உஷார்! உஷார்!!
பார்ப்பனர்கள் பொது ஜனங்களை ஏமாற்றி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பொது ஜன நன்மைக்குப் பாடுபடுகின்றவர்கள் போல் வேஷம் போட்டு, பொதுமக்களுக்குப் பயன்படாத அற்ப காரியங்களை பிரமாதப்படுத்திப் பேசி, அதுவே மகா முக்கியமானதென்று நம்பும்படி செய்து, அது தங்களால்தான் முடியுமே தவிர மற்றவர்களால் முடியாதென்றும், கடவுள் தங்களை அதற்காகவே படைத்திருக்கிறாரென்றும் சொல்லிக் கொண்டு, அந்த “பொதுத் தொண்டு” தொழிலையே தங்கள் ஜீவனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் உபயோகப்படுத்திக் கொண்டு, நகத்தில் சிறிதுகூட அழுக்குப் படாமல் சௌக்கியமாயிருந்து வாழ்ந்து வருவது யாவரும் அறிந்த விஷயமாகும்.
மேலும், இம்மாதிரியான ஏமாற்றும் பிழைப்பை யாராவது தெரிந்து அதை வெளிப்படுத்தி ஒழிக்க முயற்சி எடுத்துக் கொண்டால் உடனே நமது பார்ப்பனர்கள் அவர்கள் மீது சற்றும் ஈவு இரக்கமில்லாமல் பாய்ந்து கடுமையான பழிகளைச் சுமத்தி அவர்களை இராட்சதரென்றும், நாத்திகரென்றும், தேசத்துரோகி என்றும் சொல்லி, பொதுமக்களிடம் அவர்கள் மீது வெறுப்புண்டாகும்படி செய்து எப்பாடுபட்டாவது அவர்களது செல்வாக்கையும் ஒழித்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளுவது பரம்பரை வழக்கமாக இருந்து வருவதை சுருதி மூலமாகவும் அனுபவ மூலமாகவும் தினமும் பார்த்து வருகின்றோம்.
உதாரணமாக, கடவுளை இன்ன இன்ன மாதிரி இன்ன இன்ன பதார்த்தங்களால் பூஜை செய்தால் இன்ன இன்ன புண்ணியம் என்றும்; ஆனால், அந்தப் பூஜை தங்கள் மூலியமாகத்தான் செய்து தீரவேண்டும் என்றும்; இன்ன இன்ன குளத்தில், நதியில், குளித்தால் புண்ணியம் என்றும்; ஆனால், இந்த குளிப்பும் தங்கள் மூலமாக குளித்தால்தான் புண்ணியம் என்றும்; இறந்தவர்களுக்கு என்று இன்ன இன்னது செய்தால், கொடுத்தால், அவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென்றும்; ஆனால் அவைகள் முழுவதும் தங்களுக்குச் செய்தால், கொடுத்தால் தான் அந்த மோட்சம் கிடைக்கும் என்றும் கல்யாணம், பிள்ளைப் பேறு வாழ்வு, நோவு, சாவு ஆகியவைகளுக்கு இன்ன இன்ன சடங்குகள் செய்தால் தான் அவைகள் செல்லுபடியும் பலனும் நன்மையும் உண்டாகும் என்றும்; ஆனால் அவைகள் முழுவதும் தங்களைக் கொண்டு செய்தால் தான் பலிக்குமென்றும் சொல்லி வெகுகாலமாக ஏமாற்றி வருவதுடன், இவற்றையும் ஒன்று பத்து நூறு ஆயிரமாக, அதாவது, ஆயிரக்கணக்கான கடவுள்களும் ஆயிரக்கணக்கான தீர்த்தங்களும், பல உலகங்களும், சடங்குகளும், பலன்களும், பதவிகளும் கற்பித்து அவைகளை அப்படியே நம்பும்படியும் செய்ய, வேதமென்றும், சுருதி என்றும், சாஸ்திரமென்றும், புராணமென்றும், இதிகாச மென்றும் எழுதி, அவைகளை எழுதியவர்கள் ரிஷிகளென்றும், முனிவர்களென்றும், தேவர்களென்றும், கடவுள்களென்றும் சொல்லியும்; அவைகளை அப்படியே நம்பி பின்பற்றி நடந்து அநேகர் முக்தி பெற்றதாகவும் கதைகள் கட்டி, அப்படி முக்தி பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்றும், நாயன்மார்கள் என்றும், சிரஞ்சீவிகள் என்றும் சொல்லி, அவற்றிற்கும் கதைகள் எழுதி, இவைகளுக்கு ஆத்மார்த்தம் என்று பெயரும் கொடுத்து பாமரமக்களை நம்பச் செய்து அதன் பேராலும் தங்களுக்கு வரும்படியும் வாழ்வும் ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதையும், இவைகளையெல்லாம் இன்றைய தினமும் “மகாத்மாக்கள்” உட்பட கோடிக்கணக்கான மக்கள் மூடத்தனமாய் நம்பி அவைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து வருவதோடு அவற்றை பல பார்ப்பனரல்லாதார்களும் பிரசாரம் செய்து வருவதையும் பார்த்து வருகின்றோம்.
ஆத்மார்த்தம், பரலோக சாதனம் என்பவைகளாகிய, அதாவது, நமக்கு பிரத்தியட்சத்தில் தெரியக் கூடாத விஷயங்களில்தான் இந்தப்படி மூடத்தனமாக நாம் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், லௌகீகம் என்பதாக, அதாவது, இந்த உலகத்திலேயே நாம் பிரத்தியட்சமாக அனுபவிப்பது என்பதாக சொல்லிக் கொண்டு ஜோசியம், பேய், பிசாசு, மந்திரம், சூனியம், பிராயச்சித்தம், சாந்தி, ஓமம், இன்னும் பல்வேறுபட்ட எத்தனையோ விஷயங் களைக் கற்பித்து மக்களுக்குப் பேராசையையுண்டாக்கி அவைகள் மூலமாக வும் ஏமாற்றிப் பிழைத்து வருவதையும் பார்த்து வருகின்றோம்.
இவ்வளவும் போதாமல் அரசியல் என்றும், சுயராச்சியம் என்றும், தேசியம் என்றும், ஒத்துழையாமை என்றும், இம்மாதிரி பல அர்த்தமற்ற வார்த்தைகளைச் சொல்லி, அவற்றின் மூலமும் தங்களோடு சில பார்ப்பனரல்லாதார்களையும் சேர்த்துக் கொண்டு, பொதுஜனங்களை ஏமாற்றிப் பிழைத்து வருவதையும் நேரில் பார்த்து வருகின்றோம்.
இவைகள் தவிர, மேற்கொண்டு இதே கூட்டத்தார்கள் தேச சேவை செய்கின்றோம் என்பதாகச் சொல்லிக் கொண்டு கதர் என்றும், மதுவிலக்கு என்றும், தீண்டாமை ஒழித்தல் என்றும், ஜனங்களுக்குப் பிடித்தமான சில காரியங்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு அதன் மூலமும் பாமர மக்களை தங்கள் வயப்படுத்திக் கொள்வதன் மூலமும் தங்களுக்கு வேண்டிய காரியங்களை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்பதாகக் கருதி, புதிய புதிய சூட்சிகள் செய்து கொண்டு வருவதையும் பார்க்கின்றோம்.
ஆனால், இவ்வளவு புரட்டுகளும், சூட்சிகளும், தந்திரங்களும் சமீபத்தில் நமது நாட்டில் ஏற்பட்ட சுயமரியாதை இயக்கத்தாலும் மற்றும் பல காரணங்களாலும் நமது நாட்டில் ஏற்பட்ட கண்விழிப்பால் ஒருவாறு வெளியாக நேர்ந்துவிட்டதால் இனி இதிலிருந்து சமாளிக்க இப்போது புதிதாக ஒரு தந்திரம் கண்டு பிடித்து அதைக் கொண்டு கரையேறப் பார்க்கின்றார்கள்.
அதுதான் “நிலத்தீர்வை குறைத்தல்” என்னும் ஒரு பெரும் சூழ்ச்சி! இந்தப் புதிய சூட்சியை இவ்விடத்துப் பார்ப்பனர்களோ அல்லது அவர்களுடைய வால்களோ கூலிகளோ கைக்கொண்டால் செல்லுபடியாவது முடியாத காரியம் எனத் தீர்மானித்து, இதற்கு வழக்கம்போல் வடநாட்டிலிருந்து ஒரு ஆசாமியைப் பிடித்துக் கொண்டுவந்து அவர் மூலம் பிரசாரம் செய்விக்கக் கருதி, சுற்றுப் பிரயாணமும் செய்கின்றார்கள்.
அந்த வடநாட்டு ஆசாமி யார் என்றால் அவர் தான் திரு. வல்லவபாய் படேல் என்பவர். இவர் திரு.காந்தியின் அந்தரங்க சபை சிஷ்யர்களில் ஒருவர். திரு.காந்தியைப் போலவே இவரும் சுயராஜ்ஜியத்திற்கு ஒவ்வொரு வருஷ வாய்தா போடுபவர்.
ஆனால் திரு.காந்தி ராட்டினத்தில் சுயராஜ்யம் என்றால் இவர் நிலத்தீர்வையில் சுயராஜ்யம் என்பவர். ராட்டினத்தில் சுயராஜ்யம் என்பதின் யோக்கியதை நமது நாட்டில் வெளியாகி இப்போது ராட்டினத்திற்கும் ஜீவநாடி அடங்கிவிட்டதால் இனி ராட்டினப் புரட்டால் யாரையும் ஏமாற்ற முடியாது என்று நமது பார்ப்பனர்கள் கருதி, “ராட்டின வீரரை” விட்டுவிட்டு புதிய தந்திரமாகிய நிலவரியில் சுயராஜ்யம் என்கின்ற புரட்டால் நம்மை ஏமாற்ற இப்போது “நிலத்தீர்வை வீரரை” கூட்டி வந்திருக் கின்றார்கள்.
இந்த நிலத்தீர்வை வீரர் தென்னாட்டில் கால் வைத்தது முதல் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற வேண்டிய பிரசாரத்தையும், சுயமரியாதை இயக்கத்தை அழிக்க வேண்டிய பிரசாரத்தையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் குறைகூறும் பிரசாரத்தையும் தான் சென்ற இடமெல்லாம் செய்து வருகின்றார்.
இதே மாதிரி இவருக்கு முன்னால் வந்த திரு.மாளவியாவும் இதே போல் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும், சுயமரியாதை இயக்கத்தையும் நன்றாய் வைதுவிட்டு, ஜாதி இருக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு, ராமாயணப் பிரசாரம் செய்து ராமருக்கு ஜே போடும்படி சொல்லிவிட்டுப் போனார்.
அதற்கு முன் வந்த திரு.காந்தியோ கதரின் பேரால் பார்ப்பனரல்லாதாரை வைதுவிட்டு, வருணாச்சிரம பிரசாரம் செய்துவிட்டு, வருணாச்சிரமத்தைக் காப்பாற்றும் கீதையை எல்லோரும் படிக்க வேண்டுமென்றும் சொல்லிவிட்டுப் போனார்.
ஆனால் கடைசியாக வந்த திரு.படேல் முந்தியவர்களையெல்லாம் விட ஒரு படி தாண்டி சுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கம் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கம் உத்தியோக வேட்டை இயக்கம் என்றும் சொன்னதோடு, திரு.மாளவியாவைப்போல் ராமாயணப் பிரசாரம் செய்யாமலும், திரு.காந்தியை போல் கீதை பிரசாரம் செய்யாமலும், இவர் ஒரே அடியாய் ஆரிய தர்மப் பிரசார மும், திருவாளர்கள் ராஜகோபாலாச்சாரி, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரி ஆகியவர்களை பெரியார்கள் என்றும், உத்தமப் பிராமணர்கள் என்றும், பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தியாகிகள் என்றும் சொல்லி பார்ப்பனர்கள் பிரசாரமே செய்து வருகிறார்.
இந்தக் கனவான்களைப் பற்றி தென் இந்தியாவில் ராமநாதபுரத்திலும், வலங்கைமானிலும், சேலத்திலும் பிறந்த இந்தப் பார்ப்பனர் களின் யோக்கியதையை பம்பாய் மாகாணத்திலிருந்து வேதாரண்யத்திற்கு வந்த ஒருவர் அதுவும் தென் இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதென்றால் சொல்லப் புறப்பட்டவரின் புத்திசாலித் தனத்தை கூட்டிக் கொண்டு வந்தவர்கள் தான் மெச்சிக் கொள்ளவேண்டும்.
இதற்கு எதை ஒப்பிடலாமென்றால் தன் தகப்பன் வீட்டுப் பெருமையைப் பற்றி அண்ணனுக்கு தங்கை எடுத்துச் சொல்லவருவது எவ்வளவு புத்திசாலித்தனமுடையதோ அதுபோலவே சாஸ்திரிகளையும், அய்யங்கார்களையும், ஆச்சாரியார்களையும் பற்றி திரு.படேல் சொல்வது என்று கூற வேண்டியிருக்கிறது.
இதிலும் மற்றொரு விசேஷம் என்னவென்றால், திரு.படேல் “சுயமரியாதையைவிட நிலவரி முக்கியமானது” என்று சொல்லுவதேயாகும். எனவே, இது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான வாசகம் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த மாகாணத்தில் ஆயிரக்கணக்கான பதினாயிரக்கணக்கான ஏக்கர் பூமிகள் வைத்துக் கொண்டு, பதினாயிரக்கணக்காக லட்சக் கணக்காக ரூபாய்கள் நிலவரி கொடுத்துக் கொண்டிருக்கின்றவர்களைவிட திரு.படேல் நிலவரியை பற்றின கஷ்டம் அதிகம் அனுபவிப்பவர்போல் கண்ணீர் விடுகின்றார்.
ஆனால் அவர் அந்தப்படி எதற்காக கண்ணீர் விடுகின்றார் என்றால், ஒரு வருஷத்திற்கு சுயமரியாதை இயக்கத்தை மூட்டைக் கட்டி ஒரு வீட்டில் போட்டுப் பூட்டி வைத்துவிட வேண்டுமாம்.
அப்படிச் செய்தால் ஒரு வருஷத்தில் நிலவரி குறைந்துவிடுமாம். பிறகு இதுவே சுயராச்சியமாய் விடுமாம்! என்னே திரு.படேலின் புத்திசாலித்தனம்! சாதாரணமாய் நமது நாட்டில் பார்ப்பனர்க்களிக்கும் வரிகளில் பத்தில் ஒரு பங்குகூட இருக்காது நமது நிலவரிக்கொடுமை என்று கோபுரத்தின் மீதிருந்து கூவுவோம்.
அன்றியும் இந்த பார்ப்பனப் புரட்டிலும், பார்ப்பனக் கொடுமையிலும் பதினாயிரத்தில் ஒரு பங்குகூட இருக்காது இந்த அரசாங்கப் புரட்டும் கொடுமையும் என்று ஆங்காங்கு எழுதி வெற்றி ஸ்தம்பம் நட்டு வைக்க நம்மால் முடியுமென்று உறுதி கூறுவோம்.
மேலும் இந்தப் பார்ப்பனர்களால் நமக்கு தினமும் ஏற்படும் சுயமரியாதைக் குறைவுகளில் லட்சத்திலொரு பங்குகூட வெள்ளைக்காரர்களால் நமக்கு சுயமரியாதைக் குறைவு இல்லையென்று தூக்குமேடையிலிருந்து கொண்டும் சொல்லுவோம்.
வெள்ளைக்கார அரசாட்சியால் வரிப்பளுவும், புரட்டும், கொடுமையும், மரியாதைக் குறைவும் உண்டென்பதை நாம் மறுக்கவில்லையானாலும் இவைகளுக்கும் காரணம் இந்தப் பார்ப்பனர்களின் சுயநலமும் தேசத் துரோகமுமென்றுதான் சொல்லுவோம். என்றாலும், இவைகள் பார்ப்பனர்களால் ஏற்படும் வரிப்பளுவு, புரட்டு, கொடுமை, மரியாதைக் குறைவு, இழிவு ஆகிய இவைகளுக்கு உரை போடக்கூட கட்டாது என்று சொல்லுவோம்.
எப்படியானாலும் ஒரு மனிதன் அரசாங்கத்திற்கு வரிக்கொடுத்தேயாக வேண்டும். ஆனால், ஒரு சமயம் அரசாங்கம் வசூல் செய்யும் வரி அதிகமென்று சொல்லலாம்.
ஆனால், அந்த அதிக வரி எப்படி, யாரால் உயர்ந்தது என்பதைக் கவனித்தால் இதே பார்ப்பனர்கள் தங்களுக்கு µ 1 க்கு 5,500 ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டதினால்தான் சர்க்கார் குடியானவர்கள் தலையில் கையைவைத்து நிலவரி முதலியவைகளை உயர்த்தி வசூல் செய்து பார்ப்பனர்களுக்கு அழுது வந்தார்கள்.
ஆனால், இப்போது அந்தப் பணம் முழுவதும் பார்ப்பனர்கள் கைக்குப் போகாமல் இருக்கும்படியான மார்க்கத்தை பார்ப்பனரல்லாதார் இயக்கம் செய்யப் புறப்பட்ட உடனே, பார்ப்பனர்களுக்கு “நில வரிப் பளுவு” அதிகமாய்ப் போய்விட்டதுடன் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உத்தியோக வேட்டை இயக்கமாகவும் போய் விட்டது.
திருவாளர்கள் வி.கிருஷ்ணசாமி அய்யரும், சிவசாமி அய்யரும், ராஜகோபாலாச்சாரியும், சி.பி.ராமசாமி அய்யரும், வெங்கிட்டராம சாஸ்திரியும், பி.என். சர்மாவும் மாதம் 5,500, 6,500 ரூபாய்கள் வீதமும், பாஷ்யம் அய்யங்காரும், மணி அய்யரும், சதாசிவ அய்யரும், சுந்திரமய்யரும், குமாரசாமி சாஸ்திரியாரும் ஆகிய அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மாக் கூட்டங்கள் மாதம் 1-க்கு 4,000, 5,000 ரூபாய்கள் வீதம் வாங்கிக் கொண்டிருந்தபோது இந்த “நில வரிப் பளுவு” எங்கு போயிருந்தது என்று கேட்கின்றோம்.
அன்றியும், திரு.காந்தியை அராஜகரென்றும், அவரை ஜெயிலில் பிடிக்காவிட்டால் இந்தியா முழுகிப் போய்விடுமென்றும் சொல்லி ஜெயிலில் அடைக்க உதவி செய்து மகாகனம் பட்டம் வாங்கிய திரு.சீனிவாச சாஸ்திரி இந்தப் படேல் கண்களுக்கு உத்தமப்பிராமணராயும், தியாக புருஷராயும் காணப்படுகின்றார்! அன்றியும், திரு.காந்திக்கு மூளை இல்லை என்றும், ஒத்துழையாமை சட்டவிரோதமென்றும், திரு.ஜவகரிலால் முட்டாள், அதிகப்பிரசங்கி என்றும் சொன்ன திரு.சீனிவாசய்யங்கார் இந்த திரு. படேல் கண்களுக்கு உத்தமப் பிராமணராகவும், தியாகப் புருஷராகவும் காணப்படுகின்றார்!
கடைசியாக மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்று ஒரு தீர்மானம் மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேறியவுடன் தனது மெம்பர் ஸ்தானத்தை ராஜிநாமா கொடுத்ததோடு திருவாளர்கள் சந்தானம், வரதாச்சாரி, டாக்டர் ராஜன் ஆகியவர்களையும் கமிட்டியிலிருந்து ராஜிநாமா செய்யச் செய்ததுடன், இது சரியா என்று திரு. காந்தி கேட்டதற்கு, அது என் சொந்த அபிப்பிராயம் என்று சொன்னவரும், மற்றும் பார்ப்பனரல்லாதாருக்கு...எவ்வளவோ மோசமாய் நடந்து கொண்டவருமான திரு.ராஜகோபாலாச்சாரியார் திரு.படேல் கண்ணுக்கு உத்தமோத்தம பிராமணராயும், பெரிய தியாகியாயும், பிராமணரல்லாதாருக்கே உழைக்கப் பிறந்தவராயும் காணப்படுகின்றார் என்றால், நமது திரு.படேலின் கண்கள் எவ்வளவு பரிசுத்தமானவை என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று நாம் கேட்கின்றோம்.
நிற்க, இப்போது எப்படியாவது நமக்கு ஒரு அரசன் இருந்துதான் ஆக வேண்டும், அவனுக்கு நாம் வரிகொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபமிருக்காது.
ஆனால், பார்ப்பனீயம் இப்போது நமக்கு அவசியமா? அதற்கு நாம் வரிக்கொடுக்க வேண்டியது அவசியமா என்று திரு.படேலை கேட்கின்றோம்.
அன்றியும், ஆரிய தர்மத்திலுள்ள ஏதாவது ஒரு புரட்டுக்கும், மனு தர்மத்திலுள்ள ஏதாவது ஒரு புரட்டுக்கும் சமானமாக அரசாங்கப் புரட்டில் எதையாவது சொல்ல முடியுமாவென்றும் திரு.படேலைக் கேட்கின்றோம்.
மேலும் பார்ப்பான் தன்னை பூதேவன் என்றும், நம்மை அவனது அடிமை, தாசிமகன், சூத்திரன் என்றும் சொல்லுவது போல் எங்காவது அரசாங்கத்தார்கள் சொல்லுகின்றார்களா? அல்லது எழுதிவைத்திருக்கின்றார்களா என்று திரு.படேலைக் கேட்கின்றோம்.
தவிர, பார்ப்பனர்கள் நமக்கு யாதொரு உபகாரமும் செய்யாமல் நம்மை இழிவு படுத்தி, தங்கள் காலிலும் நம்மைப் பெண்டு பிள்ளைகளுடன் விழச் செய்து நம்மிடம் கொள்ளையும் அடித்து அதனால் நமக்கு யாதொரு பிரயோசனமும் செய்யாமல் இழிவுபடுத்திக் கொண்டு இருப்பதுபோல் அரசாங்கம் நம்மிடம் வரி வசூலிப்பதில் அவ்வளவு கொடுமையாயும் வசூலித்த பணம் அவ்வளவையும் சுயநலமாயும் உபயோகித்துக் கொள்ளுகின்றார்களா என்றும் கேட்கின்றோம்.
ஆகவே முதலில் நாம் எந்த வரிப்பளுவைக் குறைக்க வேண்டும் என்றும், எந்தப்புரட்டை ஒழிக்க வேண்டும் என்றும், எந்த அவ மரியாதையில் இருந்து மீள வேண்டுமென்றும் திரு.படேலை கேட்கின்றோம்.
கடைசியாக, நமக்கு சுயமரியாதை பெரிதே ஒழிய, மோட்ச ராச்சியம், சுயராச்சியம் ஆகியவைகள் பெரிதல்லவென்றும்; பார்ப்பனப்புரட்டும், பார்ப்பனக் கொடுமையும், பார்ப்பன வரியும் ஒழிய வேண்டியதைவிட அரசாங்கப்புரட்டும், அரசாங்கக் கொடுமையும், அரசாங்க வரியும் ஒழிய வேண்டியது அவ்வளவு அவசரமல்லவென்றும் திரு. படேலுக்கு வெளிப்படையாயும், தைரியமாயும் சொல்லுவதோடு, எந்தக் காரணத்தை முன்னிட்டாவது நிலவரிப் புரட்டை தமிழ்நாட்டிற்குள் கால்வைக்க இடம் கொடுத்துவிடக் கூடாது என்று பார்ப்பனரல்லாத மக்களுக்கு எச்சரிக்கையும் செய்கிறோம்.
பார்ப்பனீயத்தை ஒழித்து, பார்ப்பனக் கொடுமையிலிருந்து மீண்டு, சுயமரியாதை பெறுவதற்கு நாம் உயிர், பொருள், ஆவி, தேசம், “தேசியம்”, “சுயராச்சியம்”, “நிலத்தீர்வை” ஆகிய எதையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.
உதாரணமாக இதே அரசாங்கம் நம்மிடம் வந்து “ இனியும் அதிகமாக ஏக்கராவுக்கு, பத்து ரூபாய் அதிகவரி கொடுக்கின்றாயா அல்லது பார்ப்பான் காலில் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றாயா” என்று கேட்டால் அதிக வரியாவது கொடுப்போமே ஒழிய, இனி பார்ப்பான் காலில் விழுவதைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டோம் என்றுதான் சொல்லுவோம்.
இதனால் நம்மை யார் என்ன சொன்னாலும் நாம் பயப்படமாட்டோம். எனில், இதற்குப் பெயர்தான் சுயமரியாதையே ஒழிய, பிச்சைக்காரப் பார்ப்பான் காலில் விழுந்து கும்பிட்டு அவனுடைய அழுக்குப் பிடித்த காலைக் கழுவிய தண்ணீரைத் தலையில் தெளித்துக் குடித்து மோட்சத்திற்குப் போவதோ, சுயராச்சியம் பெறுவதோ, நிலவரி குறைவு படுவதோ சுயமரியாதை அல்ல வென்று மறுமுறையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகின்றோம்.
ஏனென்றால் உண்மையான சுயமரியாதையை அடைந்தோமானால் சுயராச்சியமும், நில வரிக்குறைவும் தானாக ஏற்பட்டுவிடும் என்கின்ற உறுதி நமக்கு இருக்கின்றது.
எனவே திரு.படேல் அவர்கள் நிலவரி குறைவதற்காக சுயமரியாதை இயக்கத்தை கட்டிவைக்கும் படி சொல்லுவது “புருஷனைப் பலி கொடுத்தால் பிள்ளைவரம் கிடைக்கும்” என்கின்ற பழமொழிபோல் இருக்கின்றது.
ஆகையால் இந்த நிலவரிப் புரட்டுக்கு யாரும் ஏமாந்து விடக்கூடாது என்றும், இது நமது நாட்டுப் பார்ப்பனர்களுடைய ஒரு புதிய சூட்சி என்றும் சொல்லி மறுபடியும் உஷார்ப் படுத்துகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 15.09.1929)