பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, "அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.

அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.

முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

"Patriotism is the last refuge of a scoundrel'' -

"தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' - ஜான்சன்

(கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை, ‘விடுதலை' 28.12.1968)

Pin It