பகுத்தறிவுவாதியின் கொள்கை எது? 
 
பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதிகடவுள் இருக்கிறது என்பதும். தேவர்கள் என்பதும், பெரும் பொய்யே யாகும். மேல்உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும். ஏனெனில், இந்த உலகத்தில் இருந்து ஆகாயமார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ் டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப் பட்டாகிவிட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி. 
 
periyar and kali poongundranஇராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதர், அசுரர் என்ப வர்கள் எல்லாம் இந்தப் பூமியில் இருந்த தாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை. 
 
இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளாக இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால், 'கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா?
 
ஜோசியம் என்பது பெரும்பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும். இராகு காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய். பட்சிசாஸ்திரமும் பச்சைப் பொய். நட்சத்திரப் பலன், கிரகப் பலன்,வாரப் பலன், மாதப் பலன், வருடப்பலன் என்பவை யாவும் பொய். பல்லிவிழும் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய்.கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய்.
 
மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டப் பொய். 
 
தெரியாத, புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதாக கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய் களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான். 
 
நம்பியதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கவலைப் படாமல் அவற்றிற்குத் தன்னை சரிப்படுத்திக் கொள்ளுகிறான். பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை

                                   ----------------------------------------- (விடுதலை, 09.02.1970)
 
சுயமரியாதை இயக்கம்  ஜாதியை, கடவுளை, மதத்தை எதிர்ப்பது ஏன்?
 
சுயமரியாதை இயக்கம்  ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்ததா லேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள். மனிதனுக்கு இழிவு ஜாதியால்தானே உண்டாகி வருகிறது? ஜாதியோ மதத் தினால் தானே உண்டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்கமுடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். 
 
ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம்நிலைக்குமா? அல்லது இந்து மதத்தை வைத்துக் கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா? ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா? 
 
நான்கு ஜாதியை இந்த மத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறைகளைக் கீதை முதலியவை கடவுள் வாக்குகள் ஒப்புக் கொள்கின்றன. 
 
நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத்தருமங் கள் தவற எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன் என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ணபகவான் என்பவர் கூறி இருக்கிறார். 
 
இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதிபேதம், ஜாதிப்பிரிவு ஆகிய வைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன் றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங் களையும், கடவுள்களையும், சாஸ்திரங் களையும் ஒழிக்காமல்  முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக் கிறதா என்று பாருங்கள். 
 
                                                   -------------------------------------- (குடிஅரசு, 19.1.1936)
 
ஒழிக்கப்பட வேண்டியவை எவை?
 
தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள்நன்மை - தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும். முதலாவதாக மேல்ஜாதி, கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான் - கடவுளுக்குச் சமமானவன்; அவன் சாமி, பிராமணன் என அழைக்கப்படவேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள். 
 
மனிதனில்  எதற்கு மேல்ஜாதி... கீழ் ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில் லையே! மேல்ஜாதி என்பது பாடுபடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி. பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது. இரண்டாவதாக, பணக்காரன் - ஏழை. இது எதற்காக? பணக்காரன்  ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை - பாடு பட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவ சியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்னபாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை? 
 
periyar kali poongundran 2மூன்றாவதாக, ஆண் - எஜமானன்! பெண் - அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி, பெண் அடிமை தான்! சில நிர்பந்தம்,அடக்குமுறை ஆண் களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவை களுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் - எசமான்; பெண் - அடிமை; இந்த வேறு பாடு தேவையில்லாதது. அக்கிரமமானதுங் கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.

இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97 பேர் கீழ்ஜாதி!அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மை யினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள். 
 
காரணம்: 1. கடவுள், 2. மதம், சாஸ்திரம், 3. அரசாங்கம். 
 
கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால், மதம் - சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல் லாம்நினைக்கிறார்கள் திராவிடர் கழகத் தைத் தவிர?  
 
       ---------------------------  (12.11.1958 அன்று மேலவாளாடியில் பெரியார்  சொற்பொழிவு - விடுதலை 07.01.1959)  
 
பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி? 
 
நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக் கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன்திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுத் தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான்பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடுகிறேன்.
 
         ---------------------------------------------(31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார்  சொற்பொழிவு. விடுதலை11.09.1959)
 
நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாடு? 
 
நமக்கும் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்ன வித்தியாசமென்றால், பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடான ஒற்றுமை இருக்கிறது. காஷ்மீர் பார்ப்பானுக்குத் தேள் கொட் டினால் கன்னியாகுமரியிலே இருக்கிற பார்ப்பானுக்கு நெறிஏறும். அவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடு இருக்கிறது. 
 
ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத் துக்கு, விரோதமான காரியம் செய்யமாட் டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக்கொடுக்க மாட்டான். 
 
ஆனால், நம்முடைய திராவிட  ஆட்கள் என்பவர்களோஅதற்கு நேர் மாறான குணம் படைத்தவர்கள். தன் வாழ்வுக்கு ,தன் சவுகரியத்துக்காகத் தன்னுடைய இனத்தை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கத் தயங்கவே மாட்டான் திராவிடன். இனத் தைக் காட்டிக் கொடுப்பதிலேயே தன்னு டைய வாழ்வை அமைத்துக் கொள்ளும் விபீஷணர்கள், அனுமார்கள்தான் அதிக மாய் இருக்கிறார்கள். ஆனதால் நாம் பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, இந்த இனத்துரோக வீபிஷண, அனுமார் களையும் சேர்த்து எதிர்த்து வெற்றி பெற வேண்டியிருக்கிறது. 

                                         ---------------------------------------------------(விடுதலை, 8.9.1953) 
 
எதிர்காலம் எப்படி இருக்கும்? 
 
நான் இறந்தாலும், ஏனைய திராவிடத் தோழர்கள் ஓய்ந்துவிட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. நமது கொள்கைகள் ஓரளவுக்குப் பொதுமக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டன. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம்போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடங்கொடுக்காது. 
 
நம் இஷ்டப்படி நடக்காத கட்சியின் மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரம் ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக மாறவேண்டும். 

 ---------------------------(தூத்துக்குடி மாகாண மாநாட்டில் குடிஅரசு - 05.06.1948)
 
 (தொகுப்பு: வ. மாரிமுத்து - பழனி)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.