இப்பொழுது ஜனங்களுக்குப் பெரிதும் சுகாதார அறிவே சூனியமாயிருக்கின்றது.
தன் தன் வீட்டு குப்பையை அடுத்த வீட்டுக்குப் பக்கத்தில் கொட்டிவிடுகிறான். இந்த முறையில் எல்லா வீட்டுக்குப் பக்கத்திலும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றது.
ரோட்டின் இருமருங்கும் கக்கூசுகளாகவே பாவிக்கப்படுகின்றன. இதைப் பற்றி சேர்மென் கவனித்தால் கவுன்சிலர்கள் நிஷ்டூரப்படுகிறார்கள். கவுன் சிலர்கள் கவனித்தால் ஓட்டர்கள் கோபித்துக் கொள்ளுகிறார்கள்.
சேனிடரி சிப்பந்திகளுக்குச் சம்பளம் தாராளமாய் கொடுப்பதைத் தவிர அதிகாரம் நடத்த தாராளமாய் இடம் கொடுப்பதில்லை. பிறகு காரியம் எப்படியிருக்கு மென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆகவே இந்த அதிகாரமும் பறிக்கப்படவேண்டியது தான் என்று சொல்ல வேண்டி வருமோ என்று பயப்படுகிறேன்.
முதலில் சுகாதாரமும், பின்னது படிப்பாக வும் தான் ஸ்தல ஸ்தாபனங்கள் கவனிக்க வேண்டும். ரோட்டுப் போக்குவரத்தும் சாதனம் வேலை செய்வது சர்க்காருக்கே விட்டுவிட வேண்டும். சர்க்காரிடம் கண்டித்து வேலைவாங்க ஜனங்கள் பழக வேண்டும். பொருப்புகளையெல்லாம் நம்ம தலையில் போட்டுக் கொள்வதில் பயனில்லை.
இன்னின்ன சாதனம் வேண்டுமென்று தீர்மானிக்கும் வேலை நம்முடையதாகவும், நடத்திக் கொடுக்கும் வேலை சர்க்காருடையதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது அநேகமாய் சர்க்கார் நிர்ணயிக்கும் வேலைகளை நாம் நடத்திக் கொடுக்கின்றோம். இந்த குற்ற இரகசியம் நாம் அறியவில்லை.
நிற்க, இப்போது நாமினேஷன்களே ஒழிந்து எல்லா ஸ்தானங்களும் எலக்ஷனானதை நான் ஒரு விஷயத்திற்காக சந்தோஷப்படுகிறேன். எதற்காக என்றால் பணக்காரன் பணம் சற்றாவது ஏழைகளுக்கு (ஓட்டர்களுக்கு) பங்கிப் போகின்றது என்பதற்காகத்தான். இதைத் தவிர மற்றபடி இதனால் இன்றைக்கு வேறு அதிகமான நன்மைகள் ஒன்றும் ஏற்பட்டு விடாது.
( தொடர்ச்சி 21.12.1930 குடி அரசு இதழ் )
குறிப்பு : 28.11.1930 இல் கரூர் முனிசிபல் உபசாரப் பத்திரத்திற்கு பதில் அளித்து ஆற்றிய உரை
(குடி அரசு - சொற்பொழிவு - 07.12.1930)