periyar on stage

வரப்போகும் தேர்தல்கள் தென்னிந்திய தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் நமது நாடு சுயராஜ்யம் பெறுவதற்கென்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும், சுயராஜ்யம் என்பது சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ள சமூகத்துக்குத்தான் பயன்படுமே அல்லாது அஃதில்லாதவருக்கு சுயராஜ்யமென்பதும் பரராஜ்யமென்பதும் வித்தியாசமற்றதேயாகும். தென்னாட்டுத் தமிழ்மக்கள் பெரும்பாலும் சுயமரியாதையற்று, சுயேச்சையற்று மலந்தின்னும் பன்றிகளுக்கும் கழுதைகளுக்கும் புழுக்களுக்குமுள்ள சுதந்திரமும் சுயாதீனமுமின்றி கோடிக்கணக்கான மக்கள் உழல்வதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் பொருட்டும், தேச முழுவதிலுள்ள இவர் போன்றோர் பொருட்டும் விடுதலையை உத்தேசித்து மகாத்மா காந்தியடிகளால் ஆறு வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட ஒத்துழையா இயக்கமானது பல்வேறு காரணங்களால் வேருடன் களையப்பட்டு விட்டது. இதன் பலனாய் ஏற்பட்ட நிலைமையானது சுயேச்சையும், சுயமரியாதையும், சுவாதீனமுமற்ற சமூகத்துக்கு, அதிலும் முக்கியமாய் தென்னாட்டுத் தமிழ்மக்களுக்கு முன்னிலும் அதிக கேவலமான நிலையில் கொண்டு வந்து விட்டுவிட்டது.

பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் நாட்டு ஜனங்களென்று சொல்லிக் கொள்ளுவோரிலேயே ஒரு வகுப்பார் தங்களுடைய சுயநலத்தையே உத்தேசித்து பொது ஜனங்களிடையே வகுப்பு வித்தியாசத்தையும் துவேஷத்தையும் உண்டுபண்ணி தங்களை உயர்ந்தோரென்று சொல்லிக் கொண்டு தங்கள் உயர்விலும் வாழ்விலுமே கண்ணுங்கருத்துமாயிருந்து தேசத்தையும், மதத்தையும், மற்ற சமூகங்களையும் பாழாக்கியதுடன் அந்நிய தேசத்தார் நம் நாட்டிடையே படையெடுத்து வந்த போதெல்லாம் தங்கள் நன்மையின் பொருட்டே எதிரிகளுக்கு உளவு சொல்லியும் தேசத்தையும் மதத்தையும் காட்டிக் கொடுத்தும் அவர்களிடமே மந்திரி முதலிய உத்தியோகங்கள் பெற்று செல்வாக்கடைந்தும், நமது நாட்டாரை அடக்கியாள அவர்கள் ஓர் ஆயுதமாகவும் பயன்பட்டு வந்திருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக, இச்சுயநலக் கூட்டத்தார் தங்கள் சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் தாங்களே நமது மதாச்சாரியார்களாகவும், குல குருக்களாகவும், படித்தோர்களாகவும், தேச நன்மைக்கும் சமூக நன்மைக்கும் ஏற்பட்ட இயக்கங்களுக்கு தலைவர்களாகவும், அரசாங்கத்தை நடத்த அவர்களுக்கு ஊழியர்களாகவுமிருந்து அரசாங்கத்தை நடத்திக் கொடுத்துக் கொண்டும், அதே சமயத்தில் அரசாங்கத்திற்கு ஒற்றர்களாயிருந்து நாட்டின் உயிர் நாடியைக் காட்டிக் கொடுத்தும் ஆகிய இவ்வளவு காரியங்களையும் செய்து வருவது இக்கூட்டத்தார்தான் என்பதை இப்பொழுதும் காணலாம்.

அல்லாமலும் ஆதிகாலத்தில் மக்கள் ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும், சகோதரத்துவத்துக்கும், ஜீவகாருண்யத்துக்கும், அஹிம்சைக்கும் ஏற்பட்ட இயக்கங்களுக்கும் சாதனங்களுக்கும் விரோதிகளாயிருந்து தங்கள் சுய நன்மைக்காகவே அவைகளை ஒழித்து தேசத்தை இக்கெதிக்கு கொண்டு வந்தவர்களும் இவர்களேதான் என்பதை சரித்திரம் மூலமாகவும் நேரிலும் காணலாம். மகாத்மாவால் ஏற்படுத்தப்பட்ட அஹிம்சா தர்மத்தோடு கூடிய விடுதலை இயக்கத்தை ஆரம்ப முதல் இன்று வரையிலும் பல சூழ்ச்சிகளாலும் பாழாக்கினவர்கள் இவர்களேயென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். இதை மகாத்மா அவர்களே தம்முடைய இயக்கம் சீர்குலைந்ததற்குக் காரணம் படித்த வகுப்பினர்தான்! படித்த வகுப்பினர்தான்!! எனப் பலமுறை கதறியிருக்கிறார். நாட்டில் படித்த வகுப்பார் யாரென்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

அல்லாமலும், பெல்காம் காங்கிரஸின் அக்கிராசனப் பிரசங்கத்தில் இந்தியாவுக்கு பிரிட்டீஷார் செய்த கெடுதியை விட பார்ப்பனர்கள் செய்த கெடுதி குறைவானதல்லவென்று மகாத்மாவே சொல்லியிருக்கிறார். ஆதலால் நமது நாடு முன்னேற்றமடையவோ, மக்கள் யாவரும் சமம் என்னும் உணர்ச்சி அடையவோ, எல்லோரும் சமத்துவத்துடன் வாழவோ, நம்மால் ஏற்படுத்தப்படும் இயக்கம், தங்கள் சூழ்ச்சியால் பொது மக்களை ஏமாற்றி தங்கள் மாயவலையில் கட்டுப்படுத்தி எதற்கும் தாங்களே முன்னணியிலிருந்து கொண்டு எதையும் தங்கள் சௌகரியத்துக்கு உபயோகப்படக்கூடிய மாதிரியில் திருப்பிக் கொள்ளும் நயவஞ்சகர்களான சுயநல வகுப்பார் கையில் சிக்காமல் தப்ப வழி தேட வேண்டும். அங்கனம் நாம் வழி தேடா விட்டால் நம் விடுதலைக்கென ஆரம்பிக்கப்படும் எந்த இயக்கமும், அதற்காக நம்மால் செய்யப்படும் எவ்வித தியாகமும், அனுபவிக்கப்படும் எவ்வித கஷ்டமும் பயன்தராததோடு இப்பொழுது நாமிருக்கும் நிலையிலும் இன்னும் கீழிறங்க உதவியாகிவிடும். ஆகையால் வரப்போகும் சட்டசபை முதலிய தேர்தல்களில் காங்கிரசென்றோ சுயராஜ்யமென்றோ தேசமென்றோ பார்ப்பனரின் மாய்கையில் விழுந்து அக்கூட்டத்தாருக்கு நமது ஓட்டுகளைக் கொடுத்து ஏமாந்து போகாமலிருக்கும்படி நாம் எச்சரிக்கை செய்கிறோம்.

தென்னாட்டில் பொதுவாக இக்கூட்டத்தாரை நீக்கிய பொது ஜனங்களுக்கு பார்ப்பனரல்லாதார் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இதில் கிறிஸ்துவர்கள், முகமதியர்கள், ஆங்கிலோ - இந்தியர் முதலிய இந்துக்களல்லாதவர்களும் பார்ப்பனரல்லாதவர்களே. இந்துக்களுக்குள்ளும் பார்ப்பனர் நீங்கிய மற்றவர்கள் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட பல ஜாதிப் பெயர்கள் சொல்லிக் கொள்ளப்பட்டாலும் அவர்களும் பார்ப்பனரல்லாதவர்களே. அல்லாமலும் தீண்டாதாரெனக் கூறி தொடக்கூடாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள் என்று தள்ளி வைத்திருக்கும் ஒரு பெரும் கூட்டத்தாரும் பார்ப்பனரல்லாதவர்களே. இவர்கள் யாரும் நாம் மேற்சொன்ன பார்ப்பனர்களின் மாயவலையினின்றும் தப்பி சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால், தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு வகுப்பு வித்தியாசங்களையும் பொருளற்ற ராஜீய அபிப்பிராய வித்தியாசங்களையும் மறந்து விடுவதோடு தங்கள் சுய நன்மைக்காக பார்ப்பனர்களுக்கு ஒற்றர்களாகவும், காட்டிக் கொடுப்பவர்களாகவும் இருக்கும் சிறுமைக் குணங்களை விட்டு எல்லோரும் முன்னுக்கு வர வேண்டுமென்ற எண்ணத்துடன், சூழ்ச்சியின்றியும் துவேஷமின்றியும் மனப்பூர்வமாக ஒன்றுபட்டு பார்ப்பனரல்லாதாருக்கே எல்லாப் பார்ப்பனரல்லாதாரும் கண்டிப்பாய் தங்களது ஓட்டைக் கொடுக்க வேண்டியது அவரவர்களின் சுயமரியாதை தர்மமென்றே சொல்லுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 22.08.1926)