periyar 366சென்னையில் பார்ப்பனீயத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதுதான் “கிராமப் புனருத்தாரண வேலை ஸ்தாபனம்.” நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து ‘இந்திய ஐக்கிய ஒற்றுமை சங்கம்’ என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.

அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம ஞான சங்கத்தினர் வாலைப் பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியே யாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண்டம்மைக்கு உள்ள பணமும், செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகிகளாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலி கொடுத்திருக்கிறது. இதைப் பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும் சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.03.1928)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.