தென் இந்திய ரயில்வெ தொழிலாளர் வேலை நிறுத்தமானது தொழிலாளர்களுக்குப் பலன் கொடுக்காமல் போனதாக சிலர் சொல்வதானாலும், அந்த வேலை நிறுத்தம் பல “தலைவர்”களுக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும் கொழுத்த பலனைக் கொடுத்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றே சொல்லுகின்றோம். என்னவென்றால் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக பல நாளாகவே எச்சரிக்கை செய்தும், ரயில்வே அதிகாரிகள் இணங்காமல் பிடிவாதமாயிருப்பதற்கும், வேலைநிறுத்தம் ஏற்பட்ட பிறகும் வேலைநிறுத்தத்திற்கு கேடு நேரிடுவதற்கும் உண்மையற்ற சமாசாரங்களை வெளிப்படுத்தியும், தொழிலாளர்கள் மீது பழி சுமத்தியும் எழுதி வந்த தலைவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நல்ல ஆதாயம் ஏற்பட்டதென்றே சொல்ல வேண்டும்.

ரயில்வே அதிகாரிகளும் தங்கள் அனுதாபிகளுடனும் சில பத்திரிகைக்காரர்களுடனும், சில தலைவர்களுடனும் இது விஷயமாய் தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டுதான் வேலை நிறுத்தத்தைச் செய்து தீர வேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்து விட்டார்களே ஒழிய வேறில்லை.

periyar 478இந்த உண்மையானது ஏஜண்டின் முரட்டுத்தனத்தாலேயே ஒருவாறு ருஜுவாகாமல் போகாது. அதாவது திருவாளர் கோவை சி.எஸ். ரத்தின சபாபதி முதலியார் ஏஜண்டுக்கு மிகவும் அனுகூலமானவர் என்று சிலரால் சொல்லப்படுபவர். அவர் வேலைநிறுத்தத்தின் போது மக்களின் சுகாதாரத்தைப் பொறுத்தவரை அதாவது கக்கூஸ் சுத்தம் செய்வதற்கு ஆள் கொடுத்து உதவினவர். இதனால் சில தொழிலாளர்களுடைய மன வருத்தத்தையும் பெற்றவர். அப்படிப்பட்டவரே “தொழிலாளர் போராட்டத்தை ஒரு விதமாக முடிவு செய்யலாம் போலிருக்கின்றது. ஆதலால் இது விஷயத்தில் நான் ஏதாவது சேவை செய்ய ஆசைப்படுகின்றேன். அதற்கு இடம் கொடுக்கின்றீர்களா?” என்று ஏஜண்டைக் கேட்டதற்கு “உமது சேவை எனக்கு வேண்டியதில்லை, எனக்கு அவசியமுமில்லை” என்று மனிதத் தன்மைக்கேற்ற மரியாதை கூட இல்லாமல் தந்தி அடித்துவிட்டார். இம்மாதிரி மரியாதை கூட இல்லாமல் நடந்து கொண்டீர்களே என்று கேட்டால் அதற்கு பொருத்தமற்ற பதிலைச் சொல்லிவிட்டு, நீர் ஏதாவது சேவை செய்ய வேண்டுமென்கிற ஆசையிருந்தால் தொழிலாளர்களை என் காலில் கொண்டு வந்து கும்பிட வையும் என்பது போன்ற வன்னெஞ்சமான கடிதம் எழுதினார். இதை உத்தேசித்து அவர் அந்த ரயில்வே அட்வைசரி போர்டில் தனக்குள்ள மெம்பர் ஸ்தானத்தை ராஜீனாமா கொடுக்கக்கூடத் தீர்மானித்தார். அவரது உண்மை நண்பர்கள் சிலரின் வேண்டுகோளால் அது தடுக்கப்பட்டது. இதன் மேல் திரு. முதலியார் அடுத்துக் கூடப் போகும் சட்டசபைக் கூட்டத்தில் ஒரு அவசரத் தீர்மானம் கொண்டு வந்து தொழிலாளர் நிலையைப் பற்றிப் பேசப் போவதாக அறிகிறோம். இதனால் என்ன பலன் ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை. சட்டசபை மண்டபத்திலுள்ள சுவர்களும் தூண்களும் திரு. முதலியார் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதால் என்ன பலன் விளையுமோ, அதுதான் அங்குள்ள சட்டசபை மெம்பர்களும் சர்க்கார் அதிகாரிகளும் கேட்டுக் கொண்டிருப்பதாலும் விளையுமே ஒழிய வேறில்லை.

அரசாங்கம் என்பதும், ரயில்வே முதலாளிகள் என்பதும், ஜனப்பிரதிநிதிகள், தலைவர்கள், காங்கிரசு, சுயராஜ்யம், தேசீயம் என்பதும், ஏழைகள் தலையில் கையை வைத்துக் கொள்ளையடித்துத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் ஒரே தன்மைமையுடைய கொள்ளைக் கூட்டமே ஒழிய வேறில்லை என்று நாம் கோபுரத்தின் மீதிருந்தும் கூவுவோம். இதற்கு உதாரணம் வெகு தூரம் போக வேண்டியதில்லை. ஒவ்வொரு தன்மையிலும் தலைவர்களின் ஜீவிய சரித்திரத்தை சற்று ஞாபகப்படுத்திக் கொண்டால் போதுமானதாகும்.

எனவே ரயில்வெ அதிகாரிகளின் ஆணவத்திற்குக் காரணம் இன்னது என்பது இப்போதாவது பொது ஜனங்களுக்கு விளங்கியிருக்கும். இந்த மாதிரிப் பத்திரிகைகளினுடையவும் தலைவர்களினுடையவும் உதவி ஏஜண்டுக்கு விலை கொடுக்காமல் கிடைத்திருக்குமென்று யாராவது நம்பக் கூடுமா? ஆதலால்தான் இவ்வேலை நிறுத்தத்தால் பலருக்கு லாபம் என்று சொன்னோம். “குதிரை கீழே தள்ளினதல்லாமல் குழியும் பறித்தது” என்பது போல் வேலை நிறுத்தத்தை தோல்வியடையச் செய்தது போதாமல் தொழிலாளர்களை சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தவும் பலமான காரியங்கள் செய்யப்பட்டும் வருவது மிகவும் வெறுக்கத் தக்கதென்றே சொல்லுவோம்.

கடலூர் சிறையில் சில தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டு எண்ணெய்ச் செக்கு ஆட்டுவதாக கேள்விப்படுகின்றோம். பல தொழிலாளர்கள் மீது பல வருஷம் தண்டிக்கத்தக்க கேசுகளை ஜோடினை செய்வதாக கேள்விப்படுகின்றோம். போலித் தலைவர்களுக்கு அடிமைப்படாத தொழிலாளர் சங்கங்களை அடியோடு அழிக்க முயற்சிப்பதாகவும் கேள்விப்படுகின்றோம். இன்னமும் இதில் எழுத முடியாத கொடுமைகளும் நடைபெறுவதாகத் தெரிய வருகின்றது. இதனாலெல்லாம் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஒருக்காலும் தோல்வியடையச் செய்துவிட முடியாதென்றே சொல்லுவோம்.

தொழிலாளர்கள் தாங்கள் செய்தது தப்பு என்பதாக உணர்ந்து ரயில்வே அதிகாரிகளின் காலில் போய் விழுந்தால்தான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், அதுவும் காலில் விழுந்தவர்களைப் பொறுத்தவரையில் தோல்வி அடைந்ததாகுமே யொழிய மற்றப்படி அவர்கள் எந்த லட்சியத்தை உத்தேசித்து வேலை நிறுத்தம் செய்தார்களோ அந்த லட்சியம் நிறைவேறினாலொழிய என்ன கஷ்டம் நேர்ந்தாலும் தொழிலுக்குப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்ட சுயமரியாதையுடைய தொழிலாளர்களுக்கு எந்த விதத்திலும் தோல்வி ஏற்படுமென்று சொல்ல முடியாது.

உதாரணமாக இதுவரை சுமார் 5000 தொழிலாளர் தங்கள் வேலையை ராஜீனாமா கொடுத்துவிட்டு வேறு கௌரவமான வேலையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளுவது என்று முடிவு செய்து விட்டார்கள். இந்த மன உறுதியையும், சுயமரியாதைத் தன்மையையும் கெடுக்கவே மறுபடியும் சில பத்திரிகைகளும் சில தலைவர்கள் என்போர்களும் சூழ்ச்சி செய்வதோடு சர்க்கார் ஆட்சியும் அதற்குத் துணை போய்க்கொண்டு கண்டபடி அரஸ்ட் செய்வதும், தண்டிப்பதும், வழக்கு ஜோடிப்பதும், ஜெயிலில் கொடுமைப் படுத்துவதுமான அக்கிரமங்களைச் செய்து கொண்டு வருகின்றது. இவைகளால் நாம் ஒரு சிறிதும் அதிசயப்படவில்லை. இந்த நாட்டின் தற்கால நிலை இதுதான் என்று நாம் கொஞ்சகாலத்திற்கு முன்னாலேயே முடிவு செய்து கொண்டுதான் இந்தத் தொண்டில் இறங்கியிருக்கின்றோம்.

இதிலிருந்து தேசீயம் என்பதும், அரசியல் என்பதும், சீர்திருத்தம் என்பதும், சுயராஜ்யம் என்பதும், தொழிலாளர் நன்மை என்பதும், காங்கிரஸ் என்பதும், சைமன் பகிஷ்காரம் என்பதும் தொழிலாளர்கள், தலைவர்கள் என்பதும், தேசீயத் தலைவர்கள் என்பதும் தேசீயப் பத்திரிகைகள் என்பதும், தொழிலாளர்கள் நன்மைக்குப் பாடுபடும் பத்திரிகைகள் என்பதும், ஏழைகளிடத்தில் அன்புள்ள முதலாளிகள் என்பதும், ஏழைகள் நன்மைக்குப் பாடுபடும் அரசாங்கம் என்பதும் ஆகியவைகளின் புரட்டுகளை மக்கள் அறிந்து கொள்ள ஒருவாறு வசதி ஏற்பட்டதென்றே நினைக்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 19.08.1928)

Pin It