நலம் குலைந்தார் வாழ்வில் நலமே விளைய வேண்டி மேற் கொள்ளப்படும் சடங்குகளும், சடங்கியல் சார் நம்பிக்கைகளும் எளிய மக்கள் வாழ்வில் காணப்படுகின்றன.  இயற்கையுடன் உறவாடி இயற்கை நிகழ்வுகளைக் கண்டு தமக்கான வளம் இயற்கையைப் போல நடந்து கொள்வதன் மூலமே கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவனவாக அவை அமைந்துள்ளன.  இவற்றை வளமைச் சடங்குகள் ((Fertility rituals) என அழைக்கலாம்.  தொடக்க காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் இச்சடங்குகளை இன்றும் வேளாண்குடிகளாக விளங்கும் மக்கள் பின்பற்றுகின்றனர்.  மேற்கு தமிழகத்தின் கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பின்பற்றப்படும் சடங்குகள் இங்கு ஆராயப்படுகின்றது.  அம்மக்களின் பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகிய நிகழ்வுகளில் மேற்கொள்ளப்படும் இச் சடங்குகள் அவர்களது நடைமுறை வாழ்வின் கண்ணோட்டங்களிலிருந்தே தோன்றியவை ஆகும்.

பூச்செடியில் வைத்தல்:-

மழலை முதல் சிறு வயது குழந்தைகள் வரை இறந்தால் மேற் கொள்ளப்படும் சடங்கு இது.  அக் குழந்தைகளைப் புதைக்கும் போது மஞ்சள் சாந்தில் நனைக்கப்பட்ட வேட்டியில் சுற்றிக் கட்டியே புதைக்கின்றனர்.  மஞ்சள் பூசிய துணியில் சுற்றிக் கட்டுதல் என்பது மீண்டும் கருவறைக்குச் செல்வதற்கான சடங்காகும்.  கைக்குழந்தையாயிருப்பின் அக்குழந்தையின் தாயாரிடம் இருந்து பால் பெறப்பட்டு அதனை இறந்த குழந்தைக்கு திலகமாய்

இட்டு வாயிலும் ஊற்றி மஞ்சள் துணியில் சுற்றி கட்டி புதைப்பர்.  பதினோறாம் நாள் அக்குழந்தையின் வயதுக்கேற்ற ஆடைகளும், கருகமணி வளையல், பூ, தின் பண்டங்கள், பொறிகடலை ஆகியவற்றை நீர் நிறைந்த கிணற்று மேட்டில் உள்ள செவ்வரளி போன்ற பூஞ்செடியின் வேரில் வைத்து சடங்கு மேற்கொள்கின்றனர்.  இது மீண்டும் அக்குழந்தை தாயின் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்வதாகும்.  அம்மை, காலரா முதலான நோய்களால் இறந்திருந்தாலும் மாரி யம்மனால் அழைத்துக் கொள்ளப்பட்ட அக்குழந் தைகள் மீண்டும் வந்து பிறப்பர் என்று நம்புகின்றனர்.  மீண்டும் பூவாய் மலரும் என்ற நம்பிக் கையே “பூச்செடியில் வைத்தல்” சடங்காகும்.

எருவின் மீது மறுமணம் செய்வித்தல்:-

இது இளம் விதவை திருமணத்தில் மேற் கொள்ளப்படும் சடங்காகும்.  திருமணம் ஆன சிறிது காலத்தில் கணவனை இழந்த பெண்ணை மணக்க வேறு ஆண் முன் வரும் போது உற்றார் மறுமணம் செய்விக்க முயலும் போது மேற்கொள்ளப்படும் சடங்காகும்.  முதல் கணவன் விபத்தினால், கொள்ளை நோயினால், எதிர்பாராத நிகழ்வுகளால் மரண முற்று விதவையாகியிருப்பர்.  அவர்களுக்கான திருமணம் ‘இரவில்’ நடைபெறும்.  தரையில் தொழுஉரமான ‘எரு’வினைக் கொட்டி நிரவி அதன் மீது வெள்ளை வேட்டி போர்த்தி அதன் மீது மணமக்களை அமரச் செய்து திருமணம் நிகழ்த்தப்படுகின்றது. 

மணமகளின் கையில் ‘நல்ல விளக்கு’ ஏற்றித் தரப்படுகின்றது.  மண நிகழ்வின் போது மணமகளின் கையில் ஏற்றப்படும் ‘நல் விளக்கு’ தீபமானது, அவளது இருண்ட வாழ்வில் மீண்டும் ஏற்றப்பட்ட ஒளிவிளக்காகும்.  அதன் பிறகு தாலிகட்டுதல் நடைபெறும்.  இத்திருமணத்தைப் பொறுத்தவரை, அவளின் தாய்வீட்டிலேயே நிகழ்த்தப்படுகின்றது.  கோயில், மண்டபம், மண மகன் இல்லம் முதலிய இடங்களில் நடத்து வதில்லை. 

இது மிகுந்த கவனத்துடன் எதிர்பார்ப் புடனும், நம்பிக்கையுடனும் மேற்கொள்ளப்படு கின்றதையே உணர்த்துகின்றது.  மேலும் நாற்று விடும் போது, முளைவிடும் நாற்று பழுதானால், வளர்ந்து பயிராகாமல், நோயினால் தாக்குண்டு அழிந்து போனால், மீண்டும் நன்றாக எருவிட்டு, பழுது நீக்கி நாற்று விட்டு விவசாயம் மேற் கொள்ளுவதை ஒத்ததாகவே இந்த மறுமணச் சடங்கு நிகழ்வுகள் அமைந்துள்ளன. இங்கு திருமணம் என்பது வேளாண்மைச் செயலாகவே கருதப்படுகின்றது.  வேளாண்மை செழிக்க எரு விட்டு நீர் பாய்ச்ச வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.  பட்டுப் போன மணமகளின் வாழ்வு செழிக்க எருவிட்டு நீர்பாய்ச்சத் தகுந்த ஆடவனை கரம் பிடிக்கும் திருமணம் இவ்வகையில் நடைபெறுகின்றது.

நாக்கு சுட்டு சேர்த்துக் கொள்ளுதல்:-

தம் குடிவிட்டு, ஊர் விட்டு வேற்றுப் புலங் களுக்குச் சென்று வாழ நேரிடும் போது, தொழில் புரியும் நிலையில் வேற்று சாதியாருடன் பழகி கலந்துறவாடும்போது காதல் தோன்றுவதும், மணம்புரியும் நிலைக்கு உறவு வலுப்படுவதும் நிகழ்வதுண்டு.  இந்நிலையில் வேற்றுப்புலத்தில் மணம் புரிந்தோ, மணம் புரிந்துகொள்ள தமது சுற்றத்தார், ஊராரிடம் தமது இணையுடன் வரும் போதோ அவர்களை சாதி கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கிவைப்பது பொதுவான வழக்கம்.  ஆனால் அவ்வாறு சாதி கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்காமல் மீண்டும் தம்மவராகவே சேர்த்துக் கொள்வதற்கான ஒரு சடங்காகவே ‘நாக்கு சுட்டு சேர்த்துக் கொள்ளுதல்’ சடங்கு அமைந்துள்ளது. 

வேற்றுப் புலத்திலிருந்து தமது சாதியைச் சார்ந்த ஆடவனால் அழைத்து வரப்படும் பெண்ணையும் தமது சாதிக்குள் இணைத்துக் கொள்ளும் சடங்காகவும் அமைந்துள்ளது.  குல தெய்வத்தின் முன்பாக பாதம் மறையும் அளவு குழி வெட்டி அக்குழியினுள் பசுவினுடைய சாணத்தைக் கரைத்து ஊற்றி, அதனுள் மணத்தம்பதியரை நிறுத்தி வைத்து, குல தெய்வத்தை வணங்கிய பிறகு, அத்தெய்வத்திற்கு ஏற்றப்பட்ட தீபத்தின் திரியைக் கொண்டு வந்து இருவரின் நாக்கையும் நீட்டச் செய்து நுனியைச் சுடுவதன் மூலமாக சாதி தீட்டு கழிந்ததாகக் கருதுகின்றனர்.  அதன் பிறகு எவ்விதத் தடையுமின்றி தம்மவராக ஏற்றுக் கொள்கின்றனர்.  வேற்றுமை பாராட்டுவதில்லை.

முறைப்பாடு தீர்த்தல்:-

ஒரு குடியைச் சார்ந்தவர்களுக்குள் ஏற்படும் முறைப்பாடு (அ) கோரிக்கைக்காக பிணக்குகள் ஏற்பட்டு பேச்சுவார்த்தை அற்றுப் பல காலம் இது நீடித்து வரும் நிலையில் அக்குடியினுள்ளே நிகழும் இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மீண்டும் பிரிந்துள்ளவர்கள் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டிய நிலையில் அல்லது இறந்து போனவரின் இடத்திலிருந்து செயலாற்ற பேசா திருப்பவரே பொறுப்பேற்க வேண்டிய உறவுடைய வராய் இருக்கும்போது, இரத்த உறவுள்ள குடி களுக்குள்ளே இச்சடங்கு மேற்கொள்ளப்படு கின்றது.  இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வில், இரு தரப்பினரும் ஒன்று கலந்து சடங்கு மேற் கொள்ளும் முன்பு ‘முறைப்பாடு தீர்த்துக் கொண்ட’ பிறகு சடங்கினைத் தொடங்குகின்றனர். 

அவ்வாறு தீர்த்துக் கொள்ளாமல் நேரடியாக ஒன்று கலந்து செயலாற்றும்போது முறைப்பாடு தாக்கும் என்றும், இதனால் மேலும் தீங்கும், உயிர் சேதம் போன்ற விளைவுகளும் நேரலாம் என்றும் கருதுகின்றனர்.  சில வேளைகளில் இறப்பு நேர்ந்துள்ள குடிகளில் அடுத்தடுத்து மரணங்கள் நேர்ந்து விடலாம்.  அம் மரணங்கள் நோய், விபத்து முதலான காரணங் களால் ஏற்பட்டிருக்கலாம். 

ஆனால் தொடக்கத்தில் நிகழ்ந்த இறப்பில் பிணக்குற்று பேசாதிருந்தவர்கள், பிரிந்திருந்தவர்கள் இறப்பில் அதனை மறந்து ஒன்று சேர்ந்ததால் தான் “முறைப்பாட்டின் தாக்கத்தால்” தொடர்ந்து உயிர் சேதங்கள் ஏற்படு கின்றது என்று காரணம் கற்பித்து இக்குறை பாட்டை நிவர்த்தி செய்திட பெருமளவில் ஆடு, மாடு, அசையும், அசையா சொத்துக்களை பறித்துக் கொள்ள புரோகிதக் கூட்டங்கள் முயன்ற போது, அதற்கு மாற்றாக சில சடங்குகள் நிகழ்த்தி சரிப்படுத்திக் கொண்டு ஒரு வாயிலில் நுழைந்து ஒரு இல்லிடத்தில் புழங்குபவர்களாக மீண்டும் மாற்றமடைகின்றனர்.  இது முறைப்பாடு கழித்தல் ஆகும்.

துக்க வீட்டிற்கு துக்கம் கேட்க புகும் முன்பு இடைவழியிலேயே பிரிந்திருப்பவர்களை தனித் தனியே நிறுத்தி இருதரப்பாருக்கும் இடையில் திரையிடப்படுகின்றது. கிழக்கு மேற்காக நிறுத்தப்பட்டுள்ள அவர்களின் இரண்டு தரப்பிலும் தலைமையானவர்கள் எதிரே இருப்பவருடன் இனி எப் போதும் ஒன்றாகவே இருப்போம் என்று ஒரு மனதுடன் கூறி எதிரே இருப்பவர்களுக்கு நெற்றியில் திலகமிடுகின்றனர்.  அவ்வாறே எதிர்தரப்பும் இவர்களுக்கு கூறுவதுடன் திலகமிடுகின்றனர்.  இவ்வாறு இரண்டு தரப்பிலும் அனைவருக்கும் இடப்பட்டவுடன் ஒன்றாக செயல்படுகின்றனர்.

முளைப் பண்டம் கட்டுதல்:-

அரசாணி கொம்பு நட்டு பந்தக்கால் நாட்டிய பிறகு பச்சைப் பந்தலின் நடுவில் மரக்குந்தாணியைக் கவிழ்த்து அதன் மீது நவதானியங்களை ஊற வைத்து முளைப்பண்டம் கட்டிவைப்பர்.  மறுநாள் திருமணச்சடங்கு நிறைவடைந்தபிறகு மணமக்கள் இருவரும் சேர்ந்தே முளைப்பண்டத்தையும் களைக் கொட்டு, குடம் ஆகியவற்றுடன் கிணற்று மேட்டிற்கு செல்கின்றனர்.  ஒரே களைக்கொட்டை இருவரும் தத்தமது வலதுகையால் சேர்த்துப் பற்றி கிணற்று மேட்டில் கொத்தி முளை வந்துள்ள பண்டங்களை அவ்விடத்தில் தூவுகின்றனர்.  பிறகு கிணற்றி லிருந்து நீரெடுத்து தெளிக்கின்றனர்.  பிறகு திரும்பி வரும்போது புற்றிலிருந்து சிறிது மண்ணெடுத்து வந்து குழைத்து வீட்டின் அடுப்பை மணமகள் செப்பனிடும் சடங்கும் நடைபெறுகின்றது.

இல்வாழ்வில் புதிதாக அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு அவர்களின் நடைமுறை வாழ்க்கை யையும், பொறுப்புக்களையும் அறிமுகப்படுத்தும் சடங்குகளாக இவை அமைந்துள்ளன.  இச்சடங்கு களை மணமக்கள் உரிய கரிசனத்துடன் மேற் கொள்வதைக் கணக்கில் கொண்டே அவர்களது வருங்காலத்தில் இல்லறவாழ்வில் பொறுப்பும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வார்கள் என் பதை கணிக்கின்றனர்.  அவர்கள் வாழ்க்கை எத்தனை சிறப்பானதாக இருக்கும் என்று அதனடிப் படையில்  நம்புகின்றனர்.  மேலும் கிணற்று மேட்டில் இடப்பட்ட நவதானியங்கள் முளைத்து செழித்து வளர்வதைப் போன்று அவர்களது வாழ்வும் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

நலுங்கு வைத்தல்:-

திருமணத்திற்கு ஒரு வார காலம் இருக்கும் போதே மணமக்களுக்கு நலுங்கு வைத்தல் சடங்கு தொடங்குகிறது.  இச்சடங்கினை மேற்கொள் பவர்கள் மணமக்களுக்கு முறையானவர்களாக இருப்பர்.  முதலில் எண்ணெய் தேய்த்தும், பிறகு மஞ்சள் சாந்தினை முகம் தோள், மார்பு, உடம் பெங்கும் தடவியும் நலுங்கு வைக்கப்படுகின்றது.  நலுங்கு வைக்கும்போது காதுமடல், தோள், மார்பு பகுதிகளில் தடவி விடுவதன் மூலம் புதிய வாழ்க்கை முறை, புதிய சூழலை எதிர்கொள்வதற்கான தகுதியை இச்சடங்கு வழங்குகின்றது.

அதன் பிறகு சிறப்பாக குளிப்பாட்டி புத்தாடை வழங்கி, உளுந்தால் செய்யப்பட்ட இனிப்பு, காரம் முதலியவை பரிமாறப்படுகின்றன.  இச்சடங்கின் மூலம் மணமக்களின் உடல்நலம் மேலும் கூட்டப் படுகின்றது.  இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு பாலுறவு பற்றிய கூச்சம், அச் சங்களைப் போக்கும் நடைமுறைகளாகவும் இச் சடங்கு அமைந்துள்ளது.  ஒரு சில பழங்குடி களிடம் திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு பாலுறவு முறையினை அக்குடியில் வயதில் முதிர்ந்த வர்கள் கற்றுத் தருவதாக அறியப்படுகின்றது.  நாகரிக சமூகத்தில் நலுங்கு வைத்தல் சடங்கு அதன் எச்சமாக அமைந்ததே ஆகும்.

தொப்புள் கொடி:-

திருமணம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகும் குழந்தைப் பேறு வாய்க்காதவர்கள் உள்ளத்தாலும், உடலாலும் சோர்வடைந்து பெரும் மனச்சுமைக்கு ஆளாகிவிடுவர்.  அந்நிலையில் கர்ப்பிணிப் பெண் களுக்கு பிள்ளைப் பேறு நிகழ்ந்தவுடன் குழந்தையி லிருந்து நீக்கப்படும் நஞ்சுக்கொடி அல்லது தொப்புள் கொடியின் சிறு பகுதியை பெற்று கருத்தரிக்காதவர்கள் வாழைப்பழத்தில் வைத்து விழுங்கிவிட்டால் அதன் பிறகு அவர்கள் கருவுற்று மகப்பேறு அடைவர் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது.  நவீன சமூகத்தில் அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் தொப்புள் கொடியில் ஸ்டெம் செல் ஆய்வினை மேற்கொண்டு உயிரணுக்களை உருவாக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். 

பழங்குடிச் சமூகங்களில் தொப்புள் அடையாளம் பிறர் கண்படுதலில் இருந்து காக்கப்படுவது பற்றிய நம்பிக்கைகளை சி. மகேசுவரன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.  காரிய சாத்தியமானதாகவே இந்த நம்பிக்கைகள் அமைந்திருக்கின்றன என் பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக தொப்புள் கொடி சார்ந்த செயல்பாடுகள் அமைந்திருக்கக் காண்கிறோம். இவ்விதமான நம்பிக்கைகள் அனைத்தும் தொல் பழங்காலம் முதலே இருந்து வருகின்ற நம்பிக்கைகளின் தொடர்ச்சியே ஆகும்.  தாந்திரிகம், சாங்கியம் மற்றும் உலகாயதம் போன்ற பொருள்முதல்வாத கொள்கையினரும் கூட இவ்வாறான சடங்குகளைப் பின்பற்றியுள்ளனர்.  அவை வைதீக சமயத்தாரின் சுயநலமிக்க, மக்களின் உபரி உற்பத்தியைப் பறிக்கும் நோக்கிலான முயற்சி களை முறியடிக்கும் வகையில் “முள்ளை முள்ளால் எடுத்தல்” எனும்படி அமைந்தவையாகும்.

கோயில் - கருவறை - சிலை:-

தாந்திரீகர்கள் பெண்ணின் பிறப்புறுப்பைப் போற்றி வழிபடுவார்கள்.  இவ்வுலகினை, நதி யினை எல்லாம் பெண்ணாகவே பாவிப்பதும் நிலமும் பெண்ணாகவே வணங்கப்படுவதும் உயிர் களின் தோற்றத்திற்கு தாய்மைப் பேறுதான் அடிப் படை என்பதாலேயே ஆகும்.  இன்றும் இத்தகைய வழிபாட்டு கோயில்கள் இருப்பது தெரியவரு கின்றது.  ‘அல்குல்’ என்ற நூலில் பெண்ணின் பிறப்புறுப்பு பற்றி பல பத்து சொற்களை தமிழ் நாடனும், கி. ராஜநாராயணனும் பட்டியலிடு கின்றனர்.  அவை அனைத்துமே பெண்ணை பகடி செய்தும் ஏளனமாக, எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், சினம் கொண்டு புத்தி பேதலித்த நிலையில் பேசக்கூடிய சொற்களாகவே இருக்கின்றன. 

ஆனால் மேற்கு மாவட்டங்களில் பெண் களே தமக்குள் உரையாடும்போது பயன்படுத்தும் சொற்களாக கோயில், கருவறை, சிலை ஆகிய சொற்கள் அமைந்துள்ளன.  பெண்ணின் பிறப் புறுப்பினை கோயில் என்றும், ஆணின் பிறப் புறுப்பு சிலை என்றும் அவை இணைந்து கரு உருவாகும் இடம். ‘கருவறை’ என்றும் பொருள்பட உரைக்கின்றனர்.  இச்சொற்களை ‘அல்குல்’ நூலில் காணமுடியவில்லை.  இது தாந்திரிக வழிபாட்டின் எச்சமாக நீடித்திருக்கும் சொற்களாகும்.

அவ்வாறே தமிழகத்தின் மேற்கு மாவட்டங் களான கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்டங்களில் இந்த நம்பிக்கை சடங்குகளை ‘சாங்கியம்’ என் கின்றனர்.  இந்த சாங்கிய விதிகளை அறிந்த முதிய வர்கள் வாழ்வின் பல நெருக்கடிகளை இந்த சாங்கியங்களை மேற்கொண்டு தீர்த்து வைத்து விடுவர்.  இதில் படைப்பு கடவுள், வழிபாடு ஆகிய வற்றிற்கு இடமில்லை.  உலகாயதர்களும் வைதீக மரபிற்கு எதிராக இவ்வாறான சடங்குகளை நிகழ்த்தியுள்ளனர்.

சாங்கியம்:-

மாறுதல் இயக்கம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் சாங்கியவாதிகள்.  தொடக்க கால சாங்கியத்தில் ஆன்மீகத்தின் சாயல் கூட காணப்படவில்லை சாங்கியத் தத்துவத்தின்படி எல்லா மாறுதல்களுக்கும் அடிப்படைக் காரண மாக இருப்பது பொருள்களின் முதன்மைத் தன்மை தான் என்று பூர்வ சாங்கியர்கள் விளக்கினார்கள்.

“அசித்து பொருள்களான பால் இளம் விலங்குகளுக்கு ஊட்டம் தருவதற்காக இயல்பாக சுரக்கிறது (சுபாவவென இவா).  அசித்துப் பொருளான தண்ணீர் இயல்பாக மனிதகுல நன்மைக்காக ஓடுகிறது.  அதே போன்று அசித்தாக இருப்பினும் பிரதானமாக - இயல்பில் (திவா வேணனேவா) இயங்குகிறது.  இதன் நோக்கம் மனிதனை உயர்ந்த இறுதி நிலைக்கு எடுத்துச் செல்வதாகும் (புருசார்த்த சித்தி)” என்று சாங்கியக் காரிகை கூறுகிறது.

இங்கு முதன்மையானது பொருள்.  முதலில் உருவான பொருள், பிரகிருதி என்று பொருளின் முதன்மைத் தன்மையை விளக்கும் சாங்கியக் கொள்கை முதன்மை காரணவாதம் எனப்பட்டது.  பொருளை முதன்மையானதாகவும், புருசனை இரண்டாவதாகவும் வைத்துக் கொண்டதாலும் முதன்மை காரணவாதம் எனப்பட்டது.  மூல சாங்கியத்தில் கூறப்பட்ட ‘புருசன்’ என்பது முதன் முதலான பொருளின், மூலப் பொருளின் பெருக்கம் தான் எனக் கூறப்பட்டது.  அதாவது மூலப் பிர கிருதி இயக்கமுற்று பலவாக வளர்ச்சியடைவது புருசன் ஆகும்.  மேலும் தொடக்க காலத்தில் முதன்மையற்றது, இரண்டாவதானது, உதாசீன மானது என்ற பொருளுடையதாக புருசன் என்ற சொல் இருந்திருக்கிறது.  இதனை பிரதானம், பரிணாமம், புருஷ பஹுத்வம் என்று சுருக்கமாக கூறமுடியும்.  கண்களுக்குப் புலனாகும் உலகத்திற்கு அடிப்படை “பொருள்தான்”; புருசன் உலகத் தோற்றத்திற்கான காரணமல்ல; அது மிகை யானது; அது வெளித்தோற்றம்தான் என்று பூர்வ சாங்கியம் கூறியது.

தன்னிறைவு கொண்ட, இயங்கியல் தன்மை கொண்டதான முதல் நிலைப் பொருளாக அனைத் தையும் கண்ணுற்ற நிலையில், இரண்டாவதாக புருசனை ஏற்கவேண்டிய தேவை சாங்கியவாதி களுக்கு ஏன் ஏற்பட்டது? வேதாந்தவாதிகளை மறுக்கும் நோக்கத்தில் ஏற்பட்டது.  வேதாந்தத்தில் உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் மாயை; புருசன் தான் இறுதியான உண்மை என்று கூறப்பட்டது.  இது பிரம்மவாதம்; பிரம்ம காரணவாதம் எனப் பட்டது. 

மேலும் இது அனைத்தும் உணர்வின் சாராம்சமே; உலகத் தோற்றத்திற்கான முதற் காரணமாக உள்ளது பிரம்மமே என்றது.  எனவே நாம் அசேதன காரணவாதத்திற்கும், சேதன காரண வாதத்திற்கும் உள்ள தத்துவப் போராட்டத்தை சாங்கியத்திற்கும், வேதாந்தத்திற்கும் இடையிலான மோதலில் காண முடிகின்றது.  மேலும் முதன்மை யற்ற, இரண்டாந்தரமான புருஷ் பலவாகும் என்று சாங்கியம் கூறியது.  அதற்கேற்ப வேதாந்தமும் கருத்துமுதல்வாத நிலையில் விளக்கும்போது சத்துவம், ராஜசம், தாமசம் என்று புருச குணங் களை வகைப்படுத்தி பலவாக்கின.

இந்நிலையில், இறுதியாக புருசனைப் முதன்மைப் படுத்தி புருச சூக்தம் நூலெழுந்தது.  வேதாந்தத்தின் வாரிசுகளாக சங்கரரும், மத்துவரும் தோன்றி இதனை வலுப்படுத்தினார்கள்.  சங்கரர் ‘பிரம்ம ஞானம்’ ஒன்றே என்றார்.  அவர் மேலே கண்ட சாங்கியக் காரிகையின் கூற்றை பிரம்ம சூத்திரத்தில் எடுத்தாள்வதுடன் புருசனின் உயர்ந்த இறுதி நிலை கட்டத்தை (புருசார்த்தசித்தி) கருத்து முதல் வாதத்துக்குரியதாக மாற்றியமைத்துக் கொள் கின்றார்.  இவ்வாறு சாங்கியத்தில் புருசனுக்கு இரண்டாவது இடத்தைக் கொடுத்ததன் பலனாக நாளடைவில் புருசன் முதலாவது இடத்துக்கு வந்துவிட்டான்.  பிற்கால சாங்கியம் வைதீக நிலையினை அடைந்தது.

ஆனால், பொருளை மட்டுமே உண்மை என்று ஏற்கின்ற உலகாயதம், பூதவாதம் ஆகிய கொள்கைகள் இன்றும் அதே நிலையில் அறியப் படுகின்றன என்பது அக்கொள்கைகளின் சிறப் பாகும்.  மேற்கண்ட சடங்குகள், அவைதீகர்கள், வைதீகத்திற்கு எதிராக நிகழ்த்திய சடங்குகள் என்பதே உண்மையாகும்.

துணை நூல்கள்

1.            தேவி பிரசாத் சட்டோபாத்யாய, உலகாயதம் என்.சி.பி.எச். சென்னை - 98 (தமிழில் எஸ்.தோதாத்ரி)

2.            சி.மகேசுவரன், தொப்புள் கொடி உறவுக் கட்டுரை சமூக விஞ்ஞானம் காலாண்டு ஆய்விதழ்.

3.            தமிழ்நாடன், அல்குல், காவ்யா, சென்னை - 24

4.            மாது, பெருமாள் சின்னகுப்பூர், தருமபுரி மாவட்டம், முறைப்பாடு தீர்த்தல் சடங்கு

5.            சின்ராஜி தரதடை வேப்பன்னபள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் நாக்கு சுடுதல் நிகழ்த்தியவர்.

Pin It