ambedkar periyar 301தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.

தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும். அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும், அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி குறைகளை வெளிப்படுத்தியும், பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரசாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானதுமான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.

இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக்களிலும் ஜில்லா, தாலூகா மகாநாடுகள் கூட்டப்பட்டிருக்கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ் மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்படவில்லை. இதற்காக சுமார் 4, 5 மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும் நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000-க்கு மேல் வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி வரவேற்பு சபை அக்கிராசனரையும் தெரிந்தெடுத்தாய் விட்டதாகத் தெரிய வருகின்றது.

மகாநாட்டுக்கு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவனம் செலுத்தி சுயமரியாதையியக்கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட கனவான்களாகவும், சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக் கருதும் கனவான்களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம்.

திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ணன் நாயர், பி. சுப்பராயன், சர். கே.வி. ரெட்டி நாயுடு, எம்.கே. ரெட்டி, பன்னீர் செல்வம், குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார் முதலியவர்களைப் போன்றவர்களையே தெரிந்தெடுத்தால் மிகுதியும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.

நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த முயற்சிப்பதாய்த் தெரிகின்றது. தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில் செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மையுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்கு காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாக பாடுபடுவதே போதியதாகும். பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர்களைப் பற்றி தூற்றாத - விஷமப் பிரசாரம் செய்யாத நாட்களை காண்பது மிகவும் அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு நமது பனக்கால் அரசர் எப்படி ஒரு பெரிய “இராக்ஷதராக” காணப்படுகின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள் டி. பன்னீர் செல்வம் அவர்களும் திரு. எம்.கே. ரெட்டி அவர்களும் “இராக்ஷதர்”களாகக் காணப்படுகிறார்கள். இராக்ஷதர்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர்கள் என்பது தத்துவார்த்தம்) இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன் வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது.

தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும் முயற்சியில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்கு தாராளமாய் வெளியில் வந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.

(குடி அரசு - வேண்டுகோள் - 16.12.1928)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.