periyar veeramaniஇம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள். எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத (வகுப்பு வாதமல்லாத) மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள். மற்றொரு வகுப்பார் தலையெடுக்காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர் பல மகாநாடுகளை நடத்துகிறார்கள். ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படி இல்லை. பிறருக்கு கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம்மகாநாடு நடைபெறுகின்றது.

வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும் அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண்டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை. துவேஷம் வேண்டாம், எல்லோரும் சமம் என்று சொல்லுங்கள் என்று சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக்கிறோம். நம் நாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டு வரும் ‘ஒற்றுமை’ என்ற வார்த்தைகளும், பிரச்சனைகளும் வெளிவேஷமே. தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலைமை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பின்னரே உண்மை ஒற்றுமை ஏற்படும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கான வேலைகளைச் செய்ய சுதந்திரம் ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் சுயமரியாதை, சமத்துவம், சுயமதிப்பு ஏற்பட வேண்டும். அதன்மூலந்தான் தேச முன்னேற்றமடையும். உண்மையான தேசீயமென்பது சுயமரியாதை ஒன்றே. சுயமரியாதையைப் பொறுத்தேதான் சுயராஜ்யமிருக்கிறது. சகலரும் ஒன்று. மேலோர் கீழோர் என்ற உணர்ச்சி இருக்கவே கூடாது.

(குறிப்பு : 01.10.1927 ஆம் நாள் கும்பகோணத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்கத்தின் 11 ஆவது மாநாட்டில் சொற்பொழிவு.)

(குடி அரசு - சொற்பொழிவு - 09.10.1927)

***

அடுத்த வாரம்

27-9-27 தேதி ஊழியன் என்னும் ஒரு பத்திரிகையின் முதல் கலத்தில் “வீணான அவதூறு” என்ற தலைப்பில் ஸ்ரீமான் காசி விஸ்வநாதன் செட்டியார் அவர்களுக்கும், ஸ்ரீமான். எஸ். ராமனாதன் அவர்களுக்கும் நடந்ததாக ஒரு சம்பாஷணை காணப்படுகின்றது. இதற்கு சமாதானம் எழுத வேண்டிய பொறுப்பு ‘திராவிடனுக்கும்’ ‘குடி அரசுக்கும்’ ஏற்பட்டதோடு ராமசாமி நாயக்கருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதற்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.

எனினும் இந்த சம்பாஷணைகளில் கண்ட வர்த்தமானங்கள் முழுதும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் சொல்லப்பட்டது தானா என்பதை நாம் மற்றுமொரு முறை கேட்டுத் தெரிந்து கொண்டு பதில் எழுத வேண்டிய நிலைமையில் அச்சம்பாஷணையில் சில பாகம் இருக்கின்றது.

ஆகவே அது முழுவதும் உண்மைதான் என்றாவது, உண்மையல்ல வென்றாவது தெரிந்துகொண்டு அடுத்தவார ஆரம்பத்தில் எழுதுகிறோம். இதற்கு இரண்டில் ஒன்று பதில் இல்லாத பட்சம் சம்பாஷணை நடந்தது வாஸ்தவம் என்றும் அதில் கண்டது முழுவதும் உண்மை என்றும் வைத்துக் கொள்வோம். ஏனெனில் ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் வாக்குமூலத்திற்கு சமாதானம் சொல்லுவதில் நமக்கு சில பொறுப்பு இருக்கிறபடியால் தாமதிக்க வேண்டி இருக்கிறது. இது போலவே இரண்டொரு பெரியாரும் நமக்கு யோசனை சொல்லியிருக்கிறார்கள்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 02.10.1927)

***

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

இதன் ஆசிரியர் திருவாளர் வி.கல்யாணசுந்தர முதலியாரைப் பற்றி தமிழுலகிற்கு அறிமுகஞ் செய்ய வேண்டிய அவசியமின்று. அன்னார் இதுகாலை எழுதி வெளிப்படுத்தியுள்ள பெண்ணின் பெருமை என்னும் புத்தகத்தைக் கண்டு மகிழ்ந்தேன். தேனினுமினிய செந்தமிழ் நடையில் வாழ்க்கையில் பெண்ணுக்குள்ள இடத்தையும், உரிமையையும், ஆண் பெண் மாறுபாடுகளையும் பெண்பாலாரின் பெருமைகளையும், அவைகட்கேற்ப பெண் தெய்வங்களை ஆண்கள் நடத்த வேண்டிய முறையும், மற்றும் இல்லறம் துறவறம் இரண்டின் விளக்கமும், பெண் ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய பல நுட்பங்களையும், எல்லாவற்றிற்கு மேல் பெண்ணின் பால் உள்ள இறையொளியையும் மிகத் தெளிவாக எடுத்து விளக்கி மற்றப் பதிப்புகளைப் போலன்றி நல்ல தாளில் நல்ல கட்டடத் துடன் கண்ணைக் கவரும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களின் விடுதலை வேண்டுமென்று பாடுபடும் இக்காலத்து இத்தகைய புத்தகங்கள் பல கட்டாயம் வெளிவர வேண்டும்.

விலை ரூ 2.

கிடைக்குமிடம்:-

 முருகவேள் புத்தக சாலை

 ராயப்பேட்டை

 சென்னை.

(குடி அரசு - நூல் மதிப்புரை - 02.10.1927)

Pin It