கீற்றில் தேட...

periyar 540திரு வரதராஜுலுக்கு கொஞ்ச காலமாய் உத்தியோகப் பைத்தியம் தலைக்கேறி விட்டது. தேசீயமெல்லாம் இப்போது உத்தியோகத்திற் குள்ளாகவே ஐக்கியமாய் விட்டது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் கூட சேருவதற்கு சுயேச்சையுள்ள பார்ப்பனரல்லாதார் ஒருவருமில்லாமல் போனதையும் தமது கக்ஷிக்கு எந்த விதத்திலும் கூலிகளையும் காலிகளையும் விட வேறு யாருடைய அனுதாபமும் இல்லாமல் போவதையும் பார்த்து நாங்கள் உத்தியோகங்கள் ஏற்றுக் கொள்ள சம்மதித்து உத்தியோகங்கள் சம்பாதிக்கப் போகின்றோம், யாராவது வருகின்றீர்களா? என்று கேட்டவுடன் திரு. வரதராஜுலுவைப் போன்ற ஆள்கள் கூட அப்படியானால் தமக்கும் ஏதாவது கிடைக்காதா என்ற எண்ணத்தின் மீது இப்போது அய்யங்காருடன் சேர்ந்து கொண்டு உத்தியோகம் ஒப்புக் கொள்ள வேண்டியது அவசிய மென்றும் “நான் வெகு காலமாக இதைச் சொல்லி வந்திருக்கிறேன்” என்றும் சொல்லிக் கொண்டு அய்யங்கார் பின்னால் கடற்கரைக்குச் சென்று கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார். ஆனால் திரு. வரதராஜுலு உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் ஒப்புக் கொள்ளுவதற்கும் சொல்லும் காரணம் தான் நம்மை இந்த வியாசம் எழுதச் செய்கின்றது.

அதாவது :-

“ஜஸ்டிஸ் கட்சியாரை ஒழிப்பதற்குத் தாம் மந்திரி வேலை ஒப்புக் கொண்டாக வேண்டும்” என்கின்றார். காங்கிரஸ்காரர்களுக்கோ அல்லது திரு.வரதராஜுலுவுக்கோ மந்திரி வேலை ஒப்புக் கொள்ள என்றைக்காவது யோக்கியதை இருந்து இவர்கள் ஒப்புக் கொள்ளாமல் தியாகம் செய்திருந்தால் இவர்கள் பேச்சு யோக்கியமானதாயிருக்கும். ஒத்துழையாமை ஆரம்பத்தில் முதல் சட்டசபையில் திரு.சீனிவாசையங்கார் காங்கிரசுக்கு விரோதமா யிருந்து காங்கிரசையும் வைது கொண்டு சட்டசபைக்குப் போய் அங்கு தமக்கு எவ்வித யோக்கியதையும் கிடைக்காததால் விட்டுவந்து “சீ! இந்தப் பழம் புளிக்கு”மென்று கருதி கூப்பாடு போடுகின்றவர்.

இரண்டாவது சட்ட சபைக்கு எல்லோரும் போகவேண்டுமென்று திரு.வரதராஜுலுவும் கூட சத்தம் போட்டு சுயராஜ்யக் கட்சியை ஆதரித்து ஊர் ஊராய்ப் பார்ப்பனர்கள் பின் திரிந்து, அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்தவர். அப்பொழுதும் காங்கிரஸ்காரருக்கு உத்தியோகம் ஒப்புக்கொள்ளகூடிய பலமும் யோக்கியதையும் கிடைக்கவில்லை என்றும் அதோடு சட்டசபையில் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், சட்டசபைக்குப் போனது மானக்கேடு என்றும் சொல்லிக் கொண்டு சட்டசபை கலையுமுன்பே முகத்தில் துணியைப் போட்டு மறைத்துக் கொண்டு அழுது கொண்டே வந்தார்கள்.

பிறகு மூன்றாவது சட்டசபைக்கும் திருவாளர்கள் சீனிவாசையங்கார், கல்யாணசுந்திர முதலியார், வரதராஜுலு, ஷாபிமுகம்மது சாயபு, ஜயவேலு, குப்புசாமி, அண்ணாமலை ஆகிய எல்லோர்களுமே ஊர் ஊராய்த்திரிந்து காங்கிரஸ் காரர்களுக்கு ஓட்டு வாங்கி கொடுத்தார்கள். கடைசியாக “காங்கிரஸ்காரர்களே எல்லா ஸ்தானங்களையும் கைப்பற்றி விட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சியை அழித்தாய்விட்டது” என்று விளம்பரப்படுத்தினார்கள். இதைத் திரு.வரத ராஜுலு, திரு.சத்தியமூர்த்தியை முதல் மந்திரி ஸ்தானத்தை ஒப்புக் கொள்ளும் படி தந்தியிற் சொன்னார். திருவாளர்கள் விஜயராகவாச்சாரி, ராஜகோபாலாச் சாரி, சி.பி.ராமசாமி அய்யர், சீனிவாசய்யங்கார் முதலிய எல்லாப் பார்ப்பனர் களும் தங்கள் கையாலானவரை பார்த்தார்கள். கடைசியாக ஒன்றுமே முடியாமல் ஒரு புதுக்கட்சியை சிருஷ்டித்து அதன் பெயரால் மந்திரி ஆதிக்கத் தைப் பெற்று ‘தேசீயத்தை’ நடத்த ஆரம்பித்தார்கள்.

அதுவும் மூன்று நாளைய வாழ்வாய் முடிந்தது. அதுமுதல் இதுவரை என்ன என்ன தந்திரமோ செய்து பார்த்தாய் விட்டது. ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு சுள்ளாணியையும் அசைக்க முடியவில்லை. காங்கிரசுக்கு சில படித்த பணக்காரர்களிடமும் பாமர மக்களிடமும் மதிப்பு இருந்த காலத்திலேயே ஒரு காரியமும் செய்ய முடியாமல் போன இவர்கள் காங்கிரஸ் யோக்கியதை சந்தி சந்தியாய்ச் சிரிப்பாய் சிரிக்கும்போதும், காங்கிரசு தேசீயம் என்றால் காலிகளுடையவும், கூலிகளுடையவும், வயிற்றுப் பிழைப்பு தேசீயக்காரர்களுடையவும் கூட்டம் என்று வெளிப்படையாய் அகராதியில் அர்த்தம் ஏற்பட்டிருக்கும் இக்காலத்திலும் காங்கிரசென்று சொல்லி ஒரு மூடனையாவது ஏமாற்ற முடியுமா? என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ், மந்திரி வேலையையும் உத்தியோகத்தையும் ஏற்றுக் கொள்ளப் போகின்றது, ஜனங் களுக்கெல்லாம் - மந்திரி பிச்சையும் உத்தியோகப் பிச்சையும் கொடுக்கப் போகின்றோம் என்று “ஒரு முதலை, தெருவில் போவார்களைக் கூப்பிட்டு பொன் காப்பு கொடுப்பதாய்ச் சொன்ன கதைபோல்” கூப்பிடுவதானாலும், திருவாளர்கள். வரதராஜுலுவையும் கல்யாணசுந்தரத்தையும் ஆமாசாமி போட்டு பின்பாட்டு பாடச் சொல்லுவதினாலும் யார் மயங்கிவிட முடியும்? எனவே, இனி கல்யாண சுந்தரமும் வரதராஜுலுவும் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி சென்ற வருஷத்தில் பேசியிருக்கும் பேச்சும் இப்போது பேசும் பேச்சும் என்ன என்பதை சற்று கவனித்துப் பார்ப்போம்.

சென்ற வருஷ கோயமுத்தூர் மகாநாட்டில் பேசும்போது திரு. கல்யாணசுந்தரம் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தையும் காங்கிரசின் அக்கிரமத்தையும் குறிப்பாய் திரு.சீனிவாசையங்கார் அயோக்கியத் தனங்களையும் எடுத்துச் சொல்லி காங்கிரஸ் தலைவரான சீனிவாசையங்காரைத் தலைவர் என்று சொன்ன நாக்கை அறுத்து சாணியில் போட்டு பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதாகவும், இனிமேல் ஜஸ்டிஸ் கட்சித் தலைவரையே தாம் தலைவர் என்று மதித்துக் கூப்பிடப் போவதாகவும் சுமார் 5000 பேர்கள் முன்னிலையில் சொல்லி ஜனங்களுடைய கைத்தட்டலைப் பெற்றவர். தீண்டாமையும் வகுப்புப் பிணக்கும் உள்ள நாட்டில் அரசியல் இயக்கம் (காங்கிரஸ்) கூடாது அதை ஒழிக்க வேண்டும் என்றும் சொன்னவர். அது மாத்திரமல்ல “காங்கிரஸ் உத்தியோகமேற்றதால் நான் காங்கிரசிலிருந்து விலகிக் கொள்ளுகிறேன்” என்று ராஜினாமா செய்தவர்.

இன்னமும் அவர் காங்கிரசையும் திரு.சீனிவாச ஐயங்காரையும் உத்தியோகம் ஒப்புக் கொள்ளுவதையும் பற்றி கண்டித்தும் வைதும் எழுதின எழுத்துக்கள் நமது குப்பையில் வண்டி வண்டியாய்க் கிடக்கின்றன. இப்படிப்பட்டவருக்கு இப்போது காங்கிரசும், உத்தியோகமேற்பும், சீனிவாசய்யங்கார் தலைமையும், ஜஸ்டிஸ் கட்சியை வைவதும், அவர்களுக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள் என்பதும் என்ன அவசியத்திற்காக? அதுவும் தேர்தல் பிரசாரம் வரும்போது மாத்திரம் ஏன் வந்தது? என்பது விளங்கவில்லை.

அது போலவே திரு.வரதராஜுலுவின் யோக்கியதையையும் சற்று கவனிப்போம். திரு.வரதராஜுலுவும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆரம்பித்தவுடன் திரு.கல்யாணசுந்தரத்தைப் போலவே பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் பின் ஊர் ஊராய்த் திரிந்து கொண்டு டாக்டர், நாயரையும், சர்.தியாகராயரையும், பார்ப்பனரல்லா தார் இயக்கத்தையும் மிக்க கேவலமாய் வைவதின் மூலம் பார்ப்பனர்களானாலும் அவர்களது பத்திரிகைகளினாலும் விளம்பரம் செய்யப்பட்டு மனிதரானவர்.

அதுமுதல் இதுவரை பார்ப்பனர்களுக்கே நல்ல பிள்ளையாய் இருப்பதுடன் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கும் அவர்களது நலத்திற்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இடையூறும் துரோகமும் செய்து கொண்டும், ஏதாவது ஒரு சமயத்தில் பார்ப்பனர்கள் இவரை லட்சியம் செய்யாவிட்டால் மாத்திரம் மறுபடியும் பார்ப்பனர்களைப் பயப்படுத்துவதற்காகப் பார்ப்பனரை வைதுகொண்டு பார்ப்பனரல்லாதாரைப் பற்றியும், அவர்களது இயக்கத்தைப் பற்றியும் புகழ்ந்துபேசி, அதில் சேருவதாய் வேஷம் போடுவதும், பிறகு அவர்கள் சரிப்பட்டுவிட்டால் மறுபடியும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொள்வதும், அவர்கள் இவரை லக்ஷியம் செய்யாவிட்டால் ஏதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு தாமாகவே அவர்களுள் போய் நுழைந்து கொள் வதும் வழக்கமாயிருந்து வருவதை அநேக உதாரணங்களால் அறிந் திருக்கலாம்.

கொஞ்ச காலத்திற்குமுன் சில ஸ்தல ஸ்தாபன தேர்தல்களின் போது திரு.வரதராஜுலு பார்ப்பனர்களுக்காக எவ்வளவோ பாடுபட்டும், அவர்கள் பல இடங்களில் தோல்வி அடைய நேரிட்டவுடன் தாம் ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர ஆசைப்பட்டு, “தமிழ்நாடு” பத்திரிகையில் பார்ப்பனர்களை வைதும், ஜஸ்டிஸ் கக்ஷியைப் புகழ்ந்தும், பத்திரிகையில் எழுதிய ஒரு தலையங்கத்தின் குறிப்புகளாவன:-

“சமீப தேர்தல்களில் சுயராஜ்ஜியக் கக்ஷியாருக்கு ஒரு ஸ்தானம் கூட கிடைக்காமல் போனதற்குக் காரணம் சென்ற ஒரு வருஷ காலமாக பிராமணர்கள் செய்துவரும் சூழ்ச்சிகளை ஜனங்கள் அறியத் தொடங்கினமைதான். அதனாலேயே பிராமணர்களுக்குத் தோல்வி கிடைத்து வருகின்றது. பிராமணரல்லாதாரை நசுக்கிவிட பிராமணர்கள் கட்டுப்பாடாக செய்துவந்த சூழ்ச்சிதான் தேசீய பிராமணரல்லாதார்கள் கூட ஜஸ்டிஸ் கக்ஷியிடம் அநுதாபம் காட்டும்படி செய்துவிட்டது. எத்தனையோ பிராமணர்கள் உத்தியோகத்திற்காக காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷார் இந்நாட்டில் நிலை பெற்றது முதல் பிராமணர்கள் உத்தியோக வேட்டை ஆடி வருகிறார்கள். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியார் இந்த ஆறு வருஷமாகத்தான் உத்தியோகம் வேண்டும் என்று கேட்கின்றார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது? இது இயற்கைதானே?

உத்தியோகம் கூடாது என்றால், எல்லா வகுப்பாருக்கும் கூடாது தானே. ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கு மாத்திரம் உத்தியோகம் கூடாது என்று சொல்ல யாருக்கு அதிகாரமிருக்கிறது? யார் உத்தியோகத்திற்குப் போனாலும், காங்கிரஸ் பிராமணருக்கு ஏன் இவ்வளவு கவலை? சுயராஜ்ஜியம் வேண்டுமென்று போராடும் கூட்டத்தாருக்கு அவர் உத்தியோகத்திற்குப் போகிறார் இவர் உத்தியோகத்திற்குப் போகிறார் என்கிற ஆத்திரம் ஏன்? ஆறு வயதாகிய ஜஸ்டிஸ் கக்ஷிக்காரரை உத்தியோக வேட்டைக்காரரென்றால் 150-வருடங்களாக உத்தியோக வேட்டை ஆடிவரும் இந்த பிராமணர்களை என்னவென்று அழைப்பது?

உத்தியோகங்களிலிருக்கிற பிராமணர்கள் தங்கள் பதவிகளி லிருந்து வெளியில் வந்து பிறகு ஜஸ்டிஸ் கக்ஷியாரை நீங்களும் உத்தியோகங் களை விட்டு வெளியில் வந்து விடுங்கள் என்று சொன்னால் மாத்திரம் அதை நியாயம் என்று நாம் ஒப்புக் கொள்ளுவோம். இப்போது ஜஸ்டிஸ் கக்ஷிக்காரரை உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று அழைக்கும் பிராமணர்கள் உத்தியோகங் களை துறந்த முனிவர்கள் அல்ல. தங்கள் ஜாதியார் விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கும் உத்தியோகங்களை பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஜஸ்டிஸ் கக்ஷியாரைப் பற்றி மாத்திரம் தூற்றிப் பேச இந்த அன்னக் காவடிகளுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

ஜஸ்டிஸ் கக்ஷியார் பிராமணரல்லாதார் என்கிற பாவத்திற்காக காங்கிரஸ் பிராமணர், மிதவாதப் பிராமணர், ஒத்துழையா பிராமணர், குமாஸ்தா பிராமணர் முதலிய சகல பிராமணர்களும் அபிப்பிராய பேத மின்றி ஒன்று சேர்ந்து ஜஸ்டிஸ் கக்ஷியை எதிர்த்து வருகின்றனர். குருகுலப் போராட்டத்திலும், இந்து மத பரிபாலன சட்ட விஷயத்திலும், தேசீய பிராமணரும், வைதீகப் பிராமணர்களும் நடந்து கொண்டதே பார்ப்பனர் களின் யோக்கியதையை அறியப் போதுமானது. சின்ன காந்தி என்று ஏமாற்றிவந்த ஸ்ரீராஜகோபாலாச்சாரி முதல் ஆசாரத்திருத்தம் பேசிவந்த ஸ்ரீசீனிவாசய்யங்கார் வரை ஒன்று சேர்ந்து கொண்டு தங்கள் ஜாதி, ‘மேல் ஜாதி’ என்று பேச ஆரம்பித்து விட்டார்கள், அன்று முதல் பிராமணர்கள் மீதிருந்த நம்பிக்கை தொலைந்துவிட்டது.

தேசீய கிளர்ச்சியில் உள்ள பிராமணர்கள் நியாய புத்தி உள்ளவர்களாயிருந்திருந்தால் இன்றுள்ள பிராமணர் - பிராமணரல்லாதார் என்கிற சண்டை ஏற்பட்டிருக்காது. பிராமணர்கள் சில அயோக்கியர்களை ஏவிவிட்டு பிராமணரல்லாதாரை திட்டச் சொன்னதாலும் தேர்தல்களில் கையாளப்படும் சூழ்ச்சிகளைக் கண்ட தாலும், ஸ்ரீமான்கள் நாயுடுவும் முதலியாரும் காங்கிரசிலிருந்து விலகிக் கொண்டார்கள். சில பிராமணரல்லாத அன்னக் காவடிகளை ஏவிவிட்டு பிராமணரல்லாத தலைவர்களைத் திட்டும்படியும் பத்திரிகைகளில் தாக்கி எழுதும்படியும் செய்தார்கள். பணத்தைக் கொண்டு எல்லாம் செய்துவிடலாம் என்று நினைத்து ஸ்ரீ. சீனிவாசய்யங்கார் பிராமணரல்லாத அன்னக் காவடி களை திட்டும்படி செய்தால் பிராமணரல்லாதார் எப்படி பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? இதன் பலனாக எல்லோர் மனமும் மாறிவிட்டது. ஒரு தேசீயப் பிராமணனைவிட ஒரு ஜஸ்டிஸ் கட்சி பிராமணரல்லாதார் எவ்வளவோ சிலாக்கியம்.

ஸ்ரீ சீனிவாசய்யங்கார் மந்திரி பதவிகளை ஒப்புக் கொள்வதாய் பேசிய பேச்சுகள் வெளியாய்விட்டன. ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் போன்றவர்களின் மனத்துயரத்தை யாரும் அலக்ஷியம் செய்துவிட முடியாது. பிராமணரல்லாதாரை நசுக்கி விடலாம் என்ற எண்ணமும், பணத்தால் எதுவும் செய்துவிடலாம் என்கிற எண்ணமும், அன்னக்காவடிகளுக்குக் கூலி கொடுத்து ஏவிவிட்டு தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிற எண்ணமும் இனி பலிக்காது.

பிராமணர்கள் சுயராஜ்ஜியம் கேட்பது உண்மையானால் அரசியல் விஷயத்தில் இன்னவர்களுக்கு இத்தனை ஸ்தானங்கள் என்பதை நிர்ணயித்து எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்ற கொள்கையை ஒப்புக் கொண்டு பிராமணர்கள் அல்லாதார் முன்னேற்றத்திற்கு பிராமணர்கள் இடையூறு செய்யாமல் இருக்கும்படி தங்கள் ஜாதியாரைக் கேட்டுக் கொண்டு பிரபல பிராமணர்கள் கையெழுத்திட்டு உடனே ஒரு அறிக்கை வெளியிட் டால்தான் இப்பொழுது பரவிவரும் ஜாதித் துவேஷத்தை அடக்க முடியும். இல்லாதவரை கர்மத்திற்குத் தக்கபலன் கிடைக்கும்”

என்று எழுதியிருக்கிறார்.

தவிர கோயமுத்தூர் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் வந்து காங்கிர சின்பேரால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை அடக்கவும் பார்ப்பனர் களை காங்கிரசை விட்டு விரட்டவும் பார்ப்பனரல்லாதார் காங்கிரசுக்கு வரவேண்டுமென்று சொல்லித் தாமும் ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்து கொண்ட தாக பெரிய கூட்டத்தில் விளம்பரப்படுத்தினார்.

சமீபத்தில் சைமன் மதராசுக்கு வந்த போதும் காங்கிரஸ் நடவடிக்கை பிடிக்காமல் காங்கிரசில் ராஜீனாமா செய்தார். இன்னும் இதுபோல் இரண்டு மூன்று வண்டி எழுதலாம். இப்படியெல்லாம் உண்மை இருக்க இப்போது மறுபடியும் ஜஸ்டிஸ் கக்ஷி உத்தியோக வேட்டைக் கக்ஷி, அதையும் மந்திரி கள் கனம் சுப்பராயனையும் கனம் முத்தையா முதலியாரையும் ஒழிக்க வேண்டும். ஆதலால் உத்தியோகமேற்க வேண்டும் என்று திரு.வரதராஜுலு கடற்கரையில் கூப்பாடு போடுவதின் இரகசியம் என்ன? என்பதை வாசகர்களே யோசித்துத் தெரிந்துகொள்ள விட்டுவிடுகின்றோம்.

தவிர, அன்றைய தினம் பார்ப்பனர்களை அவ்வளவு திட்டிய திரு.வரதராஜுலுக்கு இன்றையதினம் கனம் சேதுரத்தினமைய்யர் மந்திரி வேலை பார்ப்பதை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் மற்ற மந்திரிகளை மாத்திரம் திட்டுவானேன்? இவையெல்லாம் பார்ப்பன தயவுக்கும் உத்தியோகங்கள் கிடைப்பதானால் தமக்கும் ஒரு எலும்பு கிடைக்கட்டும் என்கின்ற சுயநலமும் பேராசையும் அல்லவா? என்று கேட்கின்றோம்.

வெளியே வர யோக்கியதை இல்லாதபோதும், பதில் சொல்ல யோக்கியதை இல்லாத போதும், தம் பெயரை வெளிப்படுத்த வேறு சந்தர்ப் பமில்லாதபோதும் உடம்பு காயலா என்று சொல்லிக் கொண்டு காயலாவின் பேரால் பலனடைவதும், கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தாலும் பார்ப்பனரல்லாதாரை வைது பலன் பெறுவதுமாயிருந்துவிட்டு இப்போது சட்டசபைப் பைத்தியமும் உத்தியோக பேராசையும் கொண்டு பழயபடி பார்ப்பனத் தரகனாய் வெளிவந்தால் யார் இவரை நம்ப முடியும்? பார்ப்பனரல்லாதார் கக்ஷியை அழிக்கவும் பார்ப்பனரல்லாதார் மந்திரிகளை ஒழிக்கவும் ஒருவர் சட்டசபைக்கு போவதாயிருந்தால் அது திரு.காந்தி நிற்பதானாலும் கூட கடுகளவு பார்ப்பனரல்லாதார் இரத்தம் சரீரத்தில் ஓடுபவன் கூட ஓட்டுச் செய்யமாட்டான் என்பது உறுதி.

பார்ப்பனரல்லாதார் மந்திரிகள் இதுவரை இந்த மாகாணத்தில் மந்திரி தோரணையில் செய்த காரியங்களில் இன்ன காரியம் தப்பு என்று குற்றம் சொல்லி அவர்களை ஒழிக்க வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால் அவன் மனிதத் தன்மையுடையவன் என்று சொல்லலாம். சைமன் கமிஷனை வரவேற்றது ஒரு தப்பு என்று சொல்வதானால் சைமன் கமிஷனை இந்தியாவில் எந்த மந்திரி வரவேற்கவில்லை? வரவேற்று அவர்களிடம் இந்தியாவின் நன்மைக்கு விரோதமான எந்தக் காரியத்தைச் சொல்லி விட்டார்கள்? அதனால் என்ன தீமை விளைந்தது? என்று சொல்லி ஆட்சேபிப்பது யோக்கியமானதாகும். அப்படிக்கில்லாமல் அய்யங்கார் சொல்வதற்கெல்லாம் ஆமா சாமி போட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களை வைவதின் மூலமே தேசீயவாதியாகவும் சட்டசபை மெம்பராகவும் அதன் மூலம் ஏதாவது பலனடையலாமென்றும் நினைத்தால் அது இனி ஒருகாலமும் கைகூடாது என்று தைரியமாய்ச் சொல்லுவோம். மற்றபடி திரு.அய்யங்கார் யோக்கியதையை மற்றொரு சமயம் வெளிப்படுத்துவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 26.05.1929)