நம்நாட்டு பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை இந்நாட்டில் நிலை நிறுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆயுதங்களான மதத்தின் பேரால் வேதம், சாஸ்திரம், புராணம், சடங்கு, கோயில், தீர்த்தம், யாத்திரை, மடாதிபதி, குருக்கள், புரோகிதன் என்பவை போன்ற புரட்டுகளைப் போலவே, அரசியல் பெயரால் காங்கிரஸ், சுயராஜ்யம், ஒற்றுமை,தேசீயம், உரிமை அதிகாரத்தில் பங்கு, ஆங்கிலப்பள்ளிக் கூடம், வக்கீல் வேலை, நியாயஸ்தலங்கள் முதலிய புரட்டுகளையும் உற்பத்தி செய்துகொண்டு அதன் மூலமாகவும் நம்மையே ஏமாற்றி அடிமைப்படுத்தி ஆதிக்கம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள் என்பதைப் பற்றி இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். நமது மக்களை ஏமாற்றுவதற்காக இந்த ஆயுதங்களை உபயோகப்படுத்தும்போது நமது பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாரான நமது சமூகத்தாரையே அடிமைகளாக்கி அவர்களைக் கொண்டே அவர்கள் மூலியமாகவே நம்மீது பிரயோகித்து வருகிறார்கள் என்பதைப் பற்றியும் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம்.
அந்த விஷயங்களை வாசகர்கள் அனுபவத்தில் உணர்வதற்கு அடிக்கடி நிகழும் பல சம்பவங்களை எடுத்துக் காட்டியும் வந்திருக்கின்றோம். அப்பேர்ப்பட்ட அனுபவ நிகழ்ச்சிக்கு உதாரணத்தை மற்றுமொரு முறை எடுத்துக் காட்ட “செங்கல்பட்டு ஜில்லா அரசியல் மகாநாடு” என்கிற பித்தலாட்டத்தைப் பற்றி சில விபரங்களை குறிப்பிடலாமென்று இத்தலையங்கத்தை பார்ப்பனீய மகாநாடு என்கிற பெயர் கொண்ட தலையங்கத்தில் எழுதுகிறோம். இதைப்பற்றி ஏன் எழுதுகிறோமென்றால் இம்மாதிரியான அயோக்கியத்தனத்தினாலும், புரட்டுகளினாலும், பித்தலாட்டங்களினாலும், நமது மக்களை இந்தப் பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஏமாற்றி நம்மை முட்டாள்களாக்கி, நமக்கு மத விஷயங்களில் குருவாகவும், ஆச்சாரியர்களாகவும், மடாதிபதிகளாகவும், லோககுருக்களாகவும், சடங்கு விஷயத்தில், நமக்கு தகப்பன்களாகவும், ஜாதி விஷயத்தில் நாம் பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்களாகவும், தெய்வங்கள் விஷயத்தில் நமக்கும் தெய்வத்திற்கும் மத்தியிலுள்ள துவி பாஷிகளாகவும், மோட்ச சம்பிரதாய விஷயத்தில் அவர்கள் காலில் விழுவதாலும், அவர்கள் கால் கழுவின தண்ணீரை நாம் சாப்பிடுவதால் பாவம் மன்னிக்கப்பட்டு விடுவதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் அரசியல் விஷயத்தில் நமக்குத் தலைவர்களாகவும், கல்வி விஷயத்தில் நமக்கு உபாத்தியாயர்களாகவும், உத்தியோக விஷயத்தில் நமக்கு எஜமானர்களாகவும் இருக்க தக்கபடியாக அநேக அயோக்கியத்தனங்களைச் செய்து யோக்கியதையை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் எவருக்கும் அபிப்பிராய பேதமேயில்லை.
இவ்வித அக்கிரமங்களை ஒழிக்க நம் தலைவர்கள் பல நாளாக முயற்சித்து, அதற்கேற்ப இயக்கங்களை ஏற்படுத்தி அதற்காக உழைத்து வருவதும், அதை ஒழிக்க பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரிலேயே சில இனத் துரோகிகளைப் பிடித்து பலவித கூலி கொடுத்து நமது இயக்கங்களை ஒழிக்கவும், நமது இழிவும், குறைவும் தீர வேலை செய்பவர்களை வையச் செய்வதும், நமது முன்னேற்றத்திற்கென்று நமது மக்கள் தனி மனிதர்களை நம்பி அவர்கள் மூலம் அவர்களுக்கேற்ற பிரசாரங்கள் செய்ய ஏற்படுத்தியிருக்கும் ஸ்தாபனங்களிலும் ஏமாற்றி வஞ்சகமாய் உள் நுழைந்து கொண்டு அவற்றை பாழ்படுத்தி அந்த ஸ்தாபனங்களை தங்களுக்கனுகூலமாய் திருப்பிக்கொண்டு அதன் மூலம் நமக்கே கேடாகும்படி செய்ய செய்வதுமே அவர்கள் தொழிலாய் இருப்பதையும் பார்த்து வருகிறோம். இத்தொழில்களில் ஒன்றாகவே செங்கல்பட்டு அரசியல் மகாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது.
மகாநாடு நடத்தியதின் கருத்து என்ன? அதன் வரவேற்பு அக்கிராசனர், மகாநாட்டுத் தலைவரென்பவர், இவர்கள் யார்? அவர்களுக்கு செலவுக்கு கொடுத்து வருபவர் யார்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்கள் பேசிய பேச்சின் தத்துவம் என்ன? அவைகளை பிரேரேபணை செய்த, ஆமோதித்த ஆட்கள் யார்? என்கிற விபரங்களை ஒரு நடு நிலைமையிலுள்ள மனிதன் சற்று கவனமாய் யோசித்துப் பார்ப்பானானாலும் கூட விளங்காமல் போகாது. அதன் உபசரணைத் தலைவர் என்பவர் யார்? அவர் எப்பொழுது பொது வாழ்வில் வந்தவர்? அவரது கொள்கை என்ன? அரசியலில் மகாத்மா காந்தியடிகள் தலையிட்டு உலக மக்களையே கலக்கி தேசபக்தர்களை கூவிய ழைத்த காலத்தில் இவரெங்கிருந்தார்? ஆகிய சங்கதிகள் ஒன்றும் யாரும் அறிய முடியாதபடி இருக்கிறது. இவரது வரவேற்பு அக்கிராசனப் பிரசங்கம் பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்டு உழைத்து வரும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்த பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் கிளிப் பிள்ளையின் சத்தமாய் இருக்கிறது. அச்சத்தத்தின் தத்துவங்கள் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானத்தைப் பற்றி மக்களுக்குத் திரித்துக்கூறி, பார்ப்பனரல்லாதார்களை வைது, பார்ப்பனர்களை சரணாகதி அடைய பார்ப்பனரல்லாதார் தத்துவத்தையும், பாமர மக்களையும் பலிகொடுக்கப் பிரயத்தனப்படுவதாயும், பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுவதாயுமிருக்கிறது. இதற்கு உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடுவோம்.
“சமயத்திற்கு ஒரு அபிப்பிராயத்தைத் தெரிவித்து தலைவராகப் பார்க்கும் ஸ்ரீ வரதராஜுலு நாயுடுவும், ஜாதீய உணர்ச்சியும் பொறாமையும் கொண்டு சுயமதிப்பை விட்டு பனகால் ராஜாவைத் தலைவர் என்று மானமில்லாமல் சொன்ன ஒத்துழையா ஸ்ரீ திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும், பார்ப்பனரல்லாதாரையும் வாய்கூசாமல் திட்டிவரும் ஸ்ரீ ராமசாமி நாயக்கரும், ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும் பார்ப்பனரல்லாதார் சங்கத்தில் இருக்கும் பொழுது பார்ப்பனர்களை மாத்திரம் நாம் எப்படி தூஷிக்கலாம்?” என்று பேசியிருக்கிறார்.
“உடல், பொருள், ஆவி இம் மூன்றையும் நமக்காகவே அர்ப்பணம் செய்து, தேசத்துரோகிகளின் வசவுகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உழைத்துவரும் நம் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான். சீனிவாச ஐயங்காருடையவும், மற்ற பார்ப்பன தேசப்பக்தர்களுடையவும் தேச சேவை நமக்கு வேண்டாமென்று எந்த தேச பக்தர் சொல்லக்கூடும்?”
என்று பேசியிருக்கிறார். இதிலிருந்தே இவருடைய யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார், ராமசாமி நாயக்கர், ஷண்முகம் செட்டியார், பனகால் ராஜா இந்த ஐவர்களைவிட ஸ்ரீமான் சீனிவாச ஐயங்கார் எந்த விதத்தில் மேலானவர் என்று இந்த வர வேற்பு தலைவர் ஸ்ரீ ரெட்டியார் கருதுகிறார் என்பதற்கு காரணம் சொல்லி இருந்தால் அது யோக்கியமாய் இருந்திருக்கும். ஸ்ரீ சீனிவாச ஐயங்கார் தேசத்தைப் பாழாக்கும் வக்கீல் பிழைப்புக்காரர், சர்க்காருக்கு நல்ல பிள்ளையாயிருந்து பட்டம் பதவி பெற்றவர், பெரிய உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டு, காந்தியடிகளின் ஒத்துழையாத்திட்டம் சட்ட விரோதமானது என்று சொன்னார். மகாத்மா காந்தியை “மகாத்மா” என்று கூறுவது தகாது என்று சொன்னார். காந்திக்கு மூளை இல்லை என்று சொன்னார். தீண்டாமை, மதுவிலக்கு, கதர் முதலியவைகள் காங்கிரஸில் இருக்கக்கூடாது என்று சொன்னார்.
“ராமசாமி நாயக்கர், கலியாணசுந்தர முதலியார் ஆகியவர்களை காங்கிரசை விட்டு வெளியாக்க வேண்டும்” என்று சொன்னவர். “ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் இன்னமும் யேன் சர்க்கார் பிடித்து ஜெயிலில் அடைக்காமல் வெளியில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கேட்டவர்.
“அட்வகேட் ஜெனரலாவது இவர்களை ஜெயிலில் அடைக்க யோசனை சொல்லக்கூடாதா?” என்று சொன்னவர்.
இப்படி பேசியிருப்பதோடல்லாமல் ஒத்துழையாமையை ஒழிப்பதற்கு கக்ஷி சேர்த்து ஒழித்தவர். அன்னக்காவடிகளுக்கு பணம்கொடுத்து பார்ப்பனரல்லாதாரை வையும்படி சொல்லி வருகிறவர். இன்னமும் மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம், பதினையாயிரம் என்று வக்கீல் உத்தியோகத்தில் சம்பாதித்துக் கொண்டு இருப்பவர். நிமிஷத்திற்கு நிமிஷம் தவறாது நூறு பொய் பேசுகிறவர் என்ற பெயரை வாங்கியவர். இப்படி இருக்க, ஸ்ரீமான் ஐயங்கார் அவர்கள் எந்த விதத்தில் மற்றவர்களைவிட யோக்கியதாம்சம் பொருந்தியவர் என்பதையும், எந்தவிதத்தில் தேசத்திற்கு உடல், பொருள், ஆவி இம் மூன்றையும் தத்தம் செய்தவர் என்பதையும், ஏதாவது நஷ்டப்பட்டாரா? கஷ்டப்பட்டாரா? சிறைக்கு சென்றாரா? வக்கீல் வேலையை விட்டாரா? என்பவைகளையும் எழுதி இருந்தால் நன்றாயிருக்கும்.
மற்றபடி மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான் ஒத்தகாசு கந்தசாமி செட்டியாரைப் பற்றி நாம் ஒன்றும் புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. அவர் பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் இருந்தவர். அக்கக்ஷியார் இவருக்கு செலவுக்கு பணம் கொடுக்காததால், பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டதாக அதாவது ‘கூலி’க்கு மாரடிக்கிறவர் என்று பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவரால் சொல்லப்பட்டு கோர்ட்டிலும் விவகாரம் நடந்தது. பெரும்பாலும் விஷயம் நம்பும்படி ஏற்பட்டு இவருடைய யோக்கியதை “ஒரு காசுக்கும் சின்ன நாணயம் தான் பெறும்” என்ற தீர்ப்பும் பெற்றவர். இந்த யோக்கியர் ஒரு மகாநாட்டுக்கு தலைவர் என்கிற பெயரை பார்ப்பனர்கள் தயவால் பெற்று,
“ஜஸ்டிஸ் கட்சியானது ஒற்றுமையை பாழாக்கி வருகிறது” என்றும் “பார்ப்பனரல்லாதார் பெயர்” பொருளற்றதென்றும், “ஒருவரை மாத்திரம் துவேஷித்து பேசுவது சரியல்ல” வென்றும் இன்னும் பலவாறாக பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்கிற பெயர் சொல்லிக் கொண்டு பார்ப்பனரல்லாதாரை வைது கொண்டு பெருமை சம்பாதித்துக் கொண்டும் கூலி வாங்கிக்கொண்டும் வாழ்கிறவர்களில் இவரும் ஒருவர் என்பதை இவர் கதை அறிந்தவர்கள் எல்லோரும் நன்றாய்த் தெரிந்தேயிருப்பார்கள்.
“ஜஸ்டிஸ் கட்சி” என்பதாக ஒரு தனிக் கட்சி எங்கேயாவது இருக்கிறதா? அதற்கு கொள்கையுண்டா? அதற்கு சந்தா உண்டா? என்பதை அதை வையும் இந்த யோக்கியர்கள் ருஜு செய்தால் நன்றாயிருக்கும். “ஜஸ்டிஸ்” என்பது ஒரு பத்திரிகையினுடைய பெயரேயல்லாமல் ஒரு கட்சியின் பெயரல்ல. தென் இந்திய நலவுரிமைச்சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கிறது. அதன் கொள்கையை ஒப்புக்கொள்ளுகிறவர்கள் ஒரு கட்சியாக இருக்கிறார்களேயல்லாமல் வேறில்லை. இந்த ஸ்ரீமான் ஒத்தகாசு செட்டியார் இருக்கும்போது ஏற்பட்டிருந்த கொள்கைகள் இன்னமும் அக்கட்சியில் மாறாமல் இருக்கின்றன. அவ்வப்போது அக்கொள்கைகளுக்கு ஏற்ற திட்டங்கள் ஏற்படுத்தி நடத்தி வரப்படுகிறது. நிற்க! “பார்ப்பனரல்லாதார்” பெயர் பொருளற்றது என்று சொல்லுகிறது. இவரே அக்கட்சியிலிருந்து வைத்துவிட்டு வந்த பெயர். இந்த பெயர் இவருக்கு பிடிக்கவில்லை என்று சொல்வதானது ஸ்ரீமான் சீனிவாச ஐயங்காரின் பணத்தின் மகிமையேயல்லாமல் வேறல்ல. இவரைப் போலவே இன்னும் சில பார்ப்பன அடிமைகளும் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்கிற ஏனையோர்களும் இதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு கூட்டத்தார் நமக்கு விரோதி, நமது சுயமரியாதையை கெடுத்தவர்கள் என்று நாம் உறுதியாக கண்டுவிட்டோமானால் நமது சுயமரியாதை இயக்கத்திற்கு அவர்கள் சகவாசமே கூடாது என்று தீர்மானித்து விட்டோமானால், அம்மாதிரி இயக்கத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று அவரவர் ஆராய்ந்து சொன்னால் யோக்கியமானதாக இருக்கும். அந்த இயக்கத்தில் அங்கத்தினர்களாக சேர்ந்து கொள்ள உரிமையுள்ளவர்கள் அநேக பெயரையுடைவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நாம் அந்த பெயரை உபயோகப்படுத்துவதானால் அது நமது சுயமரியாதைக்கு பங்கமானதாக இருக்கிறது. உதாரணமாக ‘சூத்திரன்” என்று வைத்துக் கொள்வதா? அல்லது பஞ்சமன் என்று வைத்துக் கொள்ளுவதா? என்று சுயமரியாதையோடு யோசித்துப் பார்த்தால் அதன் யோக்கியதை விளங்காமல் போகாது. தெரிந்து பேசுகிறவர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும். இதை மற்றொரு சமயம் விவரிப்போம்.
தவிர, பார்ப்பனர்களை நாம் பகிஷ்கரிப்பதாய் சொல்லுகிறார். நாம் அவர்களை பகிஷ்கரிக்கின்றோமா? அவர்கள் நம்மை பகிஷ்கரித்து இருக் கின்றார்களா? என்ற விபரம் கடுகளவு புத்தியுள்ளவனுக்கும் தெரியாமல் போகாது. பார்ப்பனர் பகிஷ்காரத்தால் நமக்கு ஏற்பட்டிருக்கும் கெடுதிகளை நீக்கிக் கொள்ள நாம் முயற்சிக்கிறோமேயல்லாமல் நாம் அவர்களை பகிஷ்கரிக்கவில்லை. அவனுக்கு உள்ளதை அவன் எடுத்துக் கொள்வதிலும் நாமாகக் கொடுப்பதிலும் நமக்கு எப்போதும் ஆஷேபனையில்லை. ஆதலால் நாம் அவர்களை பகிஷ்கரிக்கிறோம் என்று சொல்வதும் ஒழிக்கப் பார்க்கிறோம் என்று சொல்வதும், துவேஷம் கொள்ளுகிறோம் என்று சொல்வதும் புரட்டுப் பார்ப்பனர்களுக்கு தாங்கள் மாத்திரம் நல்ல பிள்ளைகளாகி பொறுக்கித் தின்பதற்கும், ஏமாற்றுவதற்கும் போடும் வேஷமேயல்லாமல் வேறல்ல. ஆனால் நமது இயக்கத்திற்கு ஏன் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கேட்கிறார்கள். அப்படி கேட்பது அறிவில்லாமையும், அனுபவமில்லாமையும் ஆகும். ஏனெனில் பார்ப்பனன் நம்மை செய்த, செய்து கொண்டிருக்கும் கொடுமையிலிருந்தும், இழிவிலிருந்தும் மீளவே நாம் இவ்வியக்கத்தை ஆரம்பித்துக் கொண்டு இருக்கிறோம். அவ்வித இயக்கத்தில் அவனைக்கொண்டு வந்து உள்ளே நுழைத்துக் கொண்டால் அந்த இயக்கம் வாழுமா? அவர்களுடைய சூழ்ச்சியும், தந்திரமும், நமக்குள் கலகம் செய்வித்து நம்மை பிரித்து வைக்கும் விஷமத்தனமும் நமக்குத் தெரியாதா? அவர்களை சேர்த்த எந்த இயக்கம் உலகத்தில் யோக்கியமாய் நடந்தது அல்லது நடைபெறுகிறது?.
மகாத்மா காந்தியின் அற்புதமான இயக்கம் அழிந்து, அவரது புனிதமான தத்துவங்கள் பயன்படாமல் அவரையும் ஒரு சங்கராச்சாரியார் போல ஆக்கிவிட்டது, பார்ப்பனர்களை அவரது இயக்கத்தில் சேர்த்ததினாலல்லவா? தனவைசிய நாட்டில் பார்ப்பனீயத்தை ஒழித்து, மக்களுக்கு சமத்துவமும், சுதந்திரமும் அளித்து, மூட வழக்கத்தை ஒழித்து, சுயமரியாதையை உண்டாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பதினாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல அறிஞர்கள் கூடி ஆரம்பித்த ஒரு பத்திரிகை இன்றைய தினம் சுயமரியாதைப் பிரசாரம் செய்வது நாட்டிற்கு கெடுதி என்றதாக எழுதிக்கொண்டு சுயமரியாதைப் பிரசாரத்திற்கு எதிர் பிரசாரம் செய்வதற்கு காரணமென்ன? ஒரு பார்ப்பனனை அந்த பத்திரிகை ஆபிஸில் நுழைய விட்டதினாலல்லவா? இப்பேர்பட்ட சொந்த உறுதியுள்ள மக்களும், தத்துவங்களும், பார்ப்பனர்களை உள்ளே சேர்த்ததின் பலனாக பாழ்பட நேரிடுகிறது என்றால் மற்ற சாதாரண கூட்டங்களில் புகவிட்டால் என்ன கதியாகுமென்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. விதண்டாவாத முறையில் வக்கீல் தத்துவம் பேசுவதின் மூலம் வாயாடிகள் பாமர மக்களை எந்த கொள்கைக்கு வேண்டுமானாலும் இழுத்து விடலாம். வாதத்தில் பாமர மக்களை வென்று விடலாம். இவைகளாலேயே சரிக்கண்ட நியாயமேற் பட்டுவிடுமா? பாமர மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி வரும்வரை இம்மாதிரி ஒரு கூட்டத்தார் யேமாற்றி வயிறு வளர்த்துக்கொண்டு பெருமையும், கீர்த்தியும் சம்பாதிக்கலாமே ஒழிய உலகத்திற்கு இவர்களால் ஒருபயனும் யேற்படாததோடு நாளுக்குநாள் பாழ்பட்டுக் கொண்டே வரும். எனவே செங்கல்பட்டு ஜில்லா மகாநாடு என்னும் பார்ப்பனீய மகாநாட்டில் நடைபெற்ற நடவடிக்கைகளும் அதில் சம்பந்தப்பட்டவர்களும் பார்ப்பனர்களால் ஏமாந்தவர்களும், பார்ப்பனர்களின் தயவு பெற்று வாழ்பவர்களுமானவர்களின் நடவடிக்கையேயல்லாமல் இது ஒரு பொதுத்தொண்டு அல்லவென்று சொல்வதோடு இம்மாதிரி சூழ்ச்சிகளைக் கண்டு மக்கள் யேமாறும் காலம் மலையேறிப் போய்விட்டது என்றும் சொல்வோம். மற்றபடி அதன் தீர்மானங்களைப் பற்றி பின்பு ஆராய்வோம்.
(குடி அரசு - தலையங்கம் - 24.07.1927)