யாதாவது ஒரு காரியத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போனவர்களும், தனக்கென தனிமரியாதை இல்லாமல் போய் விட்டதே என்று விசனப்பட்டுக் கொண்டு இருப்பவர்களும், தனக்கென ஒரு தனிக்கட்சி சேர்க்க முயலுவது பெரும்பாலும் இயற்கை. யோக்கியமான முறையில் சமாதானம் சொல்லி எதிரிகளை வெல்ல முடியாத கூட்டத்தார்களும், தங்களது ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்து விட்டதாகக் கருதுகிறவர்களும், ஏதாவது சில சோணகிரிகளையும் பேராசைக்காரரையும் பிடித்து தனிக்கட்சி உண்டாக்கி, அவர்களைக் கொண்டு தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளுவதற்காக மற்ற யோக்கியமான கட்சியுடன் போராடுவதும், போராடச் செய்வதும் இயல்பு. இக்காரியங்களை அடிக்கடி நாம் அனுபோகத்தில் பார்த்து வருகிறோம்.

periyar and maniammai kidsபார்ப்பனரல்லாதார் கட்சி என்பதாக ஒரு கட்சி தோன்றியது முதல் அக்கட்சிக்கு இடையூறாக நமது நாட்டில் இதுவரை எத்தனை கட்சிகள் தோன்றி மறைந்தன? அதற்கு எதிரிடையாக எத்தனை எத்தனை எதிரிகள் தோன்றி மறைந்தார்கள்? இனியும் எத்தனை தோன்றித் தோன்றி மறையப் போகிறார்கள்? என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இதனுண்மை விளங்காமல் போகாது. இவ்வளவு எதிரிடைகள் தோன்றி மறைந்து வந்ததிலும் ஒரு விசேஷம் என்னவென்றால் பார்ப்பனரல்லாதாரின் கட்சியின் முக்கிய கொள்கைகளை தப்பு என்று சொல்லி வேறு கட்சி ஏற்படுத்தினவர்கள் இதுவரை கிடையவே கிடையாது. இப்போது இன்னமும் ஒரு புதுக்கட்சி ஏற்படுத்த உள்ளுக்குள்ளாகப் பாடுபடும் ஸ்ரீமான் டி.எ. ராமலிங்கம் செட்டியார் கம்பெனியார் உள்பட, இதற்கு முன்னால் பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்படுத்திய காலத்தில் சென்னை மாகாணச் சங்க கட்சி என்கிற ஒரு கட்சி ஏற்படுத்திய பார்ப்பனர்களுக்கு உதவியாயிருந்த ஸ்ரீமான் கேசவ பிள்ளை, ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடு கம்பெனியார் உள்பட, மற்றும் சென்ற தேர்தலுக்கு முந்தி தேர்தலின் போது ஏற்பட்ட மந்திரி பதவி சண்டைகளின் பலனாய் ஸ்ரீமான் டி.எ. ராமலிங்கம் செட்டியாரால் அப்போது ஏற்படுத்தப்பட்ட கட்சியாருள்பட, ஒவ்வொருவரும் பார்ப்பனரல்லாதார் கட்சி கொள்கையை ஒப்புக் கொண்டுதான் கட்சி ஏற்படுத்தி இருக்கிறார்களேதவிர வேறில்லை. ஆனால் அதற்கு உள்காரணங்கள் தான் அடிக்கடி மாற்றி மாற்றி சொல்லப்பட்டு வருகிறதே ஒழிய வேறில்லை.

அதாவது கோவை மகாநாட்டுக்கு முன் பார்ப்பனரல்லாதார் கட்சியின் மீது சொல்லிக்கொண்டு வந்த குற்றமெல்லாம் “அரசாங்கத்தோடு அக்கட்சியார் ஒத்துழைக்கிறார்கள். இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்கிறார்கள்” என்கிற இரண்டு பெரிய குற்றங்களே சுமத்தப்பட்டன. கோவை மகாநாட்டுக்கு பிறகு, அரசாங்கத்தை எதிர்க்கவும் இரட்டை ஆட்சியை உதறித் தள்ளவும் திட்டம் போட்ட பின்பு “அனாவசியமாய் அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள். திடீரென்று இரட்டை ஆட்சியை உடைக்கப் பார்க்கிறார்கள்” என்கிற குற்றம் சாட்டப்படுகிறது. இது யாரால் என்று பார்ப்போமானால் உத்தியோகத்திற்கும், பார்ப்பனர்களுக்கும் அடிமைப்பட்ட ஆசாமிகளாலேயே அல்லாமல் இவைகளுக்கு அடிமையாகாத பொது மக்களாலல்ல, “தேசீய வீரர்களாலல்ல”, சர்க்காரையும் பார்ப்பனரல்லாதார் கட்சியையும் வைவதன் மூலமும், பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாயிருப்பதன் மூலமும் வாழ்ந்து வந்த சிலருக்கு பார்ப்பனரல்லாதார் கட்சி மீது மேல்கண்ட குற்றம் சுமத்துவதற்கு யோக்கியதை இல்லாமல் போனதால் அப்படிப்பட்டவர்கள் இப்போது வேறு விஷயத்தில் அக்கரை உள்ளவர்கள்போல வேஷம்போட ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது, பார்ப்பனரல்லாதார் கட்சி கொள்கையை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனர்களையும் பார்ப்பனரல்லாதார் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவதில்லையாம். இப்படிச் சொல்வதன் மூலம் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆகி பார்ப்பனர்களை ஏமாற்றிவிடலாம் என்பது இவர்களின் கூற்று. ஆனால், இவர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்படுவார்களே ஒழிய வேறு ஒன்றும் ஆய்விடப்போகிறதில்லை.

ஸ்ரீமான்கள் ராமலிங்கம் செட்டியாரும், மார்த்தாண்டம் பிள்ளையும் பார்ப்பனரல்லாதார் கட்சியில் இருந்து 6, 7 வருஷங்கள் பார்த்து தங்கள் சுயநலம் ஈடேறாமல் வெளியேறினவர்களே ஒழிய கொள்கை மாற்றத்தால் அல்ல என்பது இப்போதும் அவர்கள் வெளியிட்டிருக்கும் கொள்கையைப் பார்த்தால் தெரியவரும். ஸ்ரீமான் மார்த்தாண்டம் சொல்வது என்னவென்றால்,

“பிராமணரல்லாதார் இயக்கம்...............பல வேறு வகுப்பினரின் உரிமைகள் கவனிக்கப்படல் வேண்டும் என்ற உணர்ச்சியையும், தேவையையும் பொது ஜனங்களுக்கு இடையே நன்றாய் வலியுறுத்தி விட்டன” என்று அவர்கள் சொல்லி இருப்பதிலிருந்தே இம்மாதிரி ஒரு இயக்கம் வேண்டுவது தான் என்கிற கொள்கையை அவர் ஒப்புக்கொள்கிறார் என்பதும் மற்றும்,

“ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் குறிப்பிட்ட முறையில் ஏதேனும் ஒரு ராஜிக்கு வந்து இந்தப் போராட்டத்தை நாம் முடிப்போமானால் அதுவே நமது வகுப்புத் தொல்லைக்கு ஏற்ற நல்ல முடிவாகும்” என்று சொல்வதனால் வகுப்பு தத்துவத்தையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைத் தத்துவத்தையும் ஒப்புக்கொள்கிறார் என்பதும் நன்றாய் விளங்கவில்லையா? பார்ப்பனரல்லாதார் கட்சி செய்து வருகிற வேலையையும் பாராட்டிவிட்டு அதன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையையும் ஒப்புக்கொள்ளுகிற ஒருவருக்கு வேறு கட்சி எதற்கு என்பதை வாசகர்கள் தான் யோசித்தறிய வேண்டும்.

தவிர மற்றும் சிலருக்கு, பார்ப்பனர்களையும் பார்ப்பனரல்லாதார் கட்சியில் சேர்த்துக் கொள்ளாததால் வேறு கட்சி வேண்டுமாம். இவர்களுக்கு வேறு கட்சி எதற்காக வேண்டும். இவர்கள் கோருகிறபடியே காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சி, மிதவாதக் கட்சி, ஓம்ரூல் கட்சி, சுயேச்சை கட்சி என்பதாக பல கட்சிகள் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஸ்தாபனங்களாக இருக்கும் போது வேறு ஒரு கட்சி எதற்காக வேண்டும் என்பதை யோசித்தால் பார்ப்பனரல்லாதார் கட்சியைக் கொண்டு பார்ப்பனர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற கெட்ட எண்ணமல்லாமல் வேறில்லை என்பது எந்த யோக்கியனுக்கும் படாமல் போகாது.

தவிர, பார்ப்பனரல்லாதார் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிற கொள்கையோடு இது ஏற்பட்டு பத்து வருஷம் ஆன பின்பு இப்போது இவர்களுக்கு இந்த ஞானம் தோன்றுவானேன்.

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு தேசத்தில் செல்வாக்கு வந்துவிட்டது. அதை அழிக்க பார்ப்பனர்களும், அவர்களது அடிமைகளும் செய்த முயற்சிகளின் யோக்கியதைகளை எல்லாம் மக்கள் அறிந்து விட்டார்கள் என்கிற எண்ணம் பார்ப்பனர்களுக்குப் பட்டவுடன், பல பார்ப்பனரல்லாத கட்சியில் உள்ள ஆசாமிகளை ஏமாற்றி உள்ளே வந்து நுழைந்து அதைக் கெடுக்க முயல்வதில் பலனாக இந்த எண்ணம் சில மேதாவிகளுக்கு உண்டாக்கப்பட்டு வருகிறதே அல்லாமல் வேறென்ன? தவிர பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு என்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இயக்கங்களில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுகிறார்களா? “பிராமண தர்ம பரிபாலன சபை” என்கிற பார்ப்பன சபைகளில் எத்தனை பார்ப்பனரல்லாதாரை பார்ப்பனர்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற இவர்கள் சொல்ல முடியுமா?

டாக்டர். சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி பதவி முதல் பிரைஸ் விழுந்த உடனே ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் நாக்கில் தண்ணீர் ஊற ஆரம்பித்து விட்டது. அன்று முதல் இன்றுவரை இனியும் தனக்கு மந்திரி பிரைஸ் விழுக என்ன தந்திரம் செய்யலாம் என்பதே அவருடைய கருத்தாகி விட்டது. அதற்கு ஏற்றாப்போல் சர்.சி.பி. என்கிற ஒரு பார்ப்பனர் ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியாருக்கு சினேகிதர் போல வேஷம் போட்டதும் குரங்குக்கு கள்ளு வார்த்தது போல் ஸ்ரீமான் செட்டியார் தன்னைப் பற்றி மகா பிரமாதமாய் எண்ணிக்கொள்ள நேர்ந்து விட்டது.

போதாக்குறைக்கு இந்த சர்.சி.பி. சினேகத்தை நிஜம் என்று எண்ணிய பல ஆங்கில நாகரீக குடியானவர்களுக்கும் செட்டியாரிடம் ஒரு மோகமுண்டாய் விட்டது. இவைகளின் பலனாய் ஸ்ரீமான் செட்டியார் ஒரு தனிக்கக்ஷி ஏற்படுத்த அநேகருக்கு தனிக் கடிதம் எழுதிவிட்டார். ஸ்ரீமான் கேசவ பிள்ளைக்கு எழுதினாராம். சர். சங்கரநாயருக்கு எழுதினாராம். இன்னும் பலருக்கும் எழுதினாராம். ஆனால் அநேகர் அதை ஒப்புக் கொள்ளவில்லை என்பதாகவே தெரிகிறது. சிலர் சுவற்றின் மேல் பூனை போல் இருக்கிறார்கள். முடிவு என்ன ஆகும் என்பது இப்போதே நமக்குத் தெரியும். அதாவது பார்ப்பனர்களில் ஸ்ரீமான் எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார் ஒரு காரியத்தில் பிரவேசித்தால் என்ன பலன் அடைவாரோ அதே மாதிரிதான் பார்ப்பனர் அல்லாதாரில் நமது ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியார் அவர்களின் கைராசியும் என்பது நமது தீர்மானம். ஆன போதிலும் ஒரு சிலருடைய சுயநலத்திற்கு ஆக வேண்டி யாரை வேண்டுமானாலும் எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் பலிகொடுக்கவும் எவ்வளவு பொறுப்புள்ள இயக்கத்தையும் அதன் பலனையும் ஒழிக்கவும் மக்கள் எவ்வளவு சுலபத்தில் துணிந்துவிடுகிறார்கள் என்பதை பொது ஜனங்கள் அறிவதற்கு இதை எழுதினோமே ஒழிய வேறில்லை.

(குடி அரசு - கட்டுரை - 07.08.1927)

Pin It