சட்டசபைத் தேர்தல் சமீபிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் பேய்க்கு திரு.ராஜகோபாலாச்சாரியாரால், திரு.காந்தியின் மூலம் உச்சாடனம் செய்யப் பட்டு, அது கண் கொண்டபடி நமது நாட்டில் தலைவிரித்து ஆடுவது வழக்கம். இதை நாம் கொஞ்ச காலம் கூடவே இருந்து பார்த்தவர்களில் ஒருவராதலால் இந்தப் பேயாட்ட உபத்திரவத்தை எப்படி ஒழிப்பது என்பது நமக்கு அதிக கஷ்டமான வேலையல்ல.

periyar 330இந்தப் பேய் உச்சாடனத்திற்காக 27-3-29 தேதியில் டில்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி என்பது கூடி சில தீர்மானங்கள் செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் தெரிய வருகிறது.

அதாவது, மறுபடியும் முன்போல் (ஒத்துழையாமைக் காலம்) போல கள்ளுக்கடை மறியலும் மரத்தின் பாளைகளை வெட்டுதல் போன்ற காலித்தனத்திற்கு மக்களைத் தூண்டும் படியான தன்மையுடையதான தென்னை மரத்துக்காரர்களை மரம் கள்ளுக்கு விடாமல் செய்யும் பிரசாரமும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் உண்டாக்கும் படியானதாகிய குத்தகைக்காரர்களை ஏலத்தில் கோராமல் இருக்கும்படி செய்யும் பிரசாரமும் செய்வதற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றை நடத்துவதற்கும் திரு.ராஜகோபாலாச்சாரியார் தம்மையே நியமித்து கொண்டும், அதற்காகச் செலவுக்கும் மாதம் 500 வீதம் கிடைக்கும்படி செய்து கொண்டிருப்பதாய்த் தெரிகின்றது.

இதை ஒன்பது மாதத்திற்கு (அதாவது தேர்தல் வரை) செய்ய வேண்டுமாம். அதோடு தீண்டாமை விலக்கு பிரசாரமும் அனுமதித்து அதை நடத்த பண்டித மதன் மோகன மாளவியா நியமனம் பெற்று அந்த செலவுக்கும் மாதம் 200 ரூபா அனுமதி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்தப் பிரசாரங்களை இப்போது அதுவும் சட்டசபையைக் கலைத்து மறுதேர்தல் ஏற்படுத்துவது உறுதி என்று ஏற்பட்டவுடன் இவ்வளவு அவசரமாய் இதை நடத்தக் காரணம் என்ன? என்பதை யோசித்தால் ஒரு முழு மூடனுக்கும் இதன் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் யோக்கியப் பொறுப்பற்ற சூழ்ச்சிகளும் விளங்காமற் போகாது.

சென்ற தேர்தலின் போது இதே மாதிரிதான் திரு.ராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய அடிமைகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க வேண்டி 1000 கணக்கான தென்னை மரங்களைக் கள்ளுக்கு விட்டு வருஷம் பதினாயிரக்கணக்கான ரூபாய்களைக் கள்ளினால் சம்பாதிக்கும் திரு. வெங்கட்ரமண அய்யங்கார் போன்றவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு இந்த இரண்டரை வருஷ காலம் “உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனி”யைப் போல் மதுவிலக்கில் மவுனம் சாதித்துவிட்டு, கதரின் பேரால் லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் மூட மக்களிடமிருந்து கொள்ளையும் அடித்து விட்டு இப்போது தேர்தல் வருகின்றது என்று தெரிந்தவுடன் மறுபடியும் பழைய பல்லவியை பாடத் தொடங்கி இருப்பதில் ஏதாவது நாணயமிருக்குமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

நிற்க, இந்த இரண்டு வருஷ காலம் இந்தக் காங்கிரஸ் என்ன செய்தது என்பதைப் பற்றியும், அது ஏன் மதுவிலக்குப் பிரசாரம் செய்யவில்லை என்பதைப் பற்றியும், சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பேரால் மது விலக்குத் திட்டத்தை ஒப்புக் கொண்டவர்கள் சட்டசபையில் 50 அங்கத்தினர்களுக்கு மேல் தெரிந்தெடுக்கப் பட்டிருந்த காலத்திலும், தங்கள் இஷ்டப்படியே மந்திரிகளை நியமித்து அவர்களைத் தங்கள் இஷ்டப்படி ஆதரித்து ஆட்டிக் கொண்டு வந்த காலத்தில் இந்த மதுவிலக்குப் பிரசாரமும், சட்டசபையில் சட்டத்தின் மூலம் சாதிப்பதும் ஆகிய காரியங்கள் எங்கு போய்விட்டன?

தவிர, 1927-ம் வருஷத்தில் காங்கிரஸினால் ஆதரிக்கப்பட்டு வந்த மது, மந்திரிகள் முதலாவதாக ஜனங்கள் மதுவை வெறுக்கின்றார்களா? இல்லையா? என்பதே தமக்குச் சரியாகத் தெரியவில்லை என்றும், மதுபானம் மக்களுக்கு நன்மையா? கெடுதியா? என்பதைத் தாம் இன்னமும் பூரணமாய் அறிந்து கொள்ளவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தது உலகமறியும். அப்பேர்ப்பட்ட மந்திரிகளை ஆதரித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மறுபடியும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப் போகிறோம்; மதுவிலக்கு ஒப்புக் கொண்டவர்களை சட்டசபைக்கு அனுப்பப் போகிறோம் என்பதில் ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கமுடியுமா? என்று கேட்கின்றோம்.

மது இலாக்கா மந்திரி கனம் திரு.முத்தையா அவர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த பிறகும், தமிழ் நாட்டில் மதுவிலக்குக்காக ஒரு கமிட்டி நியமித்து அதன் மூலம் மதுவிலக்குப் பிரசார ஏற்பாடு செய்ய உத்தேசித்த பிறகும், வேண்டுமென்றே சூழ்ச்சிக்காக தேர்தலை உத்தேசித்து அதுவும் பார்ப்பனர்களுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்ய இந்தக் குயுத்தி செய்து காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு பொதுப் பணத்தில் மாதம் 500 ரூபாய் திரு. ராஜகோபாலாச்சாரியாருக்கும் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏய்க்க முடிவு செய்து விட்டார்கள்.

காங்கிரஸ்காரர்களின் மதுவிலக்குப் பிரசாரத்தின் யோக்கியதையையும், நல்ல எண்ணத்தையும் பொது ஜனங்கள் உணர வேண்டுமானால் ஒரு உதாரணம் எடுத்துக் காட்டுகின்றோம். சட்டசபையில் மதுவிலக்குப் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்ய மந்திரிகள் திட்டம் கொண்டு வந்த காலத்தில் காங்கிரஸ் மெம்பரானவரும் கோயமுத்தூர் ஜில்லா பிரதிநிதியானவரும் 9 வருஷம் தொடர்ந்து சட்டசபையில் இருப்பவரும் கோயமுத்தூர் ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான திரு.சி.வி.வெங்கட்ட ரமணய்யங்கார் பிரசார திட்டத்தை எதிர்த்துப் பேசுகையில் என்ன காரணம் சொன்னாரென்றால்.

“மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் ஜனங்களுக்குள் மதுக்குடி அதிகமாய்விடும். ஏனெனில் இவர்கள் ஏன் நம்மை கள்ளுக் குடிக்கக் கூடாது என்று சொல்லுகின்றார்கள் என்று நினைத்து ஒவ்வொருவனும் அதைக் குடித்துத்தான் பார்ப்போமே என்பதாகக் கருதி குடிக்க ஆரம்பித்து விடுவான். ஆதலால் பிரசாரம் கூடாது”

என்பதாகச் சொன்னாராம்.

இதிலிருந்து காங்கிரஸ்காரரின் மதுவிலக்கு யோக்கியதையை உணர்ந்து கொள்ளலாம். காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளின் மதுவிலக்குப் பிரசாரத் திட்டத்தை ஒப்புக் கொள்ளாததற்காக இப்படிச் சொன்னார்கள் என்று யாராவது சமாதானம் சொல்லக் கூடுமானால் அதை நாம் மற்றொரு புரட்டும் நாணயக் குறைவுமான காரியம் என்று சொல்லுவோம். ஏனெனில் காங்கிரஸ்காரருக்கு உண்மையிலேயே திட்டத்தில் ஆnக்ஷபணை இருந்தால் அதைத் தாராளமாய் வெளியிலெடுத்துச் சொல்லி அதற்காக ஏதாவது திருத்தம் கொண்டு வந்து பேசுவதோடு திட்டத்தில் உள்ள குறைகளைக் கண்டிப்பதற்குத் தாராளமாய் முயற்சித்திருக்கலாம். அதைவிட்டு விட்டு “குடிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தால் குடி அதிகரிக்கும்” என்று சொல்லுவதின் கருத்து என்ன? என்று தான் கேட்கின்றோம். இதன் உண்மை தெரிய வேண்டியவர்கள் மேற்படி சட்டசபை நடவடிக்கைகளை வரவழைத்துப் பார்த்தால் விளங்கும்.

இனி மதுவிலக்கு விஷயமாய் காங்கிரஸ்காரர்கள் செய்யும் பிரசாரத்தில் ஏதாவது நாணயமிருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். காங்கிரஸ் ஏற்கனவே செய்து பார்த்தாய் விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அந்த முறை தப்பென்றும், உணர்ந்து நடுவேளையில் திடீரென்று நிறுத்தும்படியும் செய்து அதில் ஈடுபட்ட உண்மைத் தொண்டர்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது. இப்படியிருக்க இப்போதும் அதே முறையில் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப் போகின்றோம் என்று அதுவும் தேர்தல் சமயத்தில் அதுவும் கள்ளினால் வருஷம் பதினாயிரக் கணக்கான ரூபாய் வரும்படி சம்பாதிக்கும் அங்கத்தினர்களும் மதுவில் முழுகி எழுந்திருக்கும் நபர்களும் சேர்ந்து கொண்டு முன்போலவே மறுபடியும் சுயராஜ்ஜியத்திற்கு ஒரு ´ 6 µ 3 µ ஒரு µ ஆகிய வாய்தாக்களையும் அதோ தெரிகின்றது இதோ தெரிகின்றது என்கின்ற செப்பிடு வித்தைகளையும் செய்து கொண்டு புறப்பட்டிருப்பதன் இரகசியத்தை உணர்ந்து, காங்கிரஸ் பேயையும், மதுவிலக்குப் பிரசாரப் புரட்டையும் தமிழ்நாட்டுக்குள் அண்டவிடாமல் தலையிலடித்துத் திருப்பி அனுப்பி விடும்படியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உண்மையிலேயே மதுவிலக்குப் பிரசாரத்திற்கு தமிழ்நாடு மதுவிலக்குப் பிரசாரம் செய்வதற்கென்று சமீபத்தில் ஈரோட்டில் ஒரு பெரிய கூட்டம் கூட்டுவித்துத் தமிழ்நாடு மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி என்பதாக ஒரு பொதுக் கமிட்டி தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றது. அந்தக் கமிட்டியில் உள்ள அந்தந்த ஜில்லா கனவான்கள் முயற்சியால் அந்தந்த ஜில்லாவில் ஒரு ஜில்லாக் கமிட்டி ஏற்பாடு செய்யப்படும். அதன் மூலம் ஜில்லா முழுவதும் பிரசாரம் செய்யப்படும். இந்தப் பிரசாரத்தில் பலாத்காரம் செய்வதோ, பலாத்கார மறியல் செய்வதோ, பாளைகளை வெட்டுவதோ, ஏலத்தின் போது காலித்தனம் செய்வதோ முதலாகிய காரியங்கள் ஒரு சிறிதும் இல்லாமல், மதுவிலக்கின் தோஷங்களை எடுத்துச் சொல்லுவதன் மூலமும், பெண்களால் புருஷர்களின் குணங்களைத் திருத்தப்பாடு செய்வதன் மூலமும் மற்றும் ஓட்டர்களுக்கு மதுவிலக்கு எப்படி சட்டத்தின் மூலம் செய்யப்படும் எப்படிப்பட்டவர்கள் மதுவிலக்குச் சட்டம் செய்யச் சவுகரியம் உடையவர்கள் என்பது போன்றவைகளை எடுத்துச் சொல்லுவதின் மூலமும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் காங்கிரஸ் தேர்தலுக்காகச் செய்யும் சூழ்ச்சியில் விழுந்து விடாமலும் தேர்தலில் மோசம் போகாமலும் இருக்க வேண்டுமாய் எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 07.04.1929)