பார்ப்பனரல்லாதாராகிய தமிழ் மக்கள் தென்னாட்டில் சுயமரியாதைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்ததும், அதற்கு நாட்டில் சிறிது செல்வாக்கு ஆரம்பித்தாலும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனப் பிரசாரம் மிகுதியும் பலமாய் செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னால் எங்காவது மடாதிபதிகளும், லோக குருக்களும், சங்கராச்சாரிகளும், பண்டிதர்களும், சாஸ்திரிகளும், பாகவதர்களும், சஞ்சாரம் என்கின்ற பெயராலும் காலnக்ஷபமென்கின்ற பெயராலும் இந்துமதம் என்கின்ற பெயராலும் வருணாசிரமம் என்கின்ற பெயராலும், ஆரிய தர்மம் என்கின்ற பெயராலும் இந்து தர்மம் என்கின்ற பெயராலும், புராணப் பிரசங்கம் என்கின்ற பெயராலும், வேதம், ஸ்மிருதி ஆகமம் என்கின்ற பெயராலும், ரிஷிகள் பெயராலும், மகாத்மாக்கள் பெயராலும் பலவித சூழ்ச்சி பிரசாரமும் மற்றும் பல பேர்வழிகளின் பெயரால் பார்ப்பனப் பத்திரிகைகளிலும் அவர்கள் தயவால் வாழும் பத்திரிகைகளிலும் அவர்களது கூலிப்பத்திரிகைகளிலும் பிரசுரிப்ப தின் மூலமாகவும் பிரசாரம் செய்து வந்தார்கள்.
சுயமரியாதைப் பிரசாரத்தின் பலமானது இவைகளையெல்லாம் தாண்டிச் செல்லும்படியான நிலைமைக்கு வந்து பாமர மக்களையும் பகுத்தறிவில்லாத மூடநம்பிக்கைக்காரரையும் தட்டி எழுப்பத்தக்க யோக்கியதைக்கு வந்து விட்டதால், உதாரணமாக மகாத்மா என்கின்ற பெருமையைக் கொடுத்து எவ்வளவோ தூரம் மக்கள் பின்பற்றி வந்த பெருமையையும் அடைந்த பெரியார் என்பவரான ஸ்ரீமான் காந்தியையே இவ்விஷயத்தில் எதிர்த்ததுடன் அவரிடம் வைத்திருந்த நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள்ளும்படியான நிலைமை ஏற்படும்படியான அளவுக்கு ஜனங்கள் விழித்துக் கொண்டதாலும் பல பார்ப்பனரை குலகுரு என்று பல தலைமுறையாய் வணங்கி கப்பம் செலுத்தி வந்ததையெல்லாம் நிறுத்தி விடத் தகுந்த அறிவும் துணிவும் ஏற்பட்டு விட்டதாலும் இனி வைதீகப் பெயரால் செய்யும் பிரசாரத்திற்கும் செல்வாக்கில்லை எனக் கருதி இப்போது உத்தியோகப் பார்ப்பனர்கள் இந்திய நாகரீகம் என்னும் பெயரால் பார்ப்பனப் பிரசாரத்திற்கு ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனரின் தலைமையில் கோர்ட் ஜட்ஜி வி.வி.சீனிவாசய்யங்கார் என்கின்ற மற்றொரு பார்ப்பனர் அட்வோகேட் ஜனரல் ஸ்ரீமான் கூ.சு.வெங்கிட்ட ராமசாஸ்திரி என்கின்ற பார்ப்பனரின் உதவியையும் மற்றும் ஸ்ரீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கூ.சு. ராமச்சந்திரய்யர், கூ.ஆ.கிருஷ்ணசாமி அய்யர், சந்திரசேகரய்யர் முதலிய செல்வாக்குள்ள வக்கீல் பார்ப்பனர்கள் உதவியையும் கொண்டு பிரசாரத்திற்கு வெளிக் கிளம்பிவிட்டார்கள்.
தென்னாட்டில் சுயமரியாதைப் பிரசாரம் ஏற்பட்டதின் பலனாய் ‘பாம்பும் கீரியும்’ போல் இருந்த அய்யர் அய்யங்கார்களும், ‘நாயும் பூனையும்’ போல் இருந்த சுயராஜ்யக் கட்சியும் மிதவாதக் கட்சியும் கொஞ்சிக் குலாவிக் கொண்டு நம்மீது பாய்கின்றன. எனவே இக்குறிகள் தமிழ்நாட்டில் சுயமரியாதைப் பிரசாரமானது ஒரு அளவுக்கு மதிப்புப் பெற்று வருகின்றது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏதாவது ஒரு இயக்கம் புதிதாக ஆரம்பமானால் அதற்கு அதன் எதிரிகளால் 5 தத்துக்கள் உண்டு. அதாவது:-
1. ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தை அதன் எதிரிகள் அலட்சியமாய் கருதுவது போல் வேஷம் போட்டு யாரையும் அதனால் லட்சியம் செய்யாமலிருக்கச் செய்து அதை ஒழித்துவிட முயற்சிப்பது.
2. அவ்வியக்கத்தைப் பற்றி ஜனங்கள் தப்பாய் நினைக்கும்படி இழிவாய் பேசி அதன் பேரில் பலவித தப்பர்த்தங்களையும் பழியையும் சுமத்தி ஒழித்துவிட முயற்சிப்பது.
3. அதன் தலைவர்களைப் பற்றி குற்றம் சொல்லி துர் எண்ணம் கற்பித்து யாரையும் பின்பற்றச் செய்யாமலும், மதிப்புக் கொடாமலும் இருக்கும்படி செய்து ஒழித்துவிட முயற்சிப்பது.
4. பிறகு தங்களுக்குள்ள சகலவித செல்வாக்குகளையும் உபயோகித்து பலவித எதிர்பிரசாரம் செய்து ஒழித்துவிட முயற்சிப்பது.
5. கடைசி மார்க்கமாக பலாத்காரத்தாலும், சட்டங்களினாலும் ஒழித்துவிட முயற்சிப்பது.
இவ்வளவையும் தாண்டிவிட்டால் இயக்கம் வேரூன்றி விட்டதென்றே சொல்லலாம். எனவே நமது சுயமரியாதை இயக்கம் அதன் எதிரிகளால் செய்யப்படும் மேல் கண்ட எல்லாவிதமான தத்துக்களையும் அனுபவித்துக் கொண்டு வருகின்றதுடன் அவைகளில் இருந்து கொஞ்சங்கொஞ்சமாய் தப்புவித்துக் கொண்டு வருகின்றதென்றே சொல்ல வேண்டும்.
மாதம் 1க்கு4000ரூ சம்பளம் வாங்கும் ஒரு ஹைகோர்டு ஜட்ஜும் 5500 சம்பளம் வாங்கும் சட்ட மெம்பரும் 2000ரூ சம்பளமும் 5000ரூ வரும்படியும் சம்பாதிக்கும் அட்வகேட் ஜனரலும், மற்றும் மாதம் 10000, 20000 சம்பாதிக்கும் முக்கியமான வக்கீல்களும் ஒன்று சேர்ந்து எதிர் பிரசார யுத்தத்திற்கு வர நேர்ந்துவிட்டதென்றால் இப்பேர்ப்பட்டவர்களை நாம் வெளிப்படையாய் எதிரிகளாய் அடைந்ததின் மூலம் சிறிதாவது நாம் வெற்றி அடைந்திருக்கின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை. அதோடு எதிரிகள் நிலைமையும் இதுசமயம் சற்று கஷ்டமான நிலையில் இருக்கின்றது என்பதற்கும் இவ்வளவு பெரிய உத்தியோகஸ்தர்கள் பிரசாரத்திற்கு கிளம்பியிருப்பதே போதுமான ஆதாரமாகும். இந்த சமயத்தைக் கைவிட்டு விடாமல் ஜாக்கிரதையாய் இருந்து முன்னேறப் பார்க்க வேண்டியது நமது கடமையாகும்.
ஐகோர்ட் ஜட்ஜாகிய ஸ்ரீமான் வி.வி.சீனிவாசய்யங்கார் சென்னையில் செய்த எதிர் பிரசாரத்தில் பேசிய பேச்செல்லாம் புரோகிதர்களால் செய்யப்பட்டு வரும் ஒவ்வொரு சடங்கையும் செய்து தீரவேண்டும் என்பதே. அவைகள் ஒவ்வொன்றிற்கும் சமாதானம் சொல்லுவதற்கு ஒரே விஷயத்தைத்தான் எடுத்துக் கொண்டார். அதாவது:- “இவ்வளவு சடங்கை ஏற்படுத்தின நம் முன்னோர்கள் பயித்தியக்காரர்களா” என்று கேட்கின்றார். இரண்டாவதாக சடங்கின் பெருமைகளை வெள்ளைக்காரர்கள் கூட உணர ஆரம்பித்து விட்டார்கள் என்கின்றார். தவிர பாலிய விவாகத்தைப் பற்றி சமாதானம் சொல்லும்போது, அந்தப் பொறுப்பை பெற்றோர்களுக்கு விட்டு விட வேண்டுமே ஒழிய மற்றவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாது என்கின்றார்.
தீண்டாமையைப் பற்றி பேசும்போது, பிறவியிலேயே மக்களுக்கு ஒருவித வசீகரமும் ஆத்ம ஞானமும் வருகின்றதென்றும் தீண்டாதவர்களுக்கு அவ்வித வசீகரமும் ஞானமும் இல்லை என்றும் சொல்லுகின்றார். அம்மாதிரி வசீகரமும் ஆத்மஞானமும் இருந்த நந்தனார் முதலிய பல பார்ப்பனரல்லாதாரை பார்ப்பனர்கள் வழிபடுவதற்கு ஏதாவது ஆnக்ஷபிக்கின்றார்களா என்கிறார். எனவே ஒரு ஐகோர்ட் ஜட்ஜியின் பகுத்தறிவும் பாரபக்ஷமற்ற நீதிவழங்கும் தன்மையும் இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். இவரால் இது சம்மந்தமான விஷயங்களில் மக்களுக்கு சரியான நியாயம் கிடைக்குமென்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?
இவருக்கு துணைவரான சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் அக்கிராசன முடிவுரையாகப் பேசும்போது நாட்டில் தற்காலம் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையானது ஜஸ்டிஸ் சீனிவாசய்யங்காரை இம்மாதிரி பேசச் செய்தது என்று ஆரம்பித்து, வருணாசிரமத்தைப் பற்றி பேசும் போது இந்து நாகரீகம் புராதனமானதென்றும் இந்தியாவில் இருக்கும் வருணாசிரம தர்ம அற்புதம் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும் அதுவே இந்திய நாகரீகத்திற்கு ஒரு உயர்வு என்றும் ஏழ்மையும் தெய்வ ஞானமும் பொருந்தியவரை முதலில் வைத்து, போர்த்திறமுள்ளவரை இரண்டாவதாக வைத்து செல்வந்தர்களை மூன்றாவதாக வைத்து, தொழில் செய்பவர்களை நான்காவதாக வைத்து இருப்பதானது உலக நன்மையை முன்னிட்டு நம் முன்னோர்களின் ஆழ்ந்த சிந்தனையின் பலனாகவும் முதிர்ந்த அனுபவத்தின் பலனாகவும் ஏற்படுத்தப்பட்டது என்றும் மெச்சிக் கொள்ளுகின்றார். ஆகவே 5500 ரூபாய் வாங்கும் நமது சட்டமெம்பரின் ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்ள நமக்கு இதைவிட வேறு என்ன சந்தர்ப்பம் வேண்டும்.
இந்து மதத்தைப் பற்றியும் இந்திய நாகரீகத்தைப் பற்றியும் வருணாசிரமத்தைப் பற்றியும் பேசப் புகுந்த இந்த ஆசாமிகளின் யோக்கியதையை உலகமறியாதா என்றும் கேட்கின்றோம். அக்கிராசனர் சர்.சி.பி.ராமசாமி ஐயர் என்கின்றவர் எங்கும் போவார், எதையும் சாப்பிடுவார், எதையும் குடிப்பார், யாரையும் சுகிப்பார், என்னமும் செய்வார். பிரசங்கியாராகிய ஐகோர்ட் ஜட்ஜ் ஸ்ரீமான் வி.வி. சீனிவாசய்யங்கார் என்பவர் சர்.சி.பி.க்கு அண்ணன் என்று சொல்ல வேண்டியதுடன் எதுவும் செய்து உத்தியோகம், சம்பாதிப்பார். எனவே இம்மாதிரியான சுத்தர்கள் நமக்கு இந்து மதத்தையும் இந்திய நாகரீகத்தையும் வருணாசிரமத்தையும் பெரியோர்களின் புத்திசாலித்தனத்தையும் போதிக்க வருகிறார்கள் என்றால் நமது நிலைமை என்னவென்று சொல்லிக் கொள்ளுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
இவர்கள் இப்போது பார்த்து வரும் பொறுப்புள்ள உத்தியோகத்தில் இனி அரை நாழிகை உட்கார்ந்திருக்க யோக்கியதை உண்டா என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்க வேண்டும். குதிரை கீழே தூக்கிப் போட்டதல்லாமல் புதைக் குழியும் பறித்தது என்பது போல் சாஸ்திர ஞானத்தோடு இவ்வளவு நாள் பேசியதல்லாமல் இப்போது சட்ட ஞானத்தோடும் பேச முன் வந்து விட்டார்கள். இனித்தான் நாம் விழிப்பாய் இருக்க வேண்டும். மதம் என்றும் வருணம் என்றும் ஆச்சிரமமென்றும் தர்மம் என்றும் பெரியோர்கள் ஏற்படுத்தியது என்றும் வேதம் என்றும் புராணமென்றும் இந்திய நாகரீகமென்றும் சொல்லிக் கொண்டுவரும் எந்த ஆசாமிகளையும் கண்டிப்பாய் நம்பக்கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)